சுகுமாரனின் ‘உஸ்தாத்’

சுகுமாரனின் ‘உஸ்தாத்’

நவீன இலக்கியத்தின் ஒருவகைமை சார்ந்து அடையாளம் பெற்றவர் இன்னொரு வகைமையில் தீவிரமாக இயங்கினாலும் அவ்வளவாகக் கண்டுகொள்ளாத சூழலே நிலவுகிறது. 1980களில் கவிஞராக அறிமுகமானவர் சுகுமாரன். ‘கோடைகாலக் குறிப்புகள்’ முதல் தொகுப்பு மிகுந்த கவனம் பெற்றது. அப்போது அவர் மேல் விழுந்த கவிநிழல்  பிற பங்களிப்புகளை உட்கொண்டு நிற்கிறது.

மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலிருந்து கவிதை, சிறுகதை, நாவல் எனப் பலவற்றை மொழிபெயர்த்திருக்கிறார். செப்டம்பர் 30 மொழிபெயர்ப்பு தினத்தை ஒட்டிப் பலர் பட்டியல் வெளியிட்டு வாழ்த்துத் தெரிவித்திருந்தனர். அவற்றில் சுகுமாரன் பெயரைத் தேடிப் பார்த்து ஏமாந்தேன். மார்க்யூஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலை மொழிபெயர்த்தவர். அவர் நூற்பட்டியலில் கிட்டத்தட்ட முப்பது  மொழிபெயர்ப்பு நூல்கள்.

 

சுகுமாரனின் ‘உஸ்தாத்’

வெல்லிங்டன், பெருவலி ஆகிய இருநாவல்களை எழுதியிருக்கிறார். இரண்டுமே நல்ல நாவல்கள். பெருவலி இப்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகி வெளிவந்துள்ளது. Eka பதிப்பக வெளியீடு. இன்று (18-10-24) பெங்களூருவில் அதற்கான வெளியீட்டு நிகழ்வு நடைபெறுகிறது. சுகுமாரனும் மொழிபெயர்ப்பாளர் கலைவாணி கருணாகரனும் பங்கேற்கின்றனர். அவர்களுடன் உரையாடுபவர் தீபா கணேஷ். நிகழ்வு சிறப்புற நடைபெற வாழ்த்துவோம்.

சுகுமாரனின் ‘உஸ்தாத்’

சுகுமாரன் ‘தனிமையின் வழி’ முதலிய பத்துக்கும் மேற்பட்ட கட்டுரை நூல்களையும் எழுதியிருக்கிறார். அடர்த்தியான மொழியில் எழுதிய அனுபவக் கட்டுரைகள் சுவையும் துயரமும் கலந்த கலவை. நூல் பதிப்பிலும் கால் பதித்து தி.ஜானகிராமன் படைப்புகளின் பதிப்பாசிரியராக விளங்குகிறார். மௌனி சிறுகதைகளுக்கும் இவரே பதிப்பாசிரியர். திரைப்படம், ஓவியம் ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டவர். அத்துறை தொடர்பாக முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இத்தனை துறைகளில் இயங்கியவர் சிறுகதையை விட்டு வைப்பாரா? இப்போது  ‘அகழ்’ (செப்டம்பர் 2024) மின்னிதழில் ‘உஸ்தாத்’ வெளியாகியிருக்கிறது. ஆனால் இது அவரது முதல் சிறுகதை அல்ல. 1980, 90களிலேயே சில சிறுகதைகள் எழுதியிருக்கிறார். 2001ஆம் ஆண்டு ‘கொங்குச் சிறுகதைகள்’ தொகுப்பைக் காவ்யா பதிப்பகத்திற்காக உருவாக்கினேன். சுகுமாரன் கோவையைச் சேர்ந்தவர் என்பதால் அவரிடம் ‘நீங்கள் சிறுகதை எழுதியிருக்கிறீர்களா?’ என்று கேட்டேன். சொல்லத் தயங்கினார். இயல்பிலேயே கூச்ச சுபாவமும் அடக்க உணர்வும் மிக்கவர். குசு விடுவதைக்கூடக் கொட்டி முழக்கும் இன்றைய எழுத்தாள உலகம் ‘கூச்சம் பாவனை; அடக்கம் பொய்மை’ என்று கூறும். மனித இயல்புகளைக்கூட ‘ஒரே’ புட்டியில் அடைக்க முயல்வோருக்கு அப்படித்தான் தோன்றும்.

ஆனால் இயல்பிலேயே கூச்ச சுபாவம் கொண்ட மனிதர்கள் பலருண்டு. சுகுமாரன் மட்டுமல்ல. யூமா.வாசுகி, எஸ்.செந்தில்குமார் ஆகியோரும் நான் பழகிய வகையில் அப்படியானவர்களே. சற்றே வற்புறுத்திக் கேட்ட பிறகு சுகுமாரன் சொன்னார், ‘சில சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். இதழ்களில் அவை வெளியாகியுள்ளன. ஆனால் அவற்றைப் பற்றி எனக்குச் சந்தேகம் இருக்கிறது. வேண்டாமே’ என்றார். கதைகளைப் படித்து நான் முடிவு செய்துகொள்கிறேன் என்று சொல்லி வற்புறுத்திய பிறகு சில கதைகளின் நகல்களைக் கொடுத்தார்.

‘தங்கப்பன் ஆசாரியின் கிளி’ கதையைத் தேர்ந்து அத்தொகுப்பில் சேர்த்தேன். நல்ல கதை அது. கிளி அவர் கவிதைகளில் தொடர்ந்து இடம்பெறும் உருவகம். ‘என் கிளிக்குப் பழங்கள் பொறுக்கப் போனேன்’,  ‘வெளியில் போகிற எப்போதும் என் கிளி காயம்படாமல் திரும்பியதில்லை’ என்றெல்லாம் எழுதியவர். ‘கதையிலும் கிளியை விடவில்லை நீங்கள்’ என்றேன். தன் மோனாலிசா புன்னகையைச் சிந்தினார். 2000ஆம் ஆண்டுக்கு முந்தைய கதைகளில் வறுமைக்குப் பிரதான இடமிருந்தது. ஒரு எழுத்தாளரின் சிறந்த கதையைத் தேடினால் அது வறுமையைப் பற்றியதாகத்தான் இருக்கும். இன்று வறுமைக் கதைகள் அருகிவிட்டன. சமூகத்தில் நடந்த மாற்றம் காரணமாக இருக்கலாம். தங்கப்பன் ஆசாரியின் கிளியும் வறுமை பற்றியதுதான்.

நாட்டுப்புறக் கதைகளில் ராஜகுமாரி ஒருத்தியைக் கவர்ந்து செல்லும் அரக்கன் அவளைக் கிளியாக மாற்றி வைத்திருப்பான். பல தடைகளைக் கடந்து சென்று ராஜகுமாரன் கிளியைக் கண்டு ராஜகுமாரியை மீட்டு உருவம் அடைய வைப்பான். அல்லது அரக்கனின் உயிர் கிளிக்குள் இருக்கும். ராஜகுமாரன் அக்கிளியைக் கண்டடைந்து அதன் கழுத்தைத் திருகி அரக்கனைக் கொல்வான். ராஜகுமாரியைப் போலத்தான் தங்கப்பன் ஆசாரியின் மகள் கொச்சம்மிணி கிளியாகி விடுகிறாள். அல்ல, கொச்சம்மிணியின் உயிர் கிளியாகிவிடுகிறது. சாதாரணமாகத் தொடங்கி வறுமைப் பின்னணியை விவரிக்கும் கதை கொச்சம்மிணியின் உயிரைக் கிளியாக்கித் துயரத்தில் முடிகிறது. உயிர்க்கிளி உடலை விட்டு வெளியேறி விட்டாலும் எங்கே போகும்? வீட்டுக்குள் இறகு படபடக்கச் சுற்றுகிறது.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு  ‘உஸ்தாத்’ கதையை எழுதியிருக்கிறார். ஷெனாய் இசை மேதை பிஸ்மில்லா கான் தாம் கண்டுபிடித்த  ‘கன்னையா’ ராகம் உருவான விதம் பற்றி அவரே சொன்னதாக ஒருசம்பவம் பேசப்பட்டு வருகிறது. கும்பமேளா ஒன்றின் இசைக் கச்சேரிக்காக ரயிலில் அவர் பயணம் செய்தபோது கறுப்பு நிறமான சிறுவன் ஒருவன் புல்லாங்குழலில் அந்த ராகத்தை வாசிக்கிறான். அதில் லயித்துப் போய்ப் பிஸ்மில்லா கான் தம்மிடம் இருந்த நாணயங்களை வழங்கிக் கொண்டேயிருக்கிறார். வாசிப்பைக் கண்மூடி அவர் கேட்டுக் கொண்டிருந்த தருணத்தில் திடுமென அச்சிறுவன் மறைந்து போகிறான். அன்றைய கச்சேரியில் பிஸ்மில்லா கான் அதே ராகத்தை வாசிக்கிறார். அது என்ன ராகம் என்று அனைவரும் கேட்டபோது அச்சிறுவனின் பெயரையே சூட்டிக் ‘கன்னையா ராகம்’ என்று சொல்கிறார். சிறுவனாக வந்தது கிருஷ்ணன் தான் என்று அவர் உணர்கிறார். இதுதான் சம்பவம்.

‘உஸ்தாத்’ கதை இச்சமபவத்தைக் கருவாகக் கொண்டு எழுதியது. ரயில், கும்பமேளா கச்சேரி ஆகியவை கதையில் இல்லை.  காசியில் பிஸ்மில்லாகானின் வீடு, பாலாஜி கோயில், அவரைத் தினம் அழைத்துச் செல்லும் ரிக்‌ஷாக்காரன், அவரைப் படமெடுக்க வரும் பிரான்ஸ் குழு எனக் களமும் பாத்திரங்களும் மாறியுள்ளன. வழக்கமாக வருபவனுக்குப் பதிலாக அன்று கிருஷ்ணனே ரிக்‌ஷாக்காரனாக வருகிறான். அவன் சட்டைக்குள் ஒரு புல்லாங்குழல் இருக்கிறது. பிஸ்மில்லா கானின் மனதில் ஓடும் ராகத்தை வாசித்தது கிருஷ்ணனே என்பதற்கு அது ஒரு ஆதாரம்.

காசியின் சந்துக்குள் இருக்கும் பிஸ்மில்லா கானின் சிறுவீட்டைச் சென்று பார்த்த அனுபவமும் இந்தக் கதையை எழுதச் சுகுமாரனுக்கு உதவியிருக்கிறது. காசித் தெருக்கள், மக்கள், பாலாஜி கோயில் என எல்லாமும் ஓசைகளால் காட்சியாகின்றன. இசை மேதையைப் பற்றிய கதைக்குப் பொருத்தமான இந்தப் பின்னணியும் மேதமைக்கே உரிய எளிமையும் வெகுளித்தனமும் கொண்ட அவர் பண்புகளும் நதியோட்டத்தில் எழுந்துயரும் அலைகள் போல இயல்பாக வந்து சேர்ந்திருக்கின்றன.

சுகுமாரன் உரைநடையில்  கவிதை நடையைச் செயற்கையாக உருவாக்குபவர் அல்ல. கன்னையா ராகத்தை வாசிக்கும் போது எழும் உணர்வுகளைச் சிறகடித்து எழுந்தும் கிளையில் அமர்ந்தும் அலைவுறும் பறவையின் காட்சிப் படிமத்தை உருவாக்குவதன் மூலம் கதையில் கொண்டு வந்துள்ளார். ராகம் முத்தாய்ப்பை எட்டும்போது ஆகாயத்தின் வெளிச்சத் திரளுக்குள் புள்ளியாய்ப் பறவை மறைந்து போகிறது. சிறுதொடர்களாலும் எளிய சொற்களாலும் நிறைந்த இப்பகுதி ஷெனாய் வாசிப்பைக் கேட்ட சுகத்தைத் தருகிறது. இந்த இடத்தில் நிறுத்திவிட்டுப் பிஸ்மில்லா கானின் இசையைக் கொஞ்ச நேரம் கேட்ட பிறகே பிற்பகுதியை வாசித்தேன்.

கதையின் முடிவுப் பகுதி சில பத்திகள் நீண்டுவிட்டதாகத் தோன்றியது. ரிக்‌ஷாக்காரனாக வந்தது கிருஷ்ணன் என்பதை உறுதிப்படுத்தும் மகாதேவின் தொடரோடு கதை முடிந்துவிடுகிறது. அவன் சொல்கிறான்: ‘நான் வரவில்லை என்பது சரிதான் சாகிப். ஆனால் நான் யாரையும் அனுப்பவில்லையே?’

அதற்கு மேல் எழுத என்ன இருக்கிறது? ஆனால் கதாசிரியருக்குப் போதவில்லை. ராகத்திற்குப் பெயரிடுதலைக் கதையின் முத்தாய்ப்பாக வைக்க வேண்டும் என்று நினைத்திருப்பதால் மேலும் கொஞ்சம் உரையாடல், விவரிப்பு என நீள்கிறது. அப்பகுதி தகவலாகத்தான் எஞ்சி நிற்கிறது. சரி, இசைக்கதைக்கு ஒரு நிரவல் தேவைதானே?

(கதையை வாசிக்க: https://akazhonline.com/?p=8192  )

—–  18-10-24

Add your first comment to this post