பெங்களூருவில் வாடிவாசல் 2

You are currently viewing பெங்களூருவில் வாடிவாசல் 2

கேட்டல் நன்று

‘பிளோசம் புக் ஹவுஸ்’ (Blossom) புத்தகக் கடை மிகப் பெரிது. அக்கடையின் உரிமையாளர் மிக எளிமையாக இருந்தார். நடைபாதையில் பழைய புத்தகங்கள் விற்கும் கடை போட்டு விற்பனை செய்து படிப்படியாக முன்னேறி இந்த நிலைக்கு வந்திருப்பதாகத் தகவல் தெரிவித்தனர். அக்கடையிலும் அதற்கு அருகிலேயே நடக்கும் தூரத்தில் இருந்த ‘தி புக்ஹைவ்’ (The Bookhive), ‘தி புக்வாம்’ ( The Bookworm) ஆகிய கடைகளில் நல்ல கூட்டம். ஏற்கனவே வாங்கி வைத்திருந்த என் நூல்களையும் எடுத்துக்கொண்டு வந்திருந்த வாசகர் பலர். வரிசையில் நின்று கையொப்பம் பெற்றனர்.

நேரில் வர இயலாத வாசகர் சிலர் தம் நூல்களைக் கடைக்காரரிடம் ஒப்படைத்துக் கையொப்பம் வாங்கி வைக்கும்படி சொல்லிச் சென்றிருந்தனர். கடைக்காரர்களும் ‘இவர் நிரந்தர வாடிக்கையாளர். இன்று வர முடியவில்லை. தயவுசெய்து கையொப்பம் போட்டுக் கொடுங்கள்’ என்று கேட்டனர். வாசக விருப்பத்தை நிறைவேற்ற விற்பனையாளர் எண்ணுகிறார். ஒருசேர வாசகர், விற்பனையாளர் இருவர் விருப்பத்தையும் நிறைவேற்றும் வாய்ப்பு என்று கருதி ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் கையொப்பம் இட்டுக் கொடுத்தேன். கிறிஸ்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ரிஷி  ‘பதினோராம் வகுப்புப் படிக்கும் போதிருந்து உங்கள் வாசகர்’ என்று சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டு பல நூல்களில் கையொப்பம் பெற்றார். இப்படியும் சிலர்.

மதிய உணவுக்குச் சிறிது நேரம் செலவழித்ததைத் தவிரத் தொடர்ந்து நான்கு மணி நேரம் கையொப்பம் இடும் வேலை. தம் கருத்தைப் பகிர விரும்பியோர், சில கேள்விகளுடன் வந்தோர், ஒருவார்த்தையும் பேசாமல் புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டோர், கையொப்பம் மட்டும் பெற்றுச் சென்றோர் என்று விதவிதமான இயல்புடைய வாசகர்கள். என்னிடம் பேசவென்றே மொழிபெயர்ப்புக்கு நண்பரை உடனழைத்து வந்தோரும் இருந்தனர். தமிழ் நூல்களைக் கொண்டு வந்து கையொப்பம் வாங்கியோரும் உண்டு. அரிபரியான வேளையில் ஒவ்வொருவருக்கும் சில நொடிகளே ஒதுக்க முடிந்தது.

அருகருகில் இருக்கும் பகுதியில் எட்டுப் பெரிய புத்தகக் கடைகள். இந்தப் பெருநகரில் இன்னும் எத்தனை கடைகள் இருக்குமோ என்று எண்ணம் ஓடியது. இத்தனை புத்தகக் கடைகள் உள்ள, வாசகத் திரள் நிறைந்த  பெங்களூருக்கு நிகராக இன்னொரு நகர் இந்தியாவில் உண்டா? டில்லி, மும்பை ஆகியவை ஓரளவு பக்கத்தில் வரக்கூடும். சென்னை வெகுதூரத்தில் இருக்கிறது என்றே தோன்றியது. பலமுறை பெங்களூருக்கு வந்திருக்கிறேன்; வந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் புத்தகப் பண்பாடு சார்ந்த அதன் ஒவ்வொரு முகம் எனக்குக் காட்சியாகிறது. வாடிவாசல் கொடுத்த வெளிச்சத்தில் புத்தகக் கடைகள் சார்ந்த ஒரு பண்பாட்டை அறிந்தேன்.  பெருமகிழ்ச்சி.

அன்று (16-02-25) மாலை ஆறு மணிக்கு உரையாடல் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகியிருந்தது. மதிய உணவுக்குக் குறைந்த நேரம்தான் கிடைத்தது. அறைக்குச் சென்று சற்று ஓய்வெடுத்துக் கொண்டு நிகழ்ச்சிக்குச் செல்லலாம் என்று நினைத்தது நடக்கவில்லை. நேரமில்லை.

பெங்களூரு பன்னாட்டு மையத்தில் மாலை ஆறு மணி முதல் ஏழரை வரை நிகழ்வு. வாடிவாசல் வரைகலை ஆங்கில நூல் வெளியீடும் அதைத் தொடர்ந்து நானும் அப்புபனும் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்வும். அதன் ஒருங்கிணைப்பாளர் ஆட்டாகலாட்டா புத்தகக் கடையின் துணை நிறுவனர் சுபோத் சங்கர். அவரைப் பற்றி மேலே குறிப்பிட்டிருக்கிறேன். அவர் மிகச் சிறந்த வாசகரும்கூட. பெங்களூருவில் தமிழ் நூல்களை விற்பதும் தமிழ்ப் பதிப்பாளர்களுடன் தொடர்பு வைத்திருப்பதும் அவர்தான். ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றால் அதற்கு நல்ல தயாரிப்போடு வருவார். ஏற்கனவே அவரோடு நிகழ்வுகளில் பங்கேற்ற அனுபவம் எனக்குண்டு.

பெங்களூருவில் வாடிவாசல் 2

நாங்கள் அரங்குக்குள் நுழையும்போது 6.05 ஆகிவிட்டது. அரங்குக்குள் இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்து அமர்ந்திருந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சியைத் தொடங்கிக் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கும் வழக்கம் அங்கே இருக்கிறது. ஆகவே தேநீர் அருந்தவும் நேரமில்லாமல் மேடையேறினோம். நூல் வெளியீடு சுருக்கமாக முடிந்தது. மேடையில் எங்கள் மூவரைத் தவிர யாரும் ஏறவில்லை. உடனே உரையாடல் தொடங்கியது.
வரைகலை நாவலைப் பற்றிப் பேசும் போது சி. சு. செல்லப்பாவைப் பிரதானப்படுத்துவதில் தொடர்ந்து கவனமாக இருந்து வருகிறேன். சுபோத்திடம் அதைச் சொல்லியிருந்தேன். ஆகவே சி.சு.செல்லப்பா பற்றித்தான் முதல் கேள்வி. அதற்கு விரிவாகவே பதில் சொன்னேன். ஆங்கில வாசகர்களுக்கு அவரை அறிமுகப்படுத்தும் விதத்தில் பன்முகச் செயல்பாட்டையும் கூறினேன். வாடிவாசல் படக்கதை எழுத்தாக்கம் பற்றிய கேள்விக்கும் அவரோடும் அவர் படைப்புகளோடும் எனக்கிருக்கும் தொடர்பைக் குறிப்பிட்டுப் பேசினேன்.
இந்நூலுக்குப் பெரும்பங்காற்றியவர் ஓவியர் அப்புபன். நகைச்சுவையாகப் பேசுவதிலும் வல்லவர்.  அவரது அனுபவங்களை நன்றாகப் பகிர்ந்து கொண்டார். பிறகு பார்வையாளர்களுடன் உரையாடல். சிலர் தமிழிலேயே கேள்வி கேட்டனர். மிருகவதை என்னும் கோணத்தில் கேள்வி வரும் என்று எதிர்பார்த்தேன்; வந்தது. அதற்கு மென்மையான முறையில் தகவல்களோடும் களச்சான்றுகள் சார்ந்தும் என் பதில் அமைந்தது. அப்புபனும் பார்வையாளராக வந்திருந்த ஒருவரும் வலுவான தொனியில் பதில் சொன்னார்கள். இலக்கியப் பனுவலை இன்னொரு வடிவத்திற்கு மாற்றுதல் தொடர்பான கேள்விகளும் இருந்தன.
பார்வையாளர்களுடன் இருபது நிமிட உரையாடல் நூலைப் பற்றி வாசகர் அறிந்து கொள்ளும் விதத்திலும் அதன் பின்னணியைப் புரிந்துகொள்ளும் நோக்கிலும் அமைந்தது. ஒருபெண் எழுந்து உணர்ச்சிவசத்தோடு ‘உங்களோடு தினமும் பேசிக் கொண்டிருக்கிறேன். அது உங்களுக்குத் தெரியாது’ என்றார்.  ‘மகிழ்ச்சி’ என்று மட்டும் சொன்னேன். சரியாக ஏழு முப்பதுக்கு நிகழ்ச்சி முடிந்தது. அத்தனை நேரக் கச்சிதம்.
பெங்களூருவில் வாடிவாசல் 2
அங்கும் புத்தகக் கடை போட்டிருந்தனர். வாடிவாசல் மட்டுமல்லாமல் என் நூல்களும் இருந்தன. மீண்டும் வரிசை; கையொப்பம்; புகைப்படங்கள். எங்கே என்றாலும் நினைவில் கொள்வது போலச் சில வாசகர் இருப்பர். எனக்குத் தெரியாமல் என்னுடன் தினமும் பேசும் அந்தப் பெண் மிகுந்த பரவசத்தோடு சில நூல்களில் கையொப்பம் பெற்றார். தமிழும் நன்றாகப் பேசினார். தம் வாழ்க்கையின் நெருக்கடியான கட்டத்தைக் கடப்பதற்கு என் நூல்கள் உதவின என்று சொன்னார். தினமும் அரைமணி நேரமாவது என்னைப் பற்றியும் என் நூல்களைப் பற்றியும் தம் தமையனுடன் உரையாடுவது உண்டாம். சில சூழல்கள் வரும்போது என் நாவல் பாத்திரங்களை நினைவுகூர்ந்து அவை எப்படி முடிவெடுத்தன என யோசித்துத் தாமும் முடிவெடுக்கிறாராம். சில சூழல்களில்  ‘இதற்குப் பெருமாள்முருகன் என்ன சொல்வார்’ என்று யோசித்துப் பார்ப்பதாகவும் சொன்னார். இத்தகைய வாசகர்களை எப்படி எதிர்கொள்வது என்பது எனக்குச் சிக்கல்.  நூல்களில் சொல்லாததை தனிப்பேச்சில் என்ன சொல்லிவிடப் போகிறேன்? அவர் நெகிழ்ச்சியோடு சொன்னதைக் கவனத்தோடு கேட்டுக் கொண்டேன்.  கேட்டல் நன்று.
பெங்களூருப் பன்னாட்டு மையத்தின் தரைத்தளத்தில் அழகான உணவகம் இருக்கிறது. அங்கேயே பானத்துடன் நல்லுணவு உண்டோம். அந்நாளில் மட்டும் கிட்டத்தட்ட எண்ணூறு கையொப்பம் இட்டிருப்பேன். கையும் உடலும் சோர்ந்தன எனினும் மனம் சோரவில்லை. வாசகர் முகத்தில் தெரியும் ஆவலும் அவர்கள் பேச்சும் பரவசமும் தரும் உத்வேகத்துக்கு இணை ஏதுமில்லை. எண்ணத்தில் இருப்பவற்றை எல்லாம் எழுதி மிச்சமுள்ள வாழ்நாளையும்  பயனுள்ளதாக்க வேண்டும் என உற்சாகம் வருகிறது. எட்டுக்கடை, ஒரு நிகழ்ச்சி என்று மலைத்திருந்தால் இத்தனை முகங்களைப் பார்த்திருக்க முடியுமா?
—– 08-03-25

Latest comments (1)