‘வாழ்க வளமுடன்’ என்னும் தொடரை மனவளக் கலையை உருவாக்கிய வேதாத்திரி மகிரிஷி பிரபலப்படுத்தினார். மனவளக் கலை மன்றத்தைச் சேர்ந்தோர் ‘வாழ்க வையகம்’, ‘வாழ்க வளமுடன்’ என்னும் இருதொடர்களை மந்திரம் போலச் சொல்வர். அவை மந்திரமா, என்ன பயன் தருகிறது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் ஈரோடு, சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் இளங்கலை படித்துக் கொண்டிருந்த காலத்தில் (1983-1986) மனவளக் கலை தொடர்பான உரையும் பயிற்சி வகுப்பும் எங்கள் கல்லூரியில் நடந்தன. கழுத்திலும் கைகளிலும் நகைகள் மின்னப் பருத்த உருவம் கொண்ட ஒருவர் உரையாற்றினார். ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபவர் அவர் என்று நினைக்கிறேன்.
உரையோ பயிற்சியோ மனதில் பதியவில்லை. அவர்கள் சொன்ன முழக்கம் மட்டும் நினைவில் நின்றது. காலையில் கல்லூரிக்குச் சென்று நண்பர்களைப் பார்த்ததும் வணக்கம் சொல்வதற்குப் பதிலாக ‘வாழ்க வையகம், வாழ்க வளமுடன்’ என்று சொல்லிக் கொண்டோம். போகப் போக இரண்டு தொடர்களைச் சொல்வது குறைந்து ‘வாழ்க வளமுடன்’ என்பதை மட்டும் சொன்னோம். நல்லுணர்ச்சியை ஏற்படுத்தும் முழக்கம்தான் இது. கிட்டத்தட்ட ஒருமாத காலம் பிடித்திருந்த இந்தக் கிறுக்கை அகற்றியவர் க.ரா.பழநிசாமி என்னும் ஆசிரியர். அவர் வகுப்புக்கு வந்தபோது ஒரு நண்பர் ‘ஐயா, வாழ்க வளமுடன்’ என்று சொன்னார்.
‘என்னய்யா, வாலு போயி நெய்யி வந்துச்சுங்கற கதயா வணக்கம் போயி வாழ்க வளமுடன் வந்திருச்சா?’ என்று கேட்டார் ஆசிரியர்.
‘ஆமாங்கய்யா’ என்றார் நண்பர்.
அப்போது இருசெய்திகளை ஆசிரியர் சொன்னார். மனவளக் கலை மன்றத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக் கொள்ளும் வாசகம் ‘வாழ்க வளமுடன்.’ அதைப் பயன்படுத்தினால் நீங்களும் அதில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். விருப்பம் இருந்தால் அதில் சேர்ந்து, அங்கிருப்போரைச் சந்திக்கும் போது ‘வாழ்க வளமுடன்’ என்று சொல்லிக் கொள்ளலாம். தவறில்லை. வணக்கம் என்பது தமிழ்ச் சமூகம் முழுவதற்கும் உரியது. நீங்கள் எந்தக் கருத்தைக் கொண்டவராகவும் இருக்கலாம்; எந்த அமைப்பைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். அதையெல்லாம் வெளிப்படுத்தாமல் தமிழ் அடையாளத்தை மட்டும் தருவது வணக்கம். வணக்கத்திற்குப் பதிலியாக வேறொன்றைப் பயன்படுத்த வேண்டாம் என்பது அவர் சொன்ன முதல் செய்தி.
இரண்டாவதாக அவர் சொன்னது இலக்கணச் செய்தி. மகர ஈற்றுச் சொற்களுடன் வேற்றுமை உருபுகள் சேரும்போது இடையில் அத்துச் சாரியை வர வேண்டும். மரத்தை, மரத்தால், மரத்திற்கு, மரத்தின், மரத்தது, மரத்தின்கண் என்றெல்லாம் வரும். மரம் + ஐ = மரமை என்று எழுதுவதில்லை. இடையில் அத்துச் சாரியை வந்து ‘மரத்தை’ என்றே சொல்வோம்; எழுதுவோம். வளம் என்பதோடு உடன் சேர்ந்தால் ‘வளத்துடன்’ என்றுதான் வரும். ‘மரமுடன்’ எப்படித் தவறோ அதே போல ‘வளமுடன்’ என்பதும் தவறு. ‘தமிழ் இலக்கியம் பயிலும் நீங்கள் இப்படித் தவறான ஒன்றைப் பயன்படுத்தலாமா?’ என்றும் கேட்டார்.
அவர் விளக்கத்தை ஏற்று ‘வணக்கம்’ சொல்வதையே தொடர்ந்தோம். அவர் முதலில் சொன்ன செய்தியில் எனக்கு இன்றுவரை மறுப்பில்லை. இலக்கணம் பற்றியதில் என் பார்வை மாறிவிட்டது. நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களோ இல்லையோ ‘வளமுடன்’ பெருவாரியாக வழக்கிற்கு வந்துவிட்டது. அதைப் போலி செய்தோ இயல்பாகவோ வேறு சில சொற்களும் வழங்குகின்றன. ஆகவே மொழியில் நேர்ந்திருக்கும் மாற்றம் இது எனக் கருதி ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
சங்க இலக்கியத்திலும் இப்படிச் சில சொற்கள் வருவதற்குச் சான்றுகள் உள்ளன. எதிரிகள் படையெடுத்து வரும்போது அவர்களை எதிர்த்துப் போராடத் தயாராகும் பாண்டிய மன்னன் ‘தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்’ வஞ்சினம் (சபதம்) கூறும் புறநானூற்றுப் பாடல் (72) மிகவும் புகழ்பெற்றது. அப்பாடலில் வரும் அடிகள்:
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைகஎன் நிலவரை.
இதில் ‘உலகமொடு’ என்று வருகிறது. மூன்றாம் வேற்றுமைக்கு ஆல், ஆன், ஒடு, ஓடு ஆகிய நான்கு உருபுகள் உண்டு. கருவி, கருத்தா, உடனிகழ்ச்சி என மூன்று பொருள்கள். ஒடு, ஓடு இரண்டும் உடனிகழ்ச்சிப் பொருளில் வரும் உருபுகள். அவற்றுக்குப் பதிலியாகத்தான் இன்று ‘உடன்’ வழங்குகிறது. உலகமொடு எனினும் உலகமுடன் அல்லது உலகத்துடன் என்றாலும் ஒரே பொருள்தான். இன்றைய உரைநடையில் ‘ஓடு’ இருக்கிறது. ‘ஒடு’ வழக்கிழந்து போயிற்று. ‘உடன்’ பெருவழக்காக வருகிறது. என்னுடன், உன்னுடன், அவனுடன், அவளுடன், அவருடன், அதனுடன், அவற்றுடன் என ஐம்பால் மூவிடங்களிலும் ‘உடன்’ உருபு தாராளமாக வழங்கிவருகிறது.
‘உடன்’ உருபு வழங்குமிடங்களை நான் கவனித்த வகையில் இலக்கண விதியில் சற்றே நெகிழ்வு கொடுத்து இன்னும் நுட்பமாக வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. இப்போதும் ‘மரமுடன்’ என்று யாரும் சொல்வதில்லை. மரத்துடன் என்றுதான் சொல்கிறோம். குளம், பழம், முகம், குடம் முதலிய சொற்களுடன் ‘உடன்’ என்னும் உருபு சேர்ந்தால் குளத்துடன், பழத்துடன், முகத்துடன், குடத்துடன் என்றுதான் வரும். குளமுடன், பழமுடன், முகமுடன், குடமுடன் என்று யாரும் சொல்வதில்லை. அப்படி என் காதுகளில் சொற்கள் விழவில்லை. எழுத்துச் சான்றுகளிலும் நான் தேடிய வரையில் இல்லை. அத்துச் சாரியை சேர்த்துத்தான் சொல்கிறோம்; எழுதுகிறோம்.
வளமுடன் என்பதைப் போல வரும் சில சொற்களும் இருக்கின்றன. சமீபத்தில் வாசித்த ஒரு கட்டுரையின் முதல் தொடர் இது:
‘திமுக மீட்டிங்கை சின்ன வயதிலிருந்து கேட்டுக் கொண்டு இருக்கிறேன். அதை மட்டும்தான் ஆர்வமுடன் கேட்க முடியும் என்பது வேறு விடயம்.’
ஆர்வத்துடன் அல்ல; ஆர்வமுடன்.
‘நலமுடன் வாழ்வோம்’ என்றொரு முகநூல் பக்கம் இருக்கிறது. ‘நலத்துடன்’ என்று யாரும் எழுதுவதாகவே தெரியவில்லை. எங்கும் ‘நலமுடன்’ தான்.
‘சுகமுடன் என்றுமே வாழலாம்’ என்றொரு மரபுக்கவிதை இணையத்தில் இருக்கிறது. ‘நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவ கிருபையே… நான் உயிருடன் வாழ்வதும் சுகமுடன் இருப்பதும் கிருபையே’ என்னும் கிறித்தவ வாசகம் புகழ் பெற்றது போலும். ‘வாழ்க பலமுடன்’ என்னும் தலைப்பில் எஸ்.ரவீந்திரன் எழுதிய கட்டுரை தினமணியில் வெளியாகியிருக்கிறது.
ஆர்வம், நலம், சுகம், பலம் ஆகியவற்றுடன் ‘உடன்’ சேரும்போது அத்துச் சாரியை வருவதில்லை அல்லது வர வேண்டியதில்லை என்னும் நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது.
மரம், குளம், குடம், பழம், முகம் ஆகிய சொற்கள் பருப்பொருட்களைக் குறிக்கின்றன. இவற்றை இடப்பெயர், பொருட்பெயர், சினைப்பெயர் என்று அதனதன் இயல்புக்கேற்பச் சொல்லலாம். வளம், நலம், சுகம், ஆர்வம், பலம் ஆகியவற்றைப் பாருங்கள். இவை பருப்பொருட்களைக் குறிப்பவையல்ல. இவற்றைப் பண்புப்பெயர்கள் என்று சொல்லலாம் என நினைக்கிறேன். வளம் என்பது குறிப்பிட்ட எந்தப் பொருளையும் குறிக்கும் சொல் அல்ல. வளமை என்னும் பண்புச்சொல். பிற சொற்களும் அப்படித்தான்.
இவற்றைக் கொண்டு இப்படி ஒரு முடிவுக்கு வருகிறேன்: ‘பண்புப்பெயர்களான மகர ஈற்றுச் சொற்களோடு ‘உடன்’ என்னும் வேற்றுமை உருபு சேரும் போது அத்துச் சாரியை வரலாம்; வராமலும் இருக்கலாம். சான்று: வளத்துடன், வளமுடன்; ஆர்வத்துடன், ஆர்வமுடன்; நலத்துடன், நலமுடன்; சுகத்துடன், சுகமுடன்.’
மாற்றங்களை உள்வாங்கிக் கொள்வதே இலக்கண இயல்பு. ஆகவே நண்பர்களே, அனைவரும் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறேன்.
—– 26-11-24
அருமை. அற்புதமான விளக்கம். வாழ்க வளமுடன் ஐயா.
சிறப்பு ஐயா. இலக்கணம் குறித்த செய்திகள் மிகவும் சிறப்பு ஐயா
சிறப்புங்க ஐயா!
ஐயா, பல நாட்களாக தமிழார்வலர்களிடம் உலவிய வினாவிற்கு நல்லதொரு விடையைத் தந்தீர்கள்.
பண்புப் பெயர்களில் மட்டும்தான் அவ்வாறு மாற்றம் நிகழ்ந்துள்ளதென நினைக்கிறேன்.
மரம், களம், நேரம், முகம் போன்றவை ‘அத்துச்’ சாரியை பெற்றே வழங்கிவருகின்றன.