‘மொழிப் பிழைக்கு மன்னிப்பே இல்லை’

 

பேராசிரியர் க.வெள்ளிமலை (01-07-1933 : 07-09-2020)

 

‘மொழிப் பிழைக்கு மன்னிப்பே இல்லை’ ‘மொழிப் பிழைக்கு மன்னிப்பே இல்லை’

1986 – 1988 ஆகிய இரு கல்வியாண்டுகளில் கோயம்புத்தூர், பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் (இப்போது பி.எஸ்.ஜி. என்று ஆங்கிலத்தில் மட்டுமே அழைக்கப்படுகிறது; தமிழைக் காணோம்) முதுகலைத் தமிழிலக்கியம் பயின்றேன். அப்போது பேராசிரியர் க.வெள்ளிமலை அவர்கள் எடுத்த பாடங்களும் நடத்திய வகுப்புகளும் என் மனதில் இன்னும் நிலைத்திருக்கின்றன. முதல் இரு பருவங்களில் தொல்காப்பியம் எழுத்தும் சொல்லும் நடத்தினார். நூற்பாக்களைத் தெளிவுற வாசித்து ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் கூறுவார். எழுத்துக்கு இளம்பூரணமும் சொல்லுக்குச் சேனாவரையமும் பாடமாக இருந்தன. உரைப் பொருளை விளக்கிப் பிற உரையாசிரியர்களின் கருத்துக்களையும் எங்களுக்குத் தேவையான அளவுக்கு இயைத்துக் காட்டுவார். சான்றுகளைக் கரும்பலகையில் எழுதி விதியோடு பொருத்தி விவரிப்பார். எப்போதுமே ஒன்றுக்கு மேற்பட்ட சான்றுகளைத் தருவார்.

என்னிடம் அப்போது தொல்காப்பிய மூலம் மட்டுமே இருந்தது. மர்ரே எஸ்.ராஜம் பதிப்பாகிய எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, தொல்காப்பியம் ஆகியவற்றோடு ‘பாட்டும் தொகையும்’ என்னும் அகராதியையும் சேர்த்துப் பன்னிரண்டு நூல்களையும் ‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’ நூறு ரூபாய் விலைக்கு வெளியிட்டார்கள். அது 1984 அல்லது 1985 ஆக இருக்கலாம். இளங்கலை மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்த சமயம். கல்லூரி மாணவர்களுக்குப் பத்து விழுக்காடு கழிவில் தொண்ணூறு ரூபாய் முன்பணமாகச் செலுத்தி அந்நூல்களை வாங்கியிருந்தேன். அந்தத் தொல்காப்பிய மூலத்தை மட்டும் கையில் வைத்துப் பாடம் கவனித்தேன். நூலில் ஆங்காங்கே அவர் சொன்ன சான்றுகளைக் குறித்துக் கொள்வேன். தேவைப்படும் விளக்கங்களை என் குறிப்பேட்டில் எழுதுவேன். உரையுடன் கூடிய நூலை வாங்குவதற்கு எனக்கிருந்த பணப் பிரச்சினை காரணமாக இந்த ஏற்பாடு. அவர் நடத்தும் போதோ பிறகோ எந்தச் சந்தேகம் கேட்டாலும் மீண்டும் விளக்கி உரைப்பார். அதனால் எனக்கு மூல நூலும் குறிப்புமே போதுமாக இருந்தன.

ஒருமுறை என் நூலை வாங்கிப் பார்த்தார்; குறிப்புகளையும் கண்டார். எப்போதும் உதடு விரியாமல் புன்னகை பூப்பதுதான் அவர் சிரிப்பு. அப்படி ஒரு சிரிப்போடு ‘இது போதுமா?’ என்றார்.  ‘தேவைன்னா நூலகத்துல பாத்துக்குவங்கய்யா’ என்றேன். தலையை அசைத்துக்கொண்டு போய்விட்டார். அதன் பிறகு அவரது விளக்கம் கூடிற்று; என்னை அவ்வப்போது பார்த்து என் தலையசைப்பைக் கண்ட பிறகே அடுத்த நூற்பாவுக்குப் போவார். எனக்கு அத்தனை முக்கியத்துவம் அவர் கொடுத்தது மகிழ்ச்சியாக இருந்தது. அகமதிப்பீட்டுத் தேர்வுத்தாளைத் திருத்தி முடித்த பிறகு அவரது அறைக்கு அழைத்து என் பதில்களின் நிறைகளைச் சுட்டிப் பாராட்டிவிட்டுக் குறையாக எதுவும் சொல்லாமல் பதில்களை இன்னும் எப்படி மேம்படுத்தலாம் என்று ஆலோசனை வழங்குவார். தமிழாசிரியருக்குரிய அடிப்படைத் தமிழ் இலக்கணம் ஓரளவு எனக்குத் தெரிவதற்கும் உரைகளை ஒப்பிட்டுக் காணும் பார்வைக்கும் அவரது அந்தக் கற்பித்தல் முறையே காரணம்.

மூன்றாம் பருவத்தில் ‘வில்லிபாரதம்’ நடத்தினார். அதில் ‘கன்ன பருவம்’ முழுவதும் பாடம். பேராசிரியர் வில்லிபாரத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். வடசொற்களும் கடும் சந்தமும் கொண்ட அந்நூற்பகுதியைப் பெரும்பாலும் பாடத்தில் வைக்க மாட்டார்கள். இவருக்காகவே அது எங்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டிருந்தது. தன்னாட்சிக் கல்லூரி என்பதால் அது சாத்தியமாயிற்று. பாடம் தொடங்குவதற்கு முன்னர் பாரதக் கதை முழுவதையும் எங்களுக்குச் சொன்னார். அதற்குப் பத்து வகுப்புகள் எடுத்துக்கொண்டார். பிறகுதான் வில்லிபாரதப் பாடம். பாரதக் கதையை அவர் மூலமாகத்தான் முழுமையாகக் கேட்டேன். வில்லிபாரதப் பாடல்களைச் சந்தத்தோடு வாசிப்பார். தங்கு தடையில்லாமல் பாடல் முழுவதையும் வாசித்துவிட்டு எங்களைப் பார்த்துப் புன்னகை செய்வார். மலைத்துப் போயிருப்போம். சந்தி பிரித்து நிதானமாகப் பிறிதொரு முறை பாடலை வாசிப்பார். பாடலின் ஒரு சொல்லையும் விடாமல் பொருள் சொல்வார்.

நேரத்தை அவரைப் போலக் கறாராகக் கடைபிடிப்பவரை அக்காலத்தில் நான் கண்டதில்லை. ஒரு நிமிடம்கூடப் பிசகாமல் வகுப்புக்குள் நுழைந்துவிடுவார். ஒரு நிமிடம்கூட நீளாமல் வகுப்பை முடித்து வெளியேறுவார். அவர் வகுப்புக்குத் தாமதமாகப் போகவே இயலாது. தாமதமாகப் போய் நின்றால் தம் கண்ணாடிக்கு மேல் விழியை உயர்த்திச் சில நொடிகள் பார்ப்பார். ஒரு வார்த்தையும் பேச மாட்டார். சர்வமும் ஒடுங்கிக் கதவோரம் நிற்க வேண்டும். உள்ளே வரும்படி தலையசைப்பார். அவர் பார்வைக்குப் பயந்தே சரியான நேரத்துக்கு வகுப்புக்குப் போய்விடுவோம். தாமதமானால் வகுப்புக்குப் போகாமல் நூலகத்திற்குச் சென்றுவிடுவோம்.

அடர்கறுப்பு நிறம்; நல்ல உயரம். தினம் முகம் மழித்து உடலுக்கு அளவான உடைகளை அணிவார். எல்லாவற்றிலும் நேர்த்தி.  ‘வாப்பா’ என்று அன்போடு அழைப்பார். வெளியே பார்த்தால் ஓரிரு சொற்களே பேசுவார். அவர் பணிகளில் கவனம் கொண்டிருப்பார். வீண் பேச்சு கிடையாது. வகுப்பிலும் வெற்றுச்சொல் ஒன்றும் இருக்காது. இலக்கணம் நடத்தும்போது எங்கள் முகத்தைப் பார்த்துவிட்டு ஏதேனும் நகைச்சுவையாகப் பேச முயல்வார்.  அது பரிதாபமாகத்தான் இருக்கும். அவரால் பாடத்தை விட்டு அந்தப் பக்கம் இந்தப் பக்கம் விலகவே முடியாது. நூற்பாக்களின் அமைப்பைப் பற்றிப் பேசத் தொடங்கினால் வகுப்பைக் கொஞ்சம் லகுவாக்குகிறார் என்று அர்த்தம். அப்படி அவர் சொன்ன விஷயங்களைக் கேட்டு அப்போது ‘தொல்காப்பிய நூற்பாக்களும் இலக்கிய உத்திகளும்’ என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதினேன். பிள்ளைக் கிறுக்கலாகிய அக்கட்டுரையைக் கண்டு பெருமகிழ்ச்சி கொண்டார்.

நான்காம் பருவத்தில் அவருக்கு வகுப்பில்லை. எனினும் எனது திட்டக் கட்டுரைக்கு அவர்தான் வழிகாட்டி. இலக்கணத்திலும் பழந்தமிழ் இலக்கியத்திலும் புலமை சான்றவர் என்றபோதும் என் நவீன இலக்கிய ஆர்வத்திற்குத் தடை போடவில்லை. 1987ஆம் ஆண்டு கணையாழி இதழில் வெளியான சிறுகதைகளை என் ஆய்வுக்கு எடுத்துக்கொள்வதாகச் சொன்னேன். மறுப்பேதும் சொல்லவில்லை. நவீன இலக்கியத்தில் ஆர்வமுடைய என் மனதுக்குகந்த ஆசிரியர் ச.மருதநாயகம் அவர்களையே அணுகித் திட்டக் கட்டுரையை எழுதும்படி சொன்னார். தட்டச்சுப் படியில் ஏராளமான பிழைகள் வந்துவிட்ட போதும் பொறுமையாகத் திருத்திக் கொடுத்தார்.  ‘கருத்துப் பிழை இருந்தால் பரவாயில்லை; மொழிப் பிழைக்கு மன்னிப்பே இல்லை’ என்பதுதான் அவர் எண்ணம். தட்டச்சு செய்து, கட்டடம் கட்டிக் கொண்டு போன திட்டக் கட்டுரை ஏட்டை வெகுநேரம் திருத்தினார்.

எனக்குப் பொறுமையே இல்லை. சக வகுப்புத் தோழர்கள் சமர்ப்பித்துவிட்டார்கள்; நான் பின்தங்கிப் போய்விட்டேன் என்னும் பரபரப்புடன் இருந்தேன். எதிரில் இருந்த நாற்காலியைக் காட்டி உட்காரச் சொல்லிவிட்டுக் கட்டுரை ஏட்டில் ஆழ்ந்துவிட்டார். என்னை ஒரு நொடிகூட ஏறிட்டுப் பார்க்கவில்லை. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம். முதுகலை மாணவரின் திட்டக் கட்டுரையின் தட்டச்சுப் படிக்கு அவர் அவ்வளவு நேரம் ஒதுக்கினார். முடித்த பிறகு ‘ஒவ்வொரு திருத்தத்தையும் விடுதிக்குப் போயிப் பொறுமையாப் பாருங்க’ என்றார். அத்துடன் அவர் எழுதிய ‘தீந்தமிழ் இலக்கணம்’ என்னும் நூலை அப்போது கையொப்பமிட்டு எனக்குக் கொடுத்தார். பட்ட வகுப்புகளுக்கான பாடத் திட்டத்திற்கு எழுதப்பட்ட நூல் அது. அடிப்படை இலக்கணம் முழுவதையும் விளக்கும் நூல். எனக்கு இன்றைக்கு வரைக்கும் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. மொழிநடை தொடர்பான விஷயத்தில் மரபான பார்வை கொண்டவர் அவர். அப்பார்வை அந்நூலில் துலங்கியது. ஆனால் அடிப்படை இலக்கணத்தை எளிமையாக எடுத்துச் சொல்லும் நூல். ஓய்வு பெற்ற பிறகு அதை விரித்துப் பொதுநூலாக ‘நல்ல தமிழ்’ என்னும் தலைப்பில் எழுதினார்.

அவரைச் சந்தித்துப் பல்லாண்டுகள் ஆகிவிட்டன. எனினும் அவரது காட்சிச் சித்திரங்களும் அவர் குரலும் எனக்குள் நிலைத்திருக்கின்றன. மாணவர் மனதில் அப்படிப் பதிவதைத் தவிர ஓர் ஆசிரியருக்கு வேறென்ன வேண்டும்? தம் துறையில் ஆழ்ந்த புலமையும் பணியில் அர்ப்பணிப்பும் கற்பித்தலில் ஆர்வமும் நிறைந்த ஆசிரியர் அவர். எண்பத்தெட்டு ஆண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்த அவருக்கு இந்த நன்றியுள்ள மாணவனின் அஞ்சலி.

—–   09-09-20