மீனாட்சிசுந்தர முகில் 1

You are currently viewing மீனாட்சிசுந்தர முகில் 1

(ஏப்ரல் 6 : மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிறந்த நாள்.)

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் (1815 – 1876) பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும்புலவர்; கவிஞர். அவர் எழுதியனவாக புராணங்கள் 22, காப்பியங்கள் 6, சிற்றிலக்கியங்கள் 45 என உ.வே.சாமிநாதையர் பட்டியலிடுகிறார். எளிதாகச் செய்யுள் செய்யும் ஆற்றல் கொண்ட அவர் இயற்றிக் கிடைக்காமல் போன நூல்களும் பல என்று தெரிகிறது. அவர் இயற்றிய  ‘தனிப்பாடல்கள் அளவிறந்தன’ என்கிறார் உ.வே.சா.. தம் பெயரால் நூல்கள் விளங்க வேண்டும் என்றோ அவை அச்சில் வர வேண்டும் என்றோ கருதாதவர் மகாவித்துவான். நிறைந்த கல்வி உடையவராக இருந்ததால் அத்தகைய மனோபாவம் ஏற்பட்டிருக்கலாம்.

பல சந்தர்ப்பங்களில் தாம் எழுதிய பாடலைப் பிறருக்குக் கொடுத்து உதவியிருக்கிறார். பட்டீச்சுரம் என்னும் ஊரில் வசித்த புரவலர் ஆறுமுகத்தா பிள்ளையின் வீட்டில் மகாவித்துவானும் அவர் மாணவர்களும் தங்கியிருந்தனர். உ.வே.சா. மீது ஏனோ வெறுப்பு கொண்ட அவர் உ.வே.சா.வின் எழுத்தாணியை ஒளித்து வைத்துவிட்டார். அதைக் கொடுக்க வேண்டும் என்னும் கருத்தமைய ஒரு செய்யுள் செய்தால் தருகிறேன் என்றார். அந்தப் பதற்றத்தில் உ.வே.சா.வுக்கு எதுவும் தோன்றவில்லை. மகாவித்துவான் போல உடனே செய்யும் செய்யுள் ஆற்றலையும் பெற்றிருக்கவில்லை. தடுமாறிய போது ‘எழுத்தாணி ஒன்றெனக் கீ’ என்னும் ஈற்றடி அமைய ஒரு வெண்பாவை மகாவித்துவான் சொன்னார். அதைக் கேட்டு மனனம் செய்துகொண்டு ஆறுமுகத்தா பிள்ளையிடம் உ.வே.சா. தாம் எழுதியது போலவே சொல்லி எழுத்தாணியை வாங்கினார்.

அதே ஆறுமுகத்தா பிள்ளை இன்னொரு முறை புத்தகத்தை எடுத்து ஒளித்து வைத்துக்கொண்டு மீண்டும்  ஒருபாடல் எழுதும்படி சொன்னார். அப்போது ‘சீர்மருவு மாறுமுகச் செம்மலே’ என்று உ.வே.சா. ஓரடியைச் சொல்லத் தொடங்கினார். அது வேண்டாம் என்று மகாவித்துவான் நிறுத்திவிட்டார். அதைச் ‘சீர்மருவும் ஆறுமுகச் செம்மலே’ என்றும் ‘சீர்மருவும் மாறுமுகச் செம்மலே’ என்றும் இருவகையாகப் பிரிக்கலாம். ‘மாறுமுகச் செம்மல்’ என்றால் அடிக்கடி இயல்பு மாறுபவர் என்னும் எதிர்ப்பொருள் வந்துவிடும். ஆகவே ‘ஆறுமுக பூபால அன்பிலார் போலென்பால்’ என்று தொடங்கும் பாடலைத் தாமே இயற்றி மகாவித்துவான் கொடுத்தார். அதையே உ.வே.சா. தாம் இயற்றிய பாடல் போலச் சொல்லி அந்த இக்கட்டிலிருந்து தப்பித்தார்.

இவற்றைப் போலப் பல சமயங்களில் பலருக்கும் பாடல் இயற்றிக் கொடுத்த சுவையான சம்பவங்களை உ.வே.சா. எழுதியுள்ளார். அவ்வளவாகப் புலமை இல்லாத சுப்பையா பண்டாரம் என்பவருக்கு ஒருபாடல் இயற்றிக் கொடுத்து அதைக் கொண்டு போய்த் தியாகராச செட்டியாரிடம் கொடுத்து மாம்பழங்கள் வாங்கி வரச் சொன்ன சம்பவம் ஒன்று உள்ளது. அத்தனை எளிதாக ஏமாற்ற முடியாத தியாகராச செட்டியார் பாடலை வாசித்தவுடன் அது மகாவித்துவான் எழுதியது என்பதைக் கண்டுகொண்டார். சுப்பைய பண்டாரத்திடம் சில கேள்விகள் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார். எனினும் பரிசலை அனுப்பி வைத்தார்.

திருவாவடுதுறை ஆதினகர்த்தர் சுப்பிரமணிய தேசிகரிடம் பரிசில் பெறுவதற்காகப் பலருக்குப் பாடல் எழுதிக் கொடுத்த நிகழ்ச்சிகளும் உள்ளன. அம்மடத்தில் நடைபெற்ற குருபூஜையின் போது ஓரிரவு முழுவதும் மகாவித்துவானை அண்டி வந்து  ‘ஒருசெய்யுள் எழுதிக் கொடுங்கள்’ என்று கேட்பவர் எண்ணிக்கை பலவாக இருந்தது. எழுதிக் கொடுத்த செய்யுளைக் கொண்டுபோய்த் தேசிகரின் முன்னிலையில் வாசித்து அவர் கொடுக்கும் பரிசிலைப் பெற்றுச் சென்றனர். அதைப்  பற்றிய பகுதிக்குச் ‘செய்யுள் தானம்’ என்றே தலைப்பிட்டிருக்கிறார். இப்பாடல் மகாவித்துவான் எழுதியது என்பது சுப்பிரமணிய தேசிகருக்கும் தெரியும். எனினும் மகாவித்துவானின் வாக்கைக் கேட்க வேண்டும் என்னும் ஆர்வத்தில் பாடலோடு வந்தவருக்கெல்லாம் பரிசில் வழங்கினார். புரவலரைப் போற்றிப் பாடும் மரபை நன்கறிந்த மகாவித்துவான் இத்தகைய செயல்களை புலமை விளையாட்டாகச் செய்திருக்கிறார்.

இவை மட்டுமல்ல, தாம் பாடிய இரண்டு நூல்களையே இன்னொருவர் பெயரில் வழங்கும்படி கொடுத்திருக்கிறார். அக்காலத்தில் பெங்களூருவில் வசித்து வந்த வல்லூர் தேவராச பிள்ளை என்பவர் இயற்றியனவாக இருநூல்கள் விளங்குகின்றன. அவை குசேலோபாக்கியானம், சூதசங்கிதை ஆகியன. சிவபெருமானின் பெருமைகளைப் போற்றிப் பாடும் சூதசங்கிதை இன்று அவ்வளவாக வழக்கில் இல்லை. குசேலோபாக்கியானம் நூல் இன்றும் பயிற்சியில் இருந்து வருகிறது.

மீனாட்சிசுந்தர முகில் 1

தேவராச பிள்ளை காலத்திலேயே 1850ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட அந்நூல் பின்னர் பல பதிப்புகளைப் பெற்றிருக்கிறது. முதல் பதிப்பில் மகாவித்துவான் எழுதிய சிறப்புப்பாயிரத்தில் ‘பெருங்கொடை எவர்க்கும் தரும்கர வள்ளல்’ எனப் போற்றியிருக்கிறார். தேவராச பிள்ளை எழுதிய ‘வித்யாகுரு வணக்கம்’ செய்யுளில் ‘இனிய தமிழ் மாரி பெய்த பேராரும் மீனாட்சி சுந்தர தேசிக முகில்’ என்று போற்றியுள்ளார். பின்னர் க.வ.திருவேங்கடன் என்பார் குறிப்புரை எழுதி 1890இல் பதிப்பித்தார். உரையை விரிவாக்கி இரண்டாம் பதிப்பை 1903இல் வெளியிட்டார்.  தமிழறிஞர் மே.வீ.வேணுகோபாலப்பிள்ளை அதைப் பதிப்பித்திருக்கிறார். எம்.நாராயண வேலுப்பிள்ளை உரை இப்போதும் விற்பனையில் இருக்கிறது. கண்ணனின் வகுப்புத் தோழனாகிய குசேலர் இருபத்தேழு பிள்ளைகள் பெற்று வறுமையில் வாடிப் பின்னர் கண்ணனைச் சந்தித்து அருள் பெறுவதாக அமைந்த கதை அது.

எளிமையும் சுவையும் கூடிய பல பாடல்களைக் கொண்ட நூல் இது. வறுமையைப் பற்றியும் நட்பின் சிறப்பைக் குறித்தும் அழகுறப் பாடியிருக்கிறார். மகாவித்துவானின் புலமையும் கவித்துவ ஆற்றலும் ஒருசேரப் பரிமளிக்கும் நூல் இது. இரத்தலைப் பற்றிய பாடல் ஒன்று:

பல்லெலாம் தெரியக் காட்டிப் பருவரல் முகத்தில் கூட்டிச்

சொல்லெலாம் சொல்லி நாட்டித் துணைக்கரம் விரித்து நீட்டி

மல்லெலாம் அகல ஓட்டி மானம்என் பதனை வீட்டி

இல்லெலாம் இரத்தல் அந்தோ இழிவுஇழிவு எந்த ஞான்றும்.

இவ்விரண்டு நூல்களும் தேவராச பிள்ளை பெயரால் வழங்கினாலும் அவற்றைப் பாடிக் கொடுத்தவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்பதை உ.வே.சா. எழுதியிருக்கிறார்.

(தொடர்ச்சி நாளை)

—–   06-04-25

Latest comments (2)

T. LAKSHMAN

ஆசிரியருக்கும் மாணவருக்குமான உறவு அன்றிலிருந்து அருமை போல. சிறப்பு.