நிழல்முற்றம் : மு.குலசேகரன் முன்னுரை

You are currently viewing நிழல்முற்றம் : மு.குலசேகரன் முன்னுரை

 

‘நிழல்முற்றம்’ நாவல் 1994ஆம் ஆண்டு முதல் பதிப்பு திருஞி வெளியீடாக வந்தது. அதன் பிறகு 2005 முதல் காலச்சுவடு பதிப்பாகத் தொடர்ந்து வெளியாயிற்று. இப்போது பதினொன்றாம் பதிப்பு  ‘காலச்சுவடு தமிழ் கிளாசிக் நாவல்’ வரிசையில் வந்துள்ளது. அதற்கு எழுத்தாளர் மு.குலசேகரன் முன்னுரை எழுதியிருக்கிறார்.  மு.குலசேகரனுக்கும் காலச்சுவடுக்கும் நன்றி. அம்முன்னுரை இது:

அனைத்துக்கும் அடியில்

நாவல் என்கிற இலக்கிய வடிவத்தின் நோக்கம் மனித வாழ்வை முழுமையாகக் காட்டுவது. அதற்குப் பல்வேறு அர்த்தங்களை அளிப்பது. இடம், காலப் பின்னணிகளை ஒட்டுமொத்தத்தில் வைத்துப் பார்ப்பது. நாவலின் தனித்துவம் வாழ்வதற்கு நிகரான பிறிதொரு அனுபவத்தை உருவாக்க முடிவது. உண்மையைப் போல் தோன்றும் பிரதியாக எழுதப்படுவது. அது பல குரல்களை ஒலிக்கும் சுதந்திரத்தைக் கொண்டிருக்கிறது. தனக்குள் பெருமாற்றத்தை இயல்பாக நிகழ்த்திவிடுகிறது. அதற்கேற்ப விரிவும் நுண்மையும் கொள்கிறது. அப்போதே நாவல் அனைத்தையும் சுட்டிக்காட்டும் படிம வெளியாகிறது. எக்காலத்துக்கும் பொருத்தமுள்ளதாக மாறுகிறது.

‘நிழல்முற்றம்’ பெருமாள்முருகனின் இரண்டாவது நாவல். அது எழுதப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகளாகி, நவீன செவ்வியல் தன்மையை அடைந்துள்ளது. இன்றும் தற்கால வாசிப்புக்கு உகந்ததாக, ஏறக்குறைய ஒரு தலைமுறையைக் கடந்து வந்திருக்கிறது. அவருடைய முதல் நாவல் ‘ஏறுவெயில்’ நகர மயமாக்கலின் விளைவால் கிராமம் சார்ந்த குடும்ப அமைப்பின்  சிதைவு, சுயநலம் பெருகிய மனித உறவுகளின் அழிவு ஆகியவற்றினூடாகச் சாதிய ஏற்றத்தாழ்வையும் சித்தரித்தது. ‘நிழல்முற்றம்’ நாவலுக்குப் பிறகு பெருமாள்முருகன் பத்து நாவல்களைப் படைத்துள்ளார். சமூக யதார்த்தத்தை, அடித்தட்டு வாழ்வை, தவிர்க்க முடியாததாயிருக்கும் சீரழிவை அவர் தொடர்ந்து எழுதுவதை இந்தத் தொடக்க நாவல்கள் பெரிதும் தீர்மானித்திருக்கின்றன. அதனாலேயே அவருடைய அனைத்து நாவல்களும் மிகப் புகழ் வாய்ந்தவையாகவும் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுபவையாகவும் பல மதிப்புக்குரிய விருதுகளைப் பெற்றவையாகவும் விளங்குகின்றன.

‘ஏறுவெயில்’ நாவலின் தொடர்ச்சியைப் போல் ‘நிழல்முற்றம்’ நாவலின் களம் சிற்றூரிலிருந்து நகர்ப்புறத்துக்கு இடம்பெயர்கிறது. பிறகு எழுதப்பட்ட நாவல்களில் பெரும் சர்ச்சைக்குள்ளான, ‘மாதொருபாகன்’ இறந்த காலத்துக்குத் திரும்புவதால் மீண்டும் கிராமியப் பின்புலத்தை அடைந்தது. அதன் யதார்த்தம் தாங்க முடியாததால்தான் சனாதனத்தால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. ஏனெனில் நாவலில் வெளிப்படையாகத் தெரியும் உண்மைதான் அதைச் சுட்டது. சமூக அவலங்களுக்குக் காரணமானதால் குற்றவுணர்வையும் அடைந்திருக்கும். எனவே வாசிப்பையே ஒடுக்கிவிட முயன்றது.

‘நிழல்முற்றம்’ நாவல், இன்னும் முழுவதும் நகராக வளர்ந்திராத இடத்தில் நிகழ்வது. அதனாலேயே அரைக் காலனிய, அரை நிலப்பிரபுத்துவ, அரை முதலாளித்துவப் பண்புகள் கலவையாகப் படிந்திருக்கின்றன. எதுவும் முதிர்ந்து வெடிக்கும் தறுவாயில் இல்லை. ‘நிழல்முற்றம்’ நம்மை ஆட்டிப்படைக்கும் திரைப்படங்களைக் காட்டும் திரையரங்கின் குறியீடு. புகைப்படங்களை நிழற்படம் என்பதால் அது திரையரங்குக்கு அமைந்த தூய பெயரும்கூட. அங்கிருந்துதான் அதிகாரமும் அரசியலும் பண்பாடும் புறப்பட்டு வந்து நம்மை ஆளுகின்றன. இந்த நாவலின் நோக்கம், வெண்திரையில் நிஜம்போல் தோன்றும் திரைப்படத்தைப் பற்றியதல்ல. அதை நிகழ்த்தும் பெரிய கலைஞர்களைக் காட்டுவதுமல்ல. நேரடியாகத் தயாரிப்பில் பங்குபெறும் தொழில் நுட்ப வல்லுநர்களை விவரிப்பதுமல்ல. அவற்றை நுகரும் பாவப்பட்ட பார்வையாளர்களைச் சித்தரிப்பதுமில்லை. திரைப்படத்துடன் துளியும் சம்பந்தப்படாத கடைநிலை ஊழியர்கள்மீது மட்டும்தான் இந்நாவலின் கரிசனம் படர்கிறது. திரைப்பட நிழல்கள் விழுந்தாடும் முற்றத்தை மட்டும்தான் நாவல் எடுத்துக்கொள்கிறது. மற்றவர்கள் இதற்கு ஒரு பொருட்டல்ல.

இந்த நாவல் முழுவதும் திரையரங்க அமைப்பால் வெளியேற்றப்பட்ட ஊழியனின் நினைவுகூர்தல் வழியாக நிகழ்கிறது. அல்லது, அந்த நிறுவனத்தால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ரசிகனால் சொல்லப்படுவதாக அமைகிறது. இப்போது அந்தக் கதைசொல்லி பங்கேற்பே இல்லாத வெறும் பார்வையாளன். கதையை வேறாக எழுதவோ மறைக்கவோ மாற்றவோ இயலாதவன். அவன் வறுமை, நோய்மை, போதை வாதைகளால் பாதிக்கப்பட்டுச் சாவை எதிர்நோக்கியிருக்கும் மீட்சியற்ற உடல். அதைப் போன்றும் ஒத்தவையும் இயங்குகின்ற வெளிதான் இந்த நாவல். அந்தப் பதின் வயதுச் சிறுவர்களின் எண்ணங்களும் செயல்களும் வியப்பூட்டும்படி ஏறக்குறைய ஒன்றாயிருக்கின்றன. அவர்கள் ஒரே வேலை செய்பவர்கள். திரைப்பட இடைவேளைகளிலும், முடிந்த பிற்பாடும், தொடங்கும் முன்னாலும், அழுக்கும் வெக்கையுமான இடத்தில் கிடக்கிறார்கள். ஒரே பரோட்டா உணவையே சாப்பிடுகிறார்கள். நிதர்சனத்தின் கொடுமையை மறக்கத் தவறாது மயக்க நிலையை நாடுகிறார்கள். கிணற்றில் குதித்து ஆசுவாசம் கொள்கிறார்கள். அவர்கள்தான் சமூக உதிரிகள் என்ற பெரிய அடைப்புக்குறிக்குள் வருபவர்கள்.

சத்திவேல், நடேசன், பூதன், வத்தன், சிங்கான், மணி, கணேசன் முதலிய சிறார்களின் வாழ்வை நாவல் தன் போக்கில் காட்டுகிறது. அவர்களின் பார்வையால் மட்டும் விரிகிறது. பிற வயதான பாத்திரங்கள் அகம், புறம் என்ற இரண்டு வாழ்க்கையிலிருந்தும் வெளியேற்றப்படுகிறார்கள். சிறுவர்களின் கண்கள் வழியாகத்தான் தந்தை, பாட்டி என அனைவரும் கூர்மையாக வெளிப்படுகிறார்கள். ஆசிரியரின் குரல் சிறுவர்களுடையதாகவே ஒலிக்கிறது. இது ஒருவகைப் பரிதாபமான “வயதடையும் நாவல்” எனலாம். மேல் தட்டு, நடுத்தர வர்க்கச் சிறார்கள் பருவத்தை அடையும் நாவல்களைப் படித்திருக்கிறோம். அந்த நாவல்களில் நாட்டின் சுதந்திரப் போராட்டப் பின்னணியில், குடும்ப உறவுச் சூழ்நிலையில், நட்பு வட்டச் சூழலில் அவர்கள் வளர்ந்து அதிர்ச்சியூட்டும் விதமாகத் தங்கள் பதின் பருவத்திலிருந்து முதிர்ச்சிக்குத் தூக்கியெறியப் பட்டுள்ளார்கள். ‘18 ஆவது அட்சக்கோடு’, ‘ரத்த உறவு’ முதலிய சில நாவல்களை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். பெருமாள்முருகனின் இந்த நாவலின் சிறுவர்களுக்கு அப்படியொரு இயல்பான பரிணாம வளர்ச்சி வாய்ப்பதில்லை. அவர்கள் இளமையில் வெம்பிப் பழுத்தவர்கள். பசி, காமம், வன்மம், நோய், போதை, உழைப்பு அனைத்தும் கொண்டவர்கள். அந்நியமான நிழலுலகில் உழல்பவர்கள். அங்கு அவர்கள் பிழைத்திருப்பதற்கு ஏற்ற திறனைச் சமூகம் கற்றுத் தருகிறது. கூட்டுழைப்பு, சுய நலம், வன்முறை, வஞ்சகம், களவு, சூது, தந்திரம் அனைத்தும் அவர்களுக்கு பால பாடம்.

நிழல்முற்றம் : மு.குலசேகரன் முன்னுரை

 

இந்த நாவல் ஒருவகையில் திரைப்படத் துறையைப் பற்றியதுதான். முன்பு எழுதப்பட்டவைபோல் திரைப்பட நட்சத்திரங்களின் நடவடிக்கைகளை, அதன் உருவாக்கத்தில் நேரடிப் பங்கு வகிப்பவர்களின் அல்லாட்டத்தை, ரசிகக் குஞ்சுகளின் வெறியைத் தெரிவிப்பதில்லை. மாறாக, திரைப்படத் துறை சார்ந்த திரையரங்கங்களின் உப விளைவுகளான கடைநிலை ஊழியர்களின் முழு வாழ்க்கையை விவரிக்கிறது. அதனால் மறைமுகமாக, முழுமுற்றான வணிகத் திரைப்படத் துறையின் விமரிசனமாக உருமாறுகிறது. அரங்கில் ஒளிரும் திரைபடக் காட்சிகளின் ஒரு துண்டும் காட்டப்படுவதில்லை. ஓரிடத்தில் மட்டும் தேவைக்கேற்பப் பாடல் அசைவுகள் கண்ணில்படுகின்றன, அவ்வளவுதான். அவற்றின் வசனங்கள் வெளியில்கூட ஒலிப்பதில்லை. திரையரங்கின் ஒளி, ஒலி மட்டுமல்ல; அதன் இயந்திரம்கூட வெளிப்படுவதில்லை. மாறாக, திரைப்படம் ஓடாத பொழுதின் நிலவொளி சிறுவனுக்கு ஆசுவாசமளிக்கிறது. மின்விசிறிகளில் கூடு கட்டி அங்குமிங்கும் சுதந்திரமாகப் பறக்கும் குருவிகள்கூட ரசிக்கப்படுகின்றன. மேலாளர், திரைப்பட முகவர், காவலாளி போன்றோர் சிறு துணைப் பாத்திரங்கள்தான். திரையரங்க உரிமையாளரும்கூடப் பேச்சில் மட்டும் வந்துபோகும் வெளியாள். அவர் இதுவரை ஒரு திரைப் படத்தைக்கூட முழுதாகப் பார்த்தவரில்லை. ரசிகர்கள், கூட்ட மனோபாவத்துடன் புகைமூட்டமாக மொத்தமாக வருகிறார்கள். முக்கியப் பாத்திரங்களை ஒட்டிய திரையரங்கின் சிறு குறு வியாபாரிகளும் தனித்து இயங்குவதில்லை. அவர்களுக்கும் நாவலுக்குள் தனிப்பட்ட வாழ்வில்லை. சிறார்கள்தான் கதை மாந்தர்களாக விளங்குகிறார்கள். திரைப்படம் தொடர்பான நாவலில் யாரும் திரைப்படத்தையே பார்ப்பதில்லையென்பது அவல முரண். திரையரங்கைக் கட்டும் முதலாளிக்குத் திரைப்படம் என்றால் என்னவென்று தெரியாது. இவற்றால் நாவலின் நோக்கம் வெளிப்படையாகிறது.

இளைஞராவதன் தலைவாயிலிலுள்ள சிறுவர்கள் குடும்ப அமைப்பிலில்லாத உதிரிகள். அவர்களுக்கு முன், பின் வாழ்க்கையில்லை. ஒருவனின் தாய், கணவனல்லாதவனுடன் ஓடிப்போனவள். இன்னொருவனின் தந்தை, அவனாலேயே வெறுத்து ஒதுக்கப்படும் தொழுநோயாளி. மற்றொருவனின் பாட்டி, தளர்ந்த மூதாட்டி. இவர்கள் குறைந்த சொற்களில் மிக அழுத்தமாக வரையப்படுகிறார்கள். சிறுவர்கள் அனைவரும் ஆழமான தழும்புகளைப் போன்ற கடந்த கால வாழ்வுள்ளவர்கள்தான். கஞ்சா போதை, வேலையில் ஆழ்தல் போன்றவற்றால் அவற்றை மறக்கவே முயலுகிறார்கள். தமக்குள்ளான சச்சரவுகளிலும் அவற்றை நினைவுபடுத்திக்கொள்ள முடியாதளவு அவை மோசமானவை. அதற்காகத் தங்களுக்குள் தாக்கிக்கொள்ளவும் தவறுவதில்லை. ஆனால், அவர்களுக்கு இப்போதைய இருப்பு மட்டும்தான் நிஜமானது. எதிர்காலம் பற்றி நினைப்பதில்லை. அல்லது அது தெரிவதில்லை.

திரையரங்கின் நிலவறைகள் போன்ற படிக்கட்டுகளின் அடிப்பகுதி, உயர் விலைச்சீட்டு வழங்கும் கைவிடப்பட்ட கொட்டடி, நீண்ட வரிசைப் பாதை ஆகியவைதான் சிறார்கள் உறையுமிடங்கள்.  அங்கு இருட்டு, நோய்மை, அழுக்கு ஆகியவை அடைபட்டுள்ளன. அவர்கள் ஒன்றின் மேல் ஒன்றாக வெறும் உடல்களாகக் கிடக்கிறார்கள். போதையும் பாலியல் பிறழ்வும் வன்முறையும் சாதாரணம். இது புற உலகின் தேர்ந்த வகைமாதிரி. இதை விரித்தெடுத்தால் வெளியுலகின் பெரும்பான்மையான இருண்ட பாகம் கிடைக்கும். அவர்கள் இங்கிருந்து வந்துதான் மாயாஜாலமான திரைப்படத்தை மக்கள் காண ஏதுவாயிருக்கிறார்கள். அரை மயக்க நிலையில்தான் சமூக உறவும் கொள்கிறார்கள். சந்தைத் திடலில் காசு தேடி அலைகிறார்கள். போதைப் பொருட்களைப் பெறுகிறார்கள். மலிவான உணவு உண்கிறார்கள். அவர்களுக்கு வேறு சமூக நடவடிக்கைகள் வாய்ப்பதில்லை. பெரும்பாலான வெளியுலகத் தொடர்புகளைக் கொள்வது, திரையரங்கை நோக்கி வருபவர்களிடம்தான். அந்தப் பார்வையாளர்கள் மனிதர்களாயில்லாமல் வெற்றுக் கூட்டமாகக் காணப்படுகிறார்கள். போதையில் மயங்கியவர்கள், பாலியல் நுகர்வோர்கள், வெறும் பொழுதுபோக்கிகள்.

இந்த நாவல், இதில் உலவும் மாந்தர்களின் உடனிருந்து எழுதப்படுவது. அவர்களின் புறவயமான நடவடிக்கைகள் அனைத்தையும் தொடர்வது. திட்டவட்டமற்ற அவர்களின் ஒரு பகுதி வாழ்க்கையை நேரடியாகச் சொல்வது. அதன் வழியாக நம்முடைய பற்பல இளமைக் கதைகளையும் நினைவுபடுத்திக்கொள்ளலாம். நாவல் தனக்குத் தொடர்புடைய திரைப்படத் தொழில்நுட்பமான வெட்டி இணைக்கும் முறையைத் திறனுடன் கையாள்கிறது. முதல் காட்சி பின்னோக்கிக் காணும் தன்மையுடைய உத்தியாகும். அதிலிருந்து முழு நாவலும் அருகமைக் கோணத்தில் விரிகிறது. தூரத்துப் பார்வையே கிடையாது. எனவே ஒவ்வொன்றும் துல்லியமாகத் துலங்குகிறது. தன் கண்ணில் படாதவற்றைப் புகுந்து காட்டவும் முற்படுவதில்லை. கடைசிக் காட்சி, தேர்ந்த, திறந்த முடிவுள்ளது. தன் உற்ற நண்பன் இறந்து, உடனிருப்பவர்களும் நீங்கி, திருட்டுப் பழி சுமந்து, அடித்து துன்புறுத்தப்பட்டு வெளியேறும் சத்தி திரும்ப அழைக்கப்படுவதால் திரும்பிக் கதவைக் காண்கிறான். அவன் மீண்டும் வரலாம், அல்லது செல்லலாம் என்ற சாத்தியங்களுடன் நாவல் முடிகிறது. இதனால் பிரதி தொடர் இயக்கமாக மாறுகிறது.

பெருமாள்முருகனின் மொழி, எப்போதும் அலங்காரமற்றதும் பேச்சு மொழியை ஒற்றியதுமாகும். எளிய சொற்களால், சிறு வாக்கியமைப்புகளால் கட்டியெழுப்பப்படுவது. அசலாக வாழ்வதற்கேற்ற ஒரு மண் குடிசையை நினைவூட்டுவது. சுருங்கக் கூறுவதன்மூலம் வாசகப் பங்கேற்பை உறுதிசெய்வது. ஒரு சொல்லும் மிகையற்ற தன்மையுடையது. அதனாலேயே அடித்தள மக்களின் வாழ்க்கையை எழுத ஏற்றது. அவருக்கு அறுதியான வட்டார இலக்கியத்தை எழுதும் நோக்கமில்லை. ஆனால் குறிப்பிட்ட வட்டாரத்தின் ஆதாரமான வழக்குகளைத் தவறாது உபயோகிக்கிறார். “ஒடக்கான் (ஓணான்), இசுக்காட்டி (ஏமாற்றுதல்), மல் (சிறுநீர்)” போன்ற பிரத்யேகமான சொற்களுக்குப் பொருளறிய,  இதன் ஆசிரியரே உருவாக்கிய “கொங்கு வட்டாரச் சொல்லகராதி”யை நாடலாம். நாவலின் மக்கள் மொழிப் பயன்பாட்டால், சமூகத்தால் விலக்கப்பட்ட கெட்ட வார்த்தைகளும் பங்குபெறுகின்றன. அவை பெரும்பாலும் அடக்கப்பட்ட பாலியல் விழைவு சார்ந்த வார்த்தைகளாயிருக்கின்றன. அவற்றைக் கண்டு அஞ்சுவோர் இந்நாவலை வாசிக்க வேண்டாம் என்று முன்னுரையில் ஆசிரியர் தெரிவித்தும் விடுகிறார்.

இந்நாவலின் உவமைகள் நுட்பமானவை. நாவல் திரையரங்கம் சார்ந்ததால், அவை பெரும்பாலும் திரைப்படம் தொடர்புடையவையாயிருப்பது மிகப் பொருத்தமானவை. “புரொஜக்டரின் சத்தம்போல் குறட்டை”, “கார்பன் தள்ள மறந்துவிடுவதைப் போல் மறதியாகக் கல்யாணம் செய்துகொண்டான்”, “ஜெய்சங்கருடையவைபோல் இடுங்கிய கண்கள்.” இவை எழுதியவரின் கூற்றாக இல்லாமல், கதை மாந்தர்களின் மொழியால் உருவானவை. இவ்வாறு ஆசிரிய இடையீடுகள் கவனமாகத் தவிர்க்கப்படுகின்றன.

இருண்மை நிறைந்த இப்பிரதியில் அபூர்வமான ஒளிமிக்க கணிசமான பகுதியுமுண்டு. அது சத்தி ஒரு குழந்தையைச் சந்திப்பது. குழந்தை அவனுடைய இடத்துக்கு எப்படியோ தப்பி வந்துவிட்டது. அக்காட்சி கனவுபோல் நீள்கிறது. குழந்தைமையின் பூரண குதூகலத்துடன் அவன் இருட்டின் மேல் மோதுகிறது. அவனுடைய பால்யம் மீட்டெடுக்கப்படுகிறது. அவன் தன்னை, திரையரங்கை, அன்பேயற்ற வறட்சியை மறக்கிறான். கொஞ்ச நேரத்தில் அவனை நிராதரவாக்கிவிட்டுக் குழந்தை பறித்துச் செல்லப்படுகிறது. இது, ஆசிரியர் மெல்லுணர்வு மிக்க வேறொரு உலகை உருகவைக்குமளவுச் சித்தரிக்க முடியுமென்பதற்கு சான்று.

இப்போது ‘நிழல்முற்றம்’ நாவல் நவீன செவ்வியலாகியிருக்கிறது. அது என்றைக்கும் வைத்து வாசிக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது. திரும்பிப் பார்க்கையில், வயதாலும் குறைந்த விளிம்பு நிலையாளர்களை அணுகும் உள்ளார்ந்த பரிவு தெரிகிறது. அதில் போலிப் பரிதாபம் சிறிதும் வெளிப்படுவதில்லை. இது அடியிலுள்ள வாழ்வை உண்மையாக அகழ்ந்தெடுத்திருக்கிறது. அதன் அவலம் இன்னும் மாறாமலிருக்கிறது. இளையோரின் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இதன் அர்த்தங்கள் மேலும் பெருகக்கூடும். எதிர்காலத்தில் நம் ஆவணங்களின் கறுப்பான பக்கங்களாகவும் இது இருக்கும்.

வாணியம்பாடி                                                                                                                                                  மு. குலசேகரன்

22.05.2024

நூல் விவரம்: நிழல்முற்றம், 2024, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பதினொன்றாம் பதிப்பு, காலச்சுவடு தமிழ் கிளாசிக் நாவல் வரிசை, விலை ரூ.175.

—–  11-12-24

Latest comments (2)

அ.பழனி

நேர்த்தியான முன்னுரை.பெருமாள் முருகனை இதுவரை அறியாதவர்கள் கூட அறிந்து கொள்ளும்படியான அறிமுகம்.ஏறு வெயில் மற்றும் சில சிறுகதைகளையும்,கட்டுரைகளையும் ரசித்து வாசித்திருக்கிறேன்.சமூக அக்கறையுடன் கூடிய அவரின் படைப்புகள் காலம் கடந்து நிற்கும்.

அருமை . விரிவான அலசல் . நாவலின் முழுபரப்பையும் தெளிவாக அணுகி அதன் சாரத்தை அளித்துளள ர்.