எற்பாடு நெய்தல்

You are currently viewing எற்பாடு நெய்தல்

இடம், காலம் ஆகியவற்றை மக்கள் நடைமுறையில் கையாள்வதற்கும் கவிஞன் படைப்பில் கையாள்வதற்கும் பெரும் வேறுபாடுகள் உள்ளன. படைப்பில் பெருங்காலத்தை ஒற்றைச் சொல்லில், வரியில் கடந்துவிட முடியும். அதேபோலக் குறிப்பிட்ட காலத்தைப் படைப்பு தனக்குள் பிடித்து நிலைப்படுத்தி வைத்துவிடும். உணர்வு ஒருமையை உருவாக்கும் பொருட்டு காலத்தின் தன்மைகளை ஒருசேரக் குவித்துக் காட்சிப்படுத்துதலையும் படைப்பில் காணலாம். நடைமுறைக் காலம் வேறு, படைப்புக் காலம் வேறு என்பதை இலக்கண ஆசிரியர்களும் உரையாசிரியர்களும் தெளிவாக உணர்ந்திருந்தனர் என்பதற்குத் தொல்காப்பியம் சான்றாகிறது.

முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறைசிறந் தனவே
பாடலுள் பயின்றவை நாடுங் காலை  (அகத்.3)

என்னும் நூற்பாவில் ‘பாடலுள் பயின்றவை நாடுங்காலை’ எனத் தெளிவாக முப்பொருள் பாகுபாடு இலக்கியத்திற்கெனத் தொல்காப்பியம் உரைக்கின்றது.  இந்நூற்பாவுக்கு ‘சான்றோர் செய்யுளகத்துப் பயின்ற பொருளை ஆராயுங்கால்’ என்று இளம்பூரணர் உரையைத் தொடங்குகிறார். தொல்காப்பியம் பொருளை மூன்றாக வகுத்துச் சொல்வது சங்க இலக்கியம் என்னும் சான்றோர் செய்யுட்களை ஆராய்ந்துதான் என்பது அவர் கருத்து. ‘புலனெறி வழக்கிடைப் பயின்ற பொருட்களை ஆராயுங் காலத்து… அவைதாம் செய்யுட் செய்யுங்கால் ஒன்று ஒன்றினிற் சிறந்து வருதலுடைய’ என்று இலக்கியத்திற்குப் பொதுவானதாக நச்சினார்க்கினியர் கூறுகின்றார்.

நிலமும் பொழுதுமாகிய முதற்பொருள் வெளிப்படையாகவேனும் குறிப்பாகவேனும் வாராமல் படைப்பு கிடையாது. ஒவ்வொரு கால இலக்கியத்திலும் இவற்றின் பண்புகள், கையாளும் விதம் ஆகியவற்றில் மாற்றங்களைக் காணலாமே தவிர இவற்றைத் தவிர்த்தவை இல்லை. சங்க இலக்கிய அகப்பாடல்களைப் பொறுத்தவரை நிலமும் பொழுதும் முதன்மை பெறுகின்றன. அக உணர்வுகளை ஒருமையுடன் வெளிப்படுத்துதற்கு இவையே நிலைக்களன்களாகக் கவிஞனுக்குப் பயன்பட்டுள்ளன. ஐவகை நிலப் பாகுபாடு, ஒவ்வொரு நிலத்திற்குமான பெரும்பொழுது சிறுபொழுது என்னும் பிரிவுகள், நிலத்திற்கும் பொழுதிற்கும் ஏற்ற கருப்பொருள்கள், இவையனைத்தும் பொருந்தி உருப்பெறும் உரிப்பொருள் என அக இலக்கியம் அமைந்திருக்கிறது. முல்லை நிலம் என்றால் கார்காலமும் மாலையும் எனப் பொழுது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற நிலங்களுக்கு இக்காலம் இல்லையா என்றால் உண்டுதான். ஆனால் இலக்கியம் என்று வரும்போது இதற்கு இதுதான் பொருத்தம். இவ்விதமே படைப்புக்குள்ளான காலம் வகுக்கப்பட்டுள்ளது.

படைப்புக்குள் கவிஞன் காலத்தைக் கையாளும் முறைக்குப் பாடலொன்றைச் சான்றாகப் பார்க்கலாம். சங்க இலக்கியத்தில் தாமோதரன் என்னும் புலவர் பாடிய ஒரே ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது. குறுந்தொகையின் 92ஆவது பாடல் அது. புலவரின் ஒரே பாடல் எனினும் நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் பொருளதிகார உரையில் இரண்டு இடங்களில் (அகத்.14, களவியல் 20) மேற்கோளாகக் காட்டும் சிறப்பினைப் பெற்றுள்ளது. பாடல் வருமாறு:

ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து
அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
இறையுற ஓங்கிய நெறியயல் மராஅத்த
பிள்ளை உள்வாய்ச் செரீஇய
இரைகொண் டமையின் விரையுமால் செலவே.

இப்பாடலின் திணை நெய்தல். எனவே இரங்கல் உரிப்பொருளைக் கொண்டது எனவும் ‘காமம் மிக்க கழிபடர் கிளவியால் பொழுது கண்டு தலைவி சொல்லியது’ துறை எனவும் உரையாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். ’பொழுது கண்டு சொல்லியது’ என்றால் இப்பாடலில் எந்தப் பொழுது குறிக்கப்படுகின்றது? ‘மாலைக் காலம் வந்தது; இனிக் காமநோயை ஆற்றேன்’ என்பது இப்பாடல் கருத்து என உ.வே.சா. எழுதியுள்ளார். ‘மயங்கிருட் கொண்ட மாலைக் காலம்’ எனச் சௌரிப்பெருமாள் அரங்கனும் ‘மாலை நேரம் வந்தமையால்’ என மு.சண்முகம் பிள்ளையும் எழுதியுள்ளனர். ரா.இராகவையங்கார் காலம் பற்றி எந்தக் குறிப்பையும் தராமலே விளக்கம் எழுதிச் சென்றுள்ளார்.

இப்பாடலில் பெரும்பொழுது பற்றிய குறிப்பு ஏதுமில்லை. நெய்தல் திணைக்கு ஆறு பெரும்பொழுதுகளும் உரியவை என உரையாசிரியர்கள் கூறியுள்ளனர். எனினும் காரும் இளவேனிலும் வேனிலும் நெய்தற்குரியவையாகப் பெரிதும் பாடலுள் பயின்று வந்துள்ளன என்பதையும் நச்சினார்க்கினியர் குறிப்பிடுகின்றார். ஆனால் சிறுபொழுது பற்றித் தொல்காப்பியம் ‘எற்பாடு நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும்’ எனக் கூறுகின்றது. ’எற்பாடாவது பகற்பொழுதின் பிற்கூறு’ என்கிறார் இளம்பூரணர். எற்பாடு நெய்தல் திணைக்குப் பொருந்துவதை நச்சினார்க்கினியர் கீழ்வருமாறு விரிவாகக் கூறுகின்றார்.

இனி வெஞ்சுடர் வெப்பந் தீரத் தண்ணறுஞ் சோலை  தாழ்ந்து நீழற் செய்யவும் தண்பதம் பட்ட தென்கழி மேய்ந்து பல்வேறு வகைப்பட்ட புள்ளெல்லாங் குடம்பை நோக்கி உடங்கு பெயரவும் புன்னை முதலிய பூவினாற்றம் முன்னின்று கஞற்றவும் நெடுந்திரை யழுவத்து நிலாக்கதிர் பரப்பவும் காதல் கைமிக்குக் கடற்கானுங் கானற்கானும் நிறை கடந்து வேட்கை புலப்பட உரைத்தலின் ஆண்டுக் காமக்குறிப்பு வெளிப்பட்டு இரங்கற் பொருள் சிறத்தலின் எற்பாடு நெய்தற்கு வந்த்து.  (ப.68)

எற்பாடு என்னும் பொழுது மாலை முடிந்தபின் வரும் மெல்லிய இருள் படர்ந்த முன்னிரவுப் பொழுது என்பதாக நச்சினார்க்கினியர் கருத்து உள்ளது. ‘எல்லே விளக்கம்’ என்பது தொல்காப்பியம். எல் கதிரவனைக் குறிக்கும் சொல். எல் படும் பொழுது அதாவது கதிரவன் மறையும் நேரம் எற்பாடு. மாலைக் காலத்தை அடுத்து வரும் பொழுது எற்பாடு. இதுவே இரங்கற் பொருளைச் சிறக்கச் செய்யும் காலம் என்கிறார் நச்சினார்க்கினியர். மாலைக் காலம் கடந்தும் தலைவன் வரவில்லை என்னும் போதுதான் இரங்கல் நேர்கிறது. எற்பாடு இவ்வகையில் நெய்தலுக்குப் பொருந்துகிறது.

தாமோதரன் பாடலில் மாலைக்காலம் குறிக்கப்படுவதாக உரையாசிரியர்கள் சுட்டுகின்றனர். மாலைக்காலமும் நெய்தலுக்கு வருவதுண்டு என்பதை நச்சினார்க்கினியர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இப்பாடலில் எற்பாடு என்னும் நெய்தற்குரிய சிறுபொழுது மிகவும் பொருந்தி வந்திருக்கிறது என்பதைத் தெளிவாகவே பாடல் காட்டுகிறது. பாடல் தொடக்கமே ‘ஞாயிறு பட்ட அகல்வாய் வானம்’ என்பதுதான். கதிரவன் மறைந்துவிட்டான் என்றால் அது மாலைக் காலமல்ல. எற்பாடுதான். பறவை தன் இருப்பிடம் நோக்கி விரைந்து செல்கிறது. எற்பட்ட பொழுதானதால் ‘விரையுமாற் செலவே’ என்பதும் பொருத்தம்.

நெய்தல் திணைக்குரிய எற்பாடு என்பதையே இப்பாடலில் தாமோதரன் வைத்துப் பாடியுள்ளார்  என்பதோடு நெய்தற்குரிய நிலமும்கூடக் குறிப்பாகச் சுட்டப்பட்டுள்ளது எனலாம். ‘ஞாயிறு பட்ட அகல்வாய் வானம்’ என்பதற்கு ‘அகன்ற இடம் பொருந்திய ஆகாயம் (உ.வே.சா., மு.ச.), அகன்ற இடத்தையுடைய விசும்பு (பொ.வே.சோ.), அகன்ற இடத்தையுடைய வானம் (சௌ.அரங்கன்) என ஒரே வகையான பொருள் உரைக்கப்படுகிறது. அகன்ற இடத்தை உடைய வானம் என்பது மற்ற நிலப் பகுதிகளைவிட நெய்தலுக்கே பெரிதும் பொருந்தும். ஞாயிறு படுதலும் நெய்தல் நிலத்தில் எளிதாகவும் முழுமையாகவும் காணத்தக்க காட்சி. எனவே பாடலின் முதலடியே நெய்தலுக்குரிய முதற்பொருள்களைக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது தெளிவு.

நெய்தற் கருப்பொருள்கள் இப்பாடலில்  ‘கொடுஞ்சிறைப் பறவை’, ‘நெறியயல் மராஅத்த’ என்னும் தொடர்களில் வருகின்றன. பெயரின்றிப் ’பறவை’ எனக் குறிக்கப்பட்டாலும் நிலம் நோக்கி ‘நீர்ப்பறவை’ என யூகம் செய்துகொள்ளலாம். ‘பிள்ளை உள்வாய் கொள்ளற் கேற்ற இரையாகிய சிறுமீன் கொண்டமையின் செலவு விரையும் என்க’ என ரா.இராகவையங்கார் எழுதுகிறார். நீர்ப்பறவை என்பதால் மீனைக் கொண்டு வருவதாகக் கருதியுள்ளார். ‘மராஅம்’ என்பது கடம்பு, வெண்கடம்பு என அகராதிகள் பொருள் தருகின்றன. கடம்ப மரம் நெய்தல் நிலத்தைச் சார்ந்ததாக இருக்கலாம். முதற்பொருள், கருப்பொருள் ஆகியன பொருந்தி வரும் இப்பாடல் உரிப்பொருள் சார்ந்த சிறப்பையும் உடையது.

தலைவி கூற்றுப் பாடல் இது.  பாடற்பொருள்: ‘கதிரவன் மறைந்த அகன்ற இடம் பொருந்திய ஆகாயத்தில் வளைந்த இறகுகளைக் கொண்ட பறவை தாம் தங்குவதற்கு ஏற்றபடி உயர்ந்ததும் வழியின் பக்கத்தில் வளர்ந்ததுமான கடம்ப மரத்திலுள்ள கூட்டில் இருக்கும் தம் குஞ்சுகளின் உள்வாயில் செருகுவதற்காக இரையைத் தம் அலகில் எடுத்துக் கொண்டு விரைந்து செல்கின்றது. அப்பறவை இரங்கத்தக்கது.’

எற்பாட்டு நேரத்தில் அலகில் இரையோடு தம் கூட்டிலிருக்கும் குஞ்சுகளை நோக்கி விரையும் பறவைச் சித்திரம் இப்பாடல். பறவையின் தோற்றத்தைக் குறிக்கக் ‘கொடுஞ்சிறை’ என இறக்கை மட்டும் சொல்லப்படுகிறது. எற்பாட்டுப் பொழுதில் வானில் பறக்கும் பறவை சற்றே பெரிதாக இருத்தல் வேண்டும். அதனால்தான் கொடுஞ்சிறைப் பறவை என்கிறாள்.  அதன் கூடிருக்கும் இடம் மக்கள் செல்லும் பாதையை ஒட்டியுள்ள மரம். அது எப்படித் தெரியும் தலைவிக்கு? அந்த மரம் என்பது தலைவியின் அனுமானம். அதேபோலப் பறவையின் அலகில் இரை இருக்கிறது என்பதும் குஞ்சுகள் காத்திருக்கின்றன என்பதும் தலைவியின் அனுமானங்களே. பறவை விரைந்து செல்வதைக் கண்டு அவளுக்குத் தோன்றும் எண்ணங்கள் இவை. வெளியிலே நின்று ஆகாயத்தைக் காணும் தலைவி, தனக்குத் தெரியும் காட்சிகளையும் தன் அனுமானங்களையும் இயைத்துப் பறவை பற்றிய சித்திரம் ஒன்றை உருவாக்குக்கிறாள்.

இரை கொண்டு செல்லும் பறவை இரங்கத்தக்கது (அளியதாமே) என அவள் கூறுவதற்குக் காரணம் என்ன? ‘அளியதாமே’ என்னும் தொடர்தான் நெய்தலுக்கான உரிப்பொருளைக் கொண்டிருக்கிறது. அதுதான் பாடற்பொருளையும் உருவாக்குகிறது. ஆனால் அப்பறவைக்கு ‘அளியதாமே’ என்பது எப்படிப் பொருந்தும்? காத்திருக்கும் பறவைக் குஞ்சுகள் இரங்கத்தக்கன என்றால் பொருத்தம். தலைவனுக்காகக் காத்திருக்கும் தலைவியின் நிலையோடு அது இயையும். பறவை எப்படி இரங்கத்தக்கதாகும்? இக்குழப்பம் உரையாசிரியர்களுக்கும் வந்துள்ளது.

‘மாலைப் பொழுது வந்தது கண்டு தலைவி “பறவைகள் தம் பார்ப்புகளுக்குரிய இரையை வாய்க்கொண்டு தம் கூடுகளை நோக்கிச் செல்கின்றன” என்று கூறி “இனி ஆற்றேன்” என்பதுணர்த்தியது’ என  ‘அளியதாமே’ என்பதைத் தலைவிக்கு ஏற்றிக் கூறும் உவேசா பாடலுக்குப் பொருள் கூறும்போது ‘அவை இரங்கத்தக்கன’ எனப் பறவைகளுக்கு ஏற்றுகிறார்.

‘இப்பறவைகள் இயற்கையாகிய இவ்வன்பினால் இரங்கத்தக்கன என்னுமுகத்தால் இவ்வாறு மகப்பேறு இனிதோம்பும் இல்லறத்து வாழ்தற்கு விரையாது வரைவு நீட்டிக்கும் தலைவர் இவ்வன்பு அறிகிலரென்று குறித்தவாறாம்’ என ரா.இராகவையங்கார் பொருத்தம் காண்கிறார். அவ்வாறே ‘அன்பின் வழியே இப்பறவைகள் இயங்குதலால் அவை இரங்கத்தக்கன என்னுமுகத்தால் அன்பின்றித் தன்னை மறந்துறையும் வன்கண்மையுடைய தலைவர், இவ்வன்புதானும் அறிகிலரே என்று கருதி இரங்கியவாறாம்’ எனப் பொ.வே.சோமசுந்தரனார் உரைக்கிறார்.  இருவரும் ‘அளியதாமே’ என்பதைப் பறவைக்குப் பொருத்திப் பின் தலைவன் பற்றிய தலைவி எண்ணத்தை அதனோடு இயைக்கின்றனர்.

‘அறிவில்லாத பறவைகளும் மயங்கிருட் கொண்ட மாலைக்காலத்துப் பிள்ளைக்கு (உருக்கத்தோடு) இரையுடன் கூட்டினை நோக்கி விரையும் என்றது, அறிவுடைய தலைவன், இன்னாத இம்மாலைக் காலத்து மகவினை விரும்பி வேண்டியவற்றோடு மனையை அடைந்திலன், எவ்வாறு உய்குவேன் என்பதைக் குறிப்பாலுணர்த்த’ என்பது சௌ.அரங்கன் விளக்கம்.

‘மாலையில் பறவைகள் குஞ்சுகளுக்குரிய இரையுடன் விரைந்து பறந்து செல்லுதலைக் கண்ட தலைவி தானும் தலைவனுடனிருந்து இல்லறம் ஆற்றிக் குழந்தைப் பேறு பெற்று மகிழ்வதற்கில்லையே என்னும் ஏக்கத்தை வெளிப்படுத்துதலின் இது இறைச்சிப் பொருளாம்’ என மு.சண்முகம்பிள்ளை விளக்குகிறார்.

இயற்கைக் காட்சி ஒன்றை விவரிப்பதோடு பாடல் முடிந்து விடுவதால் மனித உணர்வுகளோடு அதைப் பொருத்த இறைச்சியாகத்தான் பொருள் கொண்டாக வேண்டும். அவ்விதம் பொருள் கொள்வதில் வெவ்வேறு சிந்தனைகள் உருப்பெறுவதை மேற்கண்ட உரைகள் காட்டுகின்றன. எனினும் இப்பொருள்கள் அவ்வளவாகப் பொருந்தவில்லை. பாடல் வேறெதையோ சொல்ல வருகிறது என்னும் எண்ணம் தோன்றுகின்றது. பாடலில் பயின்று வரும் சொற்களுக்கு இன்னும் கூடுதலாக இயையும் வகையில் பொருள் சொல்ல முயலலாம். குறிப்பாக இப்பாடல் குறிக்கும் சிறுபொழுது நெய்தலுக்குரிய ‘எற்பாடு’ எனக் கொண்டு பொருள் இயைத்துப் பார்ப்பது சரியானது.

தலைவன் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தலைவியின் பார்வைக்குத் தென்படும் காட்சிச் சித்திரம் இது என்னும் பின்னணி சரியாகவே அமைகிறது. ’காத்திருக்கும் குஞ்சுகளை எண்ணித் தன் அலகில் இரை கொண்டு விரைந்து செல்லும் பறவை இரங்கத்தக்கது’ என்னும் விவரிப்பில் பறவையின் இடத்தில் தலைவனை வைத்துப் பார்க்கலாம். எங்கோ சென்று பொருள்தேடி வரும் தலைவன் தான் குறித்த காலம் கடந்து விட்டதால் விரைந்து வந்து கொண்டிருக்கக் கூடும். தனக்காகக் காத்திருக்கும் தலைவியின் நிலை, தான் அவளுக்குக் கொண்டு சேர்க்க வேண்டிய இன்பம் ஆகியவற்றை மனத்தில் எண்ணி விரையும் தலைவன் இரங்கத்தக்கவன். இவ்வாறு பொருள் எடுத்தால் பறவை – தலைவன், குஞ்சுகள் – தலைவி, இரை – இன்பம் என இயைப்பது எளிது.

காத்திருக்கும் குஞ்சுகளும் இரங்கத்தக்கவையே. எனினும் தலைவி பறவையையே காண்கிறாள். காத்திருந்து அவன் வருவதற்கான நேரம் கடந்ததும் நம்பிக்கை இழந்து நிற்கும் தலைவிக்கு அகன்ற ஆகாயத்தில் பெருஞ்சிறகை விரித்து விரைந்து செல்லும் பறவைக் காட்சி நம்பிக்கை ஏற்படுத்துகிறது. இந்தப் பறவை போலத் தலைவனும் குறித்த காலம் கடந்துவிட்டதே என்னும் எண்ணத்துடன் விரைந்து வந்து கொண்டிருக்கக்கூடும். ஆகவே பறவை போல அவனும் இரங்கத்தக்கவன் என எண்ணுகிறாள். இரைக்காகக் காத்திருக்கும்  குஞ்சின் நிலையில் தானிருப்பினும் பறவையைப் பார்த்ததும் தலைவனின் நிலை புரிகிறது. அவனது கோணத்தில் இருந்து சிந்தித்துப் பார்த்துத் தன்னைத் தேற்றிக் கொள்கிறாள்.

தலைவனோடு கூடியிருக்கும் இன்ப எதிர்பார்ப்பும் பாடலில் தெளிவாகச் சொல்லப்படுகிறது. ‘பிள்ளை உள்வாய்ச் செரீஇய’ என்பது தலைவன் மூலமாகக் கிடைக்கும் புணர்ச்சி இன்பத்தை வெளிப்படுத்தும் குறிப்பு. இப்பாடலில் இரங்கல் என்னும் உரிப்பொருள் தலைவியிடத்திருந்து தலைவனை நோக்கி மாறுகிறது. எனினும் தலைவிதான் இரங்குகிறாள். இன்னொருவரின் கோணத்தில் இருந்து ஒரு விஷயத்தைச் சிந்திக்கும்போது அதற்குக் கூடுதல் பரிமாணம் கிடைக்கும் என்னும் கூறு இப்பாடலில் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. இதை உணர்வதற்கு இப்பாடலில் கையாளப்பட்ட காலக்குறிப்பே திறவாகப் பயன்படுகிறது. கூட்டுக்குத் திரும்பவேண்டிய  காலம் கடந்து எற்பாட்டு நேரத்தில் விரைந்து செல்கிறது பறவை. எற்பாடு என்பதுதான் இப்பாடல் உணர்த்தும் பொழுது என்பதை அறிந்தால் இத்தகைய பொருள் சிறப்பை நோக்கி நகர முடியும். ஒரு பாடலின் பொருள்சிறப்புக்கு இந்த அளவு முக்கியமானது அதில் கையாளப்பட்டிருக்கும் காலக்குறிப்பு.

பயன்பட்ட நூல்கள்:
1. ஆ.சிவலிங்கனார் (ப.ஆ.), 1991, தொல்காப்பியம் உரைவளம் பொருளதிகாரம் – அகத்திணையியல், சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
2. சௌரிப்பெருமாள் அரங்கன் (ப.ஆ.), 2000, குறுந்தொகை மூலமும் உரையும்,  சென்னை: முல்லை நிலையம், மறுபதிப்பு.
3. உ.வே.சாமிநாதையர் (ப.ஆ.), 1983, குறுந்தொகை, அண்ணாமலை நகர்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மறுபதிப்பு.
4. ரா.இராகவையங்கார் (ப.ஆ.), 1993, குறுந்தொகை விளக்கம், அண்ணாமலை நகர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
5. மு.சண்முகம்பிள்ளை (ப.ஆ.), 1985, குறுந்தொகை மூலமும் உரையும், தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம்.
6. பொ.வே.சோமசுந்தரனார் (உ.ஆ.), குறுந்தொகை – உரையுடன், சென்னை: கழக வெளியீடு.