ஓலமிடும் காக்கையே!
வெள்ளைவாரணர் எழுதிய ‘காக்கை விடு தூது’ என்ற நூல் இருக்கிறது. வெண்கோழியார் என்னும் புனைபெயரில் அவர் எழுதிய நூல் இது. வெள்ளைவாரணர் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பெரிய தமிழறிஞர் ஆவார். அவர் ஏன் இந்தக் காக்கை விடு தூது எழுதினார் என்பது முக்கியமானது. தூது இலக்கியத்தில் ‘வசைத் தூது’ என்ற ஒரு வகை உண்டு. அது அவ்வளவாக வெளியே தெரியாது. தூது இலக்கியத்தை ஆழ்ந்து கற்றவர்கள் அறிவார்கள். ஒருவரைப் புகழ்வதற்கு மட்டுமல்ல ஒருவரை வசை பாடுவதற்கும் இழிவுபடுத்துவதற்கும் தூது இலக்கியத்தைப் பயன்படுத்துவார்கள். இதற்கு வசைத்தூது என்றே பெயர் வைத்திருக்கிறார்கள். காக்கை விடு தூது அப்படிப்பட்டதுதான். இது ஒருவகையில் வசைதான். ஆனால் அவர் நிதானமாகப் பாடி இருக்கிறார். தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்த பொழுது தமிழகத்தின் தலைவராகிய மூதறிஞர் ராஜாஜி இந்திக்கு ஆதரவாகச் செயல்பட்டார். அவரிடம் ‘ஓலமிடும் காக்கையே’ என விளித்துக் காக்கையைத் தூது விடுவதாக எழுதியதுதான் ‘காக்கை விடு தூது’.
காக்கை நாம் கீழாகக் கருதும் பறவை. ஆனால் இயல்பில் உயர்வான பறவைதான் காக்கை. அதிகமாக இருக்கும் காரணத்தால் நாம் அதைக் கீழாக நினைக்கிறோம். காக்கை அப்படிப்பட்ட பறவை அல்ல. இருந்தாலும் பொதுத்தளத்தில் காக்கையை இழிவாக கூறுவது மரபு. குயிலைத் தூது விடுவது, அன்னத்தைத் தூது விடுவது, மயிலைத் தூது விடுவது எல்லாம் உண்டு. ஆனால் இவர் காக்கையை ராஜாஜியிடம் தூது விடுகிறார். உ.வே. சாமிநாதையர் ‘கழுதை விடு தூது’ என்ற ஒரு நூலைச் சொல்கிறார். மிதிலைப் பட்டியைச் சேர்ந்த ஒரு கவிராயர் கழுதையைத் தூது விடுவதாக ஒரு நூல் இருந்தது. ஆனால் அது கிடைக்கவில்லை. அந்த நூலைக் கேள்விப்பட்டிருக்கிறேன் என்று உ.வே.சாமிநாதையர் சொல்கிறார். புதுப்புது விதமான தூதுக்கள் உண்டு. சுவாரசியமாகப் படிப்பதற்கு ஏற்றவாறு பல தூதுக்கள் உள்ளன. நாராயணசாமி ஐயர் எழுதிய ‘செருப்பு விடு தூது’ என்பது ஒரு புலவர் தன்னுடைய பகைவனுக்கு அனுப்புவது போன்ற தூது ஆகும்.
மண் செருமிக் கவ்வி விழமாட்டிப்
புடைத்து ருக்கி மண் செருப்பே
தூது உரைத்து வா”
என்று அந்தப் பாடல் முடிவடைகிறது.
‘மின்சாரத் தந்தி விடு தூது’ என்பதுவும் உண்டு. தந்தி வந்த காலத்தில் அது அதிசயமாக இருந்தது. எங்கேயோ இருக்கக்கூடிய ஒருவருக்குச் செய்தியை உடனடியாக அனுப்ப முடிகிறது என்பது ஆச்சரியமாக இருந்தது. ஆகவே தந்தியைத் தூது அனுப்புவதாக சிவசண்முகம் பிள்ளை என்பவர் பாடியிருக்கிறார். ஒரு தலைவன் தலைவிக்குத் தந்தியை தூது விடுவதாக அமைந்தது இப்பாடல். இப்படிப் பலவிதமான பொருட்களை தூது இலக்கியங்களில் பாடுவது உண்டு. வசைத் தூதுக்கள் உண்டு. அது எல்லாம் தூது இலக்கியங்களின் சிறப்புகள் என்று நான் சொல்வேன்.
தூது இலக்கியம் தொடர்ந்து நிலைபெற்று இருப்பதற்குக் காரணம் இப்படிப் பலவிதமான பொருட்களைப் பயன்படுத்த முடியும் என்பதும் பலவிதமான உணர்ச்சிகளில் வெளிப்படுத்த முடியும் என்பதும் தான். காலத்துக்கு ஏற்ற பொருட்களைத் தூது அனுப்ப முடியும் என்பதும் இதற்குக் காரணமாகும். இப்படி நெகிழ்வுத் தன்மை கொண்டது தூது. தொடக்கத்தில் சொன்னது போன்று சைவ சமயத்தைச் சேர்ந்த உமாபதி சிவாச்சாரியார் தான் முதலில் நெஞ்சுவிடு தூது என்ற தூது இலக்கியத்தைத் தொடங்கினார். நிறைய நூல்கள் சைவத்தின் சிறப்பைப் பாடுவதாக இருக்கும். அழகர் கிள்ளைவிடு தூது என்பதெல்லாம் வைணவத்தின் உடைய சிறப்பைப் பாடுவதாக இருக்கும்.
இதைத் தவிர மதத்தை கடந்தும் தூது நூல்கள் இருக்கின்றன. இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் தூது இலக்கியத்தைப் பாடியிருக்கிறார்கள். அலி மரைக்காயர் என்பவர் ‘வண்டு விடு தூது’ என்று ஒரு தூதைப் பாடியிருக்கிறார். கிறித்தவ மதத்தைச் சேர்ந்த ஒருவர் ‘வானவன் விடு தூது’ என்ற தூதைப் பாடியிருக்கிறார். இதில் மதச் சண்டைகள் நடந்ததற்கான ஆதாரங்கள் கூட இருக்கின்றன. கந்தசாமி முதலியார் என்பவர் ‘திருப்பேரூர் கிள்ளைவிடு தூது’ என்று கிளியைத் தூது விட்டு ஒரு நூலை எழுதியிருக்கிறார். அதில் கிறித்தவ மதத்தை இழிவு செய்வது போன்று அவர் எழுதியிருந்தார். உடனே அதற்குப் பதில் சொல்வதுபோல் கிறித்தவ மதத்தைச் சேர்ந்த சுவாமிநாத பிள்ளை என்பவர் ‘பிள்ளை விடு தூது’ என்ற நூல் எழுதிக் கிறித்தவ மதத்தின் சிறப்புகளைப் பாடினார். பிள்ளை விடுதூது ஆபாசம் என்று சொல்லி இன்னொரு நூலும் வந்ததாம். இப்படித் தூது நூல்கள் விவாதத்திற்கும் பயன்பட்டிருக்கின்றன. இசுலாம் மதத் தூது உண்டு. கிறித்தவ மதத் தூது உண்டு. இப்படிப் பல மதங்களைச் சேர்ந்த நூல்களும் உண்டு.
சமீபத்தில் ‘வௌவால் விடு தூது’ என்னும் நூல் தெலுங்கு மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ‘கணினி விடு தூது’ என்னும் பெயரில் இரண்டு தூது நூல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆகவே இன்று வரைக்கும் நிலை பெற்று இருக்கும் இலக்கிய வகைமை தூது ஆகும்.
—– 20-03-25
பொதுவாக உங்கள் கட்டுரைகளை இரண்டு காரணங்களுக்காகப் படிப்பேன். ஒன்று, தகவல்கள் தெரிந்து கொள்ள. இரண்டு, தமிழைப் பிழையின்றி எழுத.
💙