கம்பராமாயணக் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பற்றி ‘அலகிலா விளையாட்டு’ என்னும் தலைப்பில் ஏற்கனவே கட்டுரை எழுதியிருக்கிறேன். அதில் ‘கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பர் தம் முதல் பாடலில் சொற்களே இயல்பான சீர்களாக அமையும் விதத்தில் பாடியிருக்கலாகாதா என்று எனக்குத் தோன்றியதுண்டு’ எனக் குறிப்பிட்டு என் ஆதங்கத்தை விளக்கியும் இருந்தேன். அதைப் பற்றி மேலும் விவரிக்க முடியுமா என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இன்னுமொரு சிறுவிளக்கம் கொடுக்க முயல்கிறேன்.
யாப்பிலக்கணம் ஒவ்வொரு பாவகைக்கும் ஓசை இதுவென வரையறுத்துக் கூறுகிறது. அவ்வோசையைப் பெறச் சீர், தளை, அடி முதலிய உறுப்புக்களையும் வகுத்துத் தருகிறது. உரைநடையில் தொடர் என்கிறோம். ஒருசொல்லையோ ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களையோ கொண்டு அமைவது தொடர். ‘வந்தான்’ என்பது ஒருசொல் தொடர். ஒன்றுக்கு மேல் எத்தனை சொற்கள் வேண்டுமானாலும் சேரலாம். வரையறை இல்லை. மறைமலையடிகள் போன்றோர் நீள்தொடர்களை எழுதியுள்ளனர்.
தொடரில் ஒவ்வொரு சொல்லும் தனித்தனியாக அமையும். இன்று பெரும்பாலும் அப்படித்தான் எழுதுகிறோம். உருபுகள் இணைந்து வரும். சில சொற்களும் இணைந்து வருகின்றன. பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டு உரைநடைகளில் இருந்த அளவு சொற்புணர்ச்சி இப்போது இல்லை. ‘கொண்டிருந்தான்’ என்பதைக்கூடக் ‘கொண்டு இருந்தான்’ என்று எழுதும் அளவு எளிமையை நோக்கி நகர்ந்துள்ளோம். புணர்ச்சியோடு எழுதினாலும் பிரித்து எழுதினாலும் சரி என்று ஏற்றுக்கொள்கிறோம். ஒரு தொடரில் இத்தனை சொற்கள் உள்ளன என்று எண்ணிச் சொல்லலாம்.
உரைநடையைப் போலச் செய்யுள் நெகிழ்வானதல்ல. அதற்குச் சில வரையறைகள் உள்ளன. செய்யுளும் சொற்களால் ஆனதுதான் என்றாலும் வரையறுக்கும்போது ‘சீர்’ என்று சொல்கிறோம். சொல்லுக்கும் சீருக்கும் வேறுபாடு உண்டு. ஒரு சீர் ஒரு சொல்லையும் பெற்று வரலாம். ஒன்றே கால், ஒன்றரை, ஒன்றே முக்கால், இரண்டு முதலிய சொற்களையும் பெற்று வரலாம். மூன்று சொற்கள்கூட வருவதுண்டு. கால், அரை, முக்கால் வரலாம் என்றால் ஒருசொல்லைப் பிரித்து முதற்சீரில் பகுதியும் அடுத்த சீரில் பகுதியும் சேர்க்கலாம் என்று அர்த்தம். முழுச்சொல் அல்லாமல் அதன் பகுதி மட்டும் ஒருசீராக நிற்பதும் உண்டு.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
இந்தக் குறளின் முடிவில் வரும் ‘வாழ்வார்’ என்னும் சொல்லின் ஒருபகுதியாகிய ‘வாழ்’ முன்சீரில் நின்றுவிடுகிறது. அதன் அடுத்த பகுதி ‘வார்’ மட்டும் தனித்து ஒருசீராக நிற்கிறது. மலர்மிசை, மாணடி, நிலமிசை ஆகியவற்றில் இரண்டிரண்டு சொற்கள் இருக்கின்றன. நீடுவாழ் என்பதில் ஒன்றரைச் சொல் இருக்கிறது. ஒரு புரிதலுக்காக இப்படிச் சொல்கிறேன். யாப்பிலக்கணத்தில் ஒருசீரில் எத்தனை அசைகள் இருக்கின்றன என்பதுதான் கணக்கு. நேரசை, நிரையசை ஆகியவற்றையும் தேமா, புளிமா உள்ளிட்ட வாய்பாடுகளையும் எல்லோருமே பள்ளிப் பாடநூல்களில் வாசித்திருப்பீர்கள்.
ஒருசொல்லை நின்றசீரில் (முன்சீர்) ஒருபகுதியாகவும் வரும்சீரில் (பின்சீர்) இன்னொரு பகுதியாகவும் பிரித்து அமைக்கலாம். அதை யாப்பிலக்கணம் ஏற்றுக்கொள்கிறது. அதற்கு ‘வகையுளி’ என்று பெயர். ‘முன்னும் பின்னும் அசை முதலிய உறுப்புக்கள் நிற்புழி அறிந்து வழூஉப் படாமல் வண்ணம் அறுத்தல் வகையுளி’, ‘அசையொடு சீர்களை இலயம்படுமாறு இசையறுத்துக் கூறுங்கால் மொழி சிதைந்து பிரிந்திசைப்பது வகையுளி’, ‘செய்யுளில் ஓசை சரியாக அமைவதற்காக ஒருசொல்லைப் பிரித்து முன்சீரிலும் பின்சீரிலுமாகச் சேர்ப்பது வகையுளி’, ‘வகையுளி என்பது முன்னும் பின்னும் அசை முதலாகிய உறுப்புகள் நின்றவழி அறிந்து குற்றப்படாமல் வண்ணம் அறுத்தல்’ என்றெல்லாம் இதை விளக்குவர். எல்லாம் ஒரே பொருள்தான்.
சொற்களைப் பகுதிகளாகப் பிரிக்காமல் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டோ முழுமையாக நின்று சீராகும். அப்படி அமைவதைச் சிறப்பு என்று புலவர் கருதுவர். கம்பராமாயணக் கடவுள் வாழ்த்துப் பாடலின் முதலடி அப்படியானது. ‘உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்’ என்பதில் எந்தச் சொல்லையும் பகுதி பகுதியாகப் பிரிக்கவில்லை. உலகம் – ஒருசொல்; யாவையும் – ஒருசொல்; தாமுள – தாம் உள, இருசொல்; ஆக்கலும் – ஒருசொல். சொல்லைப் பிரித்துச் சீர் அமைக்கவில்லை. ஓரடி மட்டுமல்ல, எத்தனையோ முழுப்பாடல்களைக் கம்பர் இப்படிப் பாடியிருக்கிறார். மிகவும் பிரபலமான இந்தப் பாடலைப் பாருங்கள்.
கோதைகள் சொரிவன குளிரள நறவம்
பாதைகள் சொரிவன பருமணி கனகம்
ஊதைகள் சொரிவன உறையுறும் அமுதம்
காதைகள் சொரிவன செவிநுகர் கனிகள்
இப்பாடலில் எந்தச் சொல்லையும் சீருக்காகப் பிரிக்கவில்லை. இப்படி அமைவன வாசிக்கவும் எளிமையானவை. சந்தமும் பொருத்தமாக அமையும்.
சொற்களைப் பகுதி பகுதியாகப் பிரித்துச் சீர் அமைக்கும் பாடல்களும் கம்பரிடம் பலவுண்டு. ‘பாகொக் குஞ்சொற் பைங்கிளி யோடும் பலபேசி’ என்று தொடங்கும் பாடலில் ‘ஒக்கும்’, ‘கிளியோடும்’ ஆகிய சொற்கள் அப்படிப் பிரிபட்டு நிற்கின்றன. இன்னொரு பாடலின் கடைசி அடி இது: ‘கல்லும் புல்லும் கண்டுரு கப்பெண் கனிநின்றாள்.’ இதில் ‘கண்டுருக’ என்னும் சொல்லின் கடைசி அசை அடுத்த சீரில் சேர்ந்திருக்கிறது. இப்படிப் பல சான்றுகளைக் காட்டலாம். சொல்லைப் பகுதியாகப் பிரித்து அடுத்தடுத்த சீர்களில் சேர்க்கும்போது அசை பிறழாமல் சேர்க்கும் முறை இது.
சங்க இலக்கியம் முதல் இம்முறையே பெருவழக்கு. ‘யாயும் ஞாயும் யாரா கியரோ’ என்னும் குறுந்தொகைப் பாடல் அடியில் ‘யார் ஆகியரோ’ என்பது ‘யார்ஆ கியரோ’ என்று பிரிந்துள்ளது. அதன் இறுதியடி ‘அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே’ என்பதில் ‘கலந்தனவே’ என்பது ‘தாம்கலந் தனவே’ எனப் பிரிந்துள்ளது. இவை அசை பிறழாமல் பிரிபட்டவை. இதற்கு இரண்டாம் இடம் அளிப்பது புலவர் மரபு.
வகையுளியில் அடுத்த வகை அசை பிறழ்ந்தாலும் ஓசைக்கேற்பச் சொல்லைப் பிரித்துச் சீர் அமைத்தல் ஆகும். ‘உலகம் யாவையும்’ பாடலின் இரண்டாம் அடியை எடுத்துக்கொள்வோம். ‘நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா’ என்பதில் ‘பெறுத்தலும்’ என்னும் சொல்லை அசை பிரித்தால் பெறுத் – நிரையசை; தலும் – நிரையசை. நிரைநிரை – கருவிளம் என்றாகும். ஆனால் இப்போது அடியில் சொல் பிரிபட்டிருக்கும் முறையில் பார்த்தால் ‘பெ – நேர்; றுத் – நேர்; தலும் – நிரை’; நேர் நேர் நிரை – என்றாகும். சீரில் அமையும்போது ‘நிலைபெ – நிரைநேர்; றுத்தலும் – நேர்நிரை’ என்றும் அலகுபெறும். சொல்லாக இருக்கும்போது நிரையசையாக அலகு பெறுவது பிரியும்போது நேர்நேர் என்றாகிறது.
கம்பராமாயணக் கடவுள் வாழ்த்துப் பாடலில் ‘நிலைபெ றுத்தலும்’, ‘அலகி லாவிளை’ என்னும் இரண்டு இடங்களில் அசை பிறழும் வகையில் பிரிந்து சீர் அமைந்துள்ளது. இதே பாடலில் ‘அலகி லாவிளை யாட்டுடை யாரவர்’ என்பதில் ‘விளையாட்டு உடையார்’ ஆகிய சொற்கள் அசை பிறழாமல் பிரிபட்டிருக்கின்றன. ஆகவே இப்பாடலின் முதலடியில் சொற்கள் பிரிபடாமல் நின்று சீர்களாகின்றன. அடுத்தடுத்த அடிகளில் அசை பிறழாமலும் பிறழ்ந்தும் சீராகின்றன. மூவகை வகையுளியும் அமைந்தாலும் பொதுவில் இது மூன்றாம் வகையைச் சார்ந்ததாகவே புலவர் மரபு கருதும்.
யாப்பிலக்கணம் வழங்கும் சுதந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்திப் பொருள் சார்ந்தும் ஓசை சார்ந்தும் தம் பாடல்களை இயற்றிய கவிச்சக்கரவர்த்தி கம்பர் பொருத்தமான சொற்கள் அமையும் என்றால் அவற்றுக்கே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். வகையுளி வழங்கும் வசதியைப் பயன்படுத்தி மூவகையிலும் அசை பிரித்து ஓசையை அமைத்திருக்கிறார். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியவருக்கு யாப்பிலக்கண நுட்பங்களின் இண்டுஇடுக்குகளும் தெரிந்திருக்கும் தானே?
பயன்பட்ட நூல்கள்:
- அ.சிவசம்புப் புலவர் (உ.ஆ.), காரிகை மூலமும் உரையும், 1893, அச்சுவேலி இயந்திர சாலை, யாழ்ப்பாணம்.
- அ.திருமலைமுத்துசாமி, யாப்பருங்கலக் காரிகை, 1955, ஸ்டார் பிரசுரம், சென்னை.
- சோ.கண்ணதாசன் (ப.ஆ.), யாப்பருங்கலக் காரிகை மூலமும் உரையும், 2016, சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர்.
—– 01-12-24
Add your first comment to this post