கருத்துரிமை : சாதியத்தின் அழகிய வடிவம்

சாதியத்தின் அழகிய வடிவம்

நம்முடையது சாதியச் சமூகம். ஏற்றத்தாழ்வும் ஆதிக்கமும் அதிகாரமும் சாதிப் படிநிலைகளால் உருவாக்கப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகளாகச் சாதியத்தின் அடிப்படையிலேயே நிலவிவரும் அதிகாரப் படிநிலை பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின் பின்பகுதியில் ஓரளவு உடைபடத் தொடங்கியது. விடுதலைக்குப் பின்னர் படிப்படியாக நெகிழ்ந்து வந்தது. பல தலைவர்களின் பங்களிப்பும் ஜனநாயகம் என்னும் புதுமையும் இந்தச் சாதிய நெகிழ்வுக்குக் காரணமாக அமைந்தன. தேர்தலில் எல்லாச் சாதியினருக்கும் வாக்களிக்கும் உரிமை, போட்டியிடும் உரிமை, சமூக நீதிக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவான இட ஒதுக்கீடு, கல்விப் பரவல், அச்சு ஊடகப் பெருக்கம் முதலியவை சாதியப் படிநிலையில் கணிசமான உடைவை ஏற்படுத்தின. இந்த உடைவுகளின்போது வேதனைகளும் காயங்களும் வலிகளும் ஏற்படத்தான் செய்தன. எனினும் பெருஞ்சேதங்கள் இன்றி அடுத்த கட்ட நகர்வுகளை நோக்கி இந்த உடைவு போய்க்கொண்டிருந்தது.

உலகமயமாதல் யுகத்தில் சாதியின் நிலை

1990களுக்குப் பிறகு உலகமயமாக்கல் போன்றவற்றின் காரணமாகவும் விளிம்பு நிலை மக்களின் எழுச்சியாலும் இந்த உடைவு இன்னும் வேகமெடுத்தது. ஆனால், இருபத்தொன்றாம் நூற்றாண்டு இந்த வேகத்திற்கு முட்டுக்கட்டை போடுவதாக அமையும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. பல நூற்றாண்டுகளாகச் சாதியப் படிநிலையில் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் பெற்றிருந்த சாதிப் பிரிவினர் அத்தனை எளிதாக அவற்றை இழந்துவிடச் சம்மதிக்க மாட்டார்கள்தான். சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் அவர்கள் தங்கள் அதிகாரத்தை வெளிப்படுத்தவும் நிலைநாட்டிக் கொள்ளவும் முனைந்தனர்; ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவினர் ஜனநாயகத்தால் தம் உரிமைகளை உணர்ந்து அதிகாரத்தில் தமது பங்கைப் பெற முயன்றனர். ஜனநாயக அமைப்பில் இவ்விரு சக்திகளுக்கும் இடையேயான போராட்டமே அரசியலாகத் தொடர்ந்துவருகிறது. இப்போராட்டம் தொடர்ந்து வந்த நிலையில் வேறொரு வகை மாற்றம் நிகழ்ந்தது.

ஆதிக்கச் சாதியினர் நேரடியாகத் தம் சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டி ஆட்சி அதிகாரத்தைப் பெறுவதற்கு ஜனநாயகம் இடம் தரவில்லை. இச்சூழலில், பொதுச் சமூக மனத்தில் படிந்திருக்கும் சாதிப் படிநிலை சார்ந்த ஆதிக்க உணர்வுக் கருத்தியலைப் பெருக்கி அதன் வழியாக அதிகாரத்தைப் பெறும் முயற்சி நடைபெற்றது. சாதிப் படிநிலைக் கருத்தியலின் முக்கியக் கூறு என்பது தாம் அதிகாரம் செய்யும் வகையில் தமக்கும் கீழே ஏதேனும் ஒரு பிரிவினர் இருக்க வேண்டும் என்பதை விரும்புவதாகும். அக்கருத்தியல் தமக்கும் மேலே இருப்பவரைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. தமக்கும் கீழே ஒரு பிரிவினர் இருப்பது இயல்பு என்பதைப் போலவே தமக்கும் மேலே ஒரு பிரிவினர் இருப்பதும் இயல்பே என்று கருதுகிறது.

கருத்துரிமை : சாதியத்தின் அழகிய வடிவம்

ஆதிக்கம் செலுத்தக் கற்றுக்கொள்ளுதல்

அதிகாரம் செய்ய விரும்பும் சாதிய மனம் அதிகாரத்திற்கு அடிபணிவதையும் ஏற்றுக்கொள்ளும். அதாவது அடிமையாக இருக்கும் ஒருவர் தம் ஆண்டானிடமிருந்து ஓர் அடிமையை எப்படி நடத்துவது என்பதைக் கற்றுக்கொள்வார். பின்னர் தமக்கு அதிகாரம் கிடைக்கும் போது தமக்குக் கீழே இருப்பவர் மீது தாம் கற்றுக்கொண்டதைப் பிரயோகிப்பார். இதுவே சாதியப் படிநிலைக் கருத்தியலிலும் செயல்படுகிறது. ஒரு சாதிப் பிரிவு தமக்கு மேலே இருக்கும் ஆதிக்கச் சாதி தம்மை எவ்விதம் நடத்துகிறதோ அந்த நடைமுறைகளை அப்படியே தமக்குக் கீழே இருக்கும் சாதிப் பிரிவு மீது கையாள்கிறது.

மேல்நிலையாக்கம் என்பது தமக்கு மேலிருக்கும் ஆதிக்க சாதியின் மொழி, சடங்கு உள்ளிட்ட நடைமுறைகளைத் தாமும் கைக்கொள்வது மட்டுமல்ல; தமக்கு மேலிருக்கும் ஆதிக்க சாதி தம்மை நடத்தும் ஆதிக்க நடைமுறைகளைத் தாமும் கைக்கொண்டு தமக்குக் கீழிருக்கும் சாதியின் மீது அவற்றைப் பிரயோகிப்பதும் மேல்நிலையாக்கத்தின் முக்கியமான கூறுதான்.

இத்தகைய சாதியப் படிநிலைக் கருத்தியல் ஒவ்வொரு சாதிய மனத்திலும் படிந்திருக்கிறது. இக்கருத்தியல் மனிதர்களைப் பிளவுபடுத்துவதை ஏற்றுக்கொள்கிறது. மேல், கீழ் என்னும் பிரிவை அங்கீகரிக்கிறது. தமக்குக் கீழிருக்கும் ஒன்று ஒருபோதும் தமக்குச் சமமாகிவிட முடியாது என நினைக்கிறது. சமத்தை நோக்கிய நடவடிக்கை ஒவ்வொன்றையும் நீர்த்துப்போகச் செய்வதில் கவனமாக இருக்கிறது. சமமின்மையில்தான் தம் அதிகாரம் செயல்பட முடியும் என்பதை உணர்ந்திருக்கிறது. எப்போதெல்லாம் தம் ஆதிக்கத்திற்குப் பங்கம் வருகின்றதோ அப்போதெல்லாம் மேல், கீழ் என்னும் பிரிவை வெளிப்படுத்தித் தம் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ள முயல்கிறது.

சாதியக் கண்ணிகள் கோக்கப்பட்ட மதவாதச் சங்கிலி

இந்தச் சாதியப் படிநிலைக் கருத்தியலை உடைத்துச் சமூகச் சமத்துவத்தை குறிவைத்துச் செயல்பட வேண்டியது ஜனநாயக அரசியலின் கடமையாகும். அக்கடமையை மெதுவாகவேனும் நிறைவேற்றிவந்த அரசியல் சக்திகள் பின்தங்கிப் போனதும் அதிகாரத்தை இழந்ததும் சமீப கால வரலாறு. மாறாக மேல், கீழ் என்னும் பிளவை மையப்படுத்திய சாதியப் படிநிலைக் கருத்தியலை அப்படியே ஏற்பதன் மூலமாக ஆதிக்கத்தைப் பெறலாம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ள காலம் இது. ஏற்கனவே சாதிய மனத்தில் படிந்துள்ள இந்தக் கருத்தியலைத் தூண்டுவதாலும் அதற்குச் செயல் வடிவம் கொடுப்பதாலும் அரசியல் அதிகாரத்தைப் பெற்ற சக்திகளின் ஆதிக்கத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். சாதியக் கண்ணிகள் கோக்கப்பட்ட மதவாதச் சங்கிலி எல்லோரையும் சேர்த்துப் பிணைத்திருக்கிறது.

ஒருகாலத்தில் சில சிறு ஆதாயங்களுக்காகப் பெயரளவுக்குச் சங்கம் வைத்துச் செயல்பட்டுக்கொண்டிருந்த சாதிகளுக்கு இச்சூழல் உகந்ததாக மாறியது. ஜனநாயகத்தில் தாம் இழந்துவிட்ட அதிகாரத்தை மீட்டெடுத்துக்கொள்ள முடியும் அல்லது சாதியின் காரணமாக மிஞ்சியிருக்கும் கொஞ்சநஞ்சம் அதிகாரத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்னும் நம்பிக்கை சாதிகளுக்கு உருவாயிற்று. ஆகவே சாதியச் சங்கங்கள் பலவும் கட்சிகளாக உருமாறின. ஒடுக்கப்பட்ட சாதியினர் தம் இழிவுகளிலிருந்து மீளக் கட்சி தேவைப்பட்ட காலம் போய் ஆதிக்க சாதியினர் தம் ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ளக் கட்சி உருவாக்கும் காலமாக இது இருந்தது. ஏற்கனவே வெவ்வேறு காரணங்களால் அவ்விதம் கட்சியாக மாறியிருந்த சாதிகளுக்கு இந்தச் சூழலில் முக்கியத்துவம் உருவாயிற்று.

குறிப்பிட்ட சாதி ஒரு குறுகிய வட்டாரத்திலேயே அடர்த்தியாக வாழ்கிறது. அப்பகுதியின் நிலவுடைமையைப் பெற்றிருக்கிறது. ஆகவே ஒரு சாதிக் கட்சி குறிப்பிட்ட வட்டாரத்தில் ஆதிக்கம் கொண்டிருப்பது இயல்பு. சாதியப் பிளவை அதிகாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள முயலும் சக்திகள் இந்த வட்டாரத் தன்மையை இறுக்கமாக்கி சாதியக் கட்சிகளுக்கு உயிர்ப்பையும் முக்கியத்துவத்தையும் வழங்கின. ஜனநாயகத்தின் பலமானதும் பலவீனமானதுமான அம்சம் வாக்கு எண்ணிக்கை. பலவீனத்தைப் பயன்படுத்திச் சில குறிப்பிட்ட வட்டாரங்களில் தம்மால் வெற்றி பெற முடியும் என்னும் தகுதியைச் சாதியக் கட்சிகள் பெற்றிருக்கின்றன. சாதிப் பிளவைப் பயன்படுத்தும் ஆதிக்க சக்திகள் மட்டுமல்லாமல், சமத்துவத்தை நோக்கி நகர்த்திய அரசியல் கட்சிகளும் நேரடியாகவோ மறைமுகமாகவோ சாதியக் கட்சிகளோடு இணையவும் அவற்றிற்குக் குறிப்பிட்ட முக்கியத்துவத்தை வழங்கவுமான நிலையை இந்த வாக்கு எண்ணிக்கை என்னும் ஜனநாயக பலவீனம் உருவாக்கியுள்ளது.

கருத்துரிமை : சாதியத்தின் அழகிய வடிவம்

நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பூதாகரமான பிரச்சினைகளை விடவும் சாதியப் படிநிலைக் கருத்தியல் கட்சிகளாகவும் வாக்குகளாகவும் இணைந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவனவாக மாறியிருக்கின்றன என்பதையே முக்கியமானதாக அனுமானிக்கிறேன். புறத்தோற்றத்தில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாகத் தெரிந்தாலும் உள்ளுக்குள் சாதியக் கருத்தியலே நம் சமூகத்தைச் செலுத்திக்கொண்டிருக்கிறது. அக்கருத்தியலைக் கோர உருவமாகச் சித்திரித்த காலம் மாறிவிட்டது. இப்போது சாதியக் கருத்தியல் அழகிய வடிவமெடுத்து நம்முன் நிற்கிறது. சாதிப் பெருமையைத்தான் இன்றைக்குப் பேசியாக வேண்டும். இந்தச் சாதி இந்தப் பகுதியை ஒருகாலத்தில் ஆண்டது என்றும் இந்தச் சாதியிலிருந்து இத்தனை தலைவர்கள் உருவாகியிருக்கிறார்கள் என்றும் எல்லாவற்றையும் சாதிப் பெருமைக்குள் அடக்குவதே இன்றைய நிலை.

ஆம். சாதியக் கருத்தியல் அழகிய வடிவமெடுத்து நம் முன் நிற்கிறது. சாதியம் கொடுமையானது என்று பொதுமையாகச் சொல்லலாமே தவிர ஒரு சாதியைக் குறிப்பிட்டு அது இவ்விதமெல்லாம் ஆதிக்கம் செய்கிறது எனச் சொல்ல முடியாது. ஒரு சாதியைக் குறிப்பிட்டு விமர்சனம் செய்ய இயலாது. காரணம், சாதியக் கருத்தியல் அழகிய வடிவமெடுத்து நம் முன் நிற்கிறது.

சாதியக் கருத்தியலின் அழகிய வடிவம் வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அது பிளவுகளை இயல்பு என்கிறது; மக்கள் ஆம் என்று ஆமோதிக்கிறார்கள். நீ மேல்தான்; உனக்குக் கீழே ஒன்று இருக்கிறது என்கிறது அது. மக்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறார்கள். உன் பெருமையை ஆடைகளில் காட்டு என்கிறது அது; சின்னம் பதித்த அழகிய ஆடைகளை மக்கள் அணிந்துகொள்கிறார்கள். தம் வரலாற்றுப் பெருமையைக் காட்ட வாள்களையும் வேல்களையும் அது வழங்குகிறது. அவற்றைக் கையிலேந்தி வீரம் காட்டுகிறார்கள். பேருந்துகளிலும் லாரிகளிலும் சாதியப் பெருமை பேசும் முழக்கங்களோடும் பாடல்களோடும் மக்கள் சாரிசாரியாய்ப் பயணம் போகிறார்கள்.

எந்த முயற்சியும் இல்லாமலே ஒருவருக்குப் பிறப்பிலேயே ஓர் அடையாளத்தைக் கொடுக்கிறது சாதி. அந்த அடையாளத்தைப் பெருமையானதாகவும் உயர்வானதாகவும் உணர வைக்கிறது இன்றைய சூழல். சாதியத்தால் இணைக்கப்பட்ட மக்கள் தம் தலைவர்களையும் அடையாளம் கண்டிருக்கிறார்கள். தலைவர்கள் தம் சாதிக்கு என்னென்ன பெருமைகள் இருக்கின்றன என்று பேசுகிறார்கள். தம் சாதிக்கு எதிரான சக்திகளுக்குச் சரியான பதிலடி கொடுக்கிறார்கள். சாதியின் பெயரால் குறுமுதலாளிகளைக் காப்பாற்றுகிறார்கள்; பதிலுக்கு அவர்கள் தாராளமாக நிதி தருகிறார்கள். சாதியக் கருத்தியலின் அழகிய வடிவம் தமக்குப் பாதுகாப்பு என்று மக்கள் உணர்கிறார்கள்.

இதுதான் இன்றைய நிலை. சாதியம் எழுச்சி கொள்ளும் சூழலில் கருத்துரிமையும் ஜனநாயகமும் தம் வாலைச் சுருட்டிக்கொள்ள வேண்டியதுதான். சாதியம் இப்படிச் சொல்கிறது: ‘எங்கள் சாதியைப் பற்றி எழுதுகிறாயா? இதோ தகவல் தருகிறோம். இந்தச் சாதியில் எல்லோரும் ஒழுக்க சீலர்கள். உத்தமர்கள்.’ சாதியம் ஒருபோதும் உரையாடலுக்கு இடம் தருவதில்லை. அது காட்டுவது ஒற்றை வழிதான். விமர்சனம் என்றால் என்னவென்றே அதற்குத் தெரியாது; மறுப்பை அது சட்டை செய்யாது. எதிர்ப்பை அது ஆயுதம் கொண்டே எதிர்கொள்ளும். மேலிருப்போர் சொல்வதே வேதம் என்றும் மேலோரிடம் கேள்வி ஏதும் கேட்கக் கூடாது என்றும் அது காலகாலமாகப் பழக்கி வைத்திருக்கிறது. ஒருவர் சொல்வது, இன்னொருவர் கேட்பது என்பதே சரியானது. கருத்துரிமை, ஜனநாயகம் ஆகியவற்றுக்கான கூறுகள் நம் ரத்தத்திலேயே கிடையாது என்பதுதான் சாதியம் சொல்லும் உண்மை.

அச்சம் தரும் மாற்றம்

சாதியக் கருத்தியல் தம்மை நிலைப்படுத்திக்கொள்ள இன்று வைக்கும் பரிவும் இரக்கமும் கலந்த வாதத்திற்கு ஓர் உதாரணம் சொல்லலாம். ஆணவக் கொலை செய்யப்பட்டு இளைஞன் ஒருவன் இறந்தபோது சாதியம் தன் கருத்தை இப்படித் தொடங்கியது: ‘இளவயது; அழகிய தோற்றம்; வாழ வேண்டிய வயது. இந்த இளைஞன் இப்படிப் பரிதாபமாக இறந்துவிட்டானே, வருத்தமாக இருக்கிறது.’ இந்த வார்த்தைகள் எத்தனை அக்கறையும் கருணையும் கொண்டவை என்று தோன்றத்தான் செய்யும். மேலும் அது சொல்கிறது: ‘காதல் மிகவும் உயர்வானது; காதல் நல்லதுதான்.’ காதலையும்கூடச் சாதி ஆதரிக்கிறதே என்று ஆச்சரியமும் நமக்கு உண்டாகும். சாதியம் கடைசியாக இப்படி ஒரு வாக்கியத்தைக் கொண்டு தம் கருத்தை முடிக்கிறது: ‘இந்த இளைஞன் மட்டும் தன் சாதியிலேயே காதலித்திருந்தால் இப்படி ஒரு பரிதாபச் சாவு ஏற்பட்டிருக்காதே.’

சாதியக் கருத்தியல் படிந்துள்ள மனங்களுக்கு இது மிகவும் உவப்பான கருத்து. ஆம், ஆண்களும் பெண்களும் காதலிக்கட்டும். ஆனால், ஏன் ஓர் இளைஞனோ பெண்ணோ இன்னொரு சாதியில் போய்க் காதலிக்க வேண்டும்? வெட்டுப்பட்டுக் குத்துப்பட்டுச் சாக வேண்டும்? தம் சாதியில் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு சுகமாக வாழலாமே.

இத்தகைய கருத்துகள் மக்களுக்கு மிகவும் உவப்பாக இருக்கின்றன. சாதியக் கருத்தியல் பெருமைக்குரியதாகி ஏற்றம் கொண்ட கடந்த சில ஆண்டுகளை நான் அச்சத்தோடே கழித்தேன். சாதியக் கருத்தியலின் பெருமை மேலும் வீர்யம் கொண்டெழும் இன்றைய சூழல் எனக்கு இன்னும் பேரச்சம் தருகிறது.

—–

நன்றி: மின்னம்பலம், 22 ஏப்ரல் 2019