தமிழ் – தமிழ் அகரமுதலி

You are currently viewing தமிழ் – தமிழ் அகரமுதலி

தமிழ்ப் பேரகராதி (Tamil Lecxican) பதிப்பாசிரியரான ச.வையாபுரிப்பிள்ளை  தம் அனுபவங்களை விவரித்துச் சில கட்டுரைகள் எழுதியுள்ளார். அவரது இறப்புக்குப் பிறகு ‘அகராதி நினைவுகள்’ என்னும் தலைப்பில் ஒருநூலே வெளியாயிற்று.  அதில் இரண்டு கட்டுரைகள்தான் அகராதி அனுபவம் பற்றியவை. எனினும் அவை சுவையான செய்திகளைக் கொண்டவை. வேறு சில சந்தர்ப்பங்களில் அவர் எழுதியவையும் உள்ளன.

அகராதி தயாரிப்பு அனுபவம் மட்டுமல்ல, அதை வாங்குவதும் பயன்படுத்துவதுமே நல்ல அனுபவம்தான். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளராக இருந்த 1990களின் தொடக்கத்தில் ஒருமுறை தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. அதன் புத்தகக் கிடங்கைப் பார்க்க முடிந்தது. 1985ஆம் ஆண்டு வெளியான ‘தமிழ் – தமிழ் அகரமுதலி’ அங்கே ஒருபக்கம் சரிந்தும் விழுந்தும் குவியலாகக் கிடப்பதைக் கண்டேன். விலை நூறு ரூபாய். கழிவு போகத் தொண்ணூறு ரூபாய்க்கு வாங்கி வந்தேன். அற்புதமான அகராதி.

அதை உருவாக்கியவர் தமிழறிஞர் மு.சண்முகம் பிள்ளை. பழந்தமிழ் இலக்கியம் சார்ந்து பல உயரிய பணிகளைச் செய்திருந்த போதும் கல்விப்புலத்திலும் பொதுத்தளத்திலும் பெரிதாக அறியப்படாத அறிஞர் அவர். எடுத்த பணியைச் சிறப்புறச் செய்து முடிக்கும் திறம் கொண்டவர். 64,000 சொற்கள் அடங்கிய ‘தமிழ் – தமிழ் அகரமுதலி’ அவர் பணிக்குச் சிறந்த சான்று. அகராதி வரலாறு, பலவகை அகராதிகள், அகராதிப் பயன்பாடு என்பன குறித்து அவர் எழுதியிருக்கும் முப்பத்தைந்து பக்க முன்னுரையை வாசித்தால் அகராதித் துறை சார்ந்து கணிசமான அறிவைப் பெற முடியும். ஒருசொல்கூட வீணாகாதவாறு அதை எழுதியிருக்கிறார்.

பழந்தமிழ் இலக்கியத்தின் அருஞ்சொற்கள், இருபதாம் நூற்றாண்டுச் சொற்கள் எனப் பயன்படும் வகையில் தொகுத்துப் பொருள் தரும் ஒருமொழி அகராதி இது. பொருள் கொடுப்பதற்குத் தமிழ்ப் பேரகராதியைப் பெரிதும் பயன் கொண்டிருக்கிறார். அவ்வகராதி எல்லாச் சொற்களுக்கும் பொருள் தரும் பேரகராதி. இருமொழி அகராதி. இலக்கணக் குறிப்பு, சான்றுத் தொடர் எனப் பலவற்றைக் கொண்டது. ஏழு தொகுதிகள். அது ஆராய்ச்சிக்கும் விரிவான பொருள் தேடலுக்கும் உதவும். அன்றாடப் பயன்பாட்டுக்கு என மு.சண்முகம் பிள்ளை உருவாக்கியது  ‘தமிழ் – தமிழ் அகரமுதலி.’

அவ்வகராதியை நான் வாங்கி வந்த பிறகு நண்பர்கள் பலருக்கும் அறிமுகப்படுத்தி வாங்கும்படி செய்தேன். 1996இல் அரசு கல்லூரி ஆசிரியரான பிறகு மாணவர்களை அவ்வகராதி வாங்க ஊக்குவித்தேன். தமிழர் ஒவ்வொருவரிடத்தும் இருக்க வேண்டிய அகராதி இது, தமிழ்ப் பயிலும் மாணவர்களிடம் இல்லை என்றால் அவமானம் என்றே சொல்வேன். என் மாணவர்கள் உணவுக்கே எண்ணிச் செலவழிக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள். எனினும் என் தூண்டுதலால் பணம் சேர்ப்பார்கள். இருபது பேர் பணம் கொடுத்தால் இரண்டாயிரம் சேரும். பத்து விழுக்காடு கழிவுத் தொகை இருநூறு ரூபாய். அந்தத் தொகையைப் பேருந்துக்கும் வழிச்செலவுக்கும் என ஒரு மாணவருக்குக் கொடுத்துச் சென்னைக்கு அனுப்புவோம்.

விடிகாலையில் பேருந்து ஏறி மதியம் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனக் கடைக்குச் சென்றுவிடுவார். அகராதியை வாங்கி இருபைகளில் வைத்துக்கொண்டு மாலையில் பேருந்து பிடித்துத் திரும்பிவிடுவார். இருபதுதான் தூக்கி வர முடியும். முந்நூறு கல் தொலைவு கடந்து ஒருநூலை வாங்குவதற்குச் சென்றாலும் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவன ஊழியர்கள் ரசீது போட்டுப் பணம் பெறுவதற்கும் நூலை எடுத்துத் தருவதற்கும் சுலபமாக இசைய மாட்டார்கள். மிகச் சாதாரணமாக ‘நாளைக்கு வா’ என்று சொல்லிவிடுவார்கள். வெகுதூரத்தில் இருந்து வந்திருக்கிறேன் என்று சொல்லிக் கெஞ்சிக் கூத்தாடி வாங்கி வர நேரும்.

நூலை வேறு எங்கும் விற்பனைக்குத் தரும் வழக்கமும் இல்லை. அதனாலும் ஊழியர்களின் அணுகுமுறையாலும் அவ்வகராதி பல்லாண்டுகள் விற்பனையில் இருந்தது. ஆத்தூர் அரசு கல்லூரி, நாமக்கல் அரசு கல்லூரி ஆகியவற்றில் பயின்ற மாணவர்களுக்கு ஏறக்குறைய ஐந்நூறு படிகளை நானே வாங்க ஏற்பாடு செய்திருக்கிறேன். வாங்கிச் சிலருக்குப் பரிசளித்திருக்கிறேன். பலரை வாங்கச் செய்திருக்கிறேன். இப்போதும் அவ்வகராதி வாங்கியதை அவர்கள் நினைவுகூர்வது உண்டு; பயன்பாட்டிலும் இருந்துவருகிறது.

தமிழ் - தமிழ் அகரமுதலி

1985இல் பத்தாயிரம் படிகள் அச்சிட்ட அகராதி 2005ஆம் ஆண்டுவரை விற்பனையில் இருந்தது. இருபதாண்டுகள். நூல் வாங்குவதில் தமிழ்ச் சமூகம் ஆர்வம் காட்டுவதில்லை என்பது ஒருபுறம். அரசு நல்ல திட்டம் போட்டாலும் அதைக் கொண்டு சேர்க்கும் அதிகார வர்க்கத்தின் சுணக்க மனநிலையால் மக்களுக்குக் குறைவாகவே பயன் கிடைக்கிறது. பலகோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் அடிப்படைக் கருவி நூலாகத் திகழும் ஓர் அகராதியின் பத்தாயிரம் படிகள் விற்றுத் தீர இருபதாண்டுகள்.

அரசுப் பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஒதுக்கும் நூலகத் தொகையில் இவ்வகராதியை வாங்க வேண்டும் என்று ஒரே ஒரு சுற்றறிக்கை விட்டிருந்தால் போதும். ஒரே ஆண்டில் இரண்டாம் பதிப்பு போட வேண்டிய நிலை வந்திருக்கும். அப்படி மனம் கொண்ட ஓர் அதிகாரியோ அலுவலரோ அமையவில்லை. என் மாணவர்கள் ஐந்நூறு படிகள் வாங்கியதால் அவ்வகராதி விற்றுத் தீர்ந்தது என்று சொல்ல முடியாது. 2000 ஆண்டுவாக்கில் அவ்வகராதி பற்றிப் பலர் அறிந்து வாங்கினர். குறிப்பாகக்  ‘கீழைக்காற்றுப் பதிப்பகம்’ ஐம்பது ஐம்பது படிகளாக வாங்கி வந்து தம் கடையில் வைத்து விற்றனர்.

மக்கள் கலை இலக்கியக் கழகம் கண்ட மார்க்சிய லெனினியக் குழு ஒன்றின் பதிப்பகம் அது. தோழர்கள் கணிசமாக அவ்வகராதியை வாங்கினர். இப்படித்தான் அது தீர்ந்தது. 2005இல் படிகள் தீரும்வரை நானும் என் மாணவர்களை அனுப்பிக் கொண்டேயிருந்தேன். ஒருசமயம் சென்ற மாணவர் இருபது படிகள் இல்லை, ஏழோ எட்டோதான் இருந்தது என்று வாங்கி வந்தார். தீர்ந்துவிட்டது என்றதும் பலபேர் வேண்டும் வேண்டும் என்று வந்தார்கள். என்ன செய்வது? கிடைக்கும்போது அசட்டை செய்யும் மனம் கிடைக்காத போது வேண்டும் என அல்லாடுகிறது.

என்னிடம் இப்போதும் மூன்று படிகள் இருக்கின்றன. நான் பயன்படுத்த ஒன்று. என் மனைவியும் தமிழாசிரியர் என்பதால் அவரது தனிப்பயன்பாட்டுக்கு ஒன்று. கல்லூரியில் பணியாற்றிய போது அங்கே பயன்படுத்த ஒன்று. ஏதேனும் ஒருசொல்லுக்குப் பொருள் மட்டும் பார்க்க வேண்டுமானல் சட்டெனக் கை இந்த அகராதிக்குதான் போகும். பெரும்பாலும் ஏமாற்றம் தராது. கறுப்பு வண்ணக் கெட்டி அட்டையில் நல்ல தாளில் அச்சிட்ட நூல். ‘இந்நூல் 70 ஜி.எஸ்.எம். தாளில் அச்சிடப்பட்டது’ என்னும் குறிப்பு நூலுக்குள் உள்ளது. அதன் விவரம் எனக்குத் தெரியவில்லை. இத்தனை ஆண்டுகாலம் பயன்படுத்தியும் தாள் கிழியவில்லை. கட்டமைப்பு மட்டும் சற்றே நெகிழ்ந்திருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக இவ்வகராதி  ‘தமிழ் இணையக் கல்விக்கழகத்’ தளத்தில் சொல் கொடுத்துத் தேடிப் பார்க்கும் வகையில் கிடைக்கிறது. பிடிஎப் வடிவத்திலும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். சில ஆண்டுகளுக்கு முன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இதை மறுபதிப்பாக்கியது. ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலை இருந்த நினைவு. இப்போது தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 480 ரூபாய்தான் விலை. புத்தகக் காட்சியரங்கில் விற்பனைக்கு இருக்கிறது.  கையில் வைத்துப் பயன்படுத்த அச்சு நூல்தான் வசதி. வாங்கலாம். இப்போது அதிகாரிகள் நல்லவர்களோ அலுவலர்கள் நல்லவர்களோ தெரியவில்லை. எளிதாக வாங்க முடிகிறதாம். நண்பர்களே, பயன் கொள்ளுங்கள்.

தமிழ் - தமிழ் அகரமுதலி

—–   11-01-25

Latest comments (1)

இரா கார்த்திகேயன்

2003 ஆம் அரசு கலைக் கல்லூரி பயின்று வந்தேன். அங்கு தான் அய்யாவை முதலாகச் சந்தித்தேன். அவரால் நானும் என் அண்ணனும் அய்யாவின் மாணவர்களாக பயின்றோம்.அப்போது எனக்குத் தமிழ் அகராதி பாக்கியம் கிட்டியது. நான் தற்போது தனியார் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறேன். ஏதேனும் சந்தேகம் ஏற்படும் போது அவ்வகராதி எனக்கு கைக் கொடுக்கும் அதனால் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.