சூறை! சூறைதான் அது! – 6

You are currently viewing சூறை! சூறைதான் அது! – 6

பின்னர் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தில் மாத ஊதியத்திற்குப் பணியில் சேர்ந்தார். சில ஆண்டுகள் அங்கே தொடர்ந்து பணியாற்றினார்.  அங்கிருந்த போது பல நூல்களை மொழிபெயர்த்தார். அத்துடன் அந்நிறுவனம் சார்பாக வெளிவரும் ‘உங்கள் நூலகம்’ இதழ்ப் பணியையும் பார்த்துக் கொண்டிருந்தார்.  அங்கேயும் ஒரு பிரச்சினை. அப்போது என்சிபிஎச் நிறுவனத்தின் இணைப் பதிப்பகமான ‘பாவை பப்ளிகேஷன்ஸ்’ மூலம் ‘தெரிவு’ என்னும் தலைப்பில் நாடகத் தொகுப்பு நூல் ஒன்று வெளியாகியிருந்தது. திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் பாடமாக வைப்பதற்காக உருவாக்கப்பட்ட நூல் அது. இரண்டோ மூன்றோ பேராசிரியர்களின் பெயர்கள் அதில்  ‘தொகுப்பாசிரியர்கள்’ என்று இருந்தது. இறந்து போன எழுத்தாளர்கள் சிலரின் நாடகங்களும் பிரபஞ்சன், வளர்மதி ஆகியோரின் நாடகங்களும் அதில் இடம்பெற்றிருந்தன. நான் அந்த நூலைப் பார்க்கக்கூட இல்லை.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரி ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த பேராசிரிய நண்பர் ஒருவர் செல்பேசியில் அழைத்தார். அந்த நாடகத் தொகுப்பு நூல் பட்ட வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தமிழ்ப் பாடத்தில் இருந்தது. அப்பேராசிரிய நண்பரோ மாணவர்களுக்கு ஒழுங்காகப் பாடம் நடத்தும் நல்லாசிரியர். ‘வளர்மதி’ என்பவர் எழுதிய நாடகம் ஒன்று பாடத்தில் இருக்கிறது, அவர் யார், ஆணா பெண்ணா, அவரைப் பற்றிய குறிப்பு எதுவும் கிடைக்கவில்லையே என்று கேட்டார். பெயரைப் பார்த்து அவர் பெண் என்று முடிவு செய்யாமல் ‘ஆணின் புனைபெயராக இருக்கலாம்’ என்று நினைக்கும் அளவுக்கு விவரமான ஆசிரியர் அவர். அந்நாடகத்தை எழுதியவர் என் நண்பர் என்றும் அவர் ஆண் என்றும் தகவல் சொன்னேன். நண்பர் வளர்மதியைச் சந்தித்த தருணத்தில் ‘ஒரே ஒரு நாடகம் எழுதி, அது பாடத்திட்டம் வரைக்கும் போய்விட்டதே’ என்று ஆச்சரியப்பட்டேன். அந்நாடகம் ‘கவிதாசரண்’ இதழில் வெளியானதாக ஞாபகம்.

தம் நாடகம் இப்படி ஒரு தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் தகவல் அவருக்குத் தெரியவில்லை. அந்நூலை வாங்கிப் பார்த்துப் பெரும்சினம் கொண்டார். இலட்சக் கணக்கான பிரதிகள் விற்றிருக்கும் ஒரு நூலில் ஆசிரியருக்கே தெரியாமல் ஒரு படைப்பைச் சேர்த்திருப்பது சுரண்டல் அல்லவா? மார்க்சிய இயக்கம் சார்ந்த ஒரு பதிப்பகம் இப்படிச் செய்யலாமா? அவர் பிரபஞ்சனைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். தம் நாடகம் இடம்பெற்றிருக்கும் தகவல் பிரபஞ்சனுக்கும் புதிதாக இருந்தது. இருவரும் சேர்ந்து என்சிபிஎச் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுக்கும் முயற்சியை மேற்கொண்டனர். அத்தொகுப்பில் இடம்பெற்றிருந்த பிரபஞ்சனின் ‘அகல்யா’ நாடகம் அச்சமயத்தில் சர்ச்சைக்கு உள்ளானது. அந்நாடகம் ஆபாசமாக இருக்கிறது என்று சொல்லிச் சிலர் பிரச்சினை ஏற்படுத்தினர். அதைத் தொடர்ந்து  ‘அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்’ அந்நாடகத்தைப் பாடத்திலிருந்து நீக்க வேண்டும் எனப் போராட்டம் நடத்தியது.

நூலை வெளியிட்ட பதிப்பகமும் நாடகத்தை நீக்க வேண்டும் எனப் போராடிய மாணவர் அமைப்பும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவை. இந்த முரணைக் குறிப்பிட்டும் ஆசிரியர்களுக்கே தெரியாமல் நாடகங்களைச் சேர்த்து வெளியிட்ட அப்பதிப்பகத்தின் அறமற்ற தன்மையை விமர்சித்தும் கட்டுரை ஒன்றில் நான் எழுதினேன். காலச்சுவடு இதழில் அக்கட்டுரை ‘பாடத்திட்ட நத்தை’ என வெளியாயிற்று. உடனே பிரபஞ்சனையும் என்னையும் கேலி செய்யும் விதமாக ஒரு கட்டுரையை ‘உங்கள் நூலகம்’ இதழில் வெளியிட்டனர். நாடக நூலின் தொகுப்பாசிரியர்களான பேராசிரியர்கள் பெயரில் அக்கட்டுரை வெளியாக இருக்கும் செய்தியை எனக்குத் தெரிவித்தார் யூமா. அதை வெளியிடுவதில் தமக்கு உடன்பாடில்லை என்றும் அப்பிரச்சினையில் தொடர்புடையோர் நிர்ப்பந்திப்பதாகவும் நிறுவனத்தை மீறித் தன்னால் ஏதும் செய்ய இயலவில்லை என்றும் அவர் சொன்னார். 

சூறை! சூறைதான் அது! - 6

அக்கட்டுரை வெளியானதும் பிரபஞ்சன் பெருங்கோபம் கொண்டார். தன் படைப்பை அனுமதி இல்லாமல் வெளியிட்டு விற்பனை செய்து லாபம் ஈட்டியதோடு விஷயம் வெளியான பிறகு  ‘ஒரு தொகை கொடுக்கிறோம்’ என்று சொல்லிப் பேரம் பேசியதையும் வெளிப்படுத்திக் காட்டமாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சித்து ‘உயிர்மை’ இதழில் விரிவான கட்டுரை எழுதினார். இது அக்கட்சிக்குள் பிரச்சினையைக் கிளப்பிற்று. அக்கட்டுரைக்குப் பதில் சொல்ல முடியாத நிலையில் ‘உங்கள் நூலகம்’ இதழில் பேராசிரியர்களின் கட்டுரையை வெளியிடாமல் இருந்திருந்தால் பிரபஞ்சன் இப்படி எழுதிச் சந்திக்குக் கொண்டு வந்திருக்க வாய்ப்பில்லை எனக் கருதினார்கள். அக்கட்டுரை வெளியாக யார் காரணம் என ஆராய்ந்தார்கள். 

ஒரு பிரச்சினை என்றால் அதை நீர்த்துப் போகச் செய்யக் குழு அமைப்பது அரசுகளின் தந்திர உத்தி. கம்யூனிஸ்ட்களும் அதே உத்தியைத்தான் கையாள்வார்கள். இந்தத் தந்திரத்தை முதலில் நடைமுறைக்குக் கொண்டு வந்தது கம்யூனிஸ்ட் கட்சியா அரசா என்று தெரியவில்லை. கம்யூனிஸ்ட்களிடமிருந்து அரசு காப்பி அடித்திருக்கவும் வாய்ப்பு உண்டு. அந்த அளவு ‘கமிட்டி’ அமைத்து ஆராயும் இயல்புடையவர்கள் கம்யூனிஸ்ட்கள். இந்தப் பிரச்சினைக்குக் குழு அமைக்கவில்லை என்றாலும் தொடர்புடையோர் எல்லோரும் கூடி விவாதித்தார்கள். ‘உங்கள் நூலகம்’ இதழ்ப் பொறுப்பைக் கவனித்துக் கொண்டிருந்த யூமா.வாசுகியை விவாதத்திற்கு அழைக்கவில்லை. என்ன நடந்தது என்று அவர்தானே சொல்ல முடியும்?

யூமா அந்தக் கட்சியைச் சேர்ந்தவரோ நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவரோ அல்ல. அங்கே பணியாற்றும் ஊழியர். ஒரு பிரச்சினை என்று வந்தால் மேலிருப்போர் தப்பித்துக் கொள்ள ஊழியரைப் பலியாக்குவது எளிதாக நடக்கும். இதிலும் அப்படித்தான் நடந்தது. அந்தக் கட்டுரை வெளியாக ‘உங்கள் நூலகம்’ இதழுக்குப் பொறுப்பாக இருந்த யூமா தான் காரணம் என்று ஒருமனதாக முடிவு செய்தார்கள். தொடர்புள்ளவர்கள் அனைவரும் தப்பித்துக் கொள்ள யூமா மீது பழி விழுந்தது. கம்யூனிஸ்ட் கட்சி என்பதால் கொஞ்சம் இரக்கமும் இருந்தது போலும். ‘உங்கள் நூலகம்’ பொறுப்பில் இருந்து யூமாவை விலக்கினார்கள். ஆனால் அங்கேயே மொழிபெயர்ப்பு உள்ளிட்ட நூல் பணிகளைப் பார்க்கலாம் என்று தெரிவித்தார்கள். அதற்கு யூமா ஒத்துக் கொள்ளவில்லை.  தம் பொருள்களை எல்லாம் ஒரு காரில் ஏற்றிக் கொண்டு அப்போதே அங்கிருந்து கிளம்பிவிட்டார். அவர்கள் சொன்னதைச் சரி என்று ஏற்றிருந்தால் அந்த வேலையில் தொடர்ந்திருக்கலாம். அதை யூமா ஒருபோதும் செய்ய மாட்டார். அரசு ஊழியரான எனக்கு வேலை பற்றி இருக்கும் பதற்றம் எதுவும் அவருக்கு இருக்காது. 

—– 20-02-25

Latest comments (4)

யூமா சார் மீது இன்னும் மதிப்புக் கூடுகிறது ஐயா.கருத்துச் சுதந்திரம் அதிகார பீடத்தில் உள்ளவர்களுக்குத் தான் போலும். தன்மானமும் விடாமுயற்சியும் எப்போதும் தற்காத்து.