இத்தாலி அனுபவங்கள் 8

You are currently viewing இத்தாலி அனுபவங்கள் 8

கீட்ஸ் நினைவில்லம்

மறுநாளும் (14-12-24) பழமை வாய்ந்த சில தேவாலயங்களைப் பார்த்தோம். பிரம்மாண்டமான வடிவமைப்பைக் கொண்டவை அவை. நல்ல பராமரிப்பில் வடிவாகத் திகழ்கின்றன. தேவாலயங்களுக்கு எல்லாம் மூத்ததாகிய ‘தாய்க் கோயில்’ கண்டோம். இயேசு நடந்ததாக நம்பப்படும் புனிதப் படிகளையும் அதில் பாதம் பதியாமல் மண்டியிட்டு ஏறிச் செல்வோரையும் பார்த்தோம். இயேசுவுக்கு வைக்கப்பட்ட முள்முடி, இயேசு சுமந்த மரக்கட்டையாலான சிலுவை ஆகியவையும் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இயேசுவின் சீடர்களைக் காட்சிப்படுத்தியிருந்த பேரோவியங்களைக் கண்டோம். என் மனம் எப்போதும் போல மரத்தில் ஏறிக்கொண்டது. பிரம்மாண்டத்தின் பின்னிருக்கும் மானிடத்தின் துயர்வரலாறு குறித்து யோசனை ஓடியது.

இப்போது தேவாலயத்திற்கு வருவோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று அருட்தந்தை சொன்னதும் மனதில் ஓடியது. மதவாதம், இனவாதம், தேசியவாதம் பேசும் வலதுசாரிகள் உலகம் முழுவதும் அதிகாரம் பெறும் காலகட்டத்தில் தேவாலயங்கள் வெறிச்சோடிப் போகும் காட்சியும் அரங்கேறுகிறது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா சென்றிருந்த போதும் இதே போன்ற செய்தியைக் கேள்விப்பட்டேன். தேவாலயங்கள் விற்பனைக்கு வரும் விளம்பரங்களை நண்பர் ஒருவர் காட்டினார். மக்கள் வருகை குறைந்து போன, இல்லாமல் போன தேவாலயங்கள் பலவாம். அவை இருந்த இடங்களில் இப்போது பெரும் அடுக்ககச் சந்தைகள் வருகின்றனவாம்.

தாம் எம்மதத்தையும் சாரவில்லை என்று சொல்வோர் எண்ணிக்கையும் கணிசமாகக் கூடியிருக்கிறது என்றார் நண்பர். மத நம்பிக்கை சில நாடுகளில் குறைந்து போகும் காலத்தில் வேறு சில நாடுகளில் அதீதமாகும் காட்சிகளையும் காண்கிறோம். வாழ்க்கைத் தரம் சமச்சீராக உயரும்போது மத நம்பிக்கை குறையுமோ? காலியாகும் இடம் அப்படியே வெறுமையாக இருந்துவிடுமா? இனவாதம், தேசியவாதம் போன்றவை காலிப்பீடத்தில் ஏறி அமர்ந்துகொள்ளுமா? மதவாதம் பெருக்கெடுக்கும் நாடுகள் எப்போது அதிலிருந்து வெளியே வரும்? கிறித்தவ மதத்தில் இருக்கும் ஜனநாயகக் கூறுகள் பிற மதங்களில் இருக்கின்றனவா?  விடை தெரியாத கேள்விகள்.

ஒருகாலத்தில் அதிகார பீடங்களாக இருந்திருக்கக் கூடிய பெரும் தேவாலயங்கள் இன்று வெறும் சுற்றுலாத் தலங்களாக மாறி நிற்கும் காட்சியைக் கண்டோம். சிலவற்றில் சடங்காக வழிபாடும் நடந்து கொண்டிருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் அதையும் ஒருகாட்சியாகக் கண்டு நகர்கின்றனர். பிளோரன்ஸ் நகரம் பழமையின் சாயலைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது போல ரோம் இல்லை. பழைய வரலாறு கொண்ட நவீன நகரம் ரோம். தேவாலயங்களைப் போலவே மகத்தான கலைஞர்கள் வடித்த அழகிய சிலைகள் நகரெங்கும் நிற்கின்றன. அவற்றின் பின்னணியில் நவீனக் காட்சிகள்; நவீன வாழ்க்கை.

அன்று பிற்பகல் நாங்கள் சென்ற இடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்னும் வீரமாமுனிவர் தமிழுக்குச் செய்த தொண்டுகள் பல. அவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். அவர் பிறந்த காஸ்டில்யானோ என்னும் ஊரில் நினைவிடம் இருப்பதாகவும் தமிழ்நாட்டு அரசின் உதவியால் அங்கொரு சிலை நிறுவப்பட்டிருப்பதாகவும் அறிந்தேன். ரோமிலிருந்து வெகுதூரத்தில் உள்ள ஊர். செல்வதற்கு வாய்ப்பில்லை. அந்தக் குறையைப் போக்கும் விதமாக ஆங்கிலக் கவி ஜான் கீட்ஸ் (1795 – 1821) நினைவில்லத்தைக் கண்டோம். உலகப் புகழ் பெற்றவரான கீட்ஸ் வாழ்ந்த காலம் வெறும் இருபத்தைந்து ஆண்டுகள் தான். தம் இருபத்தாறாவது வயதில் ரோம் நகரில் இறந்து போனார். காசநோய் பீடித்திருந்த அவர் அதற்கு மருத்துவம் பார்த்துக் கொள்ள வசதியாக இருக்கும் எனக் கருதி ரோம் நகரத்திற்கு வந்தார். மூன்று மாதம் தங்கியிருந்து மருத்துவம் பார்த்துக்கொண்டார். நோய் குணமாகவில்லை. ரோமிலேயே இறந்து போனார். அக்காலத்தில் காசநோய்க்குச் சரியான மருத்துவம் இல்லை.

மூன்று மாதம் அவர் தங்கியிருந்த அந்த இல்லத்தின் இரண்டாம் மாடி இப்போது கீட்ஸ் நினைவில்லமாக இருக்கிறது. கீட்ஸ் – ஷெல்லி அறக்கட்டளையினர் அவ்வில்லத்தை வாங்கி நினைவகமாக மாற்றியுள்ளனர் ‘கீட்ஸ் – ஷெல்லி நினைவில்லம்’ என்றே பெயர் சூட்டியுள்ளனர்.  அருகில்  ‘ஸ்பானிஷ் படிகள்’ என்னும் சுற்றுலா இடம் உள்ளது. பல படிகள் ஏற வேண்டும். அதற்கு மேல் கட்டிடங்கள் உள்ளன. அவற்றைப் பார்க்கப் பெருங்கூட்டம் திரள்கிறது. முதலில் பொதுக்கூட்டம் ஏதும் நடக்கிறதோ என்று நினைத்துவிட்டேன். அந்தப் படிகளைக் காணவும் எதிரிலிருக்கும் கடைவீதியில் பொருட்கள் வாங்கவும்தான் அத்தனை கூட்டம்.

கீட்ஸ் நினைவில்லத்திற்கு ஒருவரும் செல்லவில்லை. பணியாளர்கள் இருவர் இருந்தனர். கீட்ஸ், ஷெல்லி சிற்பங்கள் இருக்கின்றன. அவர்களின் நூல்கள், பயன்படுத்திய பொருட்கள் என இல்லம் நிறைந்திருக்கிறது. பைரன் உள்ளிட்ட ஆங்கிலக் கவிஞர்களின் படைப்புகளும் நூலகத்தில் உள்ளன. ஷெல்லியும் பைரனும்கூட இத்தாலியில் வாழ்ந்துள்ளனர். ஒரு படகு விபத்தில் ஷெல்லி இறந்து போனார். கீட்ஸ் தங்கியிருந்த வீடு எனினும் ஷெல்லி, பைரன் ஆகியோரையும் இணைத்துக் கொள்ள அவர்கள் இத்தாலியில் வாழ்ந்ததே காரணமாக இருக்கலாம்.சிறுஇடம் தான் எனினும் கீட்ஸ் வந்து ரோமில் வாழ்ந்த அடையாளத்தை மீட்டுருவாக்கும் முயற்சியில் அந்நினைவில்லம் விளங்குகிறது. புத்தக விற்பனையும் நடக்கிறது.

இத்தாலி அனுபவங்கள் 8

 

ஸ்பானிஷ் படிகளின் வலப்புறம் கீட்ஸ் நினைவில்லம். இடப்புறம் ஒரு கஃபே. Babington’s Tea Rooms என்னும் பெயர் கொண்ட அதை 1893இல் தொடங்கியுள்ளனர். நூற்றாண்டைக் கடந்த அதன் பெயர் பூனையைக் குறிக்கும் இத்தாலிச் சொல் போல. பொருட்கள் நல்ல விலை. ஆனால் பெருங்கூட்டம். புகழ் பெற்ற உணவகம் போல.  எங்கும் பூனையின் அழகிய ஓவியங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அங்கும் சென்று பிரமாதமான காபி குடித்தோம். அழகான பூனை ஓவியம் பதித்த கோப்பைகள் அங்கு விற்பனைக்கு இருந்தன. என் மனைவி கோப்பை சேகரிப்பாளர்; பூனை விரும்பி. அவருக்காக ஒரு கோப்பை வாங்கினேன். கீட்ஸ் நினைவில்லத்தையும் இந்த கஃபேவையும் காணும்படி எங்களுக்குச் சொன்னவர் கோபாலகிருஷ்ண காந்தி அவர்கள்.

அடுத்த நாள் வாடிகன் நகருக்குச் சென்றோம். அது நகர் அல்ல. ரோமுக்குள் இருக்கும் தனிநாடு. அதன் பிரம்மாண்டக் கட்டிடங்களையும் ஒருபுறம் கிறிஸ்துமஸ்ஸுக்காகக் குடிலும் மாட்டுக்கொட்டகையும் அமைத்திருந்த முரணையும் கண்டோம். அங்கே எங்களுக்கு வழிகாட்டி அழைத்துச் சென்றவர் அருட்தந்தை சிகாமணி அவர்கள். அவரும் இத்தாலிக்குக் கல்வி கற்க வந்திருக்கும் ஆசிரியர்; அருள் அவர்கள் பணியாற்றும் நிறுவனத்தில் பணியாற்றுபவர். அவரிடமும் மொழிக்கல்வி பற்றிப் பேச முடிந்தது. இத்தாலியும் இலத்தீனும் கற்றுக் கொண்டிருப்பதாகச் சொன்னார். வழக்கமாக போப்பாண்டவர் ஒரு முற்றத்தில் வந்து நின்று மக்களுக்குக் காட்சி தருவாராம்; உரையும் ஆற்றுவாராம். அன்று வெளியூர் சென்றுவிட்டதால் அவர் காட்சி தரவில்லை. பெரும்பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஏராளமான மக்களை நிதானமாகக் கையாளும் நிர்வாகச் சிறப்பை மெச்ச வேண்டும்.

இப்படியாக இத்தாலிப் பயணம் நிறைந்தது. இல்லை, இதைச் சொல்லாமல் நிறையாது.  ரோமில் பருகிய பானங்களில் வேறெங்கும் காணாத ‘ரெட் பீர்’ எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இத்தாலி அனுபவங்கள் 8

—–  06-03-25

Latest comments (1)

சுராகி கொடுமுடி

பெருமாள் முருகன் அவர்களே! ரோமின் ரெட் பீரை நம்ம ஊர்ல கஞ்சிக் கலயத்துல ஊத்தி ஊத்தி குடிக்கிற மாதிரி ரசிச்சு ருசிச்சு குடிக்கிற ஒம்மோட அழகு … அந்தக் காலத்துல கஞ்சிக் கலயத்துல ஊத்தி ஊத்திக் குடிக்கிற மாதிரி… ம்ம் ம்ம் அனுபவி ராஜா அனுபவி.