கம்ப ராமாயணத்தில் உலக வழக்கு – 1

You are currently viewing கம்ப ராமாயணத்தில் உலக வழக்கு – 1

தமிழ்க் காப்பிய இலக்கியத் தொடக்கம் சிலப்பதிகாரம். தொடர்ந்தவை மணிமேகலை, பெருங்கதை. மூன்றும் ஆசிரியப்பாவால் ஆனவை. ஆசிரியப்பா உரைநடைத் தன்மை கொண்டது. உணர்ச்சி விவரணைகளுக்கு இடமில்லாமல் கதையைச் சொல்வதற்கு ஆசிரியப்பா ஏற்றது. அதன் போதாமையை உணர்ந்த இடங்களில் விருத்தப்பாக்களை இளங்கோவடிகள் கையாண்டிருக்கிறார். விருத்தப்பாவை முழுமையாகக் கையாண்டது சீவக சிந்தாமணி. பின் தோன்றிய காப்பியங்கள்  அனைத்தும் விருத்தப்பா முதலிய பாவினங்களிலேயே இயன்றன. கலிவிருத்தம், கலித்துறை, அறுசீர் ஆசிரிய விருத்தம் ஆகிய பாவினங்களே காப்பியங்களில் அதிகம் பயின்றவை.

கரைக்குள் அடங்கியிருந்த ஆற்றுநீர் வெள்ளப் பெருக்கில் கரையுடைத்து எல்லையற்றுப் பரவுவது போல விருத்தப்பா யாப்பு காப்பியங்களில் பயின்று தமிழ் பெருகுவதற்கு உதவியது. அவ்வகையில் மொழிச் சாத்தியம் விரிவடைந்த வரலாறே காப்பிய இலக்கியம். அதன் உச்சம் கம்பராமாயணம். இராமாவதாரம் என்னும் பெயர் கொண்ட கம்பராமாயணம் வந்தபின்னர் அதற்கு நிகரான காப்பியம் எதுவும் உருவாகவில்லை. ஆறு உருவாக்கும் சிற்றோடைகள், வாய்க்கால்கள் போலக் கிளை பிரிந்து புராணங்களாகவும் சிற்றிலக்கிய வகைகளாகவும் சென்றன.

கம்பராமாயணம் மொழியின் எல்லாவகைச் சாத்தியங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்ட காப்பியம். கம்பர் பெரும்புலமையும் படைப்பெழுச்சியும் கொண்ட கவிஞர். அவரைப் பற்றிய செய்திகள் வாய்மொழிக் கதைகளாகவே நமக்குக் கிடைக்கின்றன. உண்மைத் தகவல்களைவிட இவை நுட்பமானவை. அவரது மொழிப் பார்வை, அறிவு, பயன்பாடு பற்றிய கதை ஒன்று  ‘விநோதரச மஞ்சரி’ நூலில் உண்டு.

கம்ப ராமாயணத்தில் உலக வழக்கு - 1

கம்பரையும் ஒட்டக்கூத்தரையும் சோழ மன்னன் இராமாயணம் எழுதப் பணிக்கிறான். ஒட்டக்கூத்தர் பெரும்பகுதி எழுதி முடித்துவிடுகிறார். கம்பரோ ஒருபாடல்கூடப் பாடவில்லை. அரசவையில் தாம் எழுதிய பாடல்கள் சிலவற்றை அரசனுக்கு  ஒட்டக்கூத்தர் வாசித்துக் காட்டுகிறார். கம்பரையும் கேட்கிறான் அரசன். வீம்புக்காக ஒட்டக்கூத்தரை விடவும் அதிகமாக எழுதிவிட்டதாகக் கம்பர் கூறுகிறார். அதன்படி ஒரு படலத்தை மட்டும் எழுபது பாடல்களில் உடனே பாடி விவரிக்கின்றார். அது ‘திருவணைப் படலம்’ என விநோதரச மஞ்சரி கூறுகிறது. கடலில் அணை கட்டும் செயலில் கூறும் யுத்த காண்டப் பகுதி இது.  கம்பராமாயணத்தில் ‘சேது பந்தனப் படலம்’ என்னும் பெயரில் இப்போது உள்ளது. ‘திருவணைப் படலம்’ என்னும் பெயரே பழையது போலும். அதனைச் ‘சேது பந்தனப் படலம்’ என்றாக்கியது யாரோ தெரியவில்லை. அதில் வரும் பாடல் ஒன்று:

குமுதன் இட்ட குலவரை கூத்தரின்

திமிதம் இட்டுத் திரையும் திரைக்கடல்

துமிதம் ஊர்புக வானவர் துள்ளினர்

அமுதம் இன்னும் எழுமெனும் ஆசையால்.

குமுதன் என்னும் வானரத் தலைவன் மலைகளைத் தூக்கிக் கடலில் போடுகிறான். அப்போது எழும் அலைகளின் நீர்த்துளி தேவலோகத்தில் சென்று தெறிக்கிறது.  அதைப் பார்த்த தேவர்கள் அமுதம் இன்னும் கிடைக்கும் என்னும் ஆசை கொண்டு துள்ளிக் குதித்தனர் என்பது பாடல் பொருள்.

நீர்த்துளியைக் குறிக்கும் பொருளில் ‘துமி’ என்னும் சொல் பாடலில் வருகின்றது. இந்தச் சொல்லுக்கு ‘இலக்கியப் பிரயோகம் உண்டா?’ என ஒட்டக்கூத்தர் கேட்கிறார். ‘இது உலக வழக்கு’ என்று கம்பர் பதில் சொல்கிறார். வழுவாய்ச் சொல்லிவிட்டு உலக வழக்கு எனக் கம்பர் சாதிக்கிறார் எனக் குற்றம் சாட்டும் ஒட்டக்கூத்தருக்கு அச்சொல் உலக வழக்கில் இருப்பதை நிறுவும் கட்டாயம் கம்பருக்கு ஏற்படுகின்றது. கம்பர், ஒட்டக்கூத்தர், அரசன் ஆகிய மூவரும் இடையர் குடியிருப்புக்குச் செல்ல அங்கு கலைமகளே இடைச்சியாக உருவெடுத்து வந்து தயிர் கடைகிறாள். அருகில் விளையாடும் பிள்ளைகளைப் பார்த்து ‘மோர்த்துமி தெறிக்கப் போகிறது. எட்டவிருங்கள்’ என்று கலைமகள் சொல்வதைக் கேட்டபின் அச்சொல் உலக வழக்கில் இருப்பதை ஏற்றுக்கொண்டனர். இதுதான் கதை.

இது கம்பரின் உயர்வை விளக்க எழுந்த கதை. இதன்வழி சில விஷயங்கள் நமக்குப் பிடிபடுகின்றன. கம்பர் பாடல்களில் இலக்கிய வழக்குப் பிரயோகங்கள் மட்டுமல்லாது உலக வழக்கு எனப்படும் மக்கள் வழக்குச் சொற்களும் இடம்பெற்றுள்ளன என்பது முதலாவது. கம்பருக்கு எழுத்திலக்கிய ஞானம் மட்டுமல்லாமல் மக்களோடு கலந்து பழகியதால் அவர்களது வழக்குகளிலும் நல்ல பரிச்சயம் இருந்தது என்பது அடுத்தது. காப்பியங்களுக்கு எழுத்திலக்கியப் பயில்வுச் சொற்கள் மட்டும் போதாது, உலக வழக்குச் சொற்களும் தேவை என்பதும் இதனுள் பொதிந்துள்ள கருத்து. இவ்வாறு உலக வழக்கும் அறிந்தவர்கள் படைக்கும் இலக்கியமே மக்களைச் சென்று சேரும் என்பதும் உட்கிடை.

கம்பர் தம் காப்பியத்தை அரங்கேற்றும் முன் பலரிடம் கையொப்பம் பெற்று வந்ததாகவும் கதை உண்டு. அதில் தில்லை வாழ் அந்தணர்கள், திருநறுங்கொண்டை சமணர்கள் முதலியோர் உண்டு. மேலும் மாவண்டூர் கருமான், தஞ்சாவூர் அஞ்சனாட்சி என்னும் தாசி ஆகியோரும் உண்டு. தம் மகனாகிய அம்பிகாபதியிடம் கையொப்பம் பெற்றபோது அவனுக்குக் கம்பர் விளக்கம் சொன்ன பாடல்கள் நான்கு. அவற்றில் சளசள, களகள, கொளகொள, கிளுகிளு என்னும் ஒலிக்குறிப்புச் சொற்கள் வருகின்றன. கம்பராமாயணத்தில் இடம்பெறும் தமிழ்ச் சொற்களைக் குறித்துப் பேச அக்காலம் தொட்டு இக்காலம் வரை எவ்வளவோ இருக்கின்றன. உலக வழக்கு பற்றியே நிறையப் பேசலாம். தொட்ட இடம் எல்லாம் வழக்குத் துலங்கும்.

—– 06-02-25

(2014ஆம் ஆண்டு தமிழ் இந்து மலரில் வெளியான கட்டுரையின் முதல் பகுதி.)

Latest comments (1)