தமிழ் ஒன்றே தம் நலம்
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறையின் தலைவராகப் பணியாற்றி வரும் பேராசிரியர் ய.மணிகண்டன் அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. யாப்பு, பாரதிதாசன், பாரதி எனத் தம் ஆய்வுப் புலங்களை விரித்துப் பல நூல்களை எழுதியவர். இலக்கிய ஆய்வில் புதிய தரவுகளைத் திரட்டித் தருவதிலும் புதிய பார்வைகளை முன்வைப்பதிலும் தொடர்ந்து செயல்பட்டு வருபவர். 1990களில் தஞ்சாவூர், சரஸ்வதி மகால் நூல் நிலையத்தில் பணியாற்றினார். அப்போது ஓலைச்சுவடியிலிருந்து அச்சுக்குக் கொண்டு வந்து அவர் பதிப்பித்த நூல்கள் பல. ‘மரியாதை ராமன் கதைகள்’ நூல் அப்படி வெளியான ஒன்று. தமிழ் உரைநடை வரலாற்றுக்குப் பெரிதும் உதவும் நூல் அது.
எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் ஆழ்ந்த கவனம் செலுத்தி உழைப்பவர் அவர். பதிப்பாசிரியர், தொகுப்பாசிரியர், இலக்கண ஆய்வாளர், பாரதிதாசன் ஆய்வாளர் என முகங்கள் கொண்ட அவர் சில ஆண்டுகளுக்கு முன் பாரதி ஆய்வுக்குள் நுழைந்தார். பாரதி பற்றியவை எல்லாம் பேசித் தீர்ந்துவிட்டன என்னும் எண்ணம் நிலவிய சூழலில் ‘இல்லை, இன்னும் ஏராளம் இருக்கிறது’ என்று பாரதியியலில் பல புதியவற்றைக் கொண்டு வந்து சேர்த்தார். தொடர்ந்து பொருட்படுத்தத்தக்க வரிசை நூல்களை எழுதிக் கொண்டுள்ளார். ‘பாரதியும் ஜப்பானும்’ நூல் வெளியீடு சமீபத்தில் ஜப்பானிலேயே நடைபெற்றது.
‘தமிழில் யாப்பிலக்கண வளர்ச்சி’ யாப்பிலக்கண ஆய்வில் மிகவும் முக்கியமான நூல். பாரதிதாசன் கவிதைகளின் யாப்பை ஆராய்ந்து ‘பாரதிதாசன் யாப்பியல்’ நூலை எழுதினார். பாரதிதாசன் தொடர்பாக அவர் பங்களித்தவையும் மிகுதி. இடையில் ‘ந.பிச்சமூர்த்தி கட்டுரைகள்’ தொகுப்பைச் செய்தார். பல்கலைக்கழகப் பணியில் அவரைப் போல நேரம் செலவழித்து ஈடுபடும் பேராசிரியர்கள் இல்லை என்றே சொல்லலாம். உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் தமிழ் ஒன்றே தம் நலம் என்று வாழ்பவர். பணத்திலோ சொத்துச் சேர்ப்பதிலோ சிறிதும் ஆர்வம் இல்லாதவர்; நேர்மையாளர். மாணவர்களின் மனம் கவர்ந்த ஆசிரியர். அவர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். குழந்தை உள்ளம் கொண்ட அன்பாளர்.
பேராசிரியர் ய.மணிகண்டன் துறைத்தலைவராகப் பணியாற்றும் தமிழ் மொழித்துறையில் எம்.பில்., பிஎச்.டி. ஆகியவற்றைப் பயின்ற முன்னாள் மாணவன் நான். 1988ஆம் ஆண்டு அத்துறையில் சேர்ந்தேன். முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு 1998ஆம் ஆண்டு நடந்தது. ஆகப் பத்தாண்டுகள் அத்துறையில் மாணவனாக இருக்கும் பேறு பெற்றேன். நான் பயின்ற காலத்தில் தமிழ் இலக்கியத் துறையில் முனைவர் பொற்கோ அவர்கள் மேற்பார்வையில் ய.மணிகண்டன் எம்.பில். பயின்றார். ஒரே வளாகத்தில் வெவ்வேறு துறைகளில் பயின்றோம். எனக்கு ஓராண்டு மூத்தோர். அப்போதே தமிழறிஞருக்கு உரிய நடையுடை கொண்டு விளங்கினார். அவரது நட்பு, பழக்கம் எல்லாம் மூத்த தமிழறிஞர்களோடுதான். மேடைப்பேச்சில் வல்லவர். எழுத்துத் தமிழில் ஆற்றொழுக்காகப் பேசும் இயல்புள்ளவர். வயதுக்குப் பொருந்தாத ஆற்றலோடு விளங்கிய அவரை நாங்கள் எல்லாம் விலகி நின்று பார்ப்போம். அக்காலத்தில் நெருங்கிப் பழக வாய்த்ததில்லை.
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையில் உதவிப் பேராசிரியராக அவர் பணியேற்ற காலம் தொடங்கிக் கிட்டத்தட்ட இருபதாண்டுகளாக நல்ல நட்பு தொடர்கிறது. எங்களை இணைத்தது இலக்கியம்தான். எனக்கு யாப்பிலக்கணத்தில் ஓரளவு ஈடுபாடு உண்டென்பதால் அவரைப் பின் தொடர்பவனாக இருந்து வந்தேன். நேரில் சந்திக்கும் காலத்தில் என் ஐயங்களைப் போக்கிக் கொள்ளும் வாயிலாகவும் அவரைக் கருதி வந்தேன்.
இரண்டாண்டுகளுக்கு முன் சென்னைப் பல்கலைக்கழகத்திற்குத் தேசியத் தர நிர்ணயக் குழு வந்தபோது அத்துறையின் முன்னாள் மாணவன் என்னும் நிலையில் என்னைப் பற்றிய தகவல்களைத் தருமாறு கேட்டார். அப்போது பன்னாட்டுப் புக்கர் விருது நெடும்பட்டியலில் ‘பூக்குழி’ இருந்தது. இத்தகவல்களை எல்லாம் அக்குழுவின் முன் வைத்தபோது அதற்கு நல்ல விளைவு இருந்திருக்கிறது. அதை மனதில் கொண்டு ‘உங்கள் படைப்புகளுக்கு நம் துறையில் ஒரு கருத்தரங்கு நடத்த வேண்டும்’ என்று சொன்னார். ஏதோ ஆர்வத்தில் சொல்கிறார் என்று நினைத்தேன்.
பின்னர் 2023ஆம் ஆண்டு டிசம்பரில் ஆனைக்கட்டி எழுத்தாளர் முகாமில் இருவரும் பதினைந்து நாட்கள் ஒன்றாகத் தங்கியிருந்தோம். அப்போது நெருங்கிப் பழகவும் பல்வேறு இலக்கியச் செய்திகளைப் பகிர்ந்து கொள்ளவும் வாய்த்தது. அச்சமயத்திலும் கருத்தரங்கை நினைவூட்டினார். ‘இன்னும் இரண்டாண்டுகளில் நான் ஓய்வு பெற்றுவிடுவேன். அதற்குள் உங்கள் படைப்புகள் தொடர்பாகக் கருத்தரங்கு நடத்த வேண்டும்’ என்று வலியுறுத்தினார். ஒருநாளோ இருநாளோ கருத்தரங்கு நடத்துவது என்றால் அதற்குக் கணிசமான தொகை செலவாகும். அதைத் திரட்டுவது கடினம். அதையெல்லாம் யோசித்து ‘வேண்டாங்க மணிகண்டன்’ என்று சொன்னேன். ‘அது என்னோட ஆசை’ என்று நெகிழ்வோடு அவர் சொன்னபோது என்னால் மறுக்க இயலவில்லை.
நான் பயின்ற துறையாக இருந்தபோதும் மணிகண்டன் அத்துறைக்கு வந்த பிறகுதான் என்னைச் சிறப்பு விருந்தினராக அழைத்து அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நிகழ்த்த வைத்தார். சி.சு.செல்லப்பா பெயரில் அமைந்த அறக்கட்டளையின் தொடக்க நிகழ்வில் உரையாற்றியதை மறக்க முடியாது. தனிப்பாடல் தொடர்பாகவும் ஒருமுறை உரையாற்றினேன். இப்போது கருத்தரங்கு. இந்தக் கல்வியாண்டில் நடத்தி முடித்துவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
முதலில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால் அதன் செலவுகளைக் கணக்கிட்ட போது வாய்ப்பில்லை என்று தோன்றியது. அப்போதும் ‘வேண்டாம்’ என்று சொன்னேன். மணிகண்டனின் வெகுளியான குரலைக் கேட்டால் என்னால் மறுக்க முடியாது என்பதால் காலச்சுவடு கண்ணனிடம் சொல்லி அத்திட்டத்தைக் கைவிடும்படி சொன்னேன். ஆனால் மணிகண்டன் விடவில்லை. ஒருநாளேனும் நடத்திவிட வேண்டும் என்றார்.
அப்படி நடந்ததுதான் 20 பிப்ரவரி 2025 அன்று சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறையில் ‘பெருமாள்முருகன் படைப்புகள்’ என்னும் தலைப்பில் நடைபெற்ற ஒருநாள் கருத்தரங்கம்.
(தொடர்ச்சி நாளை)
—– 02-04-25
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதைப் போல எங்களையும் இன்பமடையச் செய்தீர்கள். சிறந்த பதிவு. அருமை.