பெயர்ப் பரவசம்

You are currently viewing பெயர்ப் பரவசம்

இந்தப் பறவைக்கு என்ன பெயரிடுவது?

உன் பெயரால் அழைப்பதை அது விரும்புமா?

……

உன் பெயர் இதற்குப் பொருந்தி வரும் எனினும்

இந்தப் பறவையின் அமைதி எனக்கு முக்கியம்.

ரமேஷ் – பிரேம், (சக்கரவாளக் கோட்டம், ப.20)

மார்க்சிய அமைப்புகளோடு இணைந்து செயல்படுபவர்களின் தொடக்கப் பரவசம், மனிதனுக்குரிய நல்லியல்புகள் அனைத்தையும் வெளிக்கொண்டு வருவதாகும். இந்தச் சமூகத்தின் ஒட்டுமொத்தத் துயரங்களையும் போக்கிவிடும் அற்புதக் கருவி கையில் கிடைத்துவிட்ட பரவசம் அது. சக மனிதன் மீதான அக்கறை மட்டுமல்ல, மனித குலத்தின் மீதென விரிந்து பரவும் கருணை மலர்ச்சி கொள்ளும் சந்தர்ப்பம் அது. மிகக் குறுகிய காலத்தில் சமூகம், தன் துக்கங்களிலிருந்து விடுபட்டுப் பேரின்ப வெள்ளத்தில் திளைக்கும் கற்பனைக்கு ஆட்படுத்தும் காலம் அது.

மிகையான அந்தத் தொடக்கப் பரவசம் என்னுள்ளும் இருந்தது. எண்பதுகளின் இறுதியில் மார்க்சிய லெனினிய அமைப்பு ஒன்றின் அறிமுகம் கிடைத்து அதில் இணைந்து செயல்பட்டேன். துன்பங்களிலிருந்து விடுதலை பெற்றுத் தரும் மிகச் சரியான வழிமுறையை அறிந்து கொண்ட பெருமிதம் கலந்த பரவசத்திற்கு உள்ளானேன். மனித குலத்தின் எதிர்கால விடிவு பற்றி உண்டான நம்பிக்கைக்கு அளவில்லை. அவ்வமைப்பின் சிறுசிறு அசைவுகளும் புரட்சியை நோக்கிய முக்கிய அடிவைப்புகளாக எனக்குத் தோன்றின. இதோ புரட்சி சமீபத்து விட்டது. அதிகபட்சம் ஐந்தாண்டுகள். அவ்வளவுதான். புரட்சி சமீபித்திருந்தும் கைவிரித்துக் காத்திருக்கும் இந்த அமைப்பை அறிந்து கொள்ளாத எல்லா மூடர்கள் மீதும் எரிச்சலும் கோபமும் ஏற்பட்டன.

சிறிய துண்டறிக்கை ஒன்றை அச்சடித்து நூறு பேர் கையில் திணித்து விடுதல், பெரும்பாலோருக்குப் புரியாத மார்க்சியக் கலைச்சொற்களைப் போட்டுத் தயாரித்த சுவரொட்டியைப் பத்து இடங்களில் ஒட்டுதல், பேருந்தில் ஏறிக் கைதட்டிப் பத்திரிகைப் பிரதிகள் கொஞ்சம் விற்பனை செய்தல் எல்லாம் புரட்சியின் அடிவைப்புகள் தாம். அமைப்பு செயல்படும் கிராமங்களிலிருந்து வரும் செய்திகள் மேலும் பரவசத்தைக் கூட்டும். புரட்சியில் விவசாயத் தொழிலாளர்களின் பங்கு கணிசமானது. ஆகவே கிராமங்களில் நடக்கும் எந்தச் சிறுமாற்றமும் கொண்டாட்டத்திற்கு உள்ளாக வேண்டியதாகும். அப்படிக் கொண்டாட்ட மனநிலையை உருவாக்கிய சம்பவம் ஒன்று பெயர் மாற்றம் பற்றியது.

தருமபுரி மாவட்டம் அரூருக்கு அருகில் உள்ள சிறுகிராமம் ஒன்றின் பெயர் எஸ்.பட்டி. அவ்வூரில் அமைப்பின் செயல்பாடுகள் வேகமாக இருந்தன. எந்தவொரு விஷயத்திற்கும் முன்னுதாரணமாகக் காட்டுவதற்கு எஸ்.பட்டி தான் கை கொடுக்கும். அந்த ஊரின் பெயர் எதனுடையதோ சுருக்கம் என்று எனக்குத் தெரிந்தது. எதன் சுருக்கம் என்பது நான் விசாரித்த நகரத்துத் தோழர்கள் எவருக்கும் தெரியவில்லை. பெயர் மாற்றம் நிகழ்ந்த போதுதான் அதன் முழுப்பெயர் அறிமுகமானது.

பெயர்களைச் சுருக்குவதற்கும் காரணங்கள் இருக்கின்றன. நீண்ட நெடிய பெயர்களை மக்களின் பேச்சு வழக்கு அனுமதிப்பதில்லை. பேச்சு எப்போதும் முயற்சிச் சுருக்கத்தையே விரும்புகிறது. சுருக்குவதால் ஏற்படும் பொருள் குழப்பம், அர்த்த அபத்தம் பற்றியெல்லாம் பேச்சு கவலைப்படுவதில்லை. சிராப்பள்ளி – ஊர்ப்பெயர். திரு என்பது அடைமொழி. திருச்சிராப்பள்ளியைத் ‘திருச்சி’ என்றாக்கி விட்டதைப் பற்றி யோசித்தால் இப்படியுமா அபத்தம் என்று தோன்றும். பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள சிற்றூர் ஒன்றின் பெயர் ‘கொன்றங்கிப் புதூர்.’ எழுத்து வழக்கிலே பிரியம் உடையவர்கள் ‘கொண்டல் தங்கி நின்ற புதூர்’ தான் கொன்றங்கிப் புதூர் ஆகிவிட்டது என்கிறார்கள். கொண்டல் – மேகம். மேகம் அவ்வூருக்கு மேலே கூட்டம் கூட்டமாக வந்து தங்கி நிற்குமாம். இந்தப் பெயர்க்காரணம் சரியாக இருக்கும் என்றால் புலமை நிரம்பிய யாரோ ஒருவர்தான் பெயர் சூட்டியிருக்க வேண்டும். இராசிபுரத்திலிருந்து ஆத்தூர் செல்லும் வழியில் ‘கார்கூடல் பட்டி’ என்றொரு ஊர் உள்ளது. அதுவும் மேகம் கூடி நிற்கும் ஊர் என்றுதான் பொருள்படும். புலமை மனம் உடையோருக்கும் பெயர் சூட்டும் வாய்ப்பு கிடைத்திருக்கும் போல.

சென்னையிலுள்ள கலைஞர் கருணாநிதி நகர், கே.கே. நகர் என்றே சுருங்கி வழங்கப்படுகிறது. நீளமான பெயராக இருப்பதால் இயல்பாகவே மக்கள் சுருக்கி விட்டார்கள் என்று தோன்றுகிறது. திமுகவைத் தீவிரமாக நேசிக்கும் நண்பர் ஒருவர் ‘கலைஞர் கருணாநிதி’ பெயரை மக்கள் அதிகமாக உச்சரிக்கக் கூடாது என்பதற்காக அ.தி.மு.க. செய்த சதிதான் பெயர்ச் சுருக்கம் என்றார். உண்மையாகவும் இருக்கலாம். பெயர் அரசியல் பல தளங்களில் செயல்படக் கூடியது. தொண்டர்களுக்குப் பழக்கப் படுத்திய விதத்தில் மட்டும் சிந்திக்கும் அவரது மூளை கற்பித்துக் கொண்டதாகவும் இருக்கலாம். ‘கலைஞர் நகர்’ என்று மட்டும் பெயர் வைத்திருந்தால் மக்கள் வழக்கில் நின்றிருக்கும் என்பது என் எண்ணம். எத்தனையோ ‘அண்ணா நகர்’கள் நிற்கின்றன அல்லவா? ‘அறிஞர் அண்ணாதுரை நகர்’ என்றிருந்தால் கொஞ்சம் சிரமம்தான்.

பெயர்ச் சுருக்கத்திற்கு இப்படி வெவ்வேறு காரணங்கள், பார்வைகள் இருக்கின்றன. சாதி ஒரு காரணமாக அமைய முடியுமா? முடியும் என்பதற்கான சான்றுதான் எஸ்.பட்டி என்னும் ஊர்ப்பெயர். சக்கிலிப்பட்டி என்பதைச் சுருக்கி எஸ்.பட்டி ஆக்கியுள்ளனர். சாதிப் பெயர்களில் ஏராளமான ஊர்ப்பெயர்கள் இருக்கின்றன. எங்கள் பகுதியில் கவுண்டம்பாளையம், நாயக்கன்பாளையம் என்னும் ஊர்கள் விதவிதமான முன்னொட்டுகளுடன் பல உள்ளன. ஆதிக்கச் சாதிகளின் பெயர்களில் ஊர்கள் அமைந்திருப்பதற்குப் ‘பெருமைக் காரணங்கள்’ பல இருக்கும். தலித் சாதிகளின் பெயர்களிலும் சில ஊர்கள் உள்ளன.

இராஜாக்கவுண்டம்பாளையம், புத்திர கவுண்டம்பாளையம், பெத்த நாயக்கன் பாளையம் என்பன போலக் குறிப்பிட்ட தனிநபர் ஒருவரின் பெயர் கொண்ட ஊர்கள் ஆதிக்கச் சாதியினருக்கே உண்டு. தலித் சாதிகளின் பொதுப்பெயர்களைக் கொண்ட ஊர்கள் உள்ளன. நபர் பெயரிலானவை இல்லை என்றே நினைக்கிறேன். பள்ளபாளையம், சக்கிலிப்பட்டி ஆகிய பெயர்கள் அமையச் சிறப்புக் காரணங்கள் இருக்கலாம். புதிதாக உருவாக்கப்பட்ட ஊரில் அவர்கள் மட்டுமே குடியேறியிருக்கலாம். எண்ணிக்கை மிகுதியும் ஒருகாரணம் தான். நிலவுடைமையும் காரணமாகலாம்.

ஆனால் கவுண்டம்பாளையங்களை எந்தச் சுணக்கமும் தயக்கமும் இன்றி உச்சரிக்கும் வாய்கள், சக்கிலிப்பட்டியைச் சொல்லத் தயங்குகின்றன. அதன் வெளிப்பாடுதான் எஸ்.பட்டி என்னும் சுருக்கம். கவுண்டம்பாளையங்களை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் மனங்களால் சக்கிலிப்பட்டியை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அப்படிப் பெயர் வைப்பதே அவமானத்துக்குரியது என்று கருதுகின்றனர்.  கவுண்டர் & கோ, அய்யங்கார் பேக்கரிகள் உள்ளன. பறையர் மளிகை, சக்கிலியர் ஏஜென்ஸீஸ் என்று பெயர்கள் இல்லை. அதற்குக் காரணம் அம்மக்கள் பொருளாதார ரீதியாக வலுப் பெற்றவர்களாக இல்லை என்பதும் ஒன்று. பொருளாதாரம் வலுப் பெற்றாலும் அப்பெயர்கள் வைக்கப்படுமா என்பது கேள்வியே.

தலித் சாதி மக்களை மட்டுமல்ல, அச்சாதிப் பெயர்களையும் தீண்டத்தகாத ஒன்றாகத்தான் கருதுகிறார்கள். இந்த மனோபாவம் சாதிப் பார்வை ஊறிப் போன நம் சமூகத்தின் சகல தரப்பிலும் நிலவுகிறது. சக்கிலிப்பட்டி என்னும் எஸ்.பட்டியில் நான் சார்ந்திருந்த மார்க்சிய லெனினிய அமைப்பு தீவிரமாகச் செயல்பட்டு மக்களைத் திரட்டியிருந்தது. சக்கிலியரே வசிக்காத ஊருக்குச் சக்கிலிப்பட்டி என்று பெயர். பறையர் சாதி மக்களை மிகுதியாகக் கொண்ட அவ்வூரில் நடைபெறும் சம்பவங்கள், நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். அவை அனைத்தும் பெரும் உற்சாகம் கொடுப்பவை.

அவ்வூரின் பெயர் மாற்றம் பற்றிய செய்தி ஒன்று அப்போது வந்தது. சக்கிலிப்பட்டி என்று பெயரிடப்பட்டிருப்பது அம்மக்களுக்குச் செய்யப்பட்ட அநீதி என்று தோழர்கள் கருதினார்கள். அதனால் சாதியச் சமூகத்தின் ‘அவமானச் சின்னமாக’ இருக்கும் அப்பெயரை நீக்கிவிட்டுப் புரட்சிகரமான பெயரைச் சூட்டினர். சக்கிலிப்பட்டி – ஸ்டாலின்புரம் என்றாகியது. ஸ்டாலின்புரம் என்று பெயர் மாற்றும் நிகழ்ச்சியைப் பெரிய அளவில் நடத்தினர். அந்தப் பெயர் மாற்றத்திற்கு இரண்டு காரணங்கள் இருந்ததாக அறிந்தேன். ஒன்று, சக்கிலிப்பட்டி என்பது அவமதிப்பிற்குரிய பெயர். இரண்டு ஸ்டாலின்புரம் என்று வைப்பதால் அந்த ஊரைப் புரட்சியின் குறியீடாக மாற்றுவது. இவ்விரு காரணங்களும் எனக்கும் பரவசம் கொடுத்தன. தோழர்கள் பலருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும்.

பெயர்ப் பரவசம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள எல்லா ஊர்களையும் மார்க்சியத் தலைவர்களின் பெயர் தாங்கியவையாக மாற்றிவிட வேண்டும் என்று அப்போது கற்பனை செய்தோம். மூட நம்பிக்கை, பிற்போக்குக் கருத்துக்களின் முடைநாற்றம் ஆகியவற்றைக் கொண்ட ஊர்ப்பெயர்கள் அனைத்தையும் புரட்சி நிச்சயம் மாற்றிவிடும்.  மார்க்ஸ் பாளையம், எங்கெல்ஸ் பட்டி, மாவோவூர் என்றெல்லாம் சொன்னால் எவ்வளவு அழகாக இருக்கும் என்னும்படியெல்லாம் பேசிக் கொண்டோம். பெயர் மாற்றத்திற்கு அப்போதிருந்தது ஒரே ஒரு கருத்துத்தான். அது புரட்சியின் அடையாளம். பெயர் மாற்றத்தை ஏற்றுக் கொண்டால் அவ்வூர் புரட்சிக் களமாக மாறிவிட்டது என்றல்லவா அர்த்தம்?

ஸ்டாலின்புரம் என்னும் பெயரை அரசுப் பதிவேடுகள் அங்கீரித்துக் கொள்ள வாய்ப்பில்லை. அவ்விதமான விசயங்களில் அரசு காட்டும் மூர்க்கம் அளவிடற்கரியது. ஆனால் மக்கள் எல்லோரும் ஸ்டாலின்புரம் என்று உச்சரிக்கத் தொடங்கிவிட்டால் அதற்கு நிலைபேறு கிடைத்துவிடாதா? ஸ்டாலின்புரத்திற்கு நேரில் ஒருபோதும் சென்றதில்லை. எனினும் பெயர் மாற்றத்திற்காகவே அவ்வூருக்கு நீண்ட பயணம் போகலாம் என்று தோன்றும். அந்தப் பெயர் மாற்றம் அப்படியொரு நம்பிக்கையை மனதில் விதைத்தது.

(இக்கட்டுரை எழுதிய பிறகு அவ்வூருக்குச் சிலமுறை சென்று வந்திருக்கிறேன். சொந்தக்காரர் ஊர் ஆகிவிட்டது.)

இன்று யோசிக்கும் போது அந்தப் பரவசம் பற்றி வெட்கமே உண்டாகிறது. பெயர் மாற்றம் பற்றியும் வேறு கோணங்கள் தோன்றுகின்றன. ஒரு பெயருக்கு மதிப்பையும் அவமதிப்பையும் கொடுப்பது எது? மனித மனோபாவம். சாதியச் சமூகத்திலிருந்து உருவாகும் மனோபாவம் ஆதிக்கச் சாதிப் பெயர்களை இயல்பானது என்றும் தலித் சாதிப் பெயர்களை அவமதிப்பிற்குரியது என்றும் கருதுகின்றது. கவுண்டர், நாயக்கர், முதலியார் என்னும் பெயர்களைச் சொல்வதில் இருக்கும் இயல்புத் தன்மையைச் சக்கிலியர் என்னும் பெயருக்கு ஏன் கொண்டு வர முடியாது? சக்கிலியர் என்னும் பெயருக்கு மதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் புரட்சிகரமானவையாக அமையும். அப்பெயரையே நீக்குவது இன்றைய நிலையில் புரட்சியாளர்களிடமும் சாதிய மனோபாவம் படிந்திருக்கிறது என்பதன் வெளிப்பாடு தானே?

அந்தப் பெயருக்கு உரிய மக்கள் என்ன கருதக்கூடும்? சக்கிலியர் என்னும் பெயர் நீங்கிவிட்டால் தமக்குரிய கீழ்நிலை மாறிவிடும்; அந்தப் பெயர்தான் அப்படித் தாழ்த்தி வைத்திருக்கிறது என்று நினைப்பார்களானால் பெயர் மாற்றம் செய்வது சரிதான். அதுவும் பெயர் மாற்றம் பற்றிய உணர்வு முற்றிலுமாக மேலிருந்து திணிக்கப்படாமல் அம்மக்கள் மனதிலிருந்தே தோன்றினால் நல்லது.

பெயர் மாற்றத்திற்குப் பின்னால் அம்மக்கள் மகிழ்ச்சி கொண்டிருக்கிறார்களா, அவர்களின் வாழ்க்கைத் தரத்தில் மாற்றங்கள் வந்துள்ளனவா, பிற சாதியினரோடான உறவு முறைகளில் மேம்பாடு ஏற்பட்டிருக்கிறதா என்பனவற்றைக் கணக்கிலெடுத்து ஆராய்ந்தால் பெயர் மாற்றத்தின் பலன்களை உணர்ந்து மற்ற இடங்களுக்கும் விரிவாக்கலாம்.

ஆதிக்கச் சாதிப் பெயர்களை வைப்பதுதான் அருவருப்பான செயல். அந்தப் பெயர்களைச் சொல்வதில் இருக்கும் இயல்புத்தன்மையைக் குலைத்து அவற்றைச் சொல்லும் போது குற்றவுணர்ச்சி தோன்றும்படி செய்யலாம். நீக்குவதென்றால் ஆதிக்கச் சாதிப் பெயர்களைத் தான் முதலில் நீக்க வேண்டும். அவைதானே சமூகத்தின் அவமானச் சின்னங்கள்?

ஒருகாலத்தில் புரட்சிகரமானதாக இச்சமூகம் மாறும் என்றால் (அப்படியான நம்பிக்கை இன்னும் இருக்கத்தான் செய்கிறது) பழமையின் வரலாற்று அடையாளங்களாக இப்பெயர்கள் இருந்துவிட்டுப் போகட்டுமே என்றுகூடத் தோன்றுகிறது.

சக்கிலிப்பட்டி என்கிற எஸ்.பட்டி என்கிற ஸ்டாலின்புரம் பற்றிய யோசனைகள் எனக்குள் இன்னும் தீராமல் பலவாறு விரிகின்றன.

—–  21-01-25

கவிதாசரண், ஜூலை – செப்டம்பர் 2005 இதழில் வெளியான கட்டுரை.

Latest comments (4)

முனைவர் கு.சிவப்பிரகாசம்

வணக்கம் தோழர்

தாங்கள் குறிப்பிட்ட எஸ்.பட்டி என்னும் ஊரை பூர்வீகமாகக் கொண்டவன் நான். தற்பொழுது தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் தமிழ் உதவிப்பேராசிரியராகப் பணிசெய்து வருகின்றேன். மேலே குறிப்பிட்ட எஸ்.பட்டி பற்றிய தங்களின் உரையாடல் நிதர்சனமானவை. சக்கிலிப்பட்டி எஸ்.பட்டி ஆனதெப்படி, சக்கிலிப்பட்டி பெயர் உருவான விதம் குறித்து நான் முதுகலை படிகாகும்போது ஆய்வுத்திட்டக் கட்டுரையாக பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஒப்படைத்திருக்கிறேன். நா. வானமாமலை தொகுத்த தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள் என்னும் தனித்துவம் வாய்ந்த நூலில் இடம்பெற்றுள்ள 50விழுக்காடு பாடல்கள் எஸ்.பட்டி மக்களால் உருவாக்கப்பட்டது என்பதை சேகரிப்பாளர் கவிஞர் சடையப்பன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்பொழுது தகடூர் வட்டார வழக்குச் சொல்லகராதி என்னும் நூலில் இடம்பெற்றுள்ளள பல சொற்கள் அவ்வூரைச் சார்ந்தவையே. இன்னும் எத்தனையோ உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். மக்கள் பண்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சியில் எஸ்.பட்டியை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு பல பண்பாடுகளை மீட்டெடுக்க முடியும். புரட்சியிலும், புதுமையிலும், பண்பாட்டிலும், பாரம்பரியத்திலும் ஊறித் திரண்ட ஊர் எஸ்.பட்டி.

தொடரும்…

முனைவர் கு. சிவப்பிரகாசம்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
அரசு கலைக்கல்லூரி, தருமபுரி – 636705
9688807312

இந்த கட்டுரைக்கு தருமபுரி என்ற பெயர் தாங்கிய படத்தை வைக்க ஏதோ காரணம் இருக்க வேண்டும். தருமம் என்ற சொல் புத்த மதத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும். (தம்மம்). உங்கள் கட்டுரைகள் நிறைவான வாசிப்பு அனுபவத்தை தருகின்றன.

எஸ். பட்டிக்கான வரலாறு உண்மை. இதே போல தருமபுரியில் பறையப்பட்டி என்ற ஊர் அரூர் வட்டத்தில் உள்ளது. பழைய பறையர்பட்டி, புது பறையர்பட்டி என்ற ஊர்களும் உள்ளன. தருமபுரி ஊர்ப் பெயராய்வு இன்னும் விரிவடைய வேண்டும்.