புத்தகக் காட்சியில் ஒருநாள்

You are currently viewing புத்தகக் காட்சியில் ஒருநாள்

உயர்கல்விக்காக 1988ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை சென்றேன். எட்டாண்டுகள் சென்னையில் வசித்தேன். 1989 முதல் ஒவ்வோர் ஆண்டும் புத்தகக் கண்காட்சிக்குச் சென்று கொண்டேயிருக்கிறேன். அப்போதெல்லாம் எழுத்தாளர்கள் தான் காலார நடந்து கொண்டிருப்பார்கள். எந்தக் கடையில் யார் இருக்கிறார்கள் என்பது தூரத்திலிருந்தே தெரியும். இப்போது அப்படியல்ல. மக்கள் திரளுக்குள் எழுத்தாளர்கள் மறைந்து போய்விட்டார்கள். போற்றத்தக்க மாற்றம்; வளர்ச்சி.

1992 ஜனவரியில் என் முதல் நாவல் ‘ஏறுவெயில்’ புத்தகக் காட்சியில் விற்பனைக்கு வந்தது. புத்தகம் வெளியானாலும் சரி, ஆகா விட்டாலும் சரி எப்படியோ அங்கே செல்லும் ஆர்வம் குறைந்ததேயில்லை. நவீன இலக்கியத்தில் என்னென்ன நூல்கள் வருகின்றன, எந்தெந்தப் பதிப்பகம் என்பனவெல்லாம் ஏற்கனவே அறிமுகம் ஆகிவிடுகின்றன. அவற்றை வாங்கப் பல வழிகளும் இருக்கின்றன. என்.ஸ்ரீராம், அனோஜன் பாலகிருஷ்ணன், முத்துராசாக்குமார், மயிலன் உள்ளிட்டோரின் புதிய நூல்களை வாங்க எண்ணம் இருக்கிறது. சமூக ஊடகம் வாயிலாகவும் இலக்கிய இதழ்கள் வழியாகவும் அறிமுகமாகும் நவீன இலக்கிய நூல்களை வாங்கக் கடைகளை நாடிச் செல்ல வேண்டியதில்லை.

ஆகவே நவீன இலக்கியம் தவிர்த்த நூல்களை வெளியிடும் சில பதிப்பகங்களுக்குச் செல்லவே விரும்புவேன். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், செம்மொழித் தமிழாய்வு நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகம், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் ஆகியவற்றுக்குள் நுழைந்து பார்வையை ஓட்டுவது வழக்கம். அவை வெளியிடும் பழந்தமிழ் இலக்கிய நூல்களை வேறெங்கும் வாங்குவது கடினம். ஏதேனும் புதுமையான இலக்கியத் தொகுப்புகளை, நல்ல ஆய்வு நூல்களை அங்கே கண்டடையலாம்.

பிரேமா பிரசுரத்திற்கு விஜயம் தவறாது. சாணித் தாளில் அச்சிட்டாலும் சில நூல்களை வாங்காமல் இருக்க முடியாது. அப்பதிப்பகம் வெளியிட்ட ‘சிந்தனையாளர் வரிசை’ நூல்களில் ‘சிக்மண்ட் ப்ராய்டு’ நூலை வாசித்து முப்பதாண்டுகள் இருக்கும். அப்போது அப்பதிப்பகத்தின் மேல் விழுந்த கண் இன்னும் அகலவில்லை. அரு.ராமநாதன் எழுதிய புனைவுகளையும் புனைவல்லாத நூல்களையும் பிரேமாதான் வெளியிட்டது. அதே போல இரத்தின நாயக்கர் சன்ஸ் கடைக்கும் போவதுண்டு. அந்தக் காலத்தில் சாலையோரம் கடை போட்டுத் திரைப்படப் பாடல் புத்தகம் விற்கும் கடைகளில் இரத்தின நாயக்கர் சன்ஸ் வெளியீடுகளும் கிடைக்கும். வாரச் சந்தைகளில் கடை விரிக்கும் சிறுவணிகர்களுக்குப் புத்தகங்களைக் கொடுத்து வாசிப்பைக் கிராமங்களுக்கும் எடுத்துச் சென்ற பதிப்பகம் அது. நல்லதங்காள் கதை, அல்லியரசாணி மாலை முதலிய பெரிய எழுத்துப் புத்தகங்கள் அங்கே கிடைக்கும். கனா நூல் போன்ற சில புதையல்கள் அகப்படும்.

மணிவாசகர் பதிப்பகம், வானதி பதிப்பகம், கலைஞன் பதிப்பகம் ஆகியவற்றுக்கும் செல்வதுண்டு. பல ஆண்டுகளாகத் தேடும் நய நூல்கள் சிலவற்றை அங்கே பெற முடியும். நீதிபதி மு.மு.இஸ்மாயில் எழுதிய பல நூல்களை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அவர் எழுதிய ‘செவிநுகர் கனிகள்’ என்னும் கம்பராமாயணம் பற்றிய அருமையான நூல் பல ஆண்டுகளாகப் பதிப்பில் இல்லை. இணையத்திலும் கிடைக்கவில்லை. என்வசம் இருந்த பிரதி எப்படியோ கைமாறிவிட்டது. புதுப்பிரதி வாங்க ஆண்டுதோறும் அவர்களிடம் கேட்கிறேன். அச்சில் இருக்கிறது என்றே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டேனும் கிடைக்கக் கூடும். பாரி நிலையத்திற்கும் போக வேண்டும். பழைய உரை நூல்கள் சிலவற்றைத் திடுமென்று நினைவு வந்தது போல வெளியிடுவார்கள். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் இப்போது நூல் வெளியிடுவதில்லை என்று நினைக்கிறேன். புத்தகக் காட்சியில் சமீப ஆண்டுகளில் அக்கடையைப் பார்த்த நினைவில்லை.

புத்தகக் காட்சியில் ஒருநாள்

இந்தப் புத்தகக் காட்சியில் என் புதிய நூல்கள் மூன்று வெளியாகியிருக்கின்றன. ‘போண்டு’ சிறுகதைத் தொகுப்பு. இவ்வாண்டு எழுதிய பதினொரு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. உயிர்மை, காலச்சுவடு ஆகிய அச்சிதழ்களிலும் கனலி, அகழ், வல்லினம், வாசக சாலை உள்ளிட்ட இணைய இதழ்களிலும் வெளியான கதைகள். எல்லாக் கதைகளுக்கும் வாசக வரவேற்பு இருந்தது. இம்மாத உயிர்மையில் வெளியான ‘பொங்கி’ கதையும் கனலியும் வந்திருக்கும் ‘போண்டு’ கதையும் பெரிதும் கொண்டாடப்பட்டவை. இதழ்களில் வெளியாவதன் முக்கியத்துவம் வாசகப் பார்வையை உடனடியாக அறிந்து கொள்வதுதான். 2015 வரை எழுதிய கதைகள் ‘பெருமாள்முருகன் சிறுகதைகள்’ என்று மொத்தத் தொகுப்பாக வந்த பிறகு மாயம், வேல்! ஆகிய இருதொகுப்புகள். இது மூன்றாவது தொகுப்பு.

‘காதல் சரி என்றால் சாதி தப்பு’ என்னும் கட்டுரை நூலும் வந்துள்ளது. கல்வி சார்ந்த கட்டுரைகள். அரசு கலைக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றிய அனுபவங்கள். அதன் முன்னுரையை இத்தளத்தில் வெளியிட்ட போது பல எதிர்வினைகள் வந்தன. நூலும் கவனம் பெறும் என்று நினைக்கிறேன். மூன்றாவது  ‘பாதி மலையேறுன பாதகரு’ நூலும் கட்டுரைத் தொகுப்பு. அவ்வப்போது எழுதிய படைப்பனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு. கதைகளின் பின்னணியை அறிய விரும்பும் வாசகருக்கு இக்கட்டுரைகள் சுவை தரும்.

எழுதி முடித்த புதிய நாவலை வெளியீட்டுக்குக் கொடுக்க முடியவில்லை. தமிழ் இந்து தீபாவளி மலரில் ஒரு அத்தியாயம் வெளியாகிக் கவனிப்பைப் பெற்றது. அப்போது எழுதிக் கொண்டிருந்தேன். இடையிலிருந்து ஒரு பகுதியை எடுத்துக் கொடுத்தேன். அதற்கு வந்த எதிர்வினைகள் விரைவாக நாவலை எழுதி முடிக்க உத்வேகம் கொடுத்தது. எனினும் செம்மையாக்க வேலை முடியவில்லை. இடையில் இத்தாலிப் பயணம் செல்ல நேர்ந்ததால் நேரம் ஒதுக்க முடியவில்லை. அவசரப்பட வேண்டாம், பொறுமையாக வெளியிடலாம் என்று ஒத்தி வைத்திருக்கிறேன். ஏப்ரல் மாதத்தில் வெளியிடத் திட்டம்.

நிழல்முற்றம், கூளமாதாரி ஆகியவை காலச்சுவடு பதிப்பகத்தின் கிளாசிக் நாவல் வரிசையில் இப்போது வெளியாகியிருக்கின்றன. மற்ற நூல்களும் புதிய பதிப்புகள் வந்துள்ளன. அவற்றோடு இன்னொரு முக்கியமான நூலிலும் என் பங்களிப்பு இருக்கிறது. சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ இப்போது கிராபிக் நாவலாக வெளியாகியுள்ளது. அதன் எழுத்து வடிவம் என் கைவண்ணம். கேரளத்தைச் சேர்ந்த ஓவியர் அப்பூபன் வரைகலை செய்திருக்கிறார். ஆங்கிலத்தில் இது ஜனவரியில் வெளியாகிறது. இன்னும் பல மொழிகளில் வர இருக்கிறது. இதை விரிவாகப் பல மொழிகளுக்கும் கொண்டு செல்லக் கண்ணன் திட்டமிட்டிருக்கிறார். தமிழ் நூலை மாண்புமிகு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வரும் 06-01-2025 அன்று வெளியிட இருக்கிறார்.

இன்று (31-12-24) மாலை காலச்சுவடு அரங்கில் வாசகர்களைச் சந்திக்கவும் நூல்களில் கையொப்பம் இடவும் புத்தகக் கண்காட்சிக்கு வருகிறேன். நண்பர்களைக் காணவும் ஆவலாக உள்ளேன். மாலை ஐந்து மணி முதல் எட்டு மணி வரைக்கும் அங்கிருப்பேன். கடைகளைச் சுற்ற நேரம் கிடைக்குமா என்று தெரியவில்லை. கிடைத்துப் போனால் ‘இந்த நூலை வெளியிடுங்கள்’ என்று யாரேனும் கையைப் பிடித்து இழுக்காமல் இருக்க வேண்டும். புத்தகக் கண்காட்சிக்குள் நுழைந்த பிறகு எதுவும் நம் கையில் இல்லை.

—–   31-12-24

Latest comments (1)

சென்னைப் புத்தகக் காட்சிக்கு வரும் நண்பர்களுக்கு, வாசகர்களுக்கு எந்தெந்த பதிப்பகங்கள் போக வேண்டும், என்னென்ன புத்தகங்கள் வாங்க வேண்டும் என்பதற்கு வழிகாட்டியாக இக்கட்டுரை அமைகிறது. 1988 முதல் புத்தகத் திருவிழாவுக்கும் தங்களுக்குமான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட விதம் வாசகர்களுக்கு உத்வேகத்தைத் தருகிறது.