சிறுசுமை தரும் சுகப்பயணம்
எனக்குக் கண் கட்டுவது போலிருந்தது. கீழே விழுந்துவிடுவேனோ என்றிருந்தது. வந்த விமானத்தில் உண்ண எதுவும் கொடுக்கவில்லை. குடிநீர் மட்டும்தான். இந்த விமானத்தைப் பிடித்துவிட்டால் ஏதாவது கொடுப்பார்கள் என்று நம்பிக்கை இருந்தது. வயிற்றுக்காகவாவது விமானத்தைப் பிடித்துவிட வேண்டும். மூச்சைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஓடினேன். ஒருவழியாக வாயிலை அடைந்தோம். எங்கள் இருவருக்காக மட்டும் விமானம் காத்திருந்தது. முன்னால் ஓடி வாயிலை அடைந்த அவர் தூரத்தில் புள்ளியாய்த் தெரிந்த எனக்காக நின்றார். இருவரும் சேர்ந்தே விமானம் ஏறினோம். உள்ளே ஏறியதும் தண்ணீர் தரச் சொல்லிக் குடித்துவிட்டுத்தான் இருக்கையைத் தேடினேன்.
அப்பெண் இல்லை என்றால் விமானத்தைப் பிடித்திருப்பேனா என்று தெரியாது. இன்னும் என்னென்ன அலைச்சல்களை அனுபவித்திருப்பேனோ. விமானத்திற்குள் நுழைந்ததும் இருவருக்கும் வேறுவேறு இடங்களில் இருக்கை. கண் கலக்கத்தோடு அவரைக் கையெடுத்துக் கும்பிட்டு நன்றி சொன்னேன். கும்பிட்ட கையைப் பற்றிப் பிரித்துக் குலுக்கிவிட்டு மென்மையாகச் சிரித்தபடி நகர்ந்தார். அவர் முகம் இப்போதும் என்னுள் இருக்கிறது. பெயர் தெரியவில்லை. ஊர் தெரியவில்லை. செய்த உதவியால் என் மனதில் நிறைந்திருக்கிறார். இந்தச் சம்பவத்தை நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டே போது இதை யாராவது செய்திக்கட்டுரையாக எழுதினால் ‘பெண் பின்னால் ஓடிய பெருமாள்முருகன்’ என்று தலைப்பிடலாம் என்று சிரித்தார்கள். நல்ல தலைப்புத்தான். நானே எழுதுவதால் அத்தலைப்பைப் போட முடியவில்லை.
கையில் பெட்டியும் இருந்திருக்குமானால் இந்த அளவுகூட ஓடியிருக்க முடியாது. வேறு விமானத்திற்கு மாற்றிக் கொடுக்கச் சொல்லி வாங்கித்தான் போயிருக்க முடியும். அந்தப் பெருங்கூட்டத்தில் அது சுலபமானதில்லை. சுமை இல்லாமல் இருந்ததால் நெருக்கடியான பயணம் இலகுவாயிற்று. பெட்டியைச் சுமையில் போட்டவர்கள் பலர் அது கிடைக்காமல் அலைந்த செய்திகளும் அப்போது வந்தன. யார் எந்த விமானம் மாறுகிறார்கள் என்பது குழப்பமாக இருந்தது.
இந்த இத்தாலிப் பயணத்திலும் சுமை தொடர்பான சிக்கல் ஒன்று ஏற்பட்டது.
ஒருநாள் நிகழ்ச்சி என்பதால் பரண் சுமையும் (cabin baggage) கைப்பையும் (hand luggage) மட்டும் எடுத்துச் செல்லும்படி பயணச்சீட்டு பதிவு செய்துவிட்டனர். சரக்குச் சுமைக்கு (check-in baggage) அனுமதியில்லை. சரக்குச் சுமை இல்லையென்றால் பயணச்சீட்டு விலை குறையும் போல. இப்படி முறை இருப்பதை நான் அறியவில்லை. அந்த விவரத்தையும் முன்கூட்டிப் பார்க்கவில்லை. விமான நிலையத்திற்குச் சென்று பெட்டியைச் சரக்குச் சுமையில் போடப் போகையில்தான் விவரம் தெரிந்தது. பரண்சுமைக்கு ஏற்ற சிறுபெட்டியும் கொஞ்சம் பெரிய பை ஒன்றும் வைத்திருந்தேன். அந்தப் பையில் கனம் இல்லை எனினும் அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டனர். கைப்பைக்கு ஓர் அளவு வைத்துள்ளனர். துணிப்பை ஒன்றிற்கு மாற்றிக்கொண்டு பெரிய பையை மகனிடம் கொடுத்துவிட்டேன்.
கூடுதலாக எடுத்து வந்திருந்தேன் என்றால் பெரிய சிரமமாகப் போயிருக்கும். பரண்சுமை என்றாலும் விமான வாயில் வரைக்கும் அதை இழுத்துச் செல்வது, பாதுகாத்து வைப்பது எல்லாம் கஷ்டம். ஒரு விமானத்திலிருந்து இறங்கி அடுத்த விமானத்திற்கு மாறும் போது வெகுதூரம் இழுத்தும் நகர்த்தியும் பெட்டியைச் சுமப்பது கடினமான வேலை. அரைமணி நேரம், ஒருமணி நேரத்திற்குள் மாற வேண்டும் என்றால் பெருந்துன்பம். திரும்பும்போது எப்படியும் பொருட்கள் கூடிவிடும். அவற்றை எப்படிக் கொண்டு வருவது? இனி ஒரே ஒருநாள் பயணம் எனினும் சரக்குச்சுமைக்கும் சேர்த்துத்தான் பதிவு செய்ய வேண்டும் என முதலிலேயே சொல்லிவிட வேண்டும் என்று முடிவு செய்தேன்.
பிளோரன்ஸிலிருந்து ரோம் சென்ற ரயில் பயணம் சுகமாக அமைந்தமைக்குச் சுமைக் குறைவும் முக்கியமான காரணம். என்னிடம் சிறுபெட்டி ஒன்று மட்டும் இருந்தது. கண்ணனிடம் பெரிய பெட்டி ஒன்று. அதிலும் இடம் அதிகமாக இருந்தது. கனமில்லை என்றாலும் எங்கள் பெட்டிகளை ரயில் பரணில் வைக்க முடியவில்லை. அத்தனை சிறிய பரண். பெட்டியின் தொடக்கத்தில் சுமை வைப்பதற்கென்று இருந்த இடத்தில்தான் வைத்தோம். கண்ணாடி வழியாக இத்தாலியின் நிலக்காட்சிகளை ரசித்தபடியே சென்றோம். விதவிதமான நில அமைப்பு. உழவு நிலங்கள். சிறுவனங்கள். திடுமெனத் தொழிற்சாலைகள். அழகிய வீடுகளைக் கொண்ட கிராமங்கள். மக்கள் வாழ்க்கைத் தரம் சிறப்பாக அமைந்த நாடுகளில் ஒன்று இத்தாலி என்பதை அதன் நிலக்காட்சிகள் உணர்த்தின.
ரோம் நகரம் பெருவரலாறு கொண்டது. கி.பி. முதலாம் நூற்றாண்டிலிருந்து போப்பின் இருப்பிடம். கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து மக்கள் வாழ்ந்ததற்குச் சான்றுகள் கிடைக்கின்றன. அதனால் ஏராளமான வரலாற்றுச் சின்னங்களும் தேவாலயங்களும் சிற்பங்களும் சிலைகளும் ஸ்தூபிகளும் நிறைந்திருக்கின்றன. அந்நகரை முழுமையாகவும் நிதானமாகவும் வரலாற்று அறிவுடனும் காண வேண்டுமானால் குறைந்தபட்சம் ஒருமாதமாவது செலவிட வேண்டியிருக்கும். எங்களுக்குக் கிடைத்ததோ மூன்றே மூன்று நாட்கள்.
எங்களுக்கு ரோமில் தங்க ஏற்பாடு செய்தவர் அருட்தந்தை அருள் ஜான் போஸ்கோ. அவர் சென்னை பூந்தமல்லியில் இருக்கும் Sacred Heart Seminary நிறுவனத்தில் ஆசிரியர். முனைவர் பட்ட ஆய்வு செய்வதற்காக இத்தாலிக்குச் சென்றிருக்கிறார். ஆய்வுக்கு உதவித்தொகை கிடைக்கிறது. அங்குள்ள தேவாலயம் ஒன்றில் பூசை நடத்தும் பொறுப்பிலும் இருக்கிறார். அதற்கும் ஊதியம் உண்டு. கல்விக்கென இத்தாலிக்குச் சென்றால் அம்மொழியை முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். அம்மொழி வழியாகத்தான் அனைத்துக் கல்வியும் கற்க வேண்டும். முனைவர் பட்ட ஆய்வேடும் இத்தாலி மொழியில்தான் சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை வழிகாட்டி ஆங்கிலம் தெரிந்தவராக இருந்தால் ஆங்கிலத்தில் சமர்ப்பிக்க விதிவிலக்கு உண்டு. இந்தியாவில் இருந்து கிறித்தவ இறையியலில் முதுகலை படிக்கவும் முனைவர் பட்ட ஆய்வு செய்யவும் சிலர் செல்கின்றனர். இத்தாலி மட்டுமல்லாமல் இலத்தீன் மொழியும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. முதல் ஆறு மாதத்தில் மொழிக் கல்வி முடிந்துவிடும். உலக நாடுகள் பலவற்றில் இந்த நடைமுறை இருக்கிறது.
காலச்சுவடு வாசகரான அவரது தொடர்பை நண்பர்கள் வழி கண்ணன் பெற்றிருந்தார். இப்போது கிறித்தவ இறையியல் பயில வருவோர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது என்று சொன்னார். தேவாலயத்திற்கு வருவோர் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறதாம். ஐரோப்பிய நாடாகிய ஸ்லோவேனியாவில் இருந்து இறையியல் கற்க வரும் மாணவர்கள் தங்குவதற்காக ஒருவிடுதி இருக்கிறது. அங்கிருந்து மாணவர்கள் இப்போது வருவதில்லை. ஆகவே அவ்விடுதியில் அறைகள் காலியாக இருந்தன. பொதுவாக அவற்றை வாடகைக்கு விடுவதில்லை. அருட்தந்தையர் பரிந்துரைத்தால் தருவார்கள். வாடகை குறைவுதான். அதில் எங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அமைதியான இடம்; அழகான அறை. குளிர்தான் அதிகம். வெப்பத்தைப் பரப்பும் கருவி ஒன்றும் உள்ளே இருந்தது. மூன்று நாட்களும் அங்கே வசதியாகத் தங்கினோம். அவ்விடுதியிலிருந்து நடைதூரத்தில் அவர் பணியாற்றும் தேவாலயம்.
ரோமில் என்னவெல்லாம் பார்க்கலாம் என்பதை முடிவு செய்யும் பொறுப்பை அருட்தந்தையிடம் விட்டுவிட்டோம். பழங்காலத்தில் அடிமைகளும் வீரர்களும் சண்டையிடும் ‘கொலோசியம்’ என்னும் அரங்கைப் பார்க்கச் சென்றோம். பிரம்மாண்டமான அரங்கு. இப்போது பிரமிப்பாக இருக்கிறது. அங்கு நடந்த சண்டைகளைப் பற்றி அறியும்போது மனிதர்கள் இப்படியும் குரூரமாக இருப்பார்களா என்றுதான் தோன்றும். அதைச் சுற்றிய பகுதிகளில் விதவிதமான தேவாலயங்கள் இருக்கின்றன. அவற்றின் வரலாற்றை அறிய வேண்டுமானால் வழிகாட்டி வேண்டும். பழங்காலப் பாதைக்கு முடிவேது?
—– 04-03-25
அனுபவங்கள் அருமை.
ஆனால் பட்ட கஷ்டங்கள் பகிரும் போது….
உலகெங்கும் சுற்றும் உங்களைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தாலும் பொறாமையாகவும் இருக்கிறது ஐயா. இத்தாலி, இத்தாலியின் ரோம் நகரம் எனது கனவு பிரதேசங்களில் அடங்கும். கைக் கொடுத்த அந்தப் பெண்ணுக்கு அன்பு.
அருமையான பட்டறிவு.