அபிலாஷின் கேள்விகள்
மறுநாள் (17-02-25) கிறிஸ்ட் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையில் வாடிவாசல் வரைகலை நாவல் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வு. இது அப்புபன் முன்னெடுப்பில் ஏற்பாடானது. கிறிஸ்ட் கல்லூரியாக இருந்த போதே அறிவேன். பேராசிரியர் ப. கிருஷ்ணசாமி அங்கே பணியாற்றினார். இப்போது பல்கலைக்கழகம் ஆகிவிட்டது. அதன் கல்வி வளாகங்கள் வெவ்வேறு இடங்களில் உள்ளன.
எங்களுடன் உரையாடியவர் தமிழ் எழுத்தாளரும் அங்கே ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றுபவருமான அபிலாஷ் சந்திரன். சென்னை, மாநிலக் கல்லூரியில் நான் பணியாற்றிய 2015 – 2016 காலத்தில் நண்பர் இரா.சீனிவாசன் மாதந்தோறும் கருத்தரங்கு நடத்துவார். அப்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் நண்பர் அழகரசனின் மாணவராக இருந்த அபிலாஷும் அக்கருத்தரங்கிற்கு வருவார். அதன்பின் சந்திக்கும் வாய்ப்பு வரவில்லை. இடையில் கிறிஸ்ட் பல்கலைக்கழகத்திற்கும் சிலமுறை அழைத்தார். செல்ல முடியவில்லை. பெங்களூருவில் நடைபெற்ற புக் பிரம்மா இலக்கியத் திருவிழாவிற்குக் கடைசி நாளில் வருவதாகச் சொன்னார். அன்று நான் இருக்க முடியவில்லை.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரைச் சந்திக்கும் வாய்ப்பு. கல்விப்பணி, நாவல் எழுதும் பயிற்சி வகுப்பு, எழுத்துப்பணி என்று தீவிரமாக இயங்கி வருபவர். தம் எண்ணங்களை மறைக்காமல் வெளியிடும் துணிவு கொண்டவர். இலக்கியக் கோட்பாடுகள் பற்றி ஆர்வம் உள்ளவர். தொடர்ந்து அவரைக் கவனித்து வருவதால் அன்பும் மதிப்பும் உண்டு. வாடிவாசல் நாவல், வரைகலைத் தமிழ் நூல், ஆங்கில நூல் ஆகிய மூன்றையும் ஒப்பிட்டுக் கலந்துரையாடலுக்கான வினாக்களுடன் வந்திருந்தார்.
நிகழ்வின் தொடக்கத்தில் இணையம் வழி கிங் விஸ்வா சிற்றுரை ஆற்றினார். கிங் விஸ்வா தமிழில் படக்கதை நூல்கள் குறித்துக் கட்டுரைகள் எழுதி வருபவர். கடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அவர் எழுதிய ஏழு நூல்களை ‘யாவரும் பப்ளிஷர்ஸ்’ வெளியிட்டனர். ‘தலைசிறந்த கிராபிக் நாவல்கள்’, ‘சித்திரமும் சரித்திரமும் – காமிக்ஸ் உலகின் திருப்புமுனைகள்’ என தமிழுக்குப் புதிதான தலைப்புக்களில் அமைந்த நூல்கள் அவை. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அப்புபனுக்கு அறிமுகமான அவர் வாடிவாசல் வரைகலை நூலையும் கண்டிருக்கிறார். அப்புபனின் ஓவியப் பாணி அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆகவே அவரைச் சில நிமிடம் பேச ஏற்பாடு செய்திருந்தனர். எதற்கும் சளைக்காத அப்புபனே நாணும் அளவுக்குப் புகழ்ந்து பேசினார். அதில் நுட்பமான அவதானிப்புகள் பல இருந்தன. அவை மாணவர்களைப் பெரிதும் கவர்ந்தன.
காலச்சுவடு கண்ணனும் ஐந்து நிமிடம் இணையம் வழியாகப் பேசினார். வரைகலை நாவல் வெளியிடும் திட்டம் அவருக்கு உதித்த விதத்தையும் என்னையும் அப்புபனையும் இத்திட்டத்தில் இணைத்ததையும் முதல் நூலாக வாடிவாசலைத் தேர்ந்தெடுத்த பின்னணியையும் சுருக்கமாகச் சொன்னார். பதிப்பாளருக்குத் தேவையான புதிது செய்யும் கற்பனையும் திட்டமும் அவருக்கு இருப்பதை உரை வெளிப்படுத்தியது.

தொடர்ந்து எங்க்களுடனான உரையாடல். அபிலாஷ் எழுத்தாளர் என்பதால் வாடிவாசல் நாவலை வரைகலை வடிவத்திற்கு எழுத்தாக்கம் செய்த விதம், அதிலிருந்த சவால்கள் பற்றிக் கேட்டார். நாவல் நுட்பங்கள் வரைகலை வடிவத்தில் வந்திருக்கும் விதம் பற்றியும் கேட்டார். என் பதில்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியையும் உடன் செய்தார். இப்படைப்புக்கென அப்புபன் எடுத்த முயற்சிகளை விவரிக்கும்படியும் கேள்விகள் அமைந்தன. ஜல்லிக்கட்டை நேரில் பார்ப்பதற்காகத் தம் நண்பர்களுடன் மதுரைக்குச் சென்ற அனுபவம், அங்கு கண்ட காட்சிகள் ஆகியவற்றைச் சுவையாக அவர் பகிர்ந்தார்.
தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடல். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக நிறையக் கேள்விகள் வந்தன. மதுரையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சில கேள்விகள் கேட்டார். ஜல்லிக்கட்டில் ஊடாடும் சாதிப் பிரச்சினை பற்றிய கேள்வியும் ஒன்று. வாடிவாசலில் சி. சு. செல்லப்பா சாதிப் பிரச்சினை பற்றிப் பேசவில்லை. காளை உரிமையாளரான ஜமீன்தாரும் காளை அணைபவனாகிய பிச்சியும் ஒரே சாதிதான். பொருளாதார ஏற்றத்தாழ்வு, அதிகாரப் படிநிலை ஆகியவை வருகின்றன. அவர் காட்டவில்லை எனினும் இன்று நடைமுறையில் இருக்கும் சாதிப் பிரச்சினை பற்றி நாம் பேச வேண்டும் என்று சொன்னேன்.
ஓவியங்கள் பற்றியும் கேட்டனர். அப்புபன் அவருக்கே உரிய முறையில் பதில்கள் சொன்னார். ஜல்லிக்கட்டுக் களப் பின்னணியை உருவாக்கிய போது ஒரு வெள்ளாட்டை வரைந்ததைக் காட்டினார். அதுதான் ‘பூனாச்சி’ என்றார். அடுத்த வரைகலை நாவலாகப் பூனாச்சி வரும் என்றும் சொன்னார். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. நேரம் கருதி முடிக்க வேண்டி வந்தது. மாணவர் கேள்விக்கு முடிவு வரவில்லை.

நிகழ்ச்சி முடிந்த பிறகு வந்து பேசியும் நூல்களில் கையொப்பம் பெற்றும் மாணவர்கள் தம் ஆர்வத்தைத் தணித்துக் கொண்டனர். ஆங்கிலத் துறை ஆசிரியர்களும் மாணவர்களும் காட்டிய ஈடுபாடு நிறைவாக இருந்தது. முதல் நாள் புத்தகக் கடைக்கு வந்து என்னிடம் கையொப்பம் வாங்கிய ரிஷி இந்த நிகழ்வுக்கு வந்து நான் விடைபெறும் வரை உடனிருந்து உதவினார். என்னுடன் தனியாக ஒருபடமும் எடுத்துக்கொண்டு மகிழ்ந்தார். பதினொன்றாம் வகுப்பு மாணவராக இருந்த போது என் நூல்களை வாசிக்க ஆரம்பித்த அவர் அதன் பின் ஒவ்வொரு நூலாக அனைத்தையும் வாசித்ததையும் வைத்திருப்பதையும் சொன்னார். பூனாச்சி பற்றித் தம் வியப்புகளையும் பேசினார். பரவசமும் அன்பும் கொண்ட ரிஷி வாழ்க!
பல்கலைக்கழக உணவகத்தில் குழுவாகச் சென்று மதிய உணவு உண்டோம். சென்னை சதாப்தி ரயிலைப் பிடிக்கும் அவசரம் எனக்கு. உடன் வர விரும்பிய அப்புபனை உரையாடலைத் தொடரச் சொல்லி விட்டு விடைபெற்றேன். அபிலாஷ் தம் புதிய நாவலைக் கொடுத்தார். வாசிக்க வேண்டும்.
வாடிவாசல் வரைகலை நாவலின் ஆங்கில வெளியீடு இப்படிப் பெங்களூருவில் இரண்டு நாட்களை அர்த்தமுள்ளதாக்கியது.
——
09-03-25
வீறு கொண்டு ஏறு நடையிட்டு
மாறுபட்ட பயணத்தைக் கொண்ட
இனிய பெருமாள் முருகனின் புகழனினை என்ன சொல்லிப் போற்ற?