தமிழைப் படித்தால் இரண்டுக்கும் லாபம் இல்லை

தமிழைப் படித்தால் இரண்டுக்கும் லாபம் இல்லை

எழுத்தாளரும் தமிழ் இலக்கிய முனைவர் பட்ட ஆய்வாளருமான சதீஷ்குமார் (iskra) சமீபத்தில் உ.வே.சாமிநாதையரின் ‘என் சரித்திரம்’ நூலிலிருந்து ஒரு மேற்கோளை முன்னிறுத்தி முகநூலில் ஒருபதிவு போட்டிருந்தார். உ.வே.சாமிநாதையருக்குப் பெண் பார்த்துத் திருமணம் முடிவு செய்கிறார்கள். பெண்ணின் தாத்தா ஐயாவையர், தந்தை கணபதி ஐயர் ஆகிய இருவரும் தமிழைக் கற்றவர்கள். அதனால் தங்களுக்கு வரப் போகும் மாப்பிள்ளையைப் பற்றி ‘எப்படியாவது பையன் பிழைத்துக் கொள்வான்’ என்று நம்பிப் பெண்ணைக் கொடுக்கச் சம்மதித்தார்கள். இந்தக் குறிப்பைக் கொண்டு அக்காலத்தில் தமிழ் இலக்கியம் பயில்வோருக்கு நல்ல மதிப்பு இருந்தது என்று கருதலாமா?  ‘பையன்  பிழைத்துக் கொள்வான்’ என்றோ ‘பையன் எப்படியும் பிழைத்துக் கொள்வான்’ என்றோ அவர்கள் சொல்லவில்லை. ‘பையன் எப்படியாவது பிழைத்துக் கொள்வான்’ என்றுதான் கருதினார்கள். அவர்களாவது பரவாயில்லை. அன்றைய பொதுமனக் கருத்து தமிழ்ப் படிப்பு இழிவானது என்றே கருதியது. அதை உ.வே.சாமிநாதையரே பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார்.

அவரது இளமைக் காலத்தில் கிராமங்களில் ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இல்லை. நகரங்களில் மட்டுமே ஆங்கிலத்தைக் கற்றுக் கொடுத்தார்கள். இத்தகவலைச் சொல்லும் உ.வே.சா. அதன் பின் ‘இங்கிலீஷ் தெரிந்தவர்களுக்கு அளவற்ற மதிப்பு இருந்தது. அரைகுறையாகத் தெரிந்து கொண்டவர்களுக்குக்கூட எளிதில் ஏதேனும் வேலை கிடைக்கும்’ என்றும் ‘வெறும் (இங்கிலீஷ்) எழுத்துக்களைத் தெரிந்து கொண்ட மாத்திரத்தில் பெருமை பாராட்டுவதும் கையெழுத்து மாத்திரம் இங்கிலீஷில் போடத் தெரிந்து திருப்தியடைவதும் அக்காலத்தில் அதிகமாகக் காணப்பட்டன’ (ப.68) என்றும் எழுதுகிறார்.

அவரது திருமணத்திற்குப் பிறகு தந்தையுடன் கும்பகோணம் சென்றார். அப்போது கும்பகோணம் அரசு கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராகத் தியாகராச செட்டியார் இருந்தார். அவரிடம் தமிழ்க் கல்வி பயிலலாம் என்னும் எண்ணத்தில் கும்பகோணத்தில் வழக்கறிஞராக இருந்த வேங்கட ராவ் என்பவர் வீட்டில் சென்று தங்குகிறார்கள். உ.வே.சா. தான் இயற்றிய சில செய்யுட்களையும் வழக்கறிஞருக்குச் சொல்லிக் காட்டுகிறார். அவற்றை எல்லாம் கேட்ட வேங்கடராவ் சொல்கிறார்: ‘நன்றாக இருக்கின்றன. ஆனால் இக்காலத்தில் இவற்றால் என்ன பிரயோஜனம்? எதற்காக இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்? இதை விட்டுவிட்டு இங்கிலீஷ் படிக்கச் சொல்லுங்கள். நான் உதவி செய்கிறேன்; என் அன்பர்களையும் செய்யச் சொல்லுகிறேன். இன்னும் சில வருஷங்களில் இவன் முன்னுக்கு வந்துவிடுவான்.’ (ப.143).

குடும்பத்தோரோ உறவினர்களோ அவர் தமிழ்ப் படிப்பதை விரும்பவில்லை. தமிழ்தான் அவருக்கு விருப்பமாக இருக்கிறது, வேறு எதுவும் கைவரவில்லை என்பதை உணர்ந்ததால் அவர் தந்தை ஏற்றுக் கொண்டார். ஆனால் அனைவரின் ஒட்டுமொத்த எண்ணமும் தமிழ்ப் படிப்புக்கு எதிராகவே இருந்தது. தம் கல்வியைப் பற்றிச் சொல்லும் போது ஓரிடத்தில் இப்படி எழுதுகிறார்:

‘பந்துக்களில் பலர் நான் ஸம்ஸ்கிருதம் படிக்க வேண்டுமென்று விரும்பினார்கள். இராமாயண பாரத காலக்‌ஷேபம் செய்து ஸம்ஸ்கிருத வித்துவானாக விளங்க வேண்டுமென்பது அவர்கள் கருத்து. வேறு சில கனவான்களோ நான் இங்கிலீஷ் படித்து விருத்திக்கு வர வேண்டுமென்று எண்ணினார்கள். உதவி செய்வதாகவும் முன் வந்தனர். நான் உத்தியோகம் பார்த்துப் பொருளீட்ட வேண்டுமென்பது அவர்கள் நினைவு. என் தந்தையாரோ சங்கீதத்தில் நான் வல்லவனாக வேண்டுமென்று விரும்பினார்.’ (ப.167).

தமிழைப் படித்தால் இரண்டுக்கும் லாபம் இல்லை

உ.வே.சாமிநாதையர் வீட்டு அவர் தந்தையின் நண்பர் ஒருவர் வந்திருந்தார். நெடுநேரம் பேசிக் கொண்டிருந்த அவர் உ.வே.சா.வைப் பற்றி விசாரித்தார். அந்த விசாரணையின் முடிவில் அவர் சொன்னதையும் அந்த உரையாடலையும்  ‘என் சரித்திரத்தில்’ பதிவு செய்திருக்கிறார்.

‘ஒருநாள் என் தகப்பனாருக்குத் தெரிந்த ஒருவர் வந்திருந்தார். நெடுநேரம் பேசினார். “உங்கள் பிள்ளை என்ன செய்கிறான்?” என்று விசாரித்தார். என் தந்தையார் “தமிழ் படிக்கிறான்’ என்று சொன்னார். அவர் ஏதோ ஆச்சரியத்தைக் கேட்டவரைப் போலவே திடுக்கிட்டு, “என்ன? தமிழா?” என்று கூறினார். அதோடு அவர் நிற்கவில்லை. “தமிழையா படிக்கிறான்! இங்கிலீஷ் படிக்கக் கூடாதா? ஸ்ம்ஸ்கிருதம் படிக்கலாமே? இங்கிலீஷ் படித்தால் இகத்துக்கு லாபம்; ஸ்ம்ஸ்கிருதம் படித்தால் பரத்துக்கு லாபம். தமிழைப் படித்தால் இரண்டுக்கும் லாபம் இல்லை” என்று அவர் மேலும் தம் கருத்தை விளக்கின போது எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.’ (ப.277).

ஆங்கிலம் படித்தால் இப்பிறப்பில் லாபம்; சமஸ்கிருதம் படித்தால் மறுபிறப்பிற்கு லாபம்; தமிழைப் படித்தால் இரண்டுக்கும் லாபம் இல்லையாம். இப்படித்தான் பொதுமனக் கருத்து இருந்திருக்கிறது. உ.வே.சாமிநாதையர் எழுதும் இன்னொரு நிகழ்ச்சியும் முக்கியமானது. தமிழைப் படித்துக் கும்பகோணம் கல்லூரியில் பண்டிதராகத் தியாகராச செட்டியார் பணியாற்றினார். அதே கல்லூரியில் கணிதத்துறை ஆசிரியராகப் பணியாற்றியவர் பூண்டி அரங்கநாத முதலியார். அரங்கநாத முதலியாருக்குத் தமிழில் மிகுந்த ஆர்வம் உண்டு.  ‘கச்சிக் கலம்பகம்’ இயற்றியவர் அவர். தியாகராச செட்டியார் மீது நல்ல மதிப்பு கொண்டிருந்தார். செட்டியாருடைய வீட்டுக்குப் போய் அவரைச் சந்தித்துத் தமிழ் இலக்கியம் பற்றி அவ்வப்போது பேசிக் கொண்டிருப்பது முதலியாருக்கு வழக்கம்.

அப்படிச் சென்று சந்தித்து அளவளாவி வந்ததைப் பற்றி அதே கல்லூரியில் பணியாற்றி வந்த ஆசிரியர் ஒருவர் பூண்டி அரங்கநாத முதலியாரிடம் சொன்னதை உ.வே.சா. குறிப்பிட்டு எழுதியுள்ளார். அவர் சொல்கிறார்: ‘செட்டியார் வீட்டிற்கு நீங்கள் போகலாமா? அவரோ வெறும் பண்டிதர்; தாங்கள் பெரிய புரொபஸர். நாங்களெல்லாம் அவரிடம் மதிப்புடையவர்களே; ஆனாலும் அளவுக்கு மிஞ்சிப் போகமாட்டோம். தாங்கள் அவ்வர் வீட்டிற்கு அடிக்கடி போவது தங்களுடைய கௌரவத்திற்கு ஏற்றதன்று.’ (டிங்கினானே, ப.251).

தமிழைப் படித்தால் இரண்டுக்கும் லாபம் இல்லை

தமிழாசிரியர் ஒருவர் வீட்டுக்குக் கணித ஆசிரியர் ஒருவர் சென்று சந்திப்பது கௌரவக் குறைவாம். அவரோ வெறும் பண்டிதராம். அன்று மற்றவர்களை விடவும் தமிழாசிரியருக்கு ஊதியம் வெகுவாகக் குறைவு. அதற்கேற்பத்தான் மதிப்பும் இருந்திருக்கும் போலும். அரங்கநாத முதலியார் ‘செட்டியாரவர்களுக்கு நம்மைக் காட்டிலும் சம்பளம் குறைவென்ற காரணத்தால் அவர்கள் நம்மிலுந் தாழ்ந்தவர்களென்று கருதுகிறீர்களா? பணத்துக்கும் கல்விக்கும் சம்பந்தமில்லை யென்பது உங்களுக்குத் தெரியாதா?’ என்றெல்லாம் கேட்டு உரிய பதில் தந்திருக்கிறார். என்றாலும் படித்து ஒரே இடத்தில் பணியாற்றுபவர்களிடையே தமிழாசிரியர் நிலை இந்த அளவில்தான் இருந்திருக்கிறது என்பது முக்கியம். தமிழ்க் கல்வியை இழிவாகப் பார்ப்பதும் ‘வெறும் பண்டிதர்’ என்று சொல்வதும் தான் அன்றைய படித்த வர்க்கத்தினரின் பார்வையும்கூட.

அதன்பின் நூறாண்டு காலத்தில் தமிழ்ப் படிப்புக்கு பல உயர்வுகள் கிடைத்துவிட்டன. சம ஊதியம், சம மதிப்பு எல்லாம் கிடைத்தமைக்குத் தமிழை முன்னிறுத்திய அரசியல் காரணங்கள் இருக்கின்றன. எனினும் இன்றும் தமிழைக் கற்போருக்குக் கல்வி நிறுவனங்களிலும் சமூகத்திலும் பெரிய மதிப்பில்லை. 1980களில் நான் தமிழ்க் கல்வி கற்ற காலத்தில் எனக்குப் பட்டப்பெயர் ‘புலவன்’ என்பது. அந்தச் சொல்லை நான் இழிவாக நினைக்கவில்லை. ஆனால் படிக்கும் பாடம் சார்ந்து வேறு யாருக்கும் பட்டப்பெயர் இல்லை. தமிழ்க் கல்வியைச் சமூகம் இன்றைக்கும் இழிவாகத்தான் பார்க்கிறது என்பதற்கு இப்படி எத்தனையோ நிகழ்வுகளைச் சொல்லலாம். சமூகத்தின் பார்வையில் நான் ‘வெறும் தமிழாசிரியர்’தான்.  ஆனால் தமிழைக் கற்றதால் எனக்கு இகத்தில் எல்லா வகை லாபங்களும் கிடைத்திருக்கின்றன; குறையொன்றும் இல்லை. பரத்தைப் பற்றித் தெரியவில்லை; போய்த்தான் தெரிந்துகொள்ள வேண்டும்.

—–

பயன்பட்ட நூல்கள்:

  1. உ.வே.சாமிநாதையர், என் சரித்திரம், 2019, டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை, பதினொன்றாம் பதிப்பு.
  2. ப.சரவணன் (ப.ஆ.), டிங்கினானே!, உ.வே.சாமிநாதையர் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள், 2016, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.

(பிப்ரவரி 19, உ.வே.சாமிநாதையர் பிறந்த நாள்.)