அறைகலனும் அறைக்கலனும்

You are currently viewing அறைகலனும் அறைக்கலனும்

இன்றைய ‘தி இந்து’ நாளிதழ் இணைப்பு ‘சொந்த வீடு’  பகுதியில் ‘அறைகலன்கள்’ வாங்கப் போகிறீர்களா?’ என்னும் தலைப்பில் ஆர்.எஸ்.ஒய். என்பவர் எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது. கட்டுரையின் தலைப்பிலும் உள்ளும் ‘அறைகலன்’ என்னும் சொல்லாட்சி பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. Furniture என்னும் ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பு இது.

Furnitureஐத் தட்டுமுட்டுச் சாமான் என்று எழுதியதுண்டு. அது சரியல்ல. எனினும் சரியான சொல் அமையவில்லை. தட்டுமுட்டுச் சாமான் என்பது அன்றாடம் வீட்டில் புழங்கும் எல்லாவகைப் பொருள்களையும் குறிக்கும். எப்போதாவது பயன்படுத்துவதற்காகவோ பழுதாகிப் போய்விட்டதாலோ தனியாகப் போட்டு வைத்திருக்கும் பொருள்களையும்  இச்சொல் குறிக்கும். மேசை, நாற்காலி, சோபா உள்ளிட்ட உட்காரவும் உட்கார்ந்து செய்யும் வேலைகளுக்காகவும் பயன்படும் பொருள்களுக்கான பொதுச்சொல்லாக ஆங்கிலத்தில் ‘Furniture’ உள்ளது. அப்படி ஒரு பொதுச்சொல் தமிழில் இல்லை. பழைய கால வீடுகளின் அமைப்பில்  ‘Furniture’க்கெனத் தனியிடம் நம் சமூகத்தில் இல்லை போலும். ஆனால் இன்றைய  வீடுகளில் வரவேற்பறை முக்கிய இடம்பெறுகிறது. அங்கே  ‘Furniture’களுக்குத் தான் இடம். 

‘Furniture’ விற்கும் கடைகள் ஏராளம் இருக்கின்றன. கடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்னும் விதியை அரசு கறாராக அமல்படுத்தியபோது ‘Furniture’ கடைகள் எல்லாம் ‘அறைகலன்கள்’ என்னும் பெயர் பூண்டன. இச்சொல்லை உருவாக்கியவர்கள் யாரெனத் தெரியவில்லை. தமிழ் வளர்ச்சித் துறையினர் உருவாக்கிய சொல்லாக இருக்கலாம். இச்சொல் குறித்துச் சிந்திக்க ஒரு வாய்ப்பு எனக்குச் சென்ற ஆண்டு உருவாயிற்று.

காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டது. சுகுமாரன் மொழிபெயர்ப்பில் உருவான அந்நாவலின் மொழிநடையைச் செம்மை, மெய்ப்பு ஆகியவற்றிற்காக மூன்று நாள் நாகர்கோவிலில் தங்கினேன். மூன்று நாட்களில் ஓர் ஓட்டமாகவே நாவலை வாசித்துத் திருத்தங்கள் செய்ய முடிந்தது. எனினும் அது மிக முக்கியமான அனுபவமாக அமைந்தது. அந்த வாய்ப்பு இல்லாது போயிருந்தால் நாவலை உடனடியாக வாசித்திருக்க மாட்டேன். பெரும்படைப்பாளி ஒருவரின் நாவல் தமிழில் வெளியாகும் சந்தர்ப்பத்தில் அதற்கு அணில் உதவியாக என் பங்களிப்பும் சேர்ந்தது என்னும் திருப்தியும் உண்டானது. அந்நாவலில் ‘Furniture’ என்னும் சொல்லுக்கு ‘அறைகலன்’ எனச் சுகுமாரன் பயன்படுத்தியிருந்தார். அச்சொல் பற்றிய என் கவனம் அதற்கு முன் நேரவில்லை.

அறைகலன் என்பதில் இரண்டு சொற்கள் உள்ளன. அறை என்பது இங்கு Room என்பதைக் குறிக்கும். கலன் என்னும் சொல்லின் மூலவடிவம் ‘கலம்’ என்பதாகும். மகரத்திற்குப் போலியாகச் செய்யுளில் னகரம் வரும். இடம் – இடன், நிலம் – நிலன், அகம் – அகன் என்பன சான்றுகள். கலம் என்பதன் போலி வடிவமாகிய கலன் என்பதே பிற்காலத்தில் மூலவடிவம் போலச் செயல்படத் தொடங்கிவிட்டது. அணிகலம் என்று யாரும் எழுதுவதில்லை. அணிகலன் தான். கலம் என்பதற்குப் பாத்திரம், நகை முதலிய பொருள்கள் உண்டு. பொதுச்சொல் என்பதால் கலம் என்பதைப் பயன்படுத்தலாம். அதன் போலி வடிவமாகிய கலன் ஏற்கனவே வழக்கில் இருப்பதால் அதையே கையாளலாம். புதிதாக உருவாகும் கலைச்சொல் இரட்டைச் சொற்களின் சேர்க்கையாக அமைவது இயல்பு. அதுபோல அறையும் கலனும் இணைந்து இச்சொல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சொல்லின் பொருத்தம் பற்றி எனக்குக் குழப்பம் இல்லை. ஆனால் சொல்லை ஒலிக்கும்போது ‘அறை’ ‘கலன்’ ஆகிய இரண்டுக்கும் நடுவில் சிறு இடைவெளி தோன்றுகின்றது. அது சொல்லின் இயல்பைக் குலைத்துவிடுகிறது. ‘அறைக்கலன்’ என்று சொன்னால் இயல்பாக இருக்கிறது. இரண்டு சொற்களும் இணைந்து ஒற்றைச்சொல் போல ஒலிக்கின்றன. அதாவது இலக்கணப்படி சொன்னால் ‘ஒருசொல் நீர்மைத்து’  என்னும் தன்மையைப் பெறுகின்றன. ஆக ‘அறைக்கலன்’ என ஒற்று மிகுந்தே வரும் எனப் பட்டது. அதற்குரிய இலக்கணக் காரணம் சட்டெனப் பிடிபடவில்லை.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் இலக்கணம் பயிலவும் பயிற்றுவிக்கவும் செய்கிறேன் என்றாலும் சில விஷயங்கள் சட்டென மண்டையில் உறைப்பதில்லை. இந்தச் சொல்லில் சின்னக் குழப்பம் இருப்பதும் ஒரு காரணம்.  ‘க்’ கண்டிப்பாக வரும் என்று தோன்றுகிறது, காரணத்தைச் சொல்ல இயலவில்லை என்று சுகுமாரனிடம் சொன்னேன். அவர் ஒரு ஐயத்தைக் கிளப்பினார். ‘அணிகலன் என்பதில் க் வரவில்லையே’ என்பது அது. இரண்டையும் இணைத்து மனம் யோசித்துக் கொண்டேயிருந்தது. மூன்றுநாள் முடிவிலும் தீர்மானத்திற்கு வர இயலவில்லை.

மூன்றாம் நாள் மாலை சுகுமாரன் திருவனந்தபுரம் ரயிலுக்குச் சென்றார். நானும் ரயில் ஏறினேன். மனம் முழுக்க அந்தச் சொல்லே ஆக்கிரமித்திருந்தது. ஆரல்வாய்மொழி அருகே ரயில் வந்தபோது சட்டென மின்னல் போலக் காரணம் பளிச்சிட்டது. உடனே சுகுமாரனுக்குச் செல்பேசியில் தகவல் சொல்லிக் கண்டிப்பாக க் போட வேண்டும் என்று விளக்கினேன். பின் அச்சொல் வரும் எல்லா இடத்தையும் தேர்வு செய்து க் போடப்பட்டது. ‘அறைக்கலன்’ என்றேதான் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நூலில் அச்சொல் இடம்பெற்றுள்ளது.

காரணம் இதுதான்: அணி + கலன் = அணிகலன் என்றாகும். இதில் அணி என்னும் முதல் சொல் வினை. அணிந்த, அணிகின்ற, அணியும் என விரியும் வகையிலானது. ஆகவே ‘அணிகலன்’ என்பதில் ஒற்று மிகாது. வினைத்தொகையில் ஒற்று மிகுவதில்லை. வழக்கமான உதாரணம்: சுடுசோறு, ஊறுகாய். இவை போன்றதே அணிகலன். ஆனால் அறை + கலன் என்பதில் அறை என்பது வினையல்ல. வினையாக எடுக்கலாம். ஆனால் பொருள் வராது. கன்னத்தில் அறைதல், பறையறைதல் ஆகியவற்றில் அறை என்பது வினைதான். அவ்வாறு வினைத்தொகையாக எடுத்தால் அறைந்த கலன், அறைகின்ற கலன், அறையும் கலன் என்றாலும்.

ஆனால் இங்கே அறை என்பது room என்று அர்த்தப்படும். கலன்களில் ஒருவகை அறைக்கலன். மண்கலன், கள்கலன், சமையற்கலன் என்பது போல. ஆகவே அறைக்கலன் என்பது இருபெயரொட்டுப் பண்புத்தொகை. கட்டாயம் ஒற்று மிகும். அறைக்கலன் என்றே அறைவோம்.

Add your first comment to this post