ஒருநாள்; எட்டுக் கடைகள்
வாடிவாசல் வரைகலை (Graphic) நாவலை ஆங்கிலத்தில் சைமன் சூஸ்டர் (Simon & Schuster) பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழ் மொழியின் சிறப்புகளையும் தமிழர் பண்பாட்டையும் நமக்குள்ளே விதந்து பேசிப் பயன் என்ன? அவற்றை வெளியுலகுக்குக் கொண்டு செல்லப் பல வழிகள் உள்ளன. அவற்றுள் ஒன்று தேர்ந்தெடுத்த தமிழ் நூல்களைப் பிறமொழிகளுக்குக் கொண்டு செல்லுதல். தமிழர் வீர விளையாட்டு, இரண்டாயிரம் ஆண்டு வரலாறு கொண்ட விளையாட்டு என்றெல்லாம் ஜல்லிக்கட்டைப் பற்றிப் பேசுகிறோம். அதைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பிறமொழிகளுக்குக் கொண்டு செல்ல நம்மிடம் இருப்பது ஒரே ஒரு நாவல்தான்.
வாடிவாசல் ஆங்கிலத்தில் வெளியாகிக் கவனம் பெற்றிருக்கிறது. அதில் வரும் காட்சிகளையும் விவரணைகளையும் பிறமொழி வாசகர்கள் புரிந்துகொள்வது சிரமம். இப்போது வரைகலை வடிவில் வெளியானதும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. விவரணைகள் தெளிவான காட்சிச் சித்திரங்களாக வாசகருக்குப் போய்ச் சேர்ந்துள்ளன. தமிழ்ப் பண்பாட்டுக் கூறு ஒன்றை வெளியுலகிற்குக் கொண்டு செல்லும் நடவடிக்கையாக வாடிவாசல் வரைகலை நூல் வெளியீடு அமைந்திருக்கிறது.
வாசகருக்குப் பிடித்தமானதாக இருக்கும் என்று பதிப்பகம் கருதும் நூலைக் கொண்டு சேர்க்கப் பலவித விளம்பர உத்திகளை ஆங்கிலப் பதிப்பகங்கள் கையாள்கின்றன. அதை Book Promotion என்று சொல்கின்றனர். ‘புத்தக விளம்பரம்’ என்பதும் Book Promotion என்பதும் ஒன்றல்ல. அச்சு ஊடகங்களில், சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்துவது Book Promotion என்பதற்குள் அடங்கும் ஒருகூறுதான். அட்டை வெளியீடு, முன்னோட்டக் காணொலிகள், எழுத்தாளர் சந்திப்பு, நூல் அறிமுகக் கூட்டங்கள், இலக்கிய விழா அமர்வுகள், எழுத்தாளர் கையொப்பம் இடுதல், முக்கியமான இதழ்களில் நூலின் சிறுபகுதியை வெளியிடச் செய்தல், மதிப்புரைகள் வெளியாக முயலுதல் உள்ளிட்ட அனைத்தையும் Book Promotion குறிக்கும். இன்றைய புத்தகச் சந்தையில் இவை எல்லாம் அனுமதிக்கப்பட்ட தொழில் சார் நடவடிக்கைகள். முக்கியமான ஆங்கிலப் பதிப்பகம் ஒவ்வொன்றிலும் இதற்கெனத் தனிக்குழு செயல்படுகிறது.
Book Promotion கூறுகள் தமிழில் இன்னும் பரவலாகவில்லை. அதனால் பொருத்தமான சொல்லாட்சியும் உருவாகவில்லை. சில எழுத்தாளர்களும் பதிப்பகங்களும் சமூக ஊடக வாய்ப்புகளை இப்போது பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இது விரிவாகும் என்று எதிர்பார்க்கிறேன். சில இடங்களில் ‘புத்தகச் சந்தைப்படுத்தல்’ என்னும் சொல்லாட்சியைக் காண்கிறேன். இது வணிகம் சார்ந்த நேரடி வெளிப்பாடு. ஆங்கிலத்தில் அமைந்திருப்பது போல நயமான சொல்லாட்சிக்கு நாம் முயல வேண்டும். சந்தைப்படுத்துதல் இன்றைய காலகட்டத்தின் பொதுவியல்பு. விரும்புகிறோமோ இல்லையோ அதிலிருந்து விலகியிருக்க இயலாது.
வாடிவாசல் வரைகலை நூலுக்கும் சந்தைப்படுத்தல் முயற்சிகளைச் சைமன் சூட்சர் பதிப்பகம் மேற்கொண்டிருக்கிறது. அதற்கு எழுத்தாக்கம் செய்தவன் என்னும் அடிப்படையில் நானும் சித்திரமாக்கிய ஓவியர் அப்புபனும் அவற்றில் பங்கேற்கிறோம். இந்திய அளவில் அதிகமான புத்தகக் கடைகள் நிறைந்துள்ள நகரம் பெங்களூரு. அங்கே சில நிகழ்வுகளை அப்பதிப்பகம் ஏற்பாடு செய்தது. அல்லயன்ஸ் பல்கலைக்கழக இலக்கிய விழாவில் பங்கேற்கப் பெங்களூரு செல்லும் திட்டம் முன்கூட்டியே முடிவானதால் அதையொட்டிப் பிப்ரவரி 15, 16, 17 ஆகிய நாட்களில் பங்கேற்க முடியும் என்று ஒப்புதல் தெரிவித்தேன். 15 அன்று நட்சத்திர விடுதி ஒன்றில் ஏற்பாடு செய்ய முயன்ற நிகழ்வு ஏதோ பிரச்சினையால் தடைபட்டுவிட்டது.
பிப்ரவரி 16, 17 ஆகிய நாட்களில் சில நிகழ்வுகளை ஏற்பாடு செய்தனர். 16 சனிக்கிழமை முற்பகல் 11.30க்குத் தொடங்கி பிற்பகல் 4 மணிக்குள் எட்டுப் புத்தகக் கடைகளுக்குச் சென்று நூல் படிகளில் கையொப்பம் இட வேண்டும். ஒரு நாளுக்கு முன் அதற்கான சுவரொட்டியை அனுப்பியிருந்தனர். அதைப் பார்த்துவிட்டு ‘ஒரே நாளில் எட்டுக் கடைகளா? முடியுமாப்பா? உனக்குக் கஷ்டமா இருக்காதா?’ என்று மகள் கேட்டார். நூல் படிகளில் கையொப்பம் இடுவதும் வாசகர்களைச் சந்திப்பதும் எனக்கு விருப்பமானவை எனினும் எட்டுக் கடைகள் என்பது எனக்கும் மலைப்பாகத்தான் இருந்தது.
சைமன் சூட்சர் பதிப்பகத்தின் இந்திய அளவிலான விற்பனைப் பிரிவின் மேலாளராக இருப்பவரும் கர்நாடகத்தைச் சேர்ந்தவருமான மகேஷ் அவர்களிடம் விளக்கம் கேட்டேன். எல்லாக் கடைகளும் அருகருகே இருப்பவைதான் என்றும் முப்பதிலிருந்து ஐம்பதுக்குள் நூல் படிகளைத் தயாராக வைத்திருப்பார்கள், கையொப்பம் இட அதிக நேரம் ஆகாது என்றும் சொன்னார். நாள் முழுக்க உடனிருந்து சிரமம் இல்லாமல் பார்த்துக் கொள்வதாகவும் உறுதி கொடுத்தார்.
அவர் சொன்னது போலவே போக்குவரத்து, தங்கல் உட்பட ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தார். ஜெயநகரில் இருக்கும் ‘சப்னா’ புத்தகக் கடைக்கு முதலில் சென்றோம். சப்னாவுக்குக் கர்நாடகத்தில் இருபத்து மூன்று கடைகள் உள்ளன. பெங்களூருவில் மட்டும் பன்னிரண்டு கடைகள். தமிழ்நாட்டில் கோயம்புத்தூரிலும் ஈரோட்டிலும் கிளைகள் உள்ளன. ஜெயநகர் கடையில் நல்ல வரவேற்பு. நூல் படிகளை எடுத்து மேஜையில் வைத்திருந்தனர். கையொப்பம் இட வேண்டிய பக்கத்தை அக்கடை ஊழியர் ஒருவர் எடுத்துத் தரத் தர விரைவில் முடித்தோம். கோரமங்கலம், இந்திரா நகர் ஆகிய இடங்களில் உள்ள சப்னா கடைகளிலும் அதே நடைமுறை. எம்.ஜி. சாலையில் உள்ள ஹிக்கின்பாதம்ஸ் கடையிலும் அப்படியேதான்.
சப்னாவையும் ஹிக்கின்பாதம்ஸையும் வைத்துத் திட்டமிட்டபடி எல்லாம் நடந்துவிடும் என்று நினைத்தது தவறாகிவிட்டது. இந்திரா நகரில் இருக்கும் ஆட்டாகலாட்டா புத்தகக் கடையிலும் அதே மாதிரிதான் ஏற்பாடு. எனினும் கொஞ்ச நேரம் கூடுதல். கடைக்கு வந்திருந்த வாசகர் சிலர் என்னுடைய வேறு நூல்களிலும் கையொப்பம் வாங்கினர். அதன் உரிமையாளர் சுபோத் சங்கர் தமிழர்; கோயம்புத்தூர்க்காரர். ‘பெங்களூரு இலக்கியத் திருவிழா’ நிகழ்வில் ஆண்டுதோறும் ‘ஆட்டாகலாட்டா இலக்கிய விருது’ வழங்குவர். 2016ஆம் ஆண்டுக்கான ஆங்கில நாவல் விருதுப் பிரிவில் பூக்குழியின் மொழிபெயர்ப்பு ‘Pyre’ தேர்வு பெற்றது.
அக்கடையில் நடைபெற்ற எழுத்தாளர் சந்திப்பு நிகழ்வு ஒன்றிலும் பங்கேற்றிருக்கிறேன். ‘கவிதைத் திருவிழா’ ஒன்றையும் நடத்துவர். அதில் என் கீர்த்தனைகளை மட்டும் டி.எம்.கிருஷ்ணா பாடும் கச்சேரி ஒன்றை ஓராண்டு ஏற்பாடு செய்திருந்தனர். அதில்தான் ‘நாறமலம் அள்ளலாமா?’ பாடலை முதன்முதலில் டி.எம்.கிருஷ்ணா பாடிப் பெரும் வரவேற்புப் பெற்றது. நண்பரான சுபோத்திடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுக் கிளம்பினோம்.
அடுத்துச் சென்ற மூன்று கடைகளும் சர்ச் சாலையில் இருந்தன. கையொப்பம் இட வரும் தகவலை முன்கூட்டியே அறிவித்திருந்தனர். அதனால் வாசகர் கூட்டம் நிறைந்திருந்தது. வாடிவாசல் அல்லாமல் என் நூல் படிகளையும் எடுத்து வைத்திருந்தனர். வாசகர்களைப் பார்க்க சந்தோசமாக இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியாது என்பதையும் உணர்ந்தேன்.
—– 07-03-25
Add your first comment to this post