மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்

கடந்த ஆண்டு ‘தமிழ் இந்து’ நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பில் ‘மனதில் நிற்கும் மாணவர்கள்’ என்னும் தலைப்பில் கட்டுரைத் தொடர் எழுதி வந்தேன். அதில் ‘சடங்குகளுக்கு மாற்று வள்ளலார்’ என எழுதிய கட்டுரை சகோதரர்களாகிய என் மாணவர்கள் பழனிக்குமார், கார்த்திகேயன் ஆகியோரைப் பற்றியது.
அவர்களின் பெற்றோர் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள். ஆகவே இருவருக்கும் திருமணம் ஆவதில் சிக்கல்கள் இருந்தன. பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பெண் பார்க்கும் படலம் நடந்தது. எனினும் அமையவில்லை. சமீபத்தில் பெண் பார்த்த போது ‘பையனைப் பற்றித் தெரிந்துகொள்ள அவனுடைய ஆசிரியர் எழுதிய கட்டுரையைப் படித்துப் பாருங்கள்’ என என் கட்டுரையைப் பெண் வீட்டாரிடம் கொடுத்திருக்கிறார்கள். ஆசிரியரின் எழுத்தை நம்பிப் பெண் கொடுத்துவிட்டார்கள். திருமணம் 14-11-18 அன்று நடைபெற்றது.
எனக்கு நன்றி தெரிவிக்கவும் ஆசிர்வாதம் பெறவும் இன்று குடும்பத்தோடு வீட்டுக்கு வந்தார்கள். மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் சேர்ந்து அமைந்த தருணம். ஆசிரியரின் சொல்லுக்கு இன்றும் சமூகத்தில் மதிப்பு இருப்பதையும் பத்திரிகையில் வரும் விஷயத்திற்கு எத்தனை சக்தி இருக்கிறது என்பதையும் ஒருசேர அறிந்தேன்.

ச.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள்’ என்னும் நூலை வழங்கினோம். அதில் நான் எழுதிய வாழ்த்து அது:

பண்பும் அன்பும் பெரியோர் போற்றும்
பணிவும் நிறைந்த பழனிக் குமாரும்
பொருந்திய அறிவு தேவி பாலாவும்
அருந்தமிழ் போல ஆண்டுபல கண்டு
செல்வ மெல்லாம் சேரப் பெற்று
பல்லாண்டு வாழ்க பார்போற்ற வாழ்கவே.

02-12-18

Add your first comment to this post