1988ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாகச் சேர்ந்தபோது சிற்றிதழ்கள் மேல் பெருமோகம் இருந்ததால் ‘எழுத்து’ இதழை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம் என எண்ணிச் சி.சு.செல்லப்பாவைச் சந்தித்தேன். அந்த அனுபவத்தைப் பிறகு ‘கடைவாய்ப் பல்லும் நல்ல கதைகளும்’ எனக் கட்டுரையாக எழுதினேன். ‘கரித்தாள் தெரியவில்லையா தம்பீ…’ நூலில் அக்கட்டுரை உள்ளது. அது காலச்சுவடு இதழில் வந்தபோது சுந்தர ராமசாமி ‘அவரோடு பழகியிருக்கிறேன். நீங்கள் எழுதியிருக்கும் தகவல்கள் எல்லாம் புதிதாக இருக்கின்றன’ என்று சொன்னார். ‘முருகனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நம்மைப் பற்றியும் எழுதிவிடுவார்’ என்றார் சி.மோகன். ஆனால் பிறகு ஜி.நாகராஜன், ப.சிங்காரம் முதலிய எழுத்தாளர்களைச் சந்தித்த அனுபவங்களை அவரே தொடராக எழுதினார். ‘நடைவழி நினைவுகள்’ என நூலாக வந்தது.
சி.சு.செல்லப்பா சந்திப்பு சில நாட்களில் கசப்பாக முடிந்து போனாலும் பந்தம் விடவில்லை. 2003ஆம் ஆண்டு காலச்சுவடும் சேலம் வயல் அமைப்பும் இணைந்து கு.ப.ரா. பற்றி ஒருநாளும் சி.சு.செல்லப்பா பற்றி ஒருநாளும் கருத்தரங்கை நடத்தின. அக்கட்டுரைகளைத் தொகுக்கும் பணியைச் செய்தேன். சி.சு.செல்லப்பா பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு ‘பிரம்மாண்டமும் ஒச்சமும்’ என்னும் நூலாக வெளியாயிற்று. அவரது வாடிவாசல், ஜீவனாம்சம் ஆகிய நாவல்களைக் காலச்சுவடு வெளியிட்ட போது அவற்றுக்கு முன்னுரை எழுதும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அவர் எழுதியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை வாசித்து ஒன்பது கதைகளைத் தேர்ந்தெடுத்துக் ‘கூடுசாலை’ எனத் தொகுத்ததும் நான்தான். என் வழிகாட்டுதலில் ‘சி.சு.செல்லப்பாவின் படைப்பாளுமை’ என இராமச்சந்திரன் என்னும் மாணவர் முனைவர் பட்ட ஆய்வு செய்தார்.
இந்த பந்தம் இன்னும் தொடர்கிறது. சி.சு.செல்லப்பா பெயரில் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறையில் அவர் குடும்பத்தார் அறக்கட்டளை ஒன்றை நிறுவினர். அதன் முதல் பொழிவை (2023) நிகழ்த்தும் வாய்ப்பு பேராசிரியர் ய.மணிகண்டன் மூலமாக எனக்கு அமைந்தது. அவருடனான அனுபவங்களையும் அவர் படைப்புகள் பற்றியும் விரிவாகப் பேசினேன். அவர் குடும்பத்தாரும் உறவினர்களும் சென்னையில் வசிக்கும் இலக்கிய நண்பர்கள் பலரும் வந்திருந்தனர். என் வாழ்வில் கவனம் செலுத்திச் சில பணிகளைச் செய்திருக்கும் ஆளுமைகளில் ஒருவராகச் சி.சு.செல்லப்பாவும் இடம்பெற்றுவிட்டார். அவர் சார்ந்து இனிச் செய்ய வேண்டியது ஏதுமில்லை என்னும் நிறைவை எய்தினேன்.
நிறைவெய்த இலக்கியம் விடாது. புதிது புதிதாகச் செலுத்தும் ஆற்றல் அதற்குண்டு. 2022ஆம் ஆண்டு நானும் கண்ணனும் பிரான்ஸ் நாட்டு பாரிஸ் நகரப் புத்தகத் திருவிழாவுக்குச் சென்றோம். அவ்வாண்டு சிறப்பு விருந்தினர் என்னும் மதிப்பை இந்தியா பெற்றிருந்தது. என்னையும் கண்ணனையும் பிரான்ஸ் அரசாங்கம் அழைத்திருந்தது. இந்திய அரசாங்கம் சார்பாக ஒருகுழுவினர் வந்திருந்தனர். அதில் இடம்பெற்றிருந்தார் ஓவியர் அப்புபன். அந்தக் குழுவோடு சிறிதும் ஒட்ட முடியாத அவர் எங்களுடன் சேர்ந்து கொண்டார். என் நூல்களை அவர் வாசித்திருந்தார். நகைச்சுவைத் திறன் கொண்ட உரையாடல்காரர் அவர். அப்பயணமே அவரால் மகிழ்ச்சியாக மாறிற்று.
எங்கள் நட்பைக் கவனித்துக் கொண்டிருந்த கண்ணனுக்கு ஒரு இலக்கியத் திட்டம் உருவாகிவிட்டது. எந்தச் சந்தர்ப்பத்தையும் பதிப்பாளராகவே காணும் பார்வை கொண்டவர் கண்ணன். கிராபிக் நாவல் (சித்திரக் கதை) உருவாக்கம் தொடர்பாகப் பல ஆண்டுகளாகவே அவர் சிந்தித்து வருவதை அறிவேன். ஆங்கிலச் சித்திரக் கதை நூல்கள் சிலவற்றை எனக்கு வாங்கிக் கொடுத்து வாசிக்கச் சொல்லியிருக்கிறார். அத்துறை எனக்குப் பிடித்துத்தான் இருந்தது. ஆனால் வேறு பணிகளும் பயணங்களும் இணைந்து கவனம் செலுத்த விடவில்லை.
வாடிவாசலைச் சித்திர வடிவில் வெளியிடும் எண்ணம் கொண்டிருந்த கண்ணன் அத்திட்டத்தில் எங்கள் இருவரையும் இணைத்துவிட்டார். நான் எழுத்தாக்கம் செய்ய அப்புபன் படங்கள் வரைவது என முடிவாயிற்று. அப்புபன் ஏற்கனவே சித்திரக் கதைத் துறையில் சில நூல்களை வெளியிட்டுள்ளார். தேர்ந்த கைவண்ணம் கொண்டவர். சொற்களே இல்லாமல் படங்கள் வழியாகக் கதை சொல்லும் திறனும் அவருக்கு உண்டு. ஆங்கிலத்தில் அவர் நூல்கள் வெளியாகியுள்ளன. பிரெஞ்சு மொழியிலும் அவர் நூல்கள் வந்துள்ளன.
வாடிவாசலை ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் அப்புபன் வாசித்தார். 2023இல் மதுரைக்கு வந்து ஜல்லிக்கட்டு விளையாட்டை நேரில் கண்டார். புகைப்படங்கள் எடுத்தார். மனதில் பதிந்த நேர்க்காட்சிகளையும் நாவல் காட்சிகளையும் இணைத்துச் சில படங்களும் வரைந்தார். அவற்றைப் பார்த்த போது பிரமிப்பாக இருந்தது. காளைகளின் அசைவுகள் படங்களில் தெரிந்தன. நூல் மிகச் சிறப்பாக வரும் என்னும் நம்பிக்கை தோன்றியது. எழுத்து வேலையைச் செய்யாமல் நான்தான் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தேன்.
2023 டிசம்பரில் ஆனைக்கட்டி எழுத்தாளர் உறைவிட முகாம் செல்லும் வாய்ப்பு வந்தது. அதை வாடிவாசலுக்குப் பயன்படுத்திக் கொண்டேன். காட்சியாக்க நோக்கில் நாவலை நான்கைந்து முறை வாசித்து உள்வாங்கினேன். ஓவியக் கலைஞருக்கு வரைய உதவும் வகையில் முதல்படியை எழுதினேன். அதைக் கொண்டு படங்களை வரைந்து விட்டால் பிறகு தேவையான சொற்களை மட்டும் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம்.
கிராபிக் நாவல் கதை சொல்வதுதான். ஆனால் காட்சியனுபவமே முதன்மை. மீண்டும் மீண்டும் எடுத்துப் பார்த்து ரசிக்கும் தன்மையில் படங்கள் அமைய வேண்டும். படங்களில் அசைவு தென்பட வேண்டும். ஒரு படத்தையும் அடுத்த படத்தையும் இணைக்கும் அசைவுகளை உருவாக்க வேண்டும். தேவையான இடத்தில் குறைவான சொற்களைப் பயன்படுத்தலாம். சில உரையாடல்கள் அவசியம். சில தகவல்களைச் சொல்ல மொழி தேவை. இந்தப் புரிதலை அப்புபனுடனான உரையாடல் மூலம் பெற்றிருந்தேன்.
எழுத்தாக்க வேலையை முடித்தவுடன் முகாமுக்கு அப்புபன் வந்தார். அவருடன் மூன்று நாட்கள் செலவிட்டேன். நாவல் காட்சிகளைப் பற்றிய பேச்சு கோப்பைகளோடும் இயற்கையோடும் நடந்தது. அருமையான அனுபவம். அச்சந்திப்புக்குப் பிறகு சில மாதங்களில் வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டார் அப்புபன். இந்நூல் குறித்த உரிய தயாரிப்புகளுடன் ப்ராங்க்பர்ட் புத்தகச் சந்தைக்குச் சென்றார் கண்ணன். அங்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சில ஒப்பந்தங்கள் கையொப்பம் ஆகியுள்ளன. ஆங்கிலத்தில் ஜனவரி 2025இல் Simon & Schuster பதிப்பகம் வெளியிட உள்ளது. ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவில் ஆ. இரா.வேங்கடாசலபதி நூலை வெளியிட்டுப் பேசுவார். மராத்தி, வங்காளி உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் உலக மொழிகள் சிலவற்றிலும் அடுத்தடுத்து நூல் வரும்.
எல்லாவற்றுக்கும் முன்னோட்டமாகத் தமிழ்ப் பதிப்பு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியாகியுள்ளது. கண்டோர், வாங்கியோர் மனம் மகிழ்வதை நேரில் அறிந்தேன். ஜல்லிக்கட்டுக்குப் புகழ் பெற்ற மதுரையைச் சேர்ந்தவரும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமாகிய் மாண்புமிகு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று (06-01-24) மாலை ஆறு மணிக்கு முறையாக நூலை வெளியிடுகிறார். நண்பர்கள் வருக!
நூல் விவரம்:
வாடிவாசல் (சித்திரக் கதை), நாகர்கோவில், காலச்சுவடு பதிப்பகம், டிசம்பர் 2024, விலை ரூ.275/-.
இந்நூல் பற்றி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வந்த குறிப்பு:
—– 06-01-2025
பெரும் வரவேற்பு கிடைக்கும் என்பதில் அணுவளவும் சந்தேகம் இல்லை, இன்றைய தலைமுறை குழந்தைகளை இலக்கியத்தின் பால் திருப்ப இது போல் இன்னும் பல புத்தகங்கள் வெளியிட எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.