விருதுநகர் மாவட்டத்திற்கு ஆய்வுக்காகச் சென்ற முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் புதிய ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து வைத்து ஆட்சியர் வீ.ப.ஜெயசீலனை நாற்காலியில் அமரச் சொல்லிவிட்டு அவருக்கருகில் தாம் நின்று கொண்டிருந்த காட்சியைச் செய்தியில் கண்டேன். முதல்வர் நிற்க ஆட்சியர் நாற்காலியில் அமர்ந்து கோப்பில் கையொப்பமிடும் காட்சியைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.
வீ.ப.ஜெயசீலன் தமிழ் இலக்கியம் பயின்று முனைவர் பட்டம் பெற்றவர். திருக்குறள் முழுவதையும் மனனமாகச் சொல்லும் ஆற்றல் கொண்டவர். கம்பராமாயணம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியத்தில் புலமை உடையவர். சிறந்த பேச்சாளர். நிர்வாகத் திறமை மிக்கவர். அம்மாவட்டத்தில் கரிசல் இலக்கியத் திருவிழாவைச் சிறப்பாக நடத்தியவர். மாவட்டத்தின் இயற்கை அமைப்பையும் வளத்தையும் நுட்பமாக அறிந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முனைந்து உழைப்பவர். தமிழ் இலக்கியம் பயின்ற ஒருவருக்குக் கிடைத்த மதிப்பு மனதுக்குப் பெருமகிழ்ச்சி கொடுத்தது.
இச்சமயத்தில் சமீபத்தில் வெளியான விருதுநகர் மாவட்டச் செய்தி ஒன்றைப் பற்றி எழுதத் தோன்றுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் (2023 ஏப்ரல் முதல் 2024 மார்ச் வரை) நடந்த மகப்பேறுகளில் ஒருவர்கூட இறக்கவில்லை என்னும் சாதனைச் செய்தி சில நாட்களுக்கு முன் வந்தது. அம்மாவட்டத்தில் இவ்வாண்டு நடைபெற்ற மொத்த மகப்பேறு 7998. எல்லாவற்றிலும் தாயும் சேயும் நலம். ‘இறப்பில்லா மகப்பேறு’ என்னும் இலக்கு எல்லா மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற மகப்பேறுகளில் 74 விழுக்காடு அரசு மருத்துவமனைகளில் நடந்திருக்கின்றன. மொத்தமாகத் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 60 விழுக்காடு மகப்பேறு அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகின்றனவாம். தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் மக்களுக்கு வழங்கும் சேவைகளுக்கு இதுவே நல்ல சான்று. மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரிகள் இருப்பதும் அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பு வசதியும் சேவையும் மேம்பட முக்கியமான காரணம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டு, இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதி ஆகிய காலகட்டத்துச் செய்திகளைப் பார்த்தால் நாம் எந்த அளவு முன்னேறியுள்ளோம் என்பது புரியும். அக்காலத்தில் மகப்பேற்றின் போது நேரும் சிக்கல், தொடர்மகப்பேறு, இளவயதுத் திருமணத்தில் கருவுறுதல், மகப்பேற்றின் பின்னான உடல்நலப் பிரச்சினைகள் ஆகியவற்றின் காரணமாகப் பல பெண்கள் இளம்வயதிலேயே இறந்து போயுள்ளனர். மகப்பேறு என்பது வாழ்வா சாவா என்று தெரியாத நிலை. பிழைத்து வந்தால் மறுபிறப்புத்தான்.
கருவுற்ற பெண் பிழைத்து வருவாளா என்று தெரியாது. அவளுடைய ஆசைகளை எல்லாம் நிறைவேற்றும் சடங்குதான் வளைகாப்பு. அலங்காரமும் அறுசுவை உணவும் வழங்கி வழியனுப்புதல்தான். கணவன் இறந்ததும் மனைவிக்குச் சகல அலங்காரமும் செய்து தலையில் பூச்சூட்டிப் பின் அனைத்தையும் களைந்து வெள்ளைப் புடவை கொடுத்துக் கைம்பெண் கோலத்திற்குத் தள்ளிவிடுவர். இனி ஒருபோதும் இத்தகைய அலங்காரங்கள் செய்ய வாய்ப்பில்லை என்பதால் இச்சடங்கு. வளைகாப்பு என்பது இறப்புக்கு முன்னான இறுதி ஆசையை நிறைவேற்றுவது போன்ற சடங்குதான். இன்று ஒருபெண் கருவுற்றால் ‘வளைகாப்பு’ சிறப்பாக நடைபெறுகிறது. வளைகாப்பு இப்போது கொண்டாட்டச் சடங்காக மாறிவிட்டது. அதன் பின்னணியில் பெரும் மருத்துவச் சாதனை இருக்கிறது.
முன்னோடி இலக்கிய ஆளுமைகள் இருவரது வாழ்க்கை நினைவுக்கு வருகிறது. பழந்தமிழ் நூல் பதிப்பு முன்னோடியாகிய சி.வை.தாமோதரம் பிள்ளைக்கு மூன்று மனைவியர். மூன்று மனைவியருடன் ஒருசேர வாழ்ந்தார் என்று இன்றைய காலத்தவர் நினைத்துக் கொள்கின்றனர். அப்படியல்ல. ஒருமனைவி உயிருடன் இருக்கும்போதே இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் அரிது. முதல் மனைவிக்குக் குழந்தைப் பேறு இல்லாத நிலையில் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதுண்டு. அப்போது இருமனைவியரும் உயிருடன் இருப்பர். இருவரையும் ஒருசேர வைத்துக் குடும்பம் நடத்துவர்.
பெரும்பான்மை அப்படியல்ல. ஒருமனைவி இறந்துவிடும் காரணத்தால் இன்னொரு திருமணம் செய்துகொள்வதுதான் வழக்கம். சி.வை.தாமோதரம் பிள்ளையின் முதல் மனைவி இறந்த பிறகு இரண்டாவது திருமணம். இரண்டாவது மனைவி இறந்ததும் மூன்றாவது திருமணம். மூன்று மனைவியருக்கும் சேர்த்துப் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள். இருமனைவியர் மிக இளம்வயதிலேயே இறந்து போயினர்.
மகப்பேற்றில் இறந்த குழந்தைகள் பற்றிய விவரம் தெரியவில்லை. அக்காலத்தில் பிறந்த குழந்தையின் இறப்பு சாதாரணமானது. வாழ்க்கை வரலாறுகளில் உயிருடன் வாழும் பிள்ளைகள் பற்றித்தான் குறிப்பிடுவார்கள். பிறப்பிலேயோ பிறந்து சில நாட்களிலோ இறக்கும் குழந்தைகள் பற்றிய செய்திகள் தெரிவதில்லை. எனினும் அதுவும் கணிசமாக இருக்கும் என்பது உறுதி.
தமிழின் முதல் நாவலாசிரியர் முன்சீப் மாயூரம் ச.வேதநாயகம் பிள்ளைக்கு ஐந்து மனைவியர். ஒருசேர ஐந்து பேரை அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. அல்லது ஒருவர் இருக்க இன்னொருவரைத் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஒரு மனைவி இறந்ததும் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். ஐந்து திருமணமும் அப்படித்தான். பெரும்பாலும் மகப்பேற்றின் காரணமாகதான் இளவயதிலேயே அவர் மனைவியர் இறந்திருக்கக் கூடும். அக்காலப் பெண்களின் நிலை அப்படித்தான். ஐந்தாவது மனைவியும் இறந்த சமயத்தில் அவருக்கு வயது கூடிவிட்டதால் பின்னர் திருமணம் செய்துகொள்ளவில்லை.
சி.வை.தாமோதரம் பிள்ளையும் வேதநாயகம் பிள்ளையும் சாதாரண மனிதர்கள் அல்லர். அன்றைய ஆங்கிலேய அரசாங்கத்தில் மிக உயரிய பதவிகளை வகித்தவர்கள். மனைவியர் மகப்பேற்றின் போது நன்றாகச் செலவு செய்து உயரிய மருத்துவம் பார்த்திருப்பர். ஆனாலும் பிழைக்க வைக்க முடியவில்லை. காரணம் அன்றைக்கிருந்த மருத்துவ வசதி அவ்வளவுதான். இன்று எவ்வளவோ உயரத்தை எட்டிவிட்டோம் என்பதைத்தான் ‘இறப்பில்லா மகப்பேறு’ என்னும் செய்தி தெரிவிக்கிறது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலனுக்கு வாழ்த்துக்கள்.
—– 11-11-24.
Add your first comment to this post