வைகாசி, ஆவணி, தை ஆகிய மூன்றையும் ‘திருமண மாதங்கள்’ என்றே அடையாளப்படுத்திவிடலாம். அவ்வளவு திருமணங்கள். ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மூன்றும் திருமணமே நடக்காத மாதங்கள். சித்திரை, ஆனி, ஐப்பசி, கார்த்திகை, மாசி, பங்குனி ஆகியவை குறைவான திருமணங்கள் நடக்கும் மாதங்கள். இந்த வேறுபாட்டுக்குரிய காரணங்கள் ஆய்வுக்குரியவை. ஆவணியில் பல திருமண அழைப்புகள் வந்திருந்தன. நெருங்கிய சொந்தக்காரர் வீட்டுத் திருமணங்கள் சிலவற்றுக்கே போக முடியவில்லை.
நெடுங்கால நண்பர் ஒருவரின் மகள் திருமணத்திற்குச் செல்ல வாய்த்தது. பந்தியில் இடம்பிடிப்பது பற்றி என் மனதில் பெரும் கலவரம் நிலவும். உணவறையின் முன் காத்திருக்க வேண்டும். ஒருபந்தியில் உண்போர் எழுந்ததும் இடம் பிடித்து உட்கார்வதற்காக அவர்களுக்குப் பின்னால் போய் நின்றுகொள்ள வேண்டும். தன் பின்னால் நின்று ‘இவர் எப்போது எழுவார்’ என்று பார்க்கப் பார்க்க எப்படி உண்ண முடியும்? ‘இவர் எப்போது முடிப்பார்’ என்று யோசித்தபடி உணவு வகைகளைப் பார்த்து எச்சில் ஒழுக்கியபடி எவ்வளவு நேரம் நிற்க முடியும்? உண்பவருக்கும் கஷ்டம்; நிற்பவருக்கும் கஷ்டம்.
பெருங்கூட்டம் நிற்கும் திருமணப் பந்திகளைக் கண்டால் உண்ணாமல் திரும்பி விடவே விரும்புவேன். திருமண வீட்டில் பார்ப்போர் எல்லாம் கேட்கும் ஒரே கேள்வி: ‘சாப்பிட்டீங்களா?’ உண்ணாமல் திரும்பும் போது ‘சாப்பிட்டுட்டேன்’ என்று சொல்வதற்கும் தயக்கம். ‘சாப்பிடவில்லை’ என்று சொல்லவும் முடியாது. வீட்டாரும் திருமண விருந்தில் உணவு வகைகளை விசாரிப்பர். அடுத்தடுத்த நாட்களில் காணும் நண்பர்களும் அதைப் பற்றிப் பேசுவதுண்டு. சிலசமயம் சாப்பிட்ட பாவனையில் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி விடுவதுண்டு.
எப்படியோ பந்தியில் உட்கார்ந்துவிட்டாலும் கஷ்டம். நான் சாப்பிடும் அளவும் நேரமும் ஒருமாதிரி இருக்கும். அருகில் இருப்பவருடையவை வேறுபடும். ஒருவர் சாப்பிட்டுவிட்டு எழாமல் நமக்காகக் காத்திருப்பார். இல்லை, நாம் காத்திருக்க நேரும். சிலர் காத்திருக்காமல் எழுந்து சென்றுவிடுவர். காலியான இருக்கைக்கு அருகில் நாம் மட்டும் உண்டு கொண்டிருப்பதும் கஷ்டம். ரொம்ப நேரம் நாம் சாப்பிடுகிறோமோ என்று தோன்றும். அதுவும் இருபுறம் இருப்போரும் எழுந்துவிட்டால் பெரும்பாடு. உண்டும் உண்ணாமலும் இலையை மூடி வைத்துவிட்டு எழ வேண்டியிருக்கும். திருமண விருந்து இப்படிப் பல சங்கடங்களைக் கொடுக்கும்.
திருமண விருந்து என்றாலே எனக்கு ஒருபாடல் நினைவுக்கு வந்துவிடும். ஔவையின் வாழ்வில் ஒரு நிகழ்ச்சி. பாண்டிய மன்னன் வீட்டுத் திருமண அழைப்பு அவருக்கு வந்திருக்கிறது. அரசன் வீட்டுத் திருமணம் என்றால் சாதாரணமா? பெருங்கூட்டம் இருக்கும். அழைப்பில்லாதவர்களும் வருவார்கள். பொதுமக்கள் உரிமையோடு வந்து உண்டு செல்வார்கள். பந்தியில் இடம் பிடித்துவிட்டால் சொர்க்கத்தில் இடம் கிடைத்தது போலத்தான்.
திருமணத்திற்கு ஔவை போய் வந்ததை எல்லோரும் அறிவார்கள். அரசன் வீட்டுத் திருமண விருந்து எப்படி இருந்தது என்று அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் பார்ப்போர் எல்லாம் ஔவையிடம் விசாரிக்கிறார்கள். பல கேள்விகள். எத்தனை பேர் வந்திருந்தார்கள்? பெருங்கூட்டமா? அத்தனை பேரும் உண்டார்களா? உணவு எல்லோருக்கும் கிடைத்ததா? எத்தனை பந்திகள்? உணவு எப்படி? எத்தனை வகை? எது சுவையாக இருந்தது? அரசன் வீட்டு உணவை உண்டாயா? எவ்வளவு நேரம் உண்டாய்? என்னென்னெ உண்டாய்? புதிய உணவு ஏதும் உண்டாயா?
ஔவை உடனே ‘உண்டேன் உண்டேன்’ என்று கத்திக்கொண்டு பதில் சொன்னார். அரசன் வீட்டுத் திருமணத்தில் தான் உண்ட பெருமையை எத்தனை பேருக்குத் தனித்தனியாகச் சொல்வது? ஒருபாடல் எழுதிக் கேள்வி கேட்பவருக்கு எல்லாம் சொல்ல ஆரம்பித்துவிட்டார். பாடலைக் கேட்டோர் சிரித்து மாய்ந்தனர். உணவுச் சுவையை மறந்து கவிச்சுவையில் ஆழ்ந்து எல்லோருக்கும் சொல்லிச் சொல்லிச் சிரித்தனர்.
பாண்டிய மன்னன் வீட்டுத் திருமண விருந்தின் பெருமை இப்படி ஊரெல்லாம் பரவிற்று. அன்றோடு நிற்கவில்லை. இத்தனை நூற்றாண்டுகள் கழிந்தும் அதன் பெருமை முடிந்துவிடவில்லை. நம் வரைக்கும் வந்திருக்கிறது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்குச் செல்லுமோ? அப்படி என்னதான் ஔவை பாடினார்?
பாடல் இது:
வண்டமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்து
உண்ட பெருக்கம் உரைக்கக்கேள் – அண்டி
நெருக்குண்டேன் தள்ளுண்டேன் நீள்பசியி னாலே
சுருக்குண்டேன் சோறுண்டி லேன்.
எல்லாச் செல்வங்களையும் வழங்கும் மொழி தமிழ். அத்தமிழ் மொழியின் இலக்கிய இலக்கணங்களில் நல்ல புலமை வாய்ந்தவனாகிய பாண்டிய மன்னன் வீட்டுக் கலியாணத்துக்குச் சென்று உணவு உண்டு வந்த பெருமையைச் சொல்கிறேன், கேள்! பந்திக்குச் செல்லும் பெருங்கூட்டத்தோடு சேர்ந்து சென்று நெரிசலில் சிக்கிக் கொண்டேன். ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு நுழையும் கூட்டம் என்னைப் பின்னால் தள்ளியது. உள்ளே போகவே முடியவில்லை. நெடுநேரமாக நீடித்த பசி மீறியதால் வயிறு இழுத்துப் பிடித்துக்கொண்டது. உள்ளே நுழைந்தால் தானே சோறுண்ண முடியும்? என்னால் நுழையவே முடியவில்லை. ஆம், பாண்டியன் வீட்டுக் கல்யாணத்தில் நெருக்குண்டேன்; தள்ளுண்டேன்; வயிறு சுருக்குண்டேன். சோறு உண்டிலேன்.
இது சொல் விளையாட்டுத்தான். பெரும்ரசனையான சொல்விளையாட்டு. அது மட்டுமா? எல்லாம் வழங்கும் தமிழ் புலவருக்கு எதுவும் வழங்கவில்லை. அந்த வள்ளல் தன்மை கொண்ட தமிழையே மூச்சாகக் கொண்ட பாண்டியன் உணவு கொடுக்கவில்லை. பெருங்கூட்டம் முட்டி மோதிய திருமணத்தின் பெருமை இதுதான். என்றெல்லாம் முரண்கள் அமைந்த பாடல். ஏராளமான பேரை அழைத்தோர் அதற்கேற்ற வகையில் உணவு பரிமாறும் இடத்தையும் அமைத்திருக்க வேண்டாமா?
இன்றும் பலர் அப்படித்தான். மண்டபம் சிறிதாக இருக்கும். ஆயிரக்கணக்கான பேரை அழைத்திருப்பார்கள். எல்லோரும் சரியாக உணவு நேரத்திற்கு வந்து சேர்ந்திருப்பார்கள். உணவறை வாயிலை அடைத்துக் கொண்டு கூட்டம் நிற்கும். எத்தனை பேரை அழைத்தோம் என்று கணக்கு சரியாக வைத்துக் கொள்ளாமல் குறைவாக உணவு சமைத்திருப்பார்கள். கடைசியில் சில பந்திகள் நடக்காமலே போகும். திருமண விருந்தைப் பற்றிச் சொன்னால் எத்தனையோ வரும்.
சரி, நண்பர் வீட்டுத் திருமணப் பந்திக்கு அரைமணி நேரம் காத்திருந்து உண்டோம். அது ஒன்றும் பிரச்சினையில்லை. அப்போது பேச்சுத் துணைக்கு நண்பர்கள் இருந்தார்கள். பந்தியில் உட்கார்ந்ததும் அலங்காரப் பதுமையாக ஒருபெண் வந்து இலையில் இனிப்பு வைத்தார். கிட்டத்தட்ட மணப்பெண்ணுக்கு நிகரான அலங்காரம். கண்ணோட்டினால் பந்திகளுக்கு இடையே இரண்டு மூன்று பெண்கள் அப்படி அலங்காரத்தோடு நடமாடிக் கொண்டிருந்தனர். இப்போது பந்தி பரிமாறலில் வந்திருக்கும் புதுப்போக்கு இதுவாம். மற்றபடி ஒரே சீருடையில் ஆண் பரிசாரகர்கள் வழக்கம் போல. சில இடங்களில் பெண்களே பரிமாறும் முறையும் வந்திருக்கிறது. அதுவும் புதுப்போக்காம்.
வரிசையாக ஏதேதோ கொண்டு வந்து இலையில் வைத்தபடி சென்று கொண்டிருந்தனர். ஒருவர் வைப்பது என்னவென்று பார்த்துத் தெரிந்து கொள்வதற்குள் அடுத்தவர் ஒன்றை வைத்துவிடுகிறார். சில நிமிடத்தில் இலை நிறைந்துவிட்டது. அவ்வளவும் உண்ண என் வயிறு இடம் தராது. அனைத்தையும் உண்ண வேண்டுமானால் ஒருமணி நேரம் தேவை. முதுகுக்குப் பின்னால் ஆள் வந்து நிற்பது தெரிந்தது. என்னதான் செய்வது? உணவறை வாயிலில் என்னென்ன வகை உணவுகள் என்றொரு பட்டியல் எழுதிப் போட்டிருக்கலாம். அல்லது அச்சிட்ட உணவுப்பட்டியல் (மெனு) ஒன்றை ஒவ்வொரு இலைக்கும் கொடுத்திருக்கலாம். வேண்டுமானதை வாங்கிக் கொண்டு வேண்டாததைத் தவிர்த்திருக்க முடியும். இப்படியெல்லாம் ட்ரெண்ட் கொண்டு வர முடியாதா? அலங்காரப் பதுமைகள்தான் டெரெண்ட் ஆக வேண்டுமா?
—– 17-11-24
Add your first comment to this post