இன்றைய மின்னம்பலத்தில் நண்பர் ராஜன் குறை ‘தேர்தலைத் திரும்பிப் பார்ப்போம்: அகில இந்திய அண்ணா தி.மு.க.வின் எதிர்காலம்’ என்னும் தலைப்பில் அரசியல் கட்டுரை ஒன்றை ( https://minnambalam.com/politics/2021/06/28/16/ADMK-post-election-review-and-its-future ) எழுதியுள்ளார். அரசியல் விவாதத்திற்குள் நான் போகவில்லை. அதை முன்வைத்து மொழி தொடர்பான சிறுகுறிப்பு மட்டும் எழுதுகிறேன்.
அக்கட்டுரை இப்படித் தொடங்குகிறது: ‘தமிழில் ஒரு வார்த்தைக்கு முன்னால் ‘அ’ என்ற எழுத்து சேர்க்கப்படும்போது அது அந்தச் சொல்லுக்கு எதிர்மறையான பொருளைத் தருவது வழக்கம். ‘நீதி’ என்ற சொல்லுக்கு முன் ‘அ’ சேர்த்தால் ‘அநீதி’ என்ற சொல்லாக மாறும்.’
ஒரு சொல்லுக்கு முன் ‘அ’ என்னும் ஒட்டைச் சேர்த்தால் அதன் எதிர்ச்சொல் கிடைக்கும் என்பதற்கு இன்னும் பல சான்றுகளைத் தரலாம். சுத்தம் – அசுத்தம், காலம் – அகாலம், நாகரிகம் – அநாகரிகம்.
அதே போல ஒரு சொல்லுக்கு முன்னொட்டாக ‘அன்’ என்பதைச் சேர்த்தால் எதிர்ச்சொல் கிடைக்கும் என்பதற்கும் பல சான்றுகள் உள்ளன. ஆதரவு – அனாதரவு, ஆதி – அனாதி, அவசியம் – அனாவசியம்.
‘அ’, ‘அன்’ ஆகியவற்றில் ஒன்றை முன்னொட்டாகச் சேர்க்கும் போது அச்சொல் எதிர்ச்சொல்லாக மாறும் என்றால் அது சமஸ்கிருதச் சொல்; தமிழ்ச் சொல் அல்ல. தமிழில் கலந்திருக்கும் சமஸ்கிருதச் சொல்லைக் கண்டறிவதற்கு இந்த முன்னொட்டுக்கள் ஒருவழி. நீதி – அநீதி என்பன சமஸ்கிருதச் சொற்கள்.
தமிழில் ஒரு சொல்லுக்கு எதிர்ச்சொல்லாக இன்னொரு சொல்லே அமையும். நன்மை – தீமை, உண்மை – பொய், கோழை – வீரன். ஒரு சொல்லின் பின்னொட்டாக இல்லை, இன்மை, அல்ல முதலிய சொற்கள் சேர்ந்து எதிர்மறைப் பொருளைத் தருவதும் உண்டு. தூய்மை – தூய்மையின்மை, கடன் – கடன் இல்லை, வழி – வழி அல்ல. இவை பெயர்ச்சொற்கள். வினைச்சொற்களில் ஆகார எதிர்மறை இடைநிலை சேர்ந்து அச்சொல் வடிவமே எதிர்மறைப் பொருளைத் தரும். சொல் – சொல்லாதே, பார் – பார்க்காதே, ஓடு – ஓடாதே.
தமிழ்ச் சொற்களுக்கு ‘அ’, ‘அன்’ ஆகிய முன்னொட்டுக்களைப் போட்டு எழுதினால் பெரும்பாலும் ஒட்டாது. ஒட்டும் சொல்லும் தனித்தனியாக நிற்கும். 1990களில் பல கோட்பாடுகள் தமிழுக்கு அறிமுகம் ஆன போது கலைச்சொற்களை உருவாக்க இந்த முன்னொட்டு முறையைச் சிற்றிதழ்களில் பலர் பயன்படுத்த முயன்றனர். அம்முயற்சி பெரும்பாலும் தோல்வியாகவே முடிந்தது. அப்படி ஒட்டாத சொற்களில் ஒன்று, புனைவு – அபுனைவு.
அக்காலத்தில் தோழர் அ.மார்க்ஸ் பல்வேறு விஷயங்களை முன்னெடுத்தார். அவை மார்க்சியத்திற்கு எதிரானவை என மார்க்சிய இயக்கங்கள் கடுமையாக எதிர்த்தன. அவர் மார்க்சியத்திற்கு எதிரானவர் என்பதைக் குறிக்க அவர் பெயரைத் தோழர்கள் ‘அமார்க்ஸ்’ என்று உரையாடல்களில் பயன்படுத்தியது உண்டு.
—– 28-06-21
Comments are closed.