என் ஆசிரியர் : 3

You are currently viewing என் ஆசிரியர் : 3

உருவம் மங்கவில்லை

(தொடர்ச்சி)

அவர் பங்குதாரராக இருந்த சுயநிதிப் பள்ளியில் என் அண்ணன் மகள் +2 பயின்றார். அவளைச் சேர்ப்பதற்காகச் சென்றபோதுதான் ‘அவர் என் ஆசிரியர் இல்லை’ என்று தோன்றியது. அப்பள்ளி தொடங்கிய காலத்தில் மருத்துவக் கல்வியில் சேர்வதற்குக் கிராமப்புற இடஒதுக்கீடு இருந்தது. அந்தப் பள்ளி இருந்த இடம் கிராமப்புறம் என்பதால் அவ்வொதுக்கீட்டை எளிதாகப் பெற முடிந்தது. தமிழ்நாட்டின் எல்லா ஊர்களில் இருந்தும் தம் பிள்ளைகளைச் சேர்க்கப் பெற்றோர் வந்தனர். பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியாகும் நாளில் அப்பள்ளி இருக்கும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிடும். ஆயிரக்கணக்கானோர் தேடிவரும் பள்ளியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் அவரிடம் என் மனதில் இருந்த ஆசிரியரைத் தேடி ஏமாந்து போனேன்.  ‘இவர் வேறொருவர்’ என்னும் உணர்வு அப்போதுதான் வந்தது.

தான் பணியாற்றிய சுயநிதிக் கல்லூரியில் பிரச்சினை ஏற்பட்டுப் பணியிலிருந்து விலகி வந்த என் மனைவி அடுத்த கல்வியாண்டு தொடங்கும் வரை வீட்டில் இருப்பதை விரும்பவில்லை. அச்சமயம் நானும் வெளியூரில் இருக்கும்படியானது. என் ஆசிரியரைப் போய்ப் பார்க்கும்படி சொன்னேன். மனைவி போய் விவரம் சொன்னதும் ‘முருகன் ஒய்பா? சரி, நாளையிலிருந்து வேலைக்கு வந்திருங்க’ என்று சொல்லிவிட்டார். எனக்கே ஆச்சரியம். அடுத்த நாள் வேலையில் சேர்ந்த பிறகு வகுப்பெடுக்கச் சொல்லிப் பார்த்துத் திருப்தி அடைந்திருக்கிறார். எங்கள் வீட்டுக்கு அருகிலேயே அப்பள்ளி இருந்ததால் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு வேலைக்குச் சென்று வருவது என் மனைவிக்கு எளிதானது.

அப்பள்ளியில் வேலை செய்து கொண்டிருந்த போதுதான் என் மனைவி அரசு ஆசிரியர் தேர்வாணையம் நடத்திய தேர்வை எழுதினார். அவருக்குப் பணி கிடைக்குமா கிடைக்காதா என்னும் ஊசலாட்ட நிலை இருந்தபோது என் ஆசிரியர் சொன்னார்: ‘கெடச்சா மகிழ்ச்சி. கெடைக்கலீன்னா பெருமகிழ்ச்சி.’ கிடைத்தால் உங்களுக்கு நல்லது; கிடைக்காவிட்டால் எங்களுக்கு நல்லது என்னும் பொருளில் அவர் அப்படிச் சொன்னார். நல்ல ஆசிரியரை நாங்கள் இழக்க விரும்பவில்லை என்று உணர்த்தினார். அவர் சொன்ன வாசகத்தில் ஒரு முதலாளியின் பார்வையும் கலந்திருந்தாலும் தன் கற்பித்தலுக்கு அவர் அளித்த நற்சான்று என்றே இன்று வரை என் மனைவி கருதி வருகிறார்.

நான் நாமக்கல்லுக்கு இடமாறுதல் பெற்று வந்தபோது என் ஆசிரியர் தொடர்பான பஞ்சாயத்து ஒன்று என்னிடம் வந்தது. அவர் பங்குதாரராக இருந்த பள்ளி விடுதியில் ஒருமாணவரை அடித்துவிட்டார் என்றும் அதனால் அவன் மூளை பாதித்துவிட்டது என்றும் வழக்கு நீதிமன்றத்திற்கே சென்றுவிட்டது. பாதிக்கப்பட்ட மாணவனின் தாத்தா நான் பணியாற்றிய நாமக்கல், அரசு கல்லூரியில் இரவுக் காவலராக இருந்தார். இரவுக் காவலரிடம் இந்தப் பிரச்சினை பற்றிப் பேசுமாறு என் ஆசிரியர் சொன்னார். அவர் பொருட்டுப் பேசிப் பார்த்தேன். இரவுக் காவலர் பேசிய வசவுகளை எல்லாம் எழுத முடியாது. தம் பேரனின் எதிர்காலமே அவர் அடித்த அடியால் பாழாகிவிட்டது என்று கொந்தளித்தார். ஆசிரியரோ ஏற்கனவே மனநிலை பாதிக்கப்பட்டவன் அவன் என்று சொன்னார். எது உண்மையோ எனக்குத் தெரியவில்லை. இந்தப் பிரச்சினையைப் பேசித் தீர்க்கும் அளவு ஆற்றலும் ஆர்வமும் எனக்கில்லை. என் ஆசிரியர் மாணவர்களை அடிப்பார் என்னும் செய்திதான் அதிர்ச்சியாக இருந்தது. அப்படி ஒருமுகம் எனக்குத் தெரியவே தெரியாது.

அவரது அக்கா மகனும் என் வகுப்புத் தோழனுமாகிய சுந்தரராஜனைப் பல்லாண்டுகள் கழித்து எதேச்சையாகச் சந்தித்தேன். அவரது வழிகாட்டுதலும் அவனும் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் கண்டிருப்பான் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அவன் சிறுவியாபாரம் ஒன்றைப் பார்த்துக்கொண்டு சாதாரண நிலையில் இருந்தான். ‘உங்க மாமா நெனச்சிருந்தா உன்னயக் கைதூக்கி விட்டிருக்கலாமே’ என்றேன். ‘நானும் கேக்கல. அவரும் செய்யல’ என்று மட்டும் சுருக்கமாகச் சொன்னான். அவன் எனக்குப் பிடித்தமான நண்பன். அவனுக்கு இருந்ததோ இல்லையோ எனக்கு ஆதங்கமாக இருந்தது. அவர் பள்ளி சார்ந்து ஏதோ ஒருவேலையில் அவனை இழுத்து விட்டிருக்கக் கூடாதா?

2015ஆம் ஆண்டு மாதொருபாகன் நாவல் தொடர்பான சர்ச்சை எழுந்த சமயம் என் ஆசிரியர் எனக்கு எதிராகக் கருத்துக் கொண்டிருந்தார் என்று அறிந்தேன். ஆச்சரியப்படவில்லை. நாமக்கல் மாவட்டச் சுயநிதிப் பள்ளிகளைப் பற்றிச் சிறை என்றும் கோழிப்பண்ணை என்றும் கடுமையான விமர்சனங்களை வைத்துக் கட்டுரைகள் எழுதியிருந்தேன். அப்படி ஒரு பள்ளியின் பங்குதாரர் அவர். சர்ச்சையில் ஒட்டுமொத்தச் சுயநிதிப் பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் எனக்கு எதிராகச் செயல்பட்டனர். சர்ச்சை கிளப்பியவர்களுக்கு நிதியுதவியும் செய்ததாகக் கேள்விப்பட்டேன்.

சுயநிதிக் கல்வி நிறுவனங்களின் பங்குதாரர் எனக்கு எப்படி ஆதரவு தெரிவிப்பார்? ஆன்மீகப் பற்றினால் ஓரளவு வலதுசாரிச் சாய்வுக்கும் உள்ளானவர் அவர். புட்டபர்த்தி சாய்பாபாவின் தீவிர பக்தராக இருந்தார். சாய்பாபா தொடர்பான சங்கங்களில் எல்லாம் தலைமைப் பதவி வகித்தார்.  ஒழுக்கப் பார்வை சார்ந்த விழுமியங்களின் ஆதரவாளர். அவர் எப்படி மாதொருபாகனுக்கு ஆதரவு தெரிவிப்பார்? எனக்கு எதிர்பார்ப்பும் இல்லை;  அதிர்ச்சியும் இல்லை. ‘நான் இதே ஊரில் பிறந்து வளர்ந்தவன். எனக்குத் தெரியாதா?’ என்றாராம். ‘அப்படியா? மகிழ்ச்சி’ என்று மட்டும் சொன்னேன்.

என் ஆசிரியர் : 3

1981 -1982, 1982 – 1983 ஆகிய கல்வியாண்டுகளில் அவரிடம் பயின்றேன். முழுமையாக இரண்டாண்டுகள். அப்போதைய இளைஞர் உருவம் என் மனதில் அப்படியே இருக்கிறது. கிட்டத்தட்ட நாற்பத்தைந்து ஆண்டுகள். அந்த உருவம் மங்கவில்லை. அவர் பேச்சு என் காதில் நிறைந்திருக்கிறது. புன்னகை என்னுள் சித்திரக் காட்சியாக நிற்கிறது. முன்மாதிரியான அவர் பாதிப்பு ஏதோ ஒருவகையில் எனக்குள் இருந்தது; இருக்கிறது.

பிற்காலத்து முதலாளி முகம் எனக்கு எதற்கு? இளமையும் இனிமையும் நிறைந்த அக்காலத்து ஆசிரியரை அப்படியே காப்பாற்றிக் கொள்கிறேன். என் மதிப்புக்கும் அன்புக்கும் உரிய அந்த ஆசிரியர் டி.ஓ.சிங்காரவேலு அவர்கள்.

—–   25-05-25

Latest comments (1)

T. LAKSHMAN

மாணவர்களின் பெருமையைக் கண்டு மகிழ்ச்சி அடையும் உங்களைப் போன்ற ஆசிரியர்களுக்கு முன்பு உங்கள் ஆசிரியர் சிங்காரவேலு ஐயா ஏனோ சிறிது குழப்பத்தில் இருந்திருப்பார். அதுதான் அப்படி சொல்லி இருப்பார் ஐயா… எல்லா ஆசிரியர்களும் ஒரே மாதிரி இருந்துவிட்டால் மாணவர்கள் ஆசிரியர்களின் மனநிலையை எப்படி உணர்ந்துள்ள முடியும். தாங்கள் எழுதுவதற்கான ஒரு தளத்தை சிங்காரவேலு ஐயா உருவாக்கியுள்ளார் அருமை ஐயா.