நட்பின் தேவ வேடம்
பெருமாள்முருகன்
நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை
காதலைப் போலவே நட்பைப் பற்றியும் நம்மிடம் பரவசங்களும் மிகை மதிப்பீடுகளும் அதிகம். ஆனால், நடைமுறையில் நட்புக்கான எல்லைகள் மிகக் குறுகியவையாக இருக்கின்றன. பெரும்பாலான நட்புகள் சாதி வரையறைக்குள்ளேயே நிகழ்கின்றன. அதற்குள்ளேயே முடிந்து போகின்றன. பெரும்பான்மையும் கல்விக்கூடம், வேலைத்தளம் ஆகியவையே நட்பு உருவாவதற்கான களங்கள். அங்கும் சாதி பார்த்து உருவாகும் நட்புகளே மிகுதி.
சாதியைக் கடந்த நட்பு என்பது ஒருவரின் ஆர்வமும் ஈடுபாடும் செயல்படும் துறை சார்ந்ததாக அமைவதுண்டு. இலக்கிய ஆர்வம் கொண்ட இருவர் தமக்குரிய சமூக எல்லைகளைக் கடந்து நட்பு கொள்வதுண்டு. அவ்விதம் ஒவ்வொரு துறையிலும் சொல்லலாம். நட்பின் அடிப்படை பரஸ்பரப் பகிர்தல். பகிர்தலுக்கு எல்லா வாசல்களையும் திறந்து வைத்திருக்கும் ஒரு மனத்தோடுதான் ஆழ்ந்த நட்பு உருவாக முடியும். சந்தித்துக்கொள்ளும் நண்பர்கள் கால நேரம் தெரியாமல் பேசிக்கொண்டிருப்பது இந்தப் பரஸ்பரப் பகிர்தலுக்கான திறப்பு கிடைத்திருப்பதுதான். பெற்றோரிடம் பேச முடியாதவற்றை, காதலரிடம் பேச முடியாதவற்றை, உற்றார் உறவினரிடம் பேச முடியாதவற்றை நட்பிடம் பேசலாம். அதற்குக் காரணம் இந்தப் பகிர்தல் அம்சம் நட்பில் மிகுந்திருப்பதுதான். சக வயது தரும் இணக்கம், ஒத்துணர்வு, புரிதல், சுதந்திரம் ஆகியவை வேறெந்த உறவிலும் கிடைப்பதில்லை. இப்படி நட்பைப் பற்றி நிறையப் பேசிக்கொண்டே போகலாம்.
11-11-2018 அன்று அகால மரணம் அடைந்த கவிஞர் வே.பாபுவுக்குப் பெரும் நட்பு வட்டம் உண்டு. நட்பைப் பேணுவதில் அத்தனை அக்கறை எடுத்துக்கொள்வார். அவரிடம் இருந்து செல்பேசி அழைப்பு வரும். எடுத்து ‘சொல்லுங்க பாபு’ என்றால் ‘சும்மாதான் கூப்பிட்டங்க சார். பேசி ஒருவாரம் ஆயிருச்சே’ என்பார். காரியார்த்தம் இல்லாமல் பேசும் இயல்பு கொண்டது நட்பு. பிறந்த நாள், திருமண நாள் என என் வாழ்வின் முக்கிய நாட்களில் அவரது வாழ்த்து முதலில் வரும். சில சமயம் அவர் வாழ்த்திய பிறகே அந்த நாளின் முக்கியத்துவம் எனக்கு உறைக்கும். எனக்கு மட்டுமல்ல, ஏராளமான இலக்கியவாதிகளுடன் நட்பு பூண்டவர் அவர்.
நட்பில் எந்த முரணையும் அவர் பகிரங்கப்படுத்தியதும் இல்லை; விரிவுபடுத்தியும் இல்லை. முரண்களைக் கடந்து அவர் கை எப்போதும் நீண்டபடியிருக்கும். முறுக்கிக்கொண்டு தலை திருப்பிச் செல்லும் மனங்களையும் ஆகர்ஷிக்கும் புன்னகை அவருடையது. எல்லாவற்றையும் கடந்த இணக்கத்திற்காக நட்பின் வெளியை விரிவாக்குவது அவர் வழக்கம். இளம்வயதில் அவருக்கு இத்தகைய மனம் வாய்த்தது பெரும்பேறு. அதனால்தான் அவரது மரணத்தை ஒவ்வொருவரும் தனிப்பட்ட இழப்பாக உணர்கின்றனர்.
வே.பாபு (21-04-1974 – 11-11-2018) சேலத்தைச் சேர்ந்தவர். ‘தக்கை’ என்னும் இதழையும் இலக்கிய அமைப்பையும் நடத்தி வந்தார். தக்கையின் சார்பாக நூல்களையும் வெளியிட்டுள்ளார். ஆண்டுதோறும் நூல் விமர்சனக் கூட்டங்கள் பலவற்றைச் சேலத்தில் நடத்தினார். விமர்சனத்திற்கு என அவர் தேர்வு செய்த நூல்களும் ஆளுமைகளும் முக்கியமானவை. பரந்த இலக்கிய வாசகப் பரப்புக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் எனத் தோன்றும் நூல்களையே அவர் தேர்வு செய்தார். குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்த ஆளுமைகளைக் கவனப்படுத்துவதும் அவரது கூட்டங்களின் மையமாக இருந்தது. கூட்டத்திற்கு அழைக்கும் இலக்கியவாதிகளின் எண்ணிக்கையும் மிகுதி. அதுவும் ஒற்றைப் புள்ளியில் சுருங்கிவிடாமல் எல்லாப் போக்குகளையும் அளாவியதாக அமையும். அத்தகைய இயல்பின் காரணமாக ஏராளமான இலக்கிய நண்பர்களைப் பெற்றவர். இருபதாண்டுகளுக்கும் மேலாக எழுதி வந்தாலும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே எழுதியுள்ளார். ‘மதுக்குவளை மலர்’ என்னும் தொகுப்பு 2012இல் வெளியாயிற்று.
பாபுவின் கவிதைகள் சுதந்திரம் விரும்பும் எளிய மனதின் பாடுகள். அன்பின் கட்டைக்கூட விரும்பாத மனம். ‘பறவைகள் இல்லாக் கூண்டுகள் மிக அழகானவை’ என்று உணரும் மனம். சக மனிதர்கள் மேல் பிரியமும் அக்கறையும் காட்ட எந்தத் தடையும் இருக்கக் கூடாது என ஏங்கும் மனம். அவர் கவிதைகள் முழுவதும் வெளிப்படும் இந்தச் சுதந்திர உணர்வே அவரது வாழ்க்கையும் ஆகும். நட்பைப் பற்றி அவர் எழுதிய கவிதை ஒன்று முக்கியமானது. கவிதையிலும் நட்பின் உயர்வையே எழுதுகிறார். ஆனால் அதை வள்ளுவர் சொல்லும் ‘கூடா நட்பு’ என்னும் எதிர்மறையில் வைத்து எழுதுகிறார். அத்தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட தலைப்பில்லாக் கவிதைக்கு அதில் பயின்றுவரும் அரிய சொற்சேர்க்கையான ‘தேவ வேடம்’ என்னும் தலைப்பு மிகவும் பொருந்துவதாகும். இத்தலைப்பு என் தேர்வு.
தேவ வேடம்
ஒரு
தேவவேடத்தில்தான் அறிமுகமானாய்
என்னிடத்தில்
நட்புமுனையைக் கூர்மையாக்கத்
தைரியமாய்த் திறந்து காட்டினேன்
என்னிடமிருந்த இருட்டு அறைகளை
பின்பொரு நாளில்
சாத்தானின் கோரமுகம் காட்டிப்
பிரிந்து சென்றாய்
என்னிருட்டு அறைகளை
ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியபடியே
நீயென்
முதுகில் குத்தியதிலிருந்து
நட்புகொள்ளப் பயமாய்த் தானிருக்கிறது
உண்மையான தேவர்களைக்கூட.
இக்கவிதை நண்பரை நோக்கிப் பேசுவதாக அமைகிறது. முன்னிலையாகிய நண்பரிடம் கவிதை சொல்லத் தொடங்குகிறது, ‘ஒரு தேவவேடத்தில்தான் அறிமுகமானாய் என்னிடத்தில்.’ ஒருவரை மதிப்பிடுவதில் பெரும்பாலும் தவறிவிடுகிறோம். ஒரு கணத்தில் வெளிப்படும் முகம் ஈர்க்கக் கூடியதாய் இருப்பின் அதுவே முழுமை எனத் தீர்மானிக்கிறோம். அப்படிக் கருதியே பழகுகிறோம். பின்னர் வேறொரு கணத்தில் எதிர்முகம் வெளிப்படுகையில் அதிர்கிறோம். இந்தக் கவிதை நண்பர் அறிமுகமான போது தேவத்தன்மை கொண்டவராகத் தெரிந்தார். பிறகே அது வேடம் எனப் புரிந்தது. அந்த வேடம் வெளிப்பட்ட பின்னர் இக்கவிதை எழுதப்படுகிறது என்பதை முதல் அடி உணர்த்துகிறது. ‘தேவவேடம்’ என்பது அந்த நட்பின் பொய்ம்மையைக் காட்டும் பொருத்தமான சொல்லாட்சி.
அறிமுகத்திற்குப் பின் என்னவாயிற்று? அப்போது தேவவேடம் என்பது தெரியாது. ஆகவே உண்மையான தேவத்தன்மை கொண்டவர் என நம்பியதால் நட்பைக் கூர்மைப்படுத்திக் கொள்ள மனம் விழைந்திருக்கிறது. ஒரு நட்பு எப்போது கூர்மையாகிறது? தன் ரகசியங்கள் என்று இருப்பவற்றைப் பகிர்ந்து கொள்ளும்போது நட்பு கூர்மையாகிறது. நண்பர்களுக்குள் ஒளிவு மறைவு இருக்கக் கூடாது; அல்லது இருக்க முடியாது என்பது நட்புக்கு நாம் வைத்திருக்கும் உச்ச வரையறை. ‘தைரியமாய்த் திறந்து காட்டினேன், என்னிடமிருந்த இருட்டு அறைகளை’ என்கிறது கவிதை. நண்பரது தேவத்தன்மையின் மீதான நம்பிக்கை காரணமாகத் தைரியம் பெற்று இருட்டு அறைகளைத் திறந்து காட்டுகிறார்.
கவிதையில் வீடு, அறை ஆகியன கருத்துச் சார்பைக் குறித்து வருவதுண்டு. ‘என் அறை’ என்றால் அது என் கருத்தியல் என்பதாகப் பொருள்படுவதுண்டு. ‘அவரவர் வீடு’ என்னும் தலைப்பில் சுகுமாரன் எழுதிய கவிதை இப்படித் தொடங்கும்:
‘ஒரே வீட்டில் வாழ்கிறோம்
ஒரே வீட்டில் வாழ்ந்தாலும்
ஒரே வீட்டிலும்
ஒவ்வொரு வீட்டில் வாழ்கிறோம்’
இருவரும் ஒத்த கருத்து உள்ளவர்கள் போலத் தெரிவது தோற்றம். ஒத்த கருத்துக்குள்ளும் அவரவர்க்கு என்று தனித்த அபிப்ராயங்கள் இருப்பது இயல்பு. கருத்தியல் என்று எடுத்துக் கொண்டால் ‘தேவவேடம்’ கவிதையில் ‘இருட்டறை’ என்பது தான் ரகசியமாக வைத்திருக்கும் கருத்துக்கள் என்றாகும். நமக்கென்று இருப்பவற்றை எல்லாம் வெளியே காட்ட இயலாது. கருத்துக்கள் எல்லாவற்றையும்கூட வெளியே சொல்ல முடியாது. அப்படித்தான் சமூகம் நமக்குக் கற்பித்திருக்கிறது. இருட்டறை என்பதைப் பிறருக்குத் தெரியக்கூடாத ரகசியப் பகுதிகள் என்றும் வைத்துக்கொள்ளலாம். அவை செயல்களாகவும் இருக்கலாம். நட்பின் மீது நம்பிக்கை கொண்ட பிறகு – கருத்தோ செயலோ – ரகசியம் ஏது? நட்புக்குத் தெரியாத ரகசியம் எதற்கு? எல்லாம் திறந்து காட்டியாயிற்று. இவர்களைப் போன்ற உயிர் நண்பர்கள் இல்லை என்று இப்போது உலகம் பேசும்; வியக்கும்.
ஆனால் இந்த நட்பு தேவவேடம் புனைந்தவருடன் அல்லவா? உண்மையில் இந்த நட்பின் முகம் சாத்தானின் கோர முகம். அது வெளிப்படவும் ஒரு தருணம் வாய்க்கிறது. அத்தகையதோர் தருணத்தில் தேவவேடம் கலைகிறது; சாத்தானின் கோர முகம் வெளிப்படுகிறது. அதன் பின் பிரிவுதான். கவிதை அந்நிகழ்வை இப்படிச் சொல்கிறது: ‘பின்பொரு நாளில் சாத்தானின் கோரமுகம் காட்டிப் பிரிந்து சென்றாய்.’ கோரமுகம் வெளிப்பட்ட தருணம் பற்றிக் கவிதையில் எந்த விவரிப்பும் இல்லை. அது தேவையில்லை. கவிதை வாசகர் ஒவ்வொருவரும் தம் வாழ்விலிருந்து ஒரு சூழலை எடுத்துப் பொருத்திக்கொள்வது சாத்தியம். உயிர் நண்பராக இருந்தவர் உதவி என்று வரும் போது தம் உண்மை முகத்தைக் காட்டிய சம்பவம் ஒருவருக்கு நடந்திருக்கக் கூடும். ஒரு விஷயத்தைப் பற்றிய விவாதத்தில் தம் கருத்தை ஆதரிக்கவில்லை என்று கோபமுற்று நட்பு பிரிந்த சம்பவம் ஒருவருக்கு நடந்திருக்கலாம். இவ்விதம் எத்தனையோ சம்பவங்கள்.
சரி, அவ்விதம் பிரிந்த பிறகு அந்த சாத்தானின் கோரமுகம் சும்மா இருக்குமா? இல்லை, மற்றவர்கள்தான் சும்மா இருக்க விட்டுவிடுவார்களா? வாயைக் கிளறி எதையாவது வாங்கி அதில் குரூர மகிழ்ச்சி அடைவதுதான் மனித இயல்பு. தேவமுகம் கழன்று சாத்தான் முகம் வெளிப்பட்டதும் நண்பரின் ரகசியங்களை எல்லாம் ஊராருக்கு முன்னால் அம்பலப்படுத்துவதுதான் நடக்கும். ‘எப்படிப்பட்ட ஆளுத் தெரியுமா?’ என்று தொடங்கிச் சாதாரணத்தையும் பெரிதாக்கிக் காட்டும். அதைத்தான் கவிதை ‘என்னிருட்டு அறைகளை ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியபடியே பிரிந்து சென்றாய்’ என்று சொல்கிறது.
ஒருமுறை அனுபவப்பட்ட பிறகு அதிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடம்தான் என்ன? எல்லோரிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதுதான். உண்மையில் தேவமுகம் நமக்கு முன் வந்தாலும் இது தேவவேடமோ என்று சந்தேகப்படவே தோன்றும். அத்தனை சீக்கிரம் ஒருவரை நம்பிவிட முடியாத மனநிலைக்குத் தள்ளப்படுகிறோம். தேவவேடம் நட்பு செய்த செயலை ‘முதுகில் குத்துதல்’ எனக் கவிதை சொல்கிறது. ‘முதுகில் குத்துதல்’ என்பது மரபுத்தொடர். அது வீரத்தோடு தொடர்புடையது. ஒரு வீரன் நேருக்கு நேர் நின்று போர் புரிவான். நெஞ்சை நோக்கியே வாள் பாய்ச்சுவான். போராடி நெஞ்சில் பெறுவது விழுப்புண். ஆனால் துரோகியாகிய கோழை எதிர்பார்க்காத சந்தர்ப்பத்தில் முதுகில் வாள் பாய்ச்சுவான். வீரம் என்னும் விழுமியத்தின் அடியாகப் பிறந்த மரபுத்தொடர் ‘முதுகில் குத்துதல்.’ அதற்குத் ‘தற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதி’ இரண்டு பொருள்களைத் தருகிறது. ‘நம்பிக்கைத் துரோகம் செய்தல்; வஞ்சித்தல்.’ அதற்குத் தரும் உதாரணத் தொடர் ஒன்றும் இக்கவிதைப் பொருளுக்குச் சரியாகப் பொருந்துகிறது. ‘நான் யாரை அதிகம் நம்பினேனோ அவர்தான் என்னை முதுகில் குத்தியிருக்கிறார்.’ (ப.295).
அவ்வாறு முதுகில் குத்திய நம்பிக்கைத் துரோகத்தை எதிர்கொண்ட பிறகு விழிப்புணர்ச்சி கொண்ட மனம் நட்புக் கொள்ளவே அச்சப்படுகிறது. இன்னொரு துரோகத்தை எதிர்கொள்வது இயலக் கூடியதல்ல. ஒரு துரோகம் அடுத்தடுத்து துரோகங்களையே அழைத்து வரும் என்பதல்ல. ஆனால் மனம் அப்படி எச்சரிக்கை கொண்டு விடுகிறது. உணமையான தேவர்களைக்கூட நட்புக்கொள்ள அஞ்சுகிறது. கவிதை இப்படி முடிகிறது:
நீயென்
முதுகில் குத்தியதிலிருந்து
நட்புகொள்ளப் பயமாய்த் தானிருக்கிறது
உண்மையான தேவர்களைக்கூட.
ஒரு துரோகம் எல்லா நம்பிக்கைகளையும் சிதைத்துவிடுகிறது. ஒவ்வொரு துரோகமும் கணக்கில் கொள்ள வேண்டிய செய்தி இது. துரோகம் இழைக்கப்படும் முன் எல்லா நம்பிக்கைகளையும் வாரிச் சுருட்டிக்கொள்வதல்லவா நம் செயல் என்று யோசித்தால் அந்தத் துரோகம் இழைக்கப்படுமா? கவிதை யாரைப் பார்த்துப் பேசுகிறது? சாத்தானின் கோரமுகத்தைப் பார்த்துப் பேசுகிறது. முதுகில் குத்திய நட்பைப் பார்த்துப் பேசுகிறது. ‘உண்மையான தேவர்களைக்கூட அணுக முடியாமல் செய்துவிட்டாயே, இது நியாயமா?’ என்று கேட்கிறது. தேவவேடம் புனைந்த முகத்தின் பதில் என்னவாக இருக்கும்?
உண்மையான தேவத்தன்மை கொண்டுவிட்ட உயரிய நட்பாகிய பாபுவுக்கு என் அஞ்சலி.
—–
வெளியீடு: மின்னம்பலம், 01-12-2018