சூறை! சூறைதான் அது! – 3

You are currently viewing சூறை! சூறைதான் அது! – 3

யூமாவாசுகியின் பிடிவாதம் அவர் விஷயத்தில் மட்டுமல்ல, அவருக்கு வேண்டியவர்கள் விஷயத்திலும் தீவிரமாக இருக்கும். என் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘திருச்செங்கோடு’ பழவந்தாங்கல் காலத்தில் 1994இல் வெளியாயிற்று. இரண்டாம் தொகுப்பு ‘நீர் விளையாட்டு’ 2000ஆம் ஆண்டில் வந்தது. இவ்விரண்டு தொகுப்புகளிலும் மூன்று நான்கு  ‘பீக்கதைகள்’ இருந்தன. எங்கள் சந்திப்பு ஒன்றின் போது அக்கதைகளைப் பற்றிப் பேச்சு வந்தது. யூமாவும் இந்தப் ‘பீ’ பற்றி ஒரு சிறுகதை எழுதும் எண்ணத்தை ஒருமுறை சொல்லியிருந்தார். அவர் தங்கியிருந்த அறையில் கழிப்பறை அடைத்துக் கொண்டது. காலைக்கடன் கழிக்க இயலவில்லை. பழவந்தாங்கல் பகுதியில் வசித்த நண்பர்கள் யார் வீட்டுக்காவது போகலாம் என்று போனார். போனால் ஒரு நண்பர் வீட்டில் தேநீர் உபசாரம். அங்கே கழிப்பறையைக் கேடகக் கூச்சமாக இருந்தது. கிளம்பி இன்னொரு நண்பர் வீட்டுக்குப் போனார். அங்கே காலையுணவு உபசாரம். அங்கும் கேட்க முடியவில்லை. வயிற்றுப் பாரத்தை இறக்கலாம் என்று போனால் சுமையேறித் திரும்ப வேண்டியதாயிற்று.

‘அந்தக் கதய எழுதுங்க மாரிமுத்து’ என்றேன். அப்படிப் போன பேச்சு ‘பீக்கதைகள்’ என்றொரு தொகுப்பு கொண்டு வந்தால் என்ன என்னும் எண்ணத்திற்கு எங்களைச் செலுத்தியது. யார்யார் அப்படிக் கதை எழுதியிருக்கிறார்கள் என்று யோசித்தோம்.  அஸ்வகோஷ் (இராசேந்திர சோழன்) எழுதிய ‘மதறாசும்…மன்னார்சாமியும்…’, பூமணியின்  ‘பாதை’, விழி.பா.இதயவேந்தனின் ‘நந்தனார் தெரு’, அன்பாதவனின் ‘பீவாரி’  எனக் கிட்டத்தட்டப் பத்துக் கதைகள் எங்கள் நினைவில் வந்தன. பட்டியல் போட்டோம்.  என் கதைகள், யூமா எழுதும் கதை ஆகியவற்றையும் அத்தொகுப்பில் சேர்த்துக் கொள்ளத் திட்டம். 

திட்டம் பேச்சோடு நின்று போனது. அப்பேச்சு கொடுத்த உற்சாகத்தில் மேலும் சில பீக்கதைகளை நான் எழுதினேன். பலரது கதைகளைக் கொண்ட தொகுப்புத் திட்டம் நடக்காமல் போனாலும் என் கதைகளை அத்தலைப்பில் நூலாக்கலாம் என்று முயன்றோம். கதைகளைத் தொகுத்துப் ‘பீக்கதைகள்’ எனத் தலைப்பிட்டுத் தமிழினி வசந்தகுமாரிடம் கொடுத்தோம். ‘அட்டையில பீன்னு வந்தா வாசகர்கள் தொடத் தயங்குவாங்க முருகன். தண்ணி தெளிச்சுத்தான் கையில எடுப்பாங்க’ என்று அவர் சொல்லிவிட்டார். அதில் இருந்த ‘கருதாம்பாளை’ என்னும் தலைப்பைச் சொல்லி அதை நூலுக்கு வைத்தால் வெளியிடலாம் என்றார். யூமாவின் பரிந்துரையும் பலிக்கவில்லை. வேறு சில பதிப்பகங்களிடமும் கொடுத்துப் பார்த்தோம். எல்லோருக்கும் தலைப்பு பிரச்சினையாக இருந்தது. ‘கருதாம்பாளை’ தலைப்பு எனக்குப் பிடித்திருந்தது. அத்தலைப்பிலேயே நூலை வெளியிட்டு விடலாம் என்று சொன்னேன். யூமா ஒத்துக் கொள்ளவில்லை.   

‘பீக்கதைகள்’ தலைப்பை எக்காரணம் கொண்டும் மாற்றக் கூடாது என்று யூமா சொன்னார். அவரிடம் நயமாகச் சொல்லிப் பார்த்தேன். தலைப்பு பிரச்சினை இல்லை; புத்தகம் வரட்டும் என்று என் பாணியில் சொன்னேன். அவரது பிடிவாதத்தை அசைக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் ‘முருகன், கொஞ்சம் பொறுத்துக்கங்க. குதிரைவீரன் வெளியீடா நாமே கொண்டு வந்திரலாம்’ என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார். அதை என்னால் மறுக்க முடியவில்லை. குதிரைவீரன் வெளியீடாகவும் வரவில்லை. பின்னர்  ‘அடையாளம்’ பதிப்பகத்தில் ஒரு நிபந்தனைக்கு உட்பட்டு நூலாக வெளிவந்தது. சில ஆண்டுகள் கடந்தாலும் அத்தலைப்பில் வந்தது நல்லது என்றே பின்னர் உணர்ந்தேன். அதற்கு யூமாவின் பிடிவாதமே காரணம். 

யூமாவைப் பற்றிப் பேசும்போது மூன்று சம்பவங்களைக் கூற வேண்டியது முக்கியம் என்று நினைக்கிறேன். முதலாவது ‘குதிரைவீரன் பயணம்’ இதழ் பற்றியது. பழவந்தாங்கலில் இருந்த அந்த நாட்களில் தான் ‘குதிரை வீரன் பயணம்’ இதழை நடத்தினார். மாத இதழாகத் தொடங்கினார். மாதாமாதம் கொண்டு வர இயலவில்லை  எனினும் மார்ச் 1994 தொடங்கி டிசம்பர் வரைக்கும் தொடர்ந்து ஏழு இதழ்கள் வந்தன. தமிழ்ச் சிற்றிதழ் வரலாற்றில் அவற்றுக்கு முக்கியமான இடமுண்டு. முதல் இதழ் தொடங்கி யூமாவோடு நானும் இணைந்து செயல்பட்டேன்.  படைப்புகள் பெறுவது, தேர்ந்தெடுப்பது, இதழுக்கு எழுதுவது என்பதோடு அச்சகத்திற்குச் சென்று மெய்ப்புப் பார்த்தல், அச்சிடுதலைப் பின் தொடர்தல் ஆகியவற்றையும் செய்திருக்கிறேன். முதல் மூன்று இதழ்களை வெவ்வேறு அச்சகங்களில் அச்சிட்டார். அது சிரமமாக இருந்தது. அப்போது எனக்குத் தெரிந்திருந்த ‘வைகை அச்சகத்தில்’  கடைசி இதழ்கள் நான்கையும் அச்சிட்டோம். ஆகவே அச்சகத்திலேயே போயிருந்து இதழ் வேலைகளைப் பார்க்க முடிந்தது. 

மார்ச் 1994இல் வெளியான முதல் இதழில் ‘நிழல் முற்றம்’ நாவலின் ஆறாம் அத்தியாயத்தை வெளியிட்டது அந்நாவலுக்கு நல்ல அறிமுகமாக இருந்தது. அப்போது ‘இளமுருகு’ என்னும் புனைபெயரில் கவிதை எழுதிக் கொண்டிருந்தேன். 1992இல் ‘நிகழ் உறவு’ என்னும் சிறுதொகுப்பை வெளியிட்டிருந்தோம். அதில் உள்ள கவிதைகள் பெரும்பாலும் ‘மனஓசை’ இதழில் வெளியானவை. காதல் கவிதைகள் நிறைய எழுதியிருந்தாலும் அவற்றில் எதையும் அத்தொகுப்பில் சேர்க்கவில்லை. காதல் கவிதை எழுதுவது வெகுஜனக் கவிஞர்களுக்கே உரியது என்னும் கருத்தோட்டம் நிலவிய காலம் அது. சிற்றிதழ்ப் பண்பாட்டில் காதல் கவிதைகள் பற்றி ஒவ்வாமை நிலவியது. நான் எழுதி வைத்திருந்த கவிதைகளை வாசித்துப் பார்த்த யூமா அவற்றிலிருந்து ஆறு கவிதைகளைத் தேர்வு செய்து ‘இளமுருகுவின் ஆறு கவிதைகள்’ எனத் தலைப்பிட்டு முதல் இதழின் கடைசிப் பக்கத்தில் வெளியிட்டார். அது  ‘மனஓசை’ கடந்த இலக்கியப் பொதுவெளியில் என் கவிதைகளுக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.

சூறை! சூறைதான் அது! - 3

சுந்தர ராமசாமியின் ‘புளியமரத்தின் கதை’ நாவலின் முதல் அத்தியாயத்தையும் இறுதி அத்தியாயத்தையும் இணைத்து ஒரு சிறுகதையாக அவ்விதழில் வெளியிட்டார். யூமாவுக்கு அப்படி ஒரு யோசனை துளிர்த்தது ஆச்சரியமான விஷயம். அதைச் சுந்தர ராமசாமியே எதிர்பார்த்திருக்க மாட்டார். ஒரு மரத்தைப் பற்றி எழுதிய சிறுகதையாக அது அருமையாக உருவாகியிருந்தது. மனுஷ்யபுத்திரனின் இரு கவிதைகள் அவ்விதழில் வந்தன. அவற்றில் ஒன்று  ‘விரல் கத்தியாகத் தன் தொண்டையறுத்து பாவனை இரத்தம் பெருக்குகிறாள் ஊமைச் சிறுமி’ என்று முடியும்  பிரபலமான கவிதை. சிவகவி, உமா, கா.முத்துராமன் ஆகிய புதியவர்களின் கவிதைகளும் குவளைக்கண்ணன் கவிதை ஒன்றும் அவ்விதழில் வந்திருந்தன. அஜயன் பாலாவின் ‘முகம்’ சிறுகதை வெளியாகிக் கவனம் பெற்றதோடு சர்ச்சைக்கும் உள்ளாயிற்று. மிருத்யு எழுதிய ‘பிக்காஸோ’ பற்றிய விரிவான கட்டுரை ஒன்றும் ரமேஷ் பிரேதனின் கட்டுரை, சா.தேவதாஸ் எழுதிய கட்டுரை ஆகியவையும் இடம்பெற்றிருந்தன. சாரு நிவேதிதா ‘கோணல் பக்கங்கள்’ என்னும் தலைப்பில் பத்தி எழுதத் தொடங்கினார். அத்தலைப்பை அவர் பயன்படுத்தியது ‘குதிரை வீரனில்’தான் என்று நினைக்கிறேன். முதல் இதழே இலக்கிய வாசகர் நடுவில் பெரும் கவனத்திற்கு உள்ளாகியது. அடுத்த இதழில் வெளியான கடிதத் தொகுப்பே அதற்கு நல்ல சான்று. 

—– 16-02-25

Latest comments (1)

யூமா வாசுகிக்கும் உங்களுக்குமான நட்பையும் பிணைப்பையும் தெளிவு படுத்துகிறது ஐயா… தொடரட்டும் உங்கள் சூறை பயணம் அருமை ஐயா