சென்னையில் மூன்று நாட்கள்

You are currently viewing சென்னையில் மூன்று நாட்கள்

 

சென்னைப் புத்தகத் திருவிழா தொடங்கிய 08-01-26 அன்று ஆசி.கந்தராஜாவைச் சந்திப்பதற்காகச் சென்னை சென்றேன். டிஸ்கவரி புத்தக நிலையத்தில் நடைபெற்ற பரத்ராஜ் ரவிதாஸின்  ‘பட்டறை’ நாவல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றேன். மாலையில் நண்பர்கள் அலர் கேசவன், பாரதி கனகராஜ் ஆகியோருடன் புத்தகக் காட்சிக்குள் சற்று நேரம் உலவ முடிந்தது. ஆசி.கந்தராஜாவுடன் இரவு விருந்து உண்டுவிட்டு வேறு வேலைகள் காரணமாக இரவே ஊருக்குத் திரும்பிவிட்டேன். மீண்டும் சென்னைக்கு வருகிறேன்.

17, 18, 19-01-26 (சனி, ஞாயிறு, திங்கள்) ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் இருப்பேன்.  ‘இந்து இலக்கியத் திருவிழா’வில் நானும் ஓவியர் அப்பூபெனும் பங்கேற்கும் ‘வாடிவாசல் வரைகலை நூல்’ குறித்த அமர்வு 17-01-26 சனி மாலை 5.30 மணிக்கு  நடைபெறுகிறது.

அது முடிந்து  பெரியார் திடலில் நடைபெறும் தமிழர் திருநாள் கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்றுத் ‘தந்தை பெரியார் விருது’ பெற இரவு ஏழு மணியளவில் செல்கிறேன்.

18-01-26 அன்று பிற்பகலில் புத்தகக் காட்சிக்குச் செல்கிறேன். மாலை 4 மணிக்கு ‘ஹெர் ஸ்டோரிஸ்’ பதிப்பக நூல் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்கிறேன்.

அதன்பின் காலச்சுவடு கடையில்  ‘எழுத்தாளர் சந்திப்பு’ நிகழ்வு. வாசகர்களைச் சந்திப்பதும் நூல்களில் கையொப்பம் இடுவதுமாகப் புத்தகக் காட்சி நிறைவு பெறும் நேரம் வரை முழுவதுமே அங்கே இருப்பேன்.

19-01-26 திங்கள் அன்று சென்னை, மாநிலக் கல்லூரியில் ‘பெருமாள்முருகன் 60’ என்னும் தலைப்பில் முழுநாள் கருத்தரங்கம். அதில் பங்கேற்கிறேன்.

சென்னை நகரத்தில் பத்தாண்டுகள் (1988 – 1996, 2015 – 2016) வாழ்ந்திருக்கிறேன். இப்போது மூன்று நாட்கள் மட்டும்தான் எனினும் மலைப்பாக இருக்கிறது. வயதா? தொடர்நிகழ்வுகளா? காரணம் புரியவில்லை. எனினும் சென்னைப் பயணம் எப்போதும் போல் உற்சாகத்தையும் தருகிறது.

—– 16-01-26

Add your first comment to this post