விதைக்‘கலாம்’

 

 

விதைக்‘கலாம்’

 

விதைக்‘கலாம்’

புதுக்கோட்டை ‘வீதி’ நூறாம் நிகழ்வு 01-10-22 அன்று நடைபெற்றபோது சமூக உணர்வோடு இயங்கும் பல்வேறு தரப்பினரையும் பாராட்டி விருதுக் கேடயம் வழங்கினர். அதில் ‘விதைக்கலாம்’ என்னும் அமைப்பைச் சேர்ந்த சிலரும் இருந்தனர். மரக்கன்றுகள் நடும் பணியைச் செய்யும் அமைப்பு அது. ஒவ்வொரு ஊரிலும் இப்படிச் சிலர் இருக்கிறார்கள் என்பதால் அதைப் பற்றி விரிவாகக் கேட்டுக் கொள்ளவில்லை.

இரவு புதுக்கோட்டையில் தங்கினேன். மறுநாள் (02-10-22, ஞாயிறு) காலை விரைவில் கிளம்பத் திட்டமிட்டிருந்தேன். விடிகாலை ஆறு மணிக்கெல்லாம் தோழர் முத்துநிலவன் வந்து கதவைத் தட்டி எழுப்பினார். ‘தேநீர் குடித்துவிட்டுக் கிளம்புங்கள்’ என்று அழைத்தார். தங்கியிருந்த விடுதிக்கு அருகமைந்த கடைக்குச் சென்றோம். அப்போது  ‘விதைக்Kalam’ எனப் பெயர் பொறித்த பச்சைச் சட்டை அணிந்துகொண்டு மூவர் அங்கே வந்தனர். முதல் நாளே அறிமுகம் ஆனவர்கள். எங்களோடு தேநீர் அருந்திய அவர்களிடம் ‘விதைக்கலாம்’  ( https://vithaikkalam.blogspot.com/ ) அமைப்பின் செயல்பாடுகள் பற்றிக் கேட்டேன்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம்  இறந்தபோது அவர் நினைவாக ஏதாவது செய்யலாம் என்று நண்பர்கள்  கூடிப் பேசியதில் பிறந்த அமைப்பு.  ‘விதைக்கலாம்’ என்பதில் கலாம் பெயர் அமைந்திருக்கிறது. வினைச்சொல்லால் அமைப்புக்குப் பெயர் சூட்டியிருப்பது சிறப்பு. விதைக்கலாம், வளர்க்கலாம், சேர்க்கலாம், பெருக்கலாம், அடிக்கலாம், அறுக்கலாம் என எத்தனையோ  ‘கலாம்’ சொற்கள் இருக்கின்றன. இவையெல்லாம் வேளாண் சொற்கள். பிறபொருள் பயன்பாடு பின்னர் வந்திருக்கலாம். இத்தனை வினைச்சொற்கள் அப்துல் கலாமை நினைவுகூர்கின்றன. மிகப் பொருத்தமான பெயர்  ‘விதைக்கலாம்.’

மரம் வளர்ப்பதில் ஆர்வமுடைய நண்பர்கள் சிலர் கூடித் தொடங்கிய இவ்வமைப்பில் இப்போது ஏறத்தாழ நூறு பேர் உள்ளனர். ஒவ்வொரு ஞாயிறு காலையிலும் வாய்ப்புள்ள சிலர் கூடுகின்றனர். ஏற்கனவே தீர்மானித்து வைத்த இடத்திற்குச் சென்று மரக்கன்றுகளை நடுகின்றனர். நடும் இடத்தோடு தொடர்புடைய ஒருவர் நீரூற்றிப் பராமரிக்க ஒப்புதல் தர வேண்டும் என்பது கட்டாயம். கன்றை நட்டுப் பிரம்புக் கூண்டமைத்துத் தருகின்றனர். கல்வி நிறுவனங்கள், விளையாட்டுத் திடல்கள், அரசு அலுவலகங்கள், சாலைகள் உள்ளிட்ட பொதுவெளிகளில்  நடுவதால் வேம்பு, புங்கை, வேங்கை என  நிழல் தரும் மரங்களையே தேர்வு செய்கின்றனர்.

 

விதைக்‘கலாம்’

 

‘விதைக்கலாம்’ அமைப்புக்கு எந்தப் பொறுப்பாளரும் இல்லை. அன்றன்றைக்கு ஆகும் செலவுகளை எளிதாகப் பகிர்ந்து கொள்கின்றனர். இதுவரைக்கும் 370 வாரம். ஆயிரக்கணக்கான கன்றுகள். 90 விழுக்காடு கன்றுகள் வளர்ந்திருக்கின்றனவாம். இது 371ஆவது வாரம். ‘எங்களோடு வந்து ஒரு கன்றை நட்டுவிட்டுச் செல்ல முடியுமா?’ என்று கேட்டனர். எனக்கு நேரம் குறைவாக இருந்தாலும் ஒத்துக்கொண்டு விரைவாகக் கிளம்பிச்  சென்றேன். நகரத்திலிருந்து கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அரசு முன்மாதிரிப் பள்ளி விளையாட்டுத் திடலில் வேங்கை மரக் கன்று ஒன்றை நட்டேன்.

‘விதைக்கலாம்’ நண்பர்களின் அன்பில் திளைத்துத் திரும்பினேன். அடுத்த முறை புதுக்கோட்டைக்கு வரும்போது இந்தக் கன்றைப் பார்க்க வருவேன், காப்பாற்றி வளர்த்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். பள்ளி ஆசிரியர் ஒருவர் தாம் பொறுப்பெடுத்திருப்பதாகவும் காப்பாற்றி விடுவேன் என்றும் உறுதி தந்தார். மகிழ்ச்சியோடு ஞாயிறு காலை கழிந்தது. அடுத்த முறை அக்கன்றைப் பார்க்கவே புதுக்கோட்டைக்குப் போக வேண்டும்.

—–

Add your first comment to this post

Comments are closed.