அமெரிக்காவில் இலக்கியப் பயண அனுபவங்கள்! பகுதி – 2
என்னுடைய அமர்வு கட்டடத்துக்குள் இருந்த ஓர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிற்பகல் மூன்று மணிக்கு அமர்வு. இரண்டு மணிக்கெல்லாம் கிரீன் ரூம் என்னும் விருந்தினர்களுக்கான அறைக்குச் சென்றுவிட்டோம். சில நாட்களுக்கு முன்தான் எனது நாவல் ‘One Part Woman’ அமெரிக்கப் பதிப்பு வெளியிடப்பட்டிருந்தது. நாவல் பிரதியை எனக்கு உறைவிட முகாமுக்கே அனுப்பியிருந்தார்கள். தமிழ் நாவல்கள் பல ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இந்தியப் பதிப்பக வெளியீடாக வந்திருக்கின்றன. அநேகமாகத் தமிழ் நாவல் ஒன்றின் அமெரிக்கப் பதிப்பு வெளியாவது இதுதான் முதன்முறை என்று நினைக்கிறேன். நான் அமெரிக்காவில் இருக்கும்போதே அது வெளியானது எனக்குப் பெருமகிழ்ச்சி கொடுத்தது. புரூக்ளின் புத்தகக் காட்சியில் அது விற்பனைக்கும் கிடைத்தது.
அவ்வெளியீட்டில் முக்கியப் பங்கு வகித்தவரான ப்ரியா துரைசாமி வந்திருந்தார். பெங்களூரைச் சேர்ந்தவர். இப்போது அமெரிக்க வாசம். அவருக்கு ஓரளவு தமிழ் தெரியும். அவருடைய அம்மாவும் வந்திருந்தார். அவருக்கு நன்றாகவே தமிழ் தெரியும். தமிழ் நூல்களை வாசிக்கும் பழக்கமும் உண்டு. என் நாவலின் அமெரிக்கப் பதிப்பை வெளியிட்ட ‘குரோவ் அட்லாண்டிக்’ பதிப்பகத்தைச் சேர்ந்தவரும் என் நாவலுக்குச் செம்மையராகச் செயல்பட்டவருமாகிய பீட்டர் வந்திருந்தார். மொழிபெயர்ப்பாளர் கனிமொழி தம் கணவர், மகன்கள் இருவருடன் வந்தார்.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் Jeanne McCulloch என்பவர். புரூக்ளினில் வசிக்கும் அவர் மிக முக்கியமான பத்திரிகையாளர். The Paris Review, Tin House, The New York Times Book Review, Vogue, O Magazine, Allure, The Northwestern Review முதலிய பத்திரிகைகளில் எழுதி வருபவர். நிகழ்வில் இன்னும் இரு எழுத்தாளர்களும் பங்கேற்றனர். கொலம்பிய எழுத்தாளர் Héctor Abad என்பவர் ஒருவர். கொலம்பியாவின் பிரபல எழுத்தாளர். மிக முக்கியமான இலக்கிய விருதுகளைப் பெற்றவர். முக்கிய விருதுகளின் குறும்பட்டியல்களில் அவரது நூல்கள் பல இடம்பெற்றிருந்தன. கொலம்பியத் துணை ராணுவத்தினரால் 1987ஆம் ஆண்டு கொல்லப்பட்ட தம் தந்தையின் நினைவாக இருபதாண்டுகளுக்குப் பின் அவர் எழுதிய Oblivion: A Memoir என்னும் நாவல் மிகவும் புகழ்பெற்றது. இன்னொருவர் Preti Taneja என்பவர். இங்கிலாந்தில் பிறந்த இவர் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். பெற்றோர் இந்தியர்கள். தம் இளவயது விடுமுறைக் காலங்களை டெல்லியில் கழித்தவர். பத்திரிகையாளராகப் பணியாற்றும் இவர் ஆங்கிலத்தில் குறிப்பிடத்தக்க நாவல்களை எழுதியுள்ளார். இவரது சமீபத்திய நாவல் We That Are Young.
எங்கள் அமர்வின் தலைப்பு ‘The Fragility of Families’ என்பதாகும். மூவரின் நாவல்களும் குடும்ப அமைப்பை மையமாகக் கொண்டும் அதில் ஏற்படும் உடைவுகளைப் பேசுவனவாகவும் இருக்கின்றன என்பதால் இந்தத் தலைப்பு போலும். ஒருமணி நேர அமர்வு. இத்தகைய அமர்வுகளில் நமக்குக் கால் மணிநேரம் கிடைத்தால் பெரிது. மூவரையும் அறிமுகப்படுத்துவதும் தலைப்பு தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் பேசுவதும் எனக் கால் மணிநேரம் போய்விடும். இரண்டு அல்லது மூன்று கேள்விகளுக்குப் பதில் சொன்னால் போதுமானது. மொழிபெயர்ப்பு நேரமும் அதில் சேரும். பி.கே.சிவகுமார், கனிமொழி குடும்பத்தினர், ப்ரியா துரைசாமியும் அவரைச் சேர்ந்தவர்களும் எனக் கிட்டத்தட்ட பத்துப் பேர் தமிழ் தெரிந்தவர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். எனினும் இன்னும் கொஞ்சம் தமிழ் நண்பர்களை அழைத்திருக்கலாம் எனத் தோன்றியது.
பெர்லின் இலக்கியத் திருவிழா
இந்தியாவின் பிற மாநிலங்களில் நடக்கும் இலக்கியத் திருவிழாக்கள் சிலவற்றில் பங்கேற்றிருக்கிறேன். ஜெர்மனியின் பெர்லினில் கடந்த ஆண்டு (2018 செப்டம்பர்) நடைபெற்ற உலக இலக்கியத் திருவிழாவில் பங்கேற்கும் வாய்ப்பும் அமைந்தது. அதில் ஓர் அமர்வு முழுக்க எனக்கே எனக்கு. இந்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதும் நமீதா கோகலேதான் ஒருங்கிணைப்பாளர். பெர்லினில் வசிக்கும் பிரசாந்தி சேகரம் மொழிபெயர்ப்பாளர். பிரசாந்தி ஈழத்தைச் சேர்ந்தவர். சிறுவர் இலக்கியப் படைப்புகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். நாட்காட்டி மீது பெருங்காதல் கொண்டவர். தமிழ் நாவல்களில் இடம்பெறும் உணவுக் குறிப்புகளைக் கருவாகக் கொண்டு அவர் முன்னின்று தயாரித்த 2017ஆம் ஆண்டுக்கான அருமையான நாட்காட்டியைக் காலச்சுவடு வெளியிட்டது. அதைத் தொடர முடியாமல் போனது வருத்தமானது.
பெர்லினில் இருந்த புத்தகக் கடை ஒன்றுக்கு என்னை அவர் அழைத்துச் சென்றார். பல அடுக்கு மாடி கொண்ட கட்டடம் முழுவதும் புத்தகங்கள். அங்கேயே ஒருபுறம் உட்கார்ந்து வாசிக்கலாம். வாசிப்பவருக்குத் தொந்தரவு தராத இடம். அருமையான இருக்கைகள். காபிக் கடையும் உண்டு. ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு வகைப் புத்தகம். அத்தனை பெரிய புத்தகக் கடையை அதற்கு முன் நான் பார்த்ததில்லை. ஒரு நூலுக்குப் பலவிதமான பதிப்புகள் ஒரே அடுக்கில் இருந்தன. செவ்வியல் நூல்களுக்குத் தனிப் பகுதி. அகராதிகளுக்கு மட்டும் ஒரு பகுதி. இப்படிப் பல. வெகுநேரம் பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றியது. ஒரு தளத்தில் இருந்த விதவிதமான நாட்காட்டி வகைகளை எனக்குக் காட்டினார். ஆயிரக்கணக்கான வகைகள். அவற்றை அவர் எடுத்துக்காட்டிக் விளக்கியபோதுதான் அத்துறையில் அவருக்கிருந்த ஆர்வம், அறிவு ஆகியவை எனக்குப் புலப்பட்டன.
பெர்லின் இலக்கியத் திருவிழா அமர்வுக்குக் கணிசமான பார்வையாளர்கள் வந்திருந்தனர். அது குறைவுதான் என்றும் இன்னும் பலர் வர விருப்பமிருந்தும் இயலவில்லை என்றும் பிரசாந்தி சொன்னார். ஓர் எழுத்தாளர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்குச் செல்ல விரும்பினால் அவரைப் பற்றிய தகவல்களைப் படித்துத் தெரிந்துகொள்வதோடு முடிந்தால் அவரது படைப்பு எதையாவது வாசித்துவிட்டும் செல்வதையே பெரும்பாலான வாசகர்கள் விரும்புவார்களாம். எழுத்தாளரிடம் கையொப்பம் பெறுவது, அவரது நூலை வாங்குவது ஆகிய செயல்களும் அவர்களுக்குப் பிடித்தமானவை. அத்தகைய தயாரிப்பு இல்லாமல் செல்வதைத் தவிர்த்துவிடுவார்களாம். என் எழுத்துகளை வாசிக்க அவகாசம் போதாமையால் பலர் வரவில்லை என்று பிரசாந்தி சொன்னார். நேரமில்லை என்பதால் இலக்கிய நிகழ்ச்சிக்குச் செல்லவில்லை என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். பங்கேற்கும் எழுத்தாளரின் படைப்புகளை வாசிக்க அவகாசமில்லை என்பதால் போகவில்லை என்பது எனக்கு ஆச்சரியமான செய்தியாக இருந்தது. ஆகவே இத்தகைய நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது எனக்குப் பதற்றம் ஏற்படும். வாசகர்களே தயாரிப்புடன் வரும்போது அவர்களை ஏமாற்றும் வகையிலோ, சமாளிக்கும் முறையிலோ நம் அமர்வு இருந்துவிடக் கூடாது. அவர்களுக்குக் குறைந்தபட்ச நிறைவு உண்டாகும் வகையில் பேச வேண்டும் என எண்ணி நன்றாக முன்தயாரிப்பு செய்துகொள்வேன்.
இந்தியாவின் வட்டார மொழி
இப்போது புரூக்ளின் புத்தகக் காட்சி அரங்கு. அங்கு வரும் வாசகர்கள் மிகுந்த தரமுடையவர்களாக இருப்பார்கள் என்பதால் எனக்குப் பதற்றம் கூடுதலாகவே இருந்தது. பி.கே.சிவகுமார் உரையாடலில் வல்லவர். அவருடனான உரையாடல் என் பதற்றத்தைக் கொஞ்சம் தணித்தது. புகழ்பெற்ற இரு எழுத்தாளர்களும் அந்த அமர்வில் இருந்த காரணத்தால் பார்வையாளர் கூட்டம் அரங்கு நிறைந்திருந்தது. இத்தகைய இடங்களில் எல்லாம் என்னை அறிமுகப்படுத்தும்போது ‘இந்தியாவின் வட்டார (பிராந்திய) மொழிகளில் (regional language) ஒன்றாகிய தமிழில் எழுதுபவர் இவர்’ என்று சொல்வது தவறாமல் இடம்பெறும். சிலர் மொழி அரசியல் பற்றிய கவனத்துடன் அவ்விதம் சொல்வார்கள். சிலருக்கு அப்படி அறிமுகப்படுத்துவதில் இருக்கும் நுண்ணரசியல் விளங்காது. ஆனால், இத்தகைய அறிமுகம் ஒவ்வொரு முறையும் எனக்குப் பெரிதும் சங்கடத்தையும் வருத்தத்தையும் கொடுப்பதாகவே இருக்கிறது.
(பயணம் தொடரும்…)
நன்றி: மின்னம்பலம், 11 ஜனவரி 2019
Comments are closed.