பழந்தமிழ் இலக்கியத்தில் ஒருவிஷயத்தை எடுத்து விவாதிக்கும் தர்க்க முறைகள் பேசப்பட்டுள்ளன. மணிமேகலை, நீலகேசி உள்ளிட்ட சமய நூல்களில் இவற்றைக் காணலாம். எதிர்க்கருத்தை, எதிராளியைக் கேலி செய்வதும் எள்ளி நகையாடுவதும் உண்டு. தம் கருத்தை எடுத்து வைக்கும்போது பொருள் சார்ந்து தீவிரமாகப் பேசுதலைக் காணலாம். ஆனால் பிற்காலத்தில் இத்தகைய விவாத மரபு வளர்த்தெடுக்கப்படவில்லை. வன்மம், குரோதம், துவேசம் எல்லாம் கலந்த தனிமனிதத் தாக்குதல் தொடுப்பதே விவாத முறை போல மாறிவிட்டது.
தமிழின் முக்கியக் காப்பியமாகிய சீவக சிந்தாமணியைத் தம் முப்பத்திரண்டாம் வயதில் பதிப்பித்து உ.வே.சாமிநாதையர் வெளியிட்டார். தமிழ்க் கல்வியில் அவருக்கிருந்த பேரார்வமும் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் கற்பித்தலும் கொடுத்த புலமைத் திறம் அதைச் சாத்தியப்படுத்தியது. புலமையாளரில் ஒருபகுதியினர் அப்பதிப்பைக் கொண்டாடினர். இன்னொரு பிரிவினர் அதைக் குறை கூறிப் பல கருத்துக்களைப் பரப்பினர். உ.வே.சா.வை இழிவுபடுத்தி எழுதினர். துண்டறிக்கை வெளியிட்டனர்.
‘என் சரித்திரம்’ நூலில் இதைப் பற்றித் தனி இயலே எழுதியிருக்கிறார். ‘கண்டனப் புயல்’ என்னும் தலைப்புடைய அதில் ‘பிறரைக் கண்டிப்பதிலே இன்பங்காணும் சிலர் சீவக சிந்தாமணிப் பதிப்பைப் பற்றிப் பலவகையான கண்டனங்களைக் கூறியும் எழுதியும் அச்சிட்டும் வெளிப்படுத்தலாயினர். அவர் கூறிய பிழைகளில் உண்மையில் பிழைகளாகக் கருதப்படுவனவும் சில உண்டு. ஆனாலும் அவர்களுடைய நோக்கம் பிழை திருந்த வேண்டுமென்பதன்று; எப்படியாவது கண்டனம் செய்து என் மதிப்பைக் குறைக்க வேண்டுமென்பதே. கண்டனத்தின் முறையும் நடையும் அவர்களுடைய உள்ளக் கொதிப்பைக் காட்டினவேயன்றித் தமிழன்பை வெளிப்படுத்தவில்லை. இத்தகைய கூட்டத்தார் எந்தக் காலத்திலும் உண்டு’ (ப.681) என்று எழுதியுள்ளார்.
கண்டனம் செய்தோர் நோக்கம் என்னவென்று அறிந்தாலும் அவற்றிற்கு எதிர்வினை புரியும் வேகம் அவருக்கு இருந்திருக்கிறது. இளம்வயது. பெரிய செயலைச் செய்திருக்கிறார். தம்மைத் தற்காத்துக்கொள்ளும் ஆவேசம் வந்திருக்கிறது. கண்டனம் செய்தோர் சும்மா இருக்கவில்லை. சீவக சிந்தாமணி சமண நூல்; உ.வே.சா. சைவர் என்னும் மதரீதியான காரணத்தைப் பிடித்துக் கொண்டனர். திருவாவடுதுறை சைவ மடம் இந்நூல் வெளியீட்டுக்கு உதவியது தவறு என்றனர். பதிப்பில் பிழைகள் மலிந்துள்ளன என்றும் அப்பிழைகள் கடல் மணலை விடவும் விண்மீன்களை விடவும் அதிகம் என்றும் கூறினர். கூறியதோடு துண்டறிக்கை வெளியிட்டுப் பரப்பினர். பல அறிஞர்களுக்கும் அனுப்பி வைத்தனர். பதிப்புக்கு உதவியோருக்கெல்லாம் அனுப்பினர். ‘குடந்தை மித்திரன்’ என்னும் பத்திரிகையில் உ.வே.சா.வைப் புகழ்ந்தும் இகழ்ந்தும் கட்டுரைகள் வந்தன.
எப்பேர்ப்பட்டவரையும் இத்தொடர் தாக்குதல் பாதிக்கத்தான் செய்யும். இவற்றை உ.வே.சா. எப்படி எதிர்கொண்டார்? தம் வருத்தத்தைப் போக்கிக்கொள்ள அவருக்குப் பக்தி உதவியது. முருகப்பெருமானை நினைத்து உருகினார். தம் வேண்டுதலைச் சில செய்யுட்களாக எழுதினார். ‘குகனே, முருகா, குமரா, திருவே! தீஞ்சுவை நற்றமிழ் பாடி உளம் பதையாது உறையும்படி வைத்தருள்வாய்’ என்றெல்லாம் வேண்டினார். அதில் அமைதி பெற முடியாதவாறு அடுத்தடுத்த செயல்கள் நடந்தன.
‘சீவக சிந்தாமணிப் பிரகடன வழுப்பிரகரணம்’ என்று ஒருபிரசுரத்தை எதிர்ப்பாளர்கள் வெளியிட்டனர். அது உ.வே.சா.வின் அமைதியைக் குலைத்தது. தூக்கத்தைப் பறித்துக் கொண்டது. உறக்கம் வராத ஓரிருவில் எழுந்து அப்பிரசுரத்திற்குப் பதில் எழுதத் தொடங்கினார். அவர்கள் பிழை என்று சொன்னவற்றுக்குச் சமாதானம் எழுதி முடித்தபோது விடிந்திருந்தது. அதை யாரிடமாவது கொடுத்து வாசிக்கச் சொல்ல வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது.
கும்பகோணத்தில் அவர் வசித்த அதே தெருவில் சாது சேஷையர் என்பவரும் வசித்தார். கும்பகோணம் கல்லூரியில் முதல்வருக்கு அடுத்த நிலைப் பணியிலிருந்தவர் அவர். உ.வே.சா. அக்கல்லூரிப் பணியில் சேர்வதற்கு உதவியவர்களில் அவரும் ஒருவர். அவரிடம் கொடுத்துப் படித்துப் பார்க்கச் சொல்லலாம் என்று எழுதியதை எடுத்துக்கொண்டு சென்றார். விவரம் சொல்லிக் கொடுத்ததும் கையில் வாங்கிய சாது சேஷையர் அதை அப்படியே கிழித்துக் குப்பைக்கூடையில் போட்டார். இரவெல்லாம் விழித்து எழுதிய பதிலை இப்படிக் கிழித்துப் போட்டுவிட்டாரே என்று உ.வே.சா. பதைத்தார்.
சாது சேஷையர் என்ன சொன்னார் என்பதை உ.வே.சா. விரிவாக எழுதியிருக்கிறார். அதன் முக்கியப் பகுதிகளை மட்டும் தருகிறேன்.
‘அதற்கு நீங்கள் பதில் எழுதினால் உங்களுடைய எதிரியின் பெயர் பிரகாசப்படும். உங்கள் பதிலுக்கு மறுப்பு அவர்கள் எழுதுவார்கள்; நீங்கள் மறுப்புக்கு மறுப்பு எழுத நேரும். இப்படியே உங்கள் காலமெல்லாம் வீணாகிவிடும். நல்ல காரியத்துக்கு நானூறு விக்கினங்கள் வருவது உலக வழக்கம். சீமையிலும் இப்படியே வீண் காரியங்கள் நடைபெறுவதுண்டு. அவற்றைத் தக்கவர்கள் மதிப்பதில்லை. உங்கள் அமைதியான நேரத்தை இந்தக் காரியத்திலே போக்க வேண்டாம்.’
‘நீங்கள் இன்னும் பல நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும். அதற்கு இவ்விஷயங்களெல்லாம் தடைகளாக இருக்கும். இக்கண்டனம் இன்றைக்கு நிற்கும்; நாளைக்குப் போய்விடும்… இந்தக் கண்டனப் போரில் நீங்கள் இறங்க வேண்டாம். உங்கள் தமிழ்த் தொண்டைச் செய்துகொண்டேயிருங்கள். தெய்வம் உங்களைப் பாதுகாக்கும்.’ (ப.685)
சாது சேஷையர் சொன்னவற்றைக் கேட்டுச் சமாதானம் அடைந்த உ.வே.சா. ‘நான் இனித் தூஷணைகளைக் கவனிப்பதும் இல்லை. அவற்றிற்குச் சமாதானம் எழுதப் புகுவதும் இல்லை’ என்று உறுதிமொழி கொடுத்தார். அதைத் தம் வாழ்நாள் முழுதும் கடைப்பிடித்தார்.
உ.வே.சா.வின் வாழ்வில் நடைபெற்ற இச்சம்பவத்தை நானும் பாடமாகக் கொண்டேன். துறை சார்ந்த புலமை இல்லாமல் கருத்துரைக்க வருவோர் பலர் ஏதேதோ உளறுகின்றனர். உரிய வாசிப்பு இல்லாமல் தம்மை அறிவாளர்களாகக் கருதிக்கொண்டு தர்க்கமின்றிப் பேசுகிறார்கள். அவர்கள் எதையும் கற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களது நோக்கம் பிறரைச் சீண்டிக் கவனத்தைத் தம்பக்கம் திருப்புதல். தன்முனைப்பு மிகப் பிறரை இழிவுபடுத்துவதும் வசைச்சொற்களைப் பெய்வதுமே அவர்களின் விவாதமுறை. அவர்களிடம் விவாதிப்பது வெட்டி வேலை. அத்தகையோரைப் பொருட்படுத்தி நம் காலத்தை வீணாக்கிக்கொள்ளக் கூடாது. தமிழில் செய்வதற்கு எத்தனையோ காரியங்கள் இருக்கின்றன. பலதுறைகள் ஆளரவமற்று வெற்றுவெளியாய் விரிந்து கிடக்கின்றன. அவற்றுக்குள் நுழைந்தால் மகிழ்ச்சியோடு நடந்து கொண்டேயிருக்கலாம்.
—– 19-02-25
கட்டுரை படித்தோம். தமிழில் செய்வதற்கு எவ்வளவோ பணிகள் இருக்கின்றன. இந்தக் கூற்று இன்னும் பரவலாகச் சென்று தமிழ்க் கற்பிக்கும் ஆசிரியர்கள் பேராசிரியர்களிடம் தைக்க வேண்டும். அன்புடன் சங்கர். ஆசிரியர் மற்றும் எழுத்தாளர்.
கிமு காலத்தில் இருந்து எந்த துறையிலும் முன்னேர் பிடித்து செல்லும் ஆளுமைகளுக்கு ஆதரவுகளுக்கு அப்பாற்பட்டு எதிர்ப்பு என்பது கட்டாயம் ஒரு பாதையாக அமைந்து விட்டதை நாம் எல்லோரும் அறிவோம். எதிர்ப்பின்றி எந்த முன்னேற்றமும் இல்லை. முன்னேற்றத்தின் அடையாளம் எதிர்ப்பு என்று சொல்லிவிடலாம். எதிர்ப்பை சமாளித்துக் கொண்டு முன்னேறுவதே அதன் ஒரு பகுதியாகும்….
சிறப்பு. உ.வே.சா வின் பிறந்த தினத்தில் தேவையில்லாத விவாதத்தின் போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற படிப்பினையை இக்கட்டுரை உணர்த்துகிறது ஐயா.
நமக்கும் நல்லதொரு பாடமே,
சென்று பயனெதிரச் சொன்ன பக்கமாய்
அமைந்தது மகிழ்ச்சியும் நன்றியும்
கா. திருநாவுக்கரசு
பேரூர் தமிழ்க்கல்லூரி.