யூமாவாசுகி எழுதியுள்ள கதைகளும் கொந்தளிப்பு மனநிலையின் இயல்புடையவையே. ஒரு கதையைப் பார்க்கலாம். அந்த கதை ஒரு சொல்லில் இருந்து உருவானது. ‘வான்நிதி’ என்று ஒரு சிறுகதை ‘உயிர்த்திருத்தல்’ தொகுப்பில் இருக்கிறது. ‘வான்நிதி’ என்னும் சொல் கிளர்த்திய ஒரு மனநிலையைத்தான் அந்தக் கதையாக எழுதினார்.
திருப்பூரைச் சேர்ந்த நண்பர் கோவிந்தராஜ். ஓமியோபதி மருத்துவராகி அவர் இப்போது கோவையில் வசிக்கிறார். 1980களின் இறுதியில் பல சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர் அவர். ‘மனஓசை’ கண்டுபிடித்த எழுத்தாளர். ‘பசலை’ என்னும் அவரது சிறுகதைத் தொகுப்பை 1994இல் நாங்கள் வெளியிட்டோம். அக்காலத்தில் அவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் சிங்கர் டைலராக வேலை செய்து வந்தார். யூமா தம் நண்பர் அறிவுச்செல்வனுடன் கொஞ்ச நாள் திருப்பூரிலும் வசித்தார். குதிரைவீரன் பயணத்தில் தொடர்புக்குத் திருப்பூர் முகவரியே கொடுக்கப்பட்டிருக்கும். அங்கிருந்த போது அறிமுகமானவர்கள் எம்.கோபாலகிருஷ்ணன், கோவிந்தராஜ் உள்ளிட்டோர். கோவிந்தராஜ் தம் பெண் குழந்தைக்கு ‘வான்நிதி’ என்று பெயர் சூட்டினார்.
அப்பெயரால் ஈர்க்கப்பட்ட யூமா ‘வான்நிதின்னு ஏன் பேரு வச்சீங்க?’ என்று கேட்டிருக்கிறார். ‘வான்நிதியின்னா மழைன்னு நினைக்கிறேன்’ என்று கோவிந்தராஜ் சொன்னார். அதைக் கேட்டதும் யூமா பெரிதும் பரவசமானார். சில நாட்கள் அச்சொல்லுக்குள் சுழன்று கொண்டிருந்தார். பிறகு சிறுகதையை எழுதி அதற்கு ‘வான்நிதி’ என்றே தலைப்பு வைத்தார்.
ஒரு ரயில் பயணத்தில் சாவகாசமாகக் கதை தொடங்கும். கொந்தளிப்பான மனநிலை கொண்ட ஒருவனைப் பற்றிய கதையாக விரைவில் மாறிவிடும். பதற்றமில்லாமல் கதையைப் படிக்கவே முடியாத நிலைக்கு ஆளாகிவிடுவோம். அவருக்குள் உருவாகக்கூடிய அந்த மனநிலையைத் தம்முடைய மொழி வழியாக அப்படியே எழுத்தில் கொண்டு வந்துவிடுவார். அதே போல அவருடைய நாவல் ‘மஞ்சள் வெயில்’ மிகவும் முக்கியமானது. அவ்வளவாகக் கவனிக்கப்படாமல் போய்விட்டது. ஒரு கவிஞன் எழுதிய நாவல் என்பதற்கான முழுமையான அடையாளம் கொண்டது மஞ்சள் வெயில். அதில் வரும் ஒவ்வொரு வரியையும் தனித்து எடுத்தோம் என்றால் கவிதை போலத் தெரியும். அந்நாவலின் பல வரிகளை அப்படி எடுத்துக் காட்ட முடியும். அதில் வரும் ஒரு வரியைச் சான்றாகக் காட்டுகிறேன்.
‘பெருங்காற்றைத் தரையோடு படிந்து வணங்கும் புல்லாக உங்கள் நளினத்திற்குள் அடங்கினேன்.’
அவர் படைப்புகளில் துலங்குவது அறச்சீற்றம்; கொந்தளிப்பு மனநிலை என்றெல்லாம் சொல்லலாம். அதே சமயம் இந்த வாழ்க்கை மீதும் சமூகத்தின் மீதும் மக்கள் மீதும் இயற்கை மீதும் அவர் கொண்டிருக்கும் பேரன்பும் படைப்புகளில் வெளிப்படுகிறது. பிற்காலத்தில் அவர் குழந்தைகளைப் பற்றி எழுதிய பல கவிதைகள் பேரன்பைக் கொண்டவை. நிதானமாக அவர் எழுதிய கவிதைகளில் இதை நேரடியாகவே பார்க்கலாம். ‘தோழமை இருள்’ என்பது அவர் கவிதைத் தொகுப்பு ஒன்றின் தலைப்பு. அந்தத் தலைப்புக் கவிதை உருவான பின்னணியும் எனக்குத் தெரியும். அது எங்கள் கிராமத்து வீட்டைப் பற்றி எழுதிய கவிதை.
1995இல் என்று நினைக்கிறேன். எங்கள் ஊருக்கு வந்து சில நாட்கள் தங்கியிருந்தார். அப்போது எழுதிய கவிதை அது. எனக்கு மிகவும் பிடித்த கவிதை. எங்கள் ஊர்க் காட்சிகள், எங்கள் வீட்டுக் காட்சிகள் எனக்கு இயல்பாக இருக்கும். அவற்றின் மகத்துவம் என் கண்ணுக்குப் படாது. ஆனால் வெளியில் இருந்து வரக்கூடிய ஒருவருக்கு அதுவும் யூமா போன்ற கவிஞருக்குக் காட்சிகளின் மகத்துவம் தெரியும். அந்த மாதிரியான காட்சிகளை எடுத்து அடுக்கி எழுதப்பட்ட ஒரு கவிதை அது. நான் அந்தக் கவிதையை என் ஊரும் வீடும் நினைவில் எழும்போதெல்லாம் எடுத்து வாசிப்பதுண்டு.
பனைமரச் சிரங்களை வாஞ்சையில் தடவி
கடக்கிறது நிலவு
மரக்கைகளால் ஏறி
நட்சத்திரங்களை பறிக்கிறது
என்று வருபவை எங்கள் ஊர் ஏரியைப் பற்றியவை. இன்றைக்கு அந்த ஏரி இல்லை. யூமாவின் கவிதையில் வாழ்கிறது.
ஏற்கனவே நீரில் ததும்பி
சிதறுபவை போதாமல்
சாந்தங் குழைந்த மலைமுகட்டில்
ஒளி தெரியும் வினோத ரீங்கரிப்புகளில்
காற்றுச் சரசரப்பில்
வயற்காடு பேசுகிறது அருள்மொழி
இதில் வருவது திருச்செங்கோட்டு மலை. எங்கள் ஊரில் இருந்து பார்த்தால் ஒரு மல்லிகைச் சரத்தைத் தூக்கிப் போட்ட மாதிரி மலை மண்டபங்களில் எரியக்கூடிய விளக்குகள் தெரியும். அதைத்தான் கவிதையில் பதிவு செய்திருக்கிறார்.
தொலைவான நூற்பாலை ஜெனரேட்டர்
ஒரு லயப் பின்னணியாக
சிகரெட் புகையோடு – உன்
வார்த்தைகளையும் நெஞ்சிலடைக்கிறேன்
எங்கள் வீட்டிலிருந்து கொஞ்சம் தூரத்தில் தறிப் பட்டறையில் இருந்து வரும் ஜெனரேட்டர் சத்தத்தைத் தொந்தரவாக நினைக்காமல் லயப் பின்னணியாக்கி விட்டார். நம் மனநிலைதானே பின்னணியின் அர்த்தத்தைத் தீர்மானிக்கிறது!
டார்ச் விளக்கில் தடம் பிடித்து
மாட்டுக் கொட்டிலின் இரண்டு
கயிற்று கட்டில்களுக்கு
மௌனித்துத் திரும்புகிறோம்
‘ஆடோ கன்றோ வந்து கட்டிலை உரசும்;
பயப்பட வேண்டா’ மென்கிறாய்
அப்போது எங்கள் வீட்டுக்கு மின் இணைப்பு இல்லை. வேளாண் நிலத்திற்குள் தனித்திருந்த வீடு. என் அம்மா வளர்த்த வெள்ளாடுகள் சிலவும் எருமைக் கன்று ஒன்றும் கட்டியிருந்த கொட்டகைக்குள் ஒருபுறமாய் இரண்டு கட்டில்களைப் போட்டு நாங்கள் படுத்திருந்தோம். அந்தக் காட்சிகள் அப்படியே கவிதைக்குள் வந்துவிட்டன.
உன் பேச்சு முடிந்து
வெகுநேரம் கழித்து
கடைசியாக உன்னிடம் ஏதோ
சொல்ல வேண்டிய தயக்கத்தோடு
உறங்க முயல்கிறேன் நானும்
கற்களைக் கூட்டி வைத்து
அடைகாக்கும் கோழி
மதியம் போலவே
இப்போதும் முனகுகிறது.
எனக் கவிதை முடிகிறது. கற்களைக் கூட்டி வைத்து அடைகாக்கும் கோழியின் சித்திரம் உண்மையில் அற்புதமானது. கோழி அடைகாக்கும் மனநிலையில் இருக்கும். முட்டைகள் இருக்காது. கற்களைக் கூட்டி வைத்து அடை காக்கும். அந்த மனநிலையை எங்கள் வழக்கில் ‘கிறுக்குப் புடிச்சிருக்குது’ என்று சொல்லுவோம். ‘தோழமை இருள்’ என்னும் தலைப்பு ‘தோழமையான இருள்’ என்று பொருள்படும். இருள் தோழமையாகிறது. ‘தோழமையும் இருளும்’ என்றும் பொருள் கொள்ளலாம். அதாவது ‘நண்பரும் இருளும்’ என்று அர்த்தமாகும். நட்பும் இருளுமான அந்தத் தோழமை உணர்வு எல்லாக் காட்சிகளையும் இயல்பு மீறிய பார்வை ஒன்றிலிருந்து காணத் தூண்டுகிறது. காட்சி அடுக்கை இணைப்பது தலைப்புத்தான். இறுதியில் கற்களை முட்டைகளாகப் பாவிக்கும் காட்சி ஒருவித தரிசனத் தன்மையைக் கவிதைக்கு வழங்கிவிடுகிறது.
இன்னும் அவர் கவிதைகள் பற்றியும் சிறுகதை, நாவல்கள், சிறுவர் படைப்புகள் பற்றியும் பேச நிறைய இருக்கின்றன. பலரும் பேசியுள்ளனர். இப்படி ஒரு கருத்தரங்கு நடைபெற்றது குறித்து மகிழ்கிறேன். ரத்த உறவு, மஞ்சள் வெயில் உள்ளிட்ட அவர் படைப்புகள் இன்றைய வாசகர்களுக்குக் கிடைப்பதில்லை. அதற்கு யூமா ஏற்பாடு செய்ய வேண்டும். அவர் படைப்புகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய இடம்பெறுபவை. அவை தொடர்ந்து வாசகர்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது என் விருப்பம்.
என் சுயபுராணத்தை இன்னும் இரண்டு சம்பவங்களோடு முடித்துவிடுகிறேன். எனக்கு அரசுப் பணி கிடைத்துப் பழவந்தாங்கலில் இருந்து காலி செய்யும் முன் ஓரிரவை சி.மோகன், யூமா, நான் ஆகிய மூவரும் மது விருந்தோடு மகிழ்ச்சியாகக் கொண்டாடினோம். வோட்கா என்னும் ரஷ்ய பானத்தை அன்றுதான் முதன்முதலாக நான் அருந்தினேன். எலுமிச்சம் பழச்சாறோடு வோட்கா கலவையை ரசனையோடு சி.மோகன் செய்தார். மதுவருந்தும் சம்பிரதாயங்கள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். மகிழ்ச்சியும் புதுமையும் கூடிய அருமையான அனுபவம் அது. அதைப் போல யூமாவோடு வேறொரு இரவு பல்லாண்டுகளாக அமையவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன் கேரளத்தின் பாலக்காடு போயிருந்த போது யூமாவும் வந்திருந்தார். அருகில் உள்ள தஸ்ரக் என்னும் கிராமத்தில் ஓ.வி.விஜயன் நினைவிடம் உள்ளது. அவரது ‘கசாக்கின் இதிகாசம்’ நாவலுக்குக் களமான ஊர் அது. ஓ.வி.விஜயன் மீது அபிமானம் கொண்ட மலையாள எழுத்தாளர் சுகுமாரன் என்பவர் அவ்வூரில் தனக்கு ஒரு வீடு வேண்டும் என்று எண்ணி வாங்கி வைத்திருக்கிறார். அவ்வீட்டில் அன்றிரவு நாங்கள் தங்கினோம். பாலக்காடு கல்லூரி மாணவ நண்பர்கள் சிலரும் எங்களுடன் இருந்தனர். கேரளத்துக் கள்ளும் கறியுமாக அன்றைய இரவு விருந்து அமர்க்களப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு யூமாவுடன் கொண்டாடிய அற்புதமான இரவாக அது அமைந்தது. எங்கள் வாழ்வில் அப்படிப் பல இரவுகளை நாங்கள் கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன்.
—– 22-02-25
(யூமாவாசுகி படைப்புகள் குறித்து ஈரோட்டில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். தொகுப்பு நூலிலும் இது இடம்பெற்றுள்ளது. இதற்குக் காரணமான லாவண்யா சுந்தரராஜன் அவர்களுக்கு நன்றி.)
Add your first comment to this post