குஞ்சுக்கோழி

 

குஞ்சுக்கோழி

கட்டுரை ஒன்றில் ’மீன் குழம்பு’ என்று எழுதினேன். தொடர்ந்து எழுதி வரும்போது அதில் உள்ள இருசொற்களையும் முறை மாற்றிக் ‘குழம்பு மீன்’ என்று எழுத வேண்டி வந்தது. மீன் குழம்பு, குழம்பு மீன் ஆகியவை ஒரே பொருள் கொண்டவை அல்ல. மீன் குழம்பில் முதன்மை குழம்பு. குழம்பு மீனில் முதன்மை மீன். எச்சொல் இரண்டாவதாக வருகிறதோ அதுவே பொருளில் முதன்மை இடம் பெறுகிறது.  இப்படித் தமிழில் நிறையச் சொற்கள் வழங்குகின்றன.

கோழி தொடர்பாக நாமக்கல் வட்டாரத்தில் வழங்கிவரும் சொற்கள் நினைவில் வந்தன. கிராமங்களில் கோழிக்குஞ்சு, குஞ்சுக்கோழி ஆகிய சொற்கள் வழக்கில் உள்ளன. கோழிக்குஞ்சு என்பது முட்டையிலிருந்து பொறித்துக் கிட்டத்தட்ட இருமாதம் வரைக்குமான பருவத்தைக் குறிக்கும். அதற்குப் பின் அது ‘குஞ்சுக்கோழி’ என்றாகிவிடும். குழந்தைகளுக்குச் சளி பிடித்துவிட்டால் ‘ஒரு குஞ்சுக்கோழி அடிச்சுச் சாறு காச்சி ஊத்து’ என்பார்கள்.

குஞ்சுக்கோழி வளர்ந்து வெடையாகவோ (பெட்டை) சேவலாகவோ மாறும் பருவம் உண்டு. அதற்கு மேலும் ஓரிரு மாதமாகும். குஞ்சுக்கோழியாக இருக்கும் பெட்டைக்கோழி முட்டையிட ஆரம்பித்த பிறகு ‘வெடைக்கோழி.’ குஞ்சுக்கோழியாக இருக்கும் சேவல் குரலெடுத்துக் கூவத் தொடங்கிவிட்ட பிறகுதான் ‘சேவல்’ என்னும் அடையாளம் பெறும். அதாவது அவை இனப்பெருக்கப் பருவம் அடையும் வரை ‘குஞ்சுக்கோழி’ என்றே பொதுப்பெயர் பெறும்.

குஞ்சுக்கோழிகளின் கறிக்குத் தனிருசி உண்டு. அவை இனப்பெருக்கத்தில் ஈடுபட்டுவிட்டால் கறியின் ருசி மாறிவிடும். வீட்டில் கோழி வளர்ப்போர் ‘குஞ்சுக்கோழி’க் கறியைத்தான் பெரிதும் விரும்புவார்கள்.  இனப்பெருக்கத்தில் ஈடுபட்டுவிட்டால் கறியில் ‘மொச்சை வாடை’ சேர்ந்துவிடும். கறிச்சுவை அறிந்து உண்போர் இந்த வித்தியாசத்தைக் கண்டு சொல்லிவிடுவார்கள்.

நாமக்கல் பகுதியில் கோழிப்பண்ணைகள் பெருகத் தொடங்கிய பிறகு ‘குஞ்சுக்கோழி’ என்னும் வழக்கு குறிப்பான அர்த்தம் பெறத் தொடங்கியது. பண்ணைகளில் தீனி போட்டும் ஊசி போட்டும் கோழிகளை வளர்க்கிறார்கள். நாட்டுக் கோழிகளைப் போல அல்ல, மெல்ல வளர்பவை அல்ல. பண்ணைக் கோழிகள் வேகமாக வளர்ந்து லாபம் ஈட்டிக் கொடுப்பவை. பண்ணைக் கோழிகள் வயது அடிப்படையில் பெறும் பெயர்கள் இவை:

கோழிக்குஞ்சு – இருவாரத்திற்கு உட்பட்டது

குஞ்சுக்கோழி – மூன்று, நான்கு வாரம் வரை

இளங்கோழி  – நான்கு வாரத்திற்கு மேல் 37 நாள் வரைக்கும்

முட்டைக்கோழி – 37 நாளுக்கு மேல்

கோழிப் பண்ணைகள் உருவாகித் தொழிலாகக் கோழி வளர்ப்பு மாறிய பிறகு மக்கள் வழக்கிலிருந்த சொற்களை எடுத்துக் குறிப்பான பொருள்களில் பயன்படுத்திக் கொண்டனர். கோழிக்குஞ்சு, குஞ்சுக்கோழி என்பவை மக்கள் வழக்கிலும் குறிப்பான பொருள் கொண்டவை. இளங்கோழி, முட்டைக்கோழி என்பன பொதுவாக வழங்குபவை. பண்ணைத் தொழிலுக்கேற்ப இச்சொற்களை இன்னும் கூர்மையாக்கிக் குறிப்பான பொருள் கொடுத்துக் கலைச்சொற்களாக்கிக் கொண்டுள்ளனர்.

இது எப்படித் தொடங்கி எவ்வாறு நிலைபெற்றது என்பது தெரியவில்லை. ஆனால் மொழி நுட்பம் ஒன்றை அறிந்துகொள்ள இச்சொற்கள் உதவுகின்றன.  கலைச்சொற்களைப் புதிதாகத்தான் உருவாக்க வேண்டும் என்பதில்லை; மக்கள் வழக்கிலிருந்தே சொற்களை எடுத்துப் பயன்படுத்தலாம். அதற்கு இச்சொற்கள் பெற்றிருக்கும் மதிப்பே சான்று.

—–    11-07-23