‘அறைக்கலன்’ தொடர்பாகச் சமூக ஊடகங்களில் வெளியான விவாதங்களை ஒட்டி ஜெயமோகன் எழுதியுள்ள குறிப்பு ஒன்றில், ‘அண்மையில் மிக நம்பத்தகாதவராகவும், காழ்ப்புகள் மட்டுமே கொண்டவராகவும் மாறியிருப்பவர் பெருமாள் முருகன்தான். இன்று மனுஷ்யபுத்திரனுக்கு இருக்கும் நம்பகத்தன்மை கூட பெருமாள் முருகனுக்கு கிடையாது. அப்படிப்பட்ட ஒரு நபர் கூறியதை ஒட்டி எப்படி நீங்கள் இதை என்னிடம் கேட்கலாம்?’ (காண்க: https://www.jeyamohan.in/175839/) என்று குறிப்பிட்டுள்ளார்.
‘அறைக்கலன்’ தொடர்பான விவாதத்தில் நான் பங்கேற்கவில்லை. அது குறித்து எதுவும் எழுதவில்லை. யாரிடமும் எதுவும் பேசவில்லை. இந்தப் பிரச்சினைக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அப்படியிருக்க ‘அப்படிப்பட்ட ஒரு நபர் கூறியதை ஒட்டி’ என்று என்னை இதில் தொடர்புபடுத்தி ஜெயமோகன் ஏன் எழுதுகிறார் என்று தெரியவில்லை. 2013ஆம் ஆண்டு சுகுமாரன் மொழிபெயர்ப்பில் வெளியான மார்க்யூஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலைச் செம்மை செய்தேன். அதில் ‘அறைகலன்’ என்னும் சொல்லைச் சுகுமாரன் பயன்படுத்தியிருந்தார். ‘அறைகலனா, அறைக்கலனா’ என்று எனக்குச் சந்தேகம் வந்தது. ‘அறைக்கலன்’ என ஒற்று மிகுத்து எழுதுவதே சரி என்று முடிவெடுத்தேன். அதைச் சிறுகட்டுரையாக என் வலைத்தளத்தில் எழுதியிருந்தேன். இப்போதைய விவாதத்தில் சிலர் அந்தக் கட்டுரையைக் (குறிப்பாக sen balan) குறிப்பிட்டிருந்தனர்; பகிர்ந்திருந்தனர். அதை முழுமையாகப் படிக்க விரும்பிய நண்பர்களுக்காக நானும் பகிர்ந்தேன்.
நண்பர் மனுஷ்யபுத்திரன் ‘இந்தச் சொல் உள்ள அகராதிச் சான்றைக் கொடுக்க முடியுமா?’ என்று கேட்டார். ஏற்கனவே இந்தச் சொல் பற்றிக் கட்டுரை எழுதியவன் என்பதாலும் அகராதியியலில் ஆர்வம் உடையவன் என்பதாலும் அவர் என்னைக் கேட்டிருக்கலாம். 1994ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்ட ‘ஆட்சிச் சொல் அகராதி’யின் ஆறாம் பதிப்பு என்னிடம் இருந்தது. அதில் இச்சொல்லும் இருந்தது. அத்தகவலை மனுஷ்யபுத்திரனுக்குக் கொடுத்தேன். மற்றபடி இந்த விவாதத்தில் என் பங்கு எதுவுமில்லை. யாரிடமும் எந்தக் கருத்தையும் பகிர்ந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம் இருக்கிறது.
ஜெயமோகன் கருத்துப்படி ‘நம்பத்தகாதவராகவும் காழ்ப்புகள் மட்டுமே கொண்டவராகவும்’ நான் மாறியிருக்கிறேனாம். எவற்றைக் கொண்டு ஜெயமோகன் இப்படி முடிவுக்கு வருகிறார்? அவருக்கு ஏதாவது விஷயத்தில் நான் கடன்பட்டு அதைத் தீர்க்காமல் ஏமாற்றிவிட்டேனா என்று யோசித்துப் பார்த்தேன். அப்படி எதுவும் இல்லையே. என் நம்பகத்தன்மையை எதைக் கொண்டு ஜெயமோகன் அளவிடுகிறார்? என்னை நம்பிய யாரை ஏமாற்றியிருக்கிறேன்? என் காழ்ப்புக்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறார்? யாரையேனும் காயப்படுத்தும் சொற்களை எழுதியிருக்கிறேனா?
கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். நான் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து இதுவரைக்கும் ஜெயமோகனைச் சில இலக்கியக் கூட்டங்களில் சந்தித்திருக்கிறேன். அனேகமாக நான்கைந்து நிகழ்ச்சிகள் இருக்கலாம். அவற்றில் ஓரிரு வார்த்தைகள் பேசியிருக்கக் கூடும். கன்னியாகுமரியில் நடந்த சுரா தொடர்பான காலச்சுவடு கூட்டத்திற்கு ஜெயமோகனும் வந்திருந்தார். அங்கே காலச்சுவடு கண்ணனுக்குப் பயந்து பயந்து இவரிடம் பேசினேன் என்று இட்டுக் கட்டினார். எனக்கு இவரிடம் பேச ஒன்றுமேயில்லை. சக எழுத்தாளர் என்பதால் பார்க்கும்போது வணக்கம் சொல்லிக் கொள்வதுண்டு. அவ்வளவுதான். இவருடைய விரிவுரையைக் கேட்கக் கைகட்டிக் காத்திருக்கும் ஆள் நானல்ல.
1998இல் மருத்துவர் வெ.ஜீவானந்தம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த எழுத்தாளர்களுக்கான சூழல் முகாம் ஒன்று உதகையில் நடந்தபோது மூன்று நாட்கள் ஒரே இடத்தில் ஜெயமோகனும் நானும் தங்கியிருந்தோம். அப்போதுகூட அவருடன் சில நிமிடங்கள் மட்டுமே பேசியிருக்கிறேன். தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் எழுதிய கட்டுரை ஜெயமோகனின் மனைவி பெயரில் ‘சொல் புதிது’ இதழில் வெளியான விஷயத்தைப் பொ.வேல்சாமி ‘கவிதாசரண்’ இதழில் எழுதியிருந்த காலத்தில் (பதினைந்து ஆண்டுகள் ஆகியிருக்கலாம்) அவரைச் சந்தித்துச் சமாதானக் கொடி ஏற்றுவதற்காக ஜெயமோகன் நாமக்கல் வந்திருந்தார். பொ.வேல்சாமி வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தார். அப்போது என் வீட்டிற்கும் வந்தார்; ‘கூடு’ இலக்கியக் கூட்டத்திலும் பேசினார். அவ்வளவுதான் ஜெயமோகனுக்கும் எனக்குமான நேரடித் தொடர்பு. இந்தச் சந்திப்புகள் எதிலும் அவருக்குக் கடன்பட்டவனாக நானில்லை.
எழுத்து சார்ந்த நம்பிக்கைகளும் கொள்கைகளும் இயங்குதளமும் முறையும் அவருக்கும் எனக்கும் எந்தவிதத்திலும் ஒற்றுமை அற்றவை. அவ்வகையிலும் நான் தீர்க்க வேண்டிய கடன்கள் ஏதுமில்லை. சில விசயங்களில் அவரோடு விவாதிக்க நேர்ந்திருக்கிறது. அப்போதும் அவரைப் பற்றித் தனித் தாக்குதலாக ஒருசொல்லும் நான் சொன்னதில்லை. அப்படியிருக்க என் நம்பகத்தன்மை, காழ்ப்பு ஆகியவற்றை அவர் எப்படி உணர்ந்தாரோ தெரியவில்லை. ஏதேனும் குறிப்பிட்டுச் சொன்னால் அறிந்துகொள்வேன். பரிசீலிக்கவும் செய்வேன்.
எனக்கு எந்த எழுத்தாளர் மீதும் காழ்ப்போ பொறாமையோ கிடையாது. வாழ்வின் போக்கில் அவற்றைக் கடக்கும், விடுபடும் மனநிலையை அடைந்திருக்கிறேன். என் வழியில், என் அனுபவம் சார்ந்து ஓர் படைப்புலகை உருவாக்கி வந்திருக்கிறேன். 1991 தொடங்கி என் நூல்கள் வெளியாகின்றன. தொடர்ந்து எல்லா நூல்களும் பதிப்பில் இருக்கின்றன. ஒவ்வொரு நூலும் பல பதிப்புகளைக் கண்டு வருகின்றன. தமிழ்ச் சூழலில் என் படைப்புகளுக்கான வாசகப் பரப்பு கணிசமாக இருக்கிறது. ஆங்கிலத்திலும் இந்திய மொழிகளிலும் என் நூல்கள் பெயர்க்கப்பட்டிருக்கின்றன. உலக மொழிகளில் சிலவற்றிலும் நேரடியாகத் தமிழிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. தமிழ் இலக்கியச் சூழலைத் தம் குறுங்கண்களுக்கு உட்பட்டுக் காணும் சிலர் கருதுவது போல ‘மாதொருபாகன்’ பிரச்சினைக்குப் பிறகுதான் மொழிபெயர்ப்பு தொடங்கியது என்பதல்ல.
2004ஆம் ஆண்டு முதல் என் நூல்களின் மொழிபெயர்ப்புகள் வெளியாகி வருகின்றன. 2005ஆம் ஆண்டு தெற்காசிய நாடுகளின் இலக்கியத்திற்கு வழங்கப்படும் க்ரியாமா விருதின் இறுதிப்பட்டியலில், ஐந்து நாவல்களில் ஒன்றாக Seasons of the palm இருந்தது. பிரச்சினை உருவாவதற்கு முன்பே ‘மாதொருபாகன்’ ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியானதை அனைவரும் அறிவர். அப்போதே ‘பூக்குழி’ நாவல் மொழிபெயர்ப்புக்கான ஒப்பந்தமும் முடிவாகியிருந்தது. மாதொருபாகன் பிரச்சினைக்குப் பிறகு மொழிபெயர்ப்புகள் கூடின, கவனம் பெற்றன என்பதில் எனக்கு மறுப்பேதும் இல்லை. அது இயல்புதான். ஆனால் சர்ச்சையின் காரணமாக மட்டுமே மொழிபெயர்க்கப்பட்டன், ஏற்புக் கிடைத்தது என்னும் பார்வை சரியல்ல.
வலுவற்ற படைப்புகள் தொடக்கத்திலேயே நிராகரிக்கப்படும் வகையில்தான் ஆங்கிலப் பதிப்புலகமும் உலக மொழிப் பதிப்புலகமும் செயல்படுகின்றன. சர்ச்சையை மட்டும் கணக்கில் கொண்டு பிறமொழிப் பதிப்பாளர்கள் ஒரு நூலை வெளியிடத் தேர்வு செய்வதில்லை. ஒரு நூலைத் தேர்வு செய்வதற்கு அவர்கள் பல படிநிலைகளை வைத்துள்ளனர். அடுத்தடுத்த குழுக்களின் பார்வைக்குச் சென்று நூல் வெளியாவதற்குக் காலம் எடுக்கும். படைப்பின் தரம், சமகாலத் தன்மை, மொழிபெயர்ப்பின் இயல்பு, சந்தை மதிப்பு முதலிய பலவற்றையும் கருத்தில் கொண்டே தேர்வு செய்வார்கள். ஒரு நூல் கவனம் பெற்றதன் காரணமாக அந்த எழுத்தாளரின் இன்னொரு நூலை வெளியிடும் முடிவும் எடுக்க மாட்டார்கள். அடுத்த நூலுக்கும் பழைய நடைமுறைதான். ஒருவர் என்ன எழுதினாலும் வெளியிடுவது என்னும் முடிவை அவர்கள் மேற்கொள்வது அத்தனை எளிதான விஷயமல்ல.
இப்போது ஜெயமோகனின் சிறுகதைத் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பை Juggernaut பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. மகிழ்ச்சி. அப்பதிப்பகம் எனது இரண்டு சிறுகதை நூல்களை வெளியிட்டுள்ளது. ‘The Goat Thief’ (2017) ஆங்கிலத்தில் மிகவும் கவனம் பெற்ற தொகுப்பு. மேலும் சில கதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கச் சொல்லிப் பின்னர் ‘Four Strokes of Luck’ (2021) தொகுப்பை வெளியிட்டார்கள். இப்போது மூன்றாம் தொகுப்பை வெளியிட அவர்களுடன் ஒப்பந்தம் முடிவாகி மொழிபெயர்ப்புப் பணி நடைபெற்றுக் கொண்டுள்ளது. முதன்முதலாகத் தமிழ் மொழிச் சிறுகதை நூல் ஒன்றை அப்பதிப்பகம் வெளியிட்டதென்றால் அது என்னுடையதுதான்.
மொழிபெயர்ப்புகளில் என் படைப்புகளை வாசிக்கும் லட்சக்கணக்கான வாசகர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். எத்தனையோ வாசகர்கள் மொழி கடந்து நுட்பமான உரையாடலை என்னுடன் நிகழ்த்துகிறார்கள். மொழி கடந்து வாசகர்கள் என் எழுத்துக்களைக் கொண்டாடும் முறைகள் குறித்து எழுதுவதற்கு எனக்குக் கூச்சமாக இருக்கிறது. குனிந்து தம் கட்டைவிரலையே பார்த்து நடக்கும் சில தமிழ் எழுத்தாளர்கள் வேண்டுமானால் இவற்றை அறியாமல் ‘சர்ச்சை, சர்ச்சை’ என்று பொறாமை பீடிக்கப் பிதற்றிக் கொண்டிருக்கலாம். தமிழின் இறுகிய சூழலிலிருந்து விடுபட்டு என் படைப்புகள் சென்றிருக்கும் உயரம் சாதாரணமானதல்ல. இன்னும் அவை செல்லும் என்னும் நம்பிக்கை எனக்கிருக்கிறது. இந்நிலையில் எனக்கு எதற்கு இன்னொரு தமிழ் எழுத்தாளர் மீது காழ்ப்பு உருவாகப் போகிறது? அப்படியே வந்தாலும் என் வாழ்க்கை அனுபவம், வாசிப்பு ஆகியவற்றின் துணை கொண்டு எளிதாகக் கடந்து விடுவேன்.
000
2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பேசியதைக் கொண்டு நான் எழுதிய ஒரு கவிதை பற்றிக் கருத்து தெரிவிக்கும்போது ‘இலை போடும் இடத்திலெல்லாம் போய் உட்கார்ந்து கொள்பவர்’ என்று என்னைப் பற்றி எழுதினார் ஜெயமோகன். எங்கெல்லாம் போய் நான் உட்கார்ந்திருந்தேன் என்று ஒரே ஒரு சான்றை ஜெயமோகனால் தர முடியுமா? அப்படி என்னென்ன பலன்களைப் பெற்றேன் என்று சொல்வாரா? இன்று என்னை வந்து அடைந்திருக்கும் எல்லாமும் என் எழுத்து சார்ந்து இயல்பாகக் கிடைத்தவை. எழுதுவதைத் தவிர வேறெந்த முயற்சியிலும் ஒருபோதும் நான் ஈடுபட்டதில்லை. தமிழில் இயங்குவதற்குப் பல துறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் காத்திரமாக இயங்குவதற்குப் பலர் தேவைப்படுகின்றனர். எந்தத் துறையிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டால் செய்வதற்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. நம் செயலுக்கேற்ற பலன் காலம் கடந்தேனும் கிடைக்கும் என்னும் தெளிவு கொண்டவன் நான்.
இன்னொரு முறை, கு.ப.ரா. கதைகள் பதிப்பு தொடர்பான விவாதத்தில் ‘இவரைப் போன்ற பேராசிரியர்கள் ஒவ்வொரு பைசாவையும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். சிந்திய பருக்கைகளைக்கூட ஊசியால் குத்தி எடுத்து கழுவி சாப்பிடும் கருமிகளைப்போல இருக்கிறார்கள்’ என்று ஜெயமோகன் எழுதினார். நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்களைப் பதிப்பிப்பதைப் பற்றி விவாதிக்கலாம் என்று நான் எண்ணியிருந்த போது இப்படி எழுதினார். விவாத எண்ணத்தைக் கைவிட்டேன். என் இயல்பை அறிந்தவர்கள், என் வாழ்க்கை முறையைத் தெரிந்தவர்கள், என் நூல்களை ஒருமுறை புரட்டிப் பார்த்தவர்கள் ஜெயமோகனின் இந்த இழிவுபடுத்தலை உணர்வார்கள் என்று நினைத்தேன். சிந்திய பருக்கையை ஊசியால் குத்தி எடுத்துக் கழுவிச் சாப்பிட்டால்தான் என்ன? என் பருக்கை, என் ஊசி, என் நீர். இந்தக் கர்ண மகாபிரபுவிடம் வந்து கையேந்தியா நிற்கிறேன்? நீரும் ஊசியும் அருகில் வைத்துக்கொண்டு திருவள்ளுவர் உண்டார் என்பதுதானே வாய்மொழிக் கதை? சரி, திருவள்ளுவர் மரபைச் சேர்ந்தவனாக இருந்துவிட்டுப் போகிறேன்.
ஜெயமோகன் இப்படி எழுதியவை என் மனதை மிகவும் பாதித்தன. இப்படிப்பட்ட ஒருவரோடு எதற்கு மல்லுக் கட்ட வேண்டும்? பதில் சொல்லி அவருக்கு எதையாவது உணர்த்த முடியுமா? தான் சொல்வது ஒன்றே வேதம் என்றும் பிறர் எவருக்கும் ஒன்றும் தெரியாது என்றும் கருதும் ஒருவரோடு எதற்கு விவாதம்? அவருடனான முந்தைய விவாதத் தருணங்களையும் வைத்து யோசித்து அப்போது தெளிவாக முடிவெடுத்தேன்.
ஒரு விவாதத்தை அதன் சாரம் சார்ந்து அணுகுபவரல்ல ஜெயமோகன். தன்னைக் காத்துக் கொள்ளத் தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டுச் சில சொற்களை ஏவி எதிரில் இருப்பவரைக் காயப்படுத்துவார். ஏதும் அறியாமலே தனிநபர்களின் வாழ்வைக் கொச்சைப்படுத்துவார். அவர்களின் பண்புகளை இழிவுபடுத்துவார். பல்லாண்டுச் செயல்பாடுகளை ஒன்றுமில்லை என்பார். பின்னர் விவாதம் அந்தச் சில சொற்கள் சார்ந்து சென்றுவிடும். வம்புச்சண்டை பாணியில் திரும்பிவிடும். அல்லது எதிராளி பேசாமல் அடங்கிவிடுவார். ஜெயமோகன் அதை அறிந்தே செய்கிறார். அவரது தர்க்க முறைகள் வேறு. தமிழ் இலக்கியங்கள் வழியாகத் தர்க்க முறைகளைக் கற்ற எனக்கு அவரது விவாத முறை பொருந்தாது.
ஜெயமோகன் எழுதும் கட்டுரைகள், குறிப்புகள் ஆகியவை துறை சார்ந்த அறிவின் அடிப்படையில் அமைந்தவை அல்ல. அவரால் எந்த நூலையும் ஆழ்ந்து வாசிக்க இயலாது என்பது என் அனுமானம். அதனால்தான் அவரது எழுத்துக்களில் எங்கு தொட்டாலும் தகவல் பிழைகள், கருத்துப் பிழைகள் மலிந்து கிடக்கின்றன. ஏற்றபடிதானே பார்வையும் அமையும்? அவற்றைப் பற்றி விவாதிக்கப் புகுவது வெட்டி வேலை; நேர விரயம். பிறரைத் தம்மை நோக்கித் திருப்பி அவர்களின் நேரத்தைப் பிடுங்கிக் கொள்வதில் சமர்த்தர். அவரைப் போல எந்நேரமும் விடைத்துக்கொண்டு சமருக்கு நிற்க யாரால் ஆகும்?
ஆகவே இனிமேல் கடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால் ஒழிய ஜெயமோகனுக்குப் பதில் சொல்லக் கூடாது; அவரோடு விவாதம் செய்யக் கூடாது. நம் நேரத்தை விழுங்கிவிடும் வீண் வேலையில் இறங்கக் கூடாது. இதுதான் நான் எடுத்த முடிவு. இப்போது ‘அறைக்கலன்’ விவாதத்தில் என் பெயர் எப்படி எப்படியோ தொடர்புபட்டதாலும் ஜெயமோகன் என்னைப் பற்றி எழுதியதைச் சுட்டி நண்பர்கள் கேட்டதாலும் இந்த விளக்கத்தைப் பொதுவெளியில் வைக்கிறேன்.
—– 21-11-22
Comments are closed.