விகடன் தடம் இதழ் நேர்காணல்

தடம் இதழில் இடம்பெற்ற என் நேர்காணலின் முழு வடிவம்:

Image may contain: ரமணி மோகனகிருஷ்ணன் and Elamathi Prakash, people smiling

 

 

  1. மாதொருபாகனுக்கு முன்/பின் அல்லது பெருமாள் முருகன் இறந்ததாக அறிவிக்கப்பட்டதற்கு முன் தற்போது எழுத வந்ததற்குப் பின் உள்ள பெருமாள் முருகனிடம் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? முன்னர் இருந்த பெருமாள் முருகனுக்கும் இப்போது இருக்கும் பெருமாள் முருகனுக்கும் உள்ள வேற்றுமைகள் என்ன? இன்னும் இந்த இரண்டு காலகட்டத்திலும் இருந்த, இருக்கும் பெருமாள் முருகனிடம் காணப்படும் ஒற்றுமைகள் என்ன?

இருவரும் உடலளவில் ஒருவர்தான்; அது ஒன்றுதான் ஒற்றுமை. வேற்றுமைகள் பல.

படைப்பு பற்றிய பார்வையில் இருவருக்கும் பெரும் வேறுபாடு இருக்கிறது. எதார்த்தவாதம், இயல்புவாதம் ஆகிய எழுத்து முறைகளில் வலுவாகக் காலூன்றி நின்றவர் முன்னவர். அதனடிப்படையில் எழுதப்படாத நிலப்பகுதிகள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றில் மிகுந்த கவனம் அவருக்குண்டு. பெரிய தணிக்கை இல்லாமல் எதையும் நேரடியாக எழுதும் வேகமும் மனத்துணிவும் அவருக்கு இருந்தன. அவற்றிலிருந்தெல்லாம் விடுபடுவது குறித்துச் சிந்திப்பதும் விடுபட முயல்வதுமாகப் பின்னவர் இருக்கிறார்.

வாழ்க்கை அனுபவங்களைப் பரிசீலிப்பதில் பொறுமையும் நிதானமும் முன்னவருக்கு இல்லை; அதன் விரிவை  அவ்வளவாக அவர் உணரவில்லை என்றும் சூழல் சார்ந்த கவனம் அவருக்குப் போதுமான அளவு இல்லை என்றும் நினைக்கிறேன். பின்னவருக்குப் பொறுமையும் நிதானமும் கூடியிருக்கின்றன. சூழல் சார்ந்த கவனமும் வாழ்வின் எல்லை பற்றிய பார்வையும் சேர்ந்து சில கண்டடைதல்களை நோக்கிப் பயணம் செய்யும் நம்பிக்கை கொண்டவராக இவர் தோன்றுகின்றார்.

மொழியின் ஆற்றலை முழுமையாக உணராமலே அதை ஆற்றோட்டம் போலப் போகவிட்டுப் பயன்படுத்திக் கொண்டவர் முன்னவர். ஒவ்வொரு சொல்லின் முனையையும் பரிசோதித்துத் தேவையானால் கூர்மையாக்கி, இல்லையானால் கூரை மழுங்கச் செய்து பயன்படுத்த முயல்கிறார் பின்னவர். இப்படிப் பல.

முன்னவர் இப்போது இல்லை; அவரது மறுபிறப்புத்தான் பின்னவர் என்று வேண்டுமானால் சொல்லலாம். மறுபிறப்பில் முந்தைய பிறப்பின் சில நினைவுகள் அவ்வப்போது தோன்றக்கூடும். மற்றபடி இரண்டும் வேறுவேறான வாழ்க்கை முறைகள்.

 

  1. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நேரடியாக அரசியலை எழுத முடியாத இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாக நினைக்கிறீங்களா? இனி அப்படி எழுதும் வாய்ப்பு இல்லையா?

நான் ஒருபோதும் அரசியலை நேரடியாக எழுதியதில்லை. இலக்கிய நோக்கில் அரசியலைக் கண்டதும் அக்கோணத்தில் எழுதியதும் உண்டு. இப்போதும் அரசியலை நேரடியாக எழுதும் எண்ணமில்லை. எதிலும் இலக்கியப் பார்வையின் வலுவைக் கூட்டிக்கொள்ள முயல்கிறேன்.  அது எனக்கென ஒரு வழியை அமைத்துத் தருகிறது. மேலும் பெருமகிழ்ச்சி தரும் அனுபவமாகவும் இருக்கிறது.

 

  1. மாதொருபாகன்மீது வைக்கப்படும் விமர்சனத்தை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிந்ததா?

விமர்சனத்தை ஏற்றுக்கொள்வது, ஏற்றுக்கொள்ளாமை என்பது பிரச்சினை அல்ல. பரிசீலிப்பதுதான் தேவை. அவ்வகையில் பரிசீலிக்கத் தேவையான கருவிகளை உருவாக்கிக்கொள்கிறேன். அவற்றின் வழியாக விமர்சனங்களைப் புரிந்துகொள்ள முயல்கிறேன். ஒவ்வொரு விமர்சனத்திற்கும் பின்னணி இருக்கும். காழ்ப்பினால் வருவது, பொறாமையால் வருவது, சுயநலத்தால் வருவது, அகந்தையால் வருவது, கொள்கை வேறுபாட்டால் வருவது, அரசியல் தேவையால் வருவது, அடையாளச் சிக்கலால் வருவது என எத்தனையோ காரணங்கள். அந்தப் பின்னணியை இழை பிரித்து அறிந்துகொண்டால் பரிசீலிப்பது எளிது. எத்தகைய பின்னணி கொண்டிருந்தாலும் அதிலிருந்து எனக்குப் பயன்படக்கூடியது ஏதாவது இருக்கிறது என்று தோன்றினால் அதை எடுத்துக்கொள்வதில் தயக்கமில்லை. படைப்பின் மீது ஏற்பும் நேசமும் கொண்ட விமர்சனங்களை கண்டுகொள்வதும்  உவப்போடு எதிர்கொள்வதும் எப்போதும் என் வழக்கம். மாதொருபாகன் மீதான விமர்சனங்களையும் இவ்விதமே எதிர்கொள்கிறேன்.

 

  1. இந்தச் சர்ச்சைக்குப் பின் இந்திய அளவில் அறியப்படும் ஒரு பெரிய எழுத்தாளர் என்ற அடையாளம் கிடைத்துள்ளதா? பெருமாள்முருகனுக்கு என்றில்லாமல் சர்சைக்குக் கிடைத்த வரவேற்பா இது?

அடையாளங்களைக் குறிவைத்து ஒருபோதும் நான் இயங்கியதில்லை. எனக்கு அடையாளங்கள் தேவையுமில்லை.  அடையாளம் இடுவது என் பிரச்சினையுமல்ல. என் செயல்கள் சார்ந்து உருவாகும் அடையாளங்களை நான் என்ன செய்ய முடியும்? அடையாளங்களை அழிக்கவும் நான் முயல்வதில்லை. உவப்பானதில் ஈடுபடும் மகிழ்ச்சி மட்டுமே எனக்குப் போதுமானது.

என் நாவல்கள் இரண்டு வ.கீதா அவர்களின் மொழிபெயர்ப்பில் 2004ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியாயின. அவற்றில் ஒன்று ஆசிய அளவில் முக்கியமான விருதாகிய க்ரியாமா விருதின் குறும்பட்டியலில் இடம்பெற்றது. ஆங்கிலம் வழியாக போலிஷ் மொழிக்கும் ஒரு நாவல் சென்றது. சர்ச்சைக்கு முன்னரே மாதொருபாகன் ஆங்கிலத்தில் வெளியாகியிருந்தது. பூக்குழி மொழிபெயர்ப்பு வேலையும் அப்போதே நடந்துகொண்டிருந்தது. சர்ச்சையின் காரணமாக என் எழுத்துக்களின் மேல் கூடுதல் கவனம் ஏற்பட்டதை நான் மறுக்கவில்லை. ஆனால் அதற்கு முன்னரே ஆங்கிலத்தில் வாசிக்கும் இந்திய வாசகர்களுக்கு என் எழுத்துக்கள் அறிமுகமானவைதான். அதைப் பற்றித் தமிழ்ச் சூழல் அறியவில்லை என்பதற்கு நான் பொறுப்பாக முடியாது.

மேலும் மொழிபெயர்ப்புக்கு ஒரு நூலைத் தேர்வு செய்யும் நடைமுறைகளில் ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிப் பதிப்பகங்கள் மிகக் கவனமாக இருக்கின்றன. ஏற்புக்கு  இலக்கியத் தரம் உள்ளிட்ட பல அளவுகோல்களை வைத்திருக்கிறார்கள். ஒரு நூலை வெளியீட்டுக்குத் தேர்வு செய்யும் படிநிலைகள் ஏராளம். அறிமுகத்திற்கு சர்ச்சை பயன்படலாமே தவிர,  ஏற்புக்கு  ஒருபோதும் சர்ச்சை பயன்படாது.

 

  1. அந்தப் பிரச்னை நடந்த சூழலில், அதையொட்டி எழுதாமல் இருந்த சூழலில் கற்றுக்கொண்ட விஷயங்கள் என்ன?

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல்

என்னும் திருக்குறளை அப்போதுதான் முழுமையாக உணர்ந்துகொண்டேன். நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் அனைத்தும் அதற்குள் அடங்கிவிடுபவை.

—–

விகடன் தடம், ஜனவரி, 2019.

 

Add your first comment to this post