உ.வே.சாமிநாதையர் எழுதியவை ஒவ்வொன்றும் வாசிக்குந்தோறும் வியப்பைத் தருபவை. ஏதேனும் ஒருவகையில் முன்னோடி முயற்சியாக விளங்குபவை. குருகுலக் கல்வி முறையில் கற்று நவீனக் கல்வி நிறுவனத்தில் உ.வே.சா. பணியாற்றினார். அவரது ஆசிரியராகிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் வாழ்க்கை முழுமையும் மரபானது. குருகுலக் கல்வி முறைக்கு ஏற்ப அது கற்பதும் கற்பிப்பதுமாகவே கழிந்தது. அவற்றுடன் பதிப்பிப்பது, எழுதுவது ஆகியவற்றை இணைத்துக்கொண்டு உ.வே.சா. வாழ்ந்தார். தம் மீது பெருந்தாக்கம் செலுத்திய ஆசிரியரின் வரலாற்றை இருபாகங்களாக எழுதினார். வாழ்க்கை வரலாற்று நூல் எழுதுமுறையில் முன்னோடியாக அது திகழ்கிறது.
தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றைக் கொண்டது என்றாலும் அதற்குப் பங்களித்த புலவர்களின் ஆதாரப்பூர்வமான வரலாறு நம்மிடம் இல்லை. கன்னியாகுமரிக் கடற்பாறையில் நூற்று முப்பத்து மூன்று அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை நிற்கிறது. ‘பேரறிவுச் சிலை’ (Statue of wisdom) என்று பெயர் சூட்டி அதன் வெள்ளிவிழாவைக் கொண்டாடுகிறோம். தமிழுக்கே அடையாளமாக இருக்கும் திருவள்ளுவர் வரலாறு குறித்த ஆதாரம் ஏதுமில்லை. திருக்குறள் நூல் ஒன்றே முதன்மை ஆதாரம். அவர் பெயரைப் பற்றியும் வாழ்க்கை குறித்தும் விதவிதமான கதைகள் வழங்கி வருகின்றன. கதைக்குள் இருந்து வரலாற்றைக் கண்டறிவது எளிதல்ல. அப்படிக் கண்டறிந்து சொன்னாலும் ஏற்பு கிடைப்பது கடினம்.
பழந்தமிழ் இலக்கியப் பதிப்புகளில் ஈடுபட்டு நூல் வரலாறு, புலவர் வரலாறு எழுத வேண்டிய நிர்ப்பந்தம் உ.வே.சா.வுக்கு இருந்தது. அவற்றை எழுதச் சான்றாதாரம் தேடிப் பெரிதும் சிரமப்பட்டார். சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவர் வரலாறு எழுதியது பற்றி ‘என் சரித்திரம்’ நூலில் இப்படிச் சொல்கிறார்:
‘…திருத்தக்க தேவர் வரலாற்றை எழுத ஒருகுறிப்பும் கிடைக்கவில்லை. ஜைனர்கள் தமக்குள்ளே கர்ண பரம்பரையாகச் சொல்லி வந்த செய்திகளை அவர்கள் வாயிலாக அறிந்து அவற்றைக் கோவைப்படுத்தி அதனையும் ஒருவகையாக எழுதினேன்’ (ப.636).
புலவர் வரலாறு எழுதுவதில் இப்படிப்பட்ட சிரமங்களை எதிர்கொண்ட காரணத்தால் தம் ஆசிரியர் வரலாற்றை ஆதாரப்பூர்வமாக எழுதிப் பதிவாக்க அவர் விரும்பியுள்ளார். அதன் முன்னுரையில் ‘தமிழ்ப் புலவர்களின் வரலாறுகள் தமிழகத்தில் ஒரு வரையறையின்றி வழங்குகின்றன. கர்ணபரம்பரைச் செய்திகள் முழுவதையும் நம்ப முடியவில்லை. எந்தப் புலவர்பாலும் தெய்விக அம்சத்தை ஏற்றிப் புகழும் நம் நாட்டினரில் ஒருசாரார் புலவர்களைப் பற்றிக் கூறும் செய்திகளில் சில நடந்தனவாகத் தோற்றவில்லை’ (ப.36) என்கிறார்.
புலவர் வரலாறு தொடர்பாகத் தமிழ் மரபில் வழங்கும் குழறுபடிகளைப் பற்றி அம்முன்னுரையில் விரிவாகப் பேசியுள்ளார். அவற்றிலிருந்து வேறுபட்டுத் தம் ஆசிரியர் வரலாற்றைச் சான்றுகளுடன் எழுதும் முயற்சியைத் தொடங்கி ஐம்பதாண்டுகள் அதற்காக அவர் உழைத்தார். ஆசிரியர் தொடர்பான தகவல்களை எல்லாம் சேகரித்தார். கடிதங்களைக் கண்டெடுத்தார். அவருடயை நூல்களைப் பதிப்பித்தார். அவை தொடர்பான வரலாறுகளை அறிந்தார். அவருடன் பழகியவர்கள், நண்பர்கள், மாணவர்கள் சொன்ன செய்திகளைக் குறித்துக் கொண்டார். தாம் அவரிடம் கற்ற காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வைத்தார். அவரைப் பற்றிய தகவல்கள் இருப்பின் தருமாறு கேட்டுச் சுதேசமித்திரன் நாளிதழில் 1900ஆம் ஆண்டு மார்ச் 8 அன்றும் 1931ஆம் ஆண்டு டிசம்பர் 30 அன்றும் என இருமுறை வேண்டுகோள் வெளியிட்டார். இப்படிப் பலவகையில் முயன்று எழுதியதுதான் ‘மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்’ என்னும் வாழ்க்கை வரலாற்று நூல்.
1933ஆம் ஆண்டு முதல் பாகமும் 1934ஆம் ஆண்டு இரண்டாம் பாகமும் வெளியாயின. இரண்டு பாகங்களாக நூலைப் பிரித்தமைக்கு அளவு காரணம் அல்ல. அவரிடம் மாணவராகத் தாம் சேர்வதற்கு முந்தைய கால நிகழ்ச்சிகளை முதல் பாகமாகவும் சேர்ந்த பிறகு நடந்தவற்றை இரண்டாம் பாகமாகவும் எழுதியிருக்கிறார். இரண்டாம் பாக நிகழ்ச்சிகளுக்குத் தாமே சாட்சியாக இருந்தமையால் இத்தகைய பிரிவைச் செய்திருக்கிறார்.
அவரது ‘என் சரித்திரம்’ போல வாசிக்க இலகுவான நூல் அல்ல இது. நன்கு கவனம் செலுத்தி ஆழ்ந்து வாசிக்க வேண்டிய நூல். நெடிய புலவர் மரபில் வந்த மகாவித்துவான் அதன் கடைசிக்கண்ணி போன்றவர். வகைமாதிரி என்றும் சொல்லலாம். அம்மரபின் அடிப்படை செய்யுள் வடிவம். ஆகவே இந்நூலில் ஏராளமான செய்யுள்கள் வருகின்றன. அவற்றை வாசிப்பதற்குப் பொறுமை தேவை. அணுகுவதற்கு ஏற்ற வகையில் உ.வே.சா. எளிய குறிப்புகளைக் கொடுத்திருக்கிறார். அச்செய்யுள்களை ஒதுக்கிவிட்டு நூலை வாசித்தாலும் சுவை குன்றாது. விதவிதமான சூழல்கள், மனிதர்கள், நிகழ்வுகள் என ஒருபுனைவை வாசிக்கும் அனுபவத்தைத் தரும் நூல். பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் புலமை மரபு சார்ந்த வாழ்வின் பெருஞ்சித்திரம் ஒன்றை உ.வே.சா. தீட்டியுள்ளார்.
இதை ‘டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்’ தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. ஒருமுறை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் ஒருபதிப்பு வெளியிட்டது. உ.வே.சாமிநாதையர் நூல்களை அடுத்தடுத்துப் பதிப்பித்து வரும் ப.சரவணன் சில ஆண்டுகள் கடுமையாக உழைத்து இந்நூலைச் செம்பதிப்பாக்கி இருக்கிறார். 2024 செப்டம்பரில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நன்றியுரை, பதிப்புரை ஆகியவற்றைச் சரவணன் எழுதியிருக்கிறார். இருபாகங்களுக்கும் உ.வே.சா. எழுதிய முன்னுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அநுபந்தமாக உ.வே.சா. கொடுத்தவையும் இப்போதைய தேவைக்கேற்பச் சேர்த்தவையும் பின்னிணைப்பில் உள்ளன.
இதன் முதற்பாகம் வெளியான போது ‘சுதந்திரச் சங்கு’ இதழில் ‘குண்டலகேசி’ என்பார் எழுதிய மதிப்புரை ஒன்றும் க.நா.சு. எழுதிய மதிப்புரையும் பின்னிணைப்பில் உள்ளன. க.நா.சு. ‘தமிழ் மொழியிலே இதுவரை வெளிவந்துள்ள ஜீவிய சரித்திர நூல்களில் இதுவே முதன்மை பெற்று விளங்குவது’ (ப.564) என்று கருத்துரைக்கிறார். நூல் எழுதிக் கிட்டத்தட்ட நூற்றாண்டை எட்டப் போகிறது. ஆகவே பல சொற்கள் அரும்பதங்களாக மாறிவிட்டன. அவற்றுக்கு ஓர் அகராதியைப் பதிப்பாசிரியர் கொடுத்துள்ளார். நூலை வாசகர் எளிதாக அணுகுவதற்கு ஏற்ற வகையில் பல குறிப்புகளை உ.வே.சா.வே கொடுத்துள்ளார். பதிப்பாசிரியர் ப.சரவணன் கொடுத்துள்ள குறிப்புகளும் பெரிதும் துணை செய்கின்றன.
‘தமிழ் கிளாசிக் வாழ்க்கை வரலாறு’ வரிசையில் காலச்சுவடு பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. தமிழ்ச் சமூகத்தின் அறிவு மரபு ஒன்றை அறிந்துகொள்வதற்கு இந்நூல் பெரிதும் உதவும். யாவரும் வாசிக்கலாம்.
000
இந்நூலுக்கு நான் எழுதிய ‘பிற்குறிப்பு (Blurb)’ வருமாறு:
உ.வே.சாமிநாதையர் பழந்தமிழ் நூல்களின் பதிப்பாசிரியர் மட்டுமல்ல; வரலாற்று ஆசிரியரும்கூட. அவர் எழுதிய சுயசரிதமும் சமகால மனிதர்கள் பலரைப் பற்றிக் கட்டுரைகளாகவும் நூல்களாகவும் சிறிதும் பெரிதுமாக அவர் எழுதியுள்ள வாழ்க்கை வரலாறுகளும் மிகவும் முக்கியமானவை. பத்தொன்பதாம் நூற்றாண்டுக் குருகுலக் கல்வி முறையின் ஆசிரிய வகைமாதிரியாகவும் புலமை மரபின் பேராளுமையாகவும் திகழ்ந்தவர் உ.வே.சாமிநாதையரின் ஆசிரியராகிய மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. அவரது வாழ்க்கை வரலாற்றைப் பல்லாண்டு உழைப்பின் மூலம் நவீனமாக உ.வே.சா. எழுதினார். உடனிருந்து சில ஆண்டுகள் பழகிய அனுபவங்கள், அவர் எழுதிய நூல்கள், சமகால மனிதர்கள் வழியாகப் பெற்ற ஆதாரப்பூர்வமான சம்பவங்கள், கடிதம் உள்ளிட்ட எழுத்துப்பூர்வ ஆவணச் சான்றுகள் முதலியவற்றைத் தொகுத்துத் தரவுகளாகக் கொண்டார். ‘சுதேசமித்திரன்’ நாளிதழில் அறிவிப்பு வெளியிட்டும் தரவுகளைத் திரட்டினார். இவ்விதம் நவீன வரலாறு எழுதியல் முறைகளைப் பின்பற்றி எழுதப்பட்ட முன்னோடி வாழ்க்கை வரலாற்று நூல் இது.
நூல் விவரம்: ப.சரவணன் (ப.ஆ.), உ.வே.சாமிநாதையர், ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம், நாகர்கோவில், காலச்சுவடு பதிப்பகம், விலை ரூ. 790/-
—– 05-01-2025
Add your first comment to this post