தீபாவளி முடிந்தாலும் சில நாட்களுக்கு லட்டு இருக்கும்தானே. எனக்கும் லட்டு பற்றி எழுத இன்னொரு விஷயமும் இருக்கிறது.
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக நடிகர் கார்த்தியிடம் கேட்ட கேள்விக்கு ‘லட்டு பற்றி இங்கு பேச வேண்டாம். அது சென்சிட்டிவ் டாபிக்காக உள்ளது. லட்டு வேண்டாம். தவிர்த்து விடுவோமே’ என்று பதில் சொன்னார். அவர் சிரித்துக்கொண்டே சொன்னாராம். அந்தச் சிரிப்பு கேலி செய்வது போலிருந்ததாம். மனதைப் புண்படுத்தியதாம். ‘திரைப்பட நிகழ்ச்சியில் லட்டு பற்றிக் கிண்டல் செய்வீர்களா?’ என்று ஆந்திரத் துணைமுதல்வர் பவன் கல்யாண் கேள்வி எழுப்பினார். உடனே கார்த்தி தான் மரபுகளைப் பின்பற்றுபவன் எனவும் வெங்கடேசுவரப் பெருமாளின் பக்தன் என்றும் விளக்கம் சொல்லித் தன் சொற்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார்.
கார்த்தி நடித்த ‘மெய்யழகன்’ திரைப்படம் தெலுங்கில் வெளியாக இருக்கிறது. படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா. பல கோடி முதலீடு செய்து எடுக்கப்பட்டிருக்கும் படம். பட வெளியீட்டுக்குப் பிரச்சினை எதுவும் வந்துவிடக் கூடாது என்னும் எண்ணத்தில் கார்த்தி உடனடியாக வருத்தம் தெரிவித்தார். வருத்தம் தெரிவிக்காமல் இருந்தால் சில குழுக்கள் அவர் மீது பாய்ந்து நிர்ப்பந்தம் கொடுக்க நேர்ந்திருக்கலாம். பட வெளியீடு தொடர்பாகவும் பிரச்சினை ஏற்படுத்தியிருக்கலாம்.
திரைப்படம் தொடர்பாக ஏதேனும் பிரச்சினை ஏற்படும்போது நடிகர்களோ இயக்குநர்களோ தயாரிப்பாளர்களோ சட்டென்று இறங்கி வந்துவிடுகிறார்கள். வீம்பு காட்டுவதோ அடம் பிடிப்பதோ இல்லை. சில காட்சிகளை நீக்குவதென்றாலும் ஒத்துக் கொள்கிறார்கள். வருத்தம் தெரிவிக்க வேண்டுமா ‘இந்தா வருத்தம்’ என்கிறார்கள். மன்னிப்பு கேட்க வேண்டுமா ‘யார் யாரிடம்’ என்று தயாராக நிற்கிறார்கள். அவற்றின் பின்னணியில் மூதலீடு இருக்கிறது.
‘பரிதாபங்கள்’ யுடியூப் சேனலில் ‘லட்டு பரிதாபங்கள்’ என்னும் தலைப்பில் வெளியான காணொலியை நீக்கினர். அவர்கள் தம் அறிவிப்பில் ‘வீடியோ முழுக்க நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை. அதையும் மீறிச் சிலர் மனம் புண்பட்டிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்து வீடியோவை நீக்கியுள்ளோம்’ என்று கூறினர். அத்துடன் ‘இதுபோல் வருங்காலத்தில் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று உறுதியும் வழங்கினர்.
அக்காணொலிக்குச் சமூக ஊடகங்களில் வந்த பின்னூட்டங்களைக் கண்டு இந்த முடிவை எடுத்தனரா, வேறுவகை மிரட்டல்கள் வந்தனவா என்று தெரியவில்லை. அவர்களும் உடனடியாக வருத்தம் தெரிவித்தமைக்குக் காரணம் தொடர்ந்து காணொலி வெளியிடும் தொழில் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதாகவே இருக்கும். இத்தகைய மிரட்டல்களை எதிர்கொள்ளும் பின்னணியோ வலுவோ அவர்களுக்கு இல்லை என்பதும் காரணமாகலாம்.
நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்த கருத்து பற்றியும் சர்ச்சை ஓடியது. அவர் பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை. ‘குற்றவாளிகளைக் கண்டுபிடித்துக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நீங்கள் ஏன் தேவையற்ற அச்சத்தைப் பரப்புகிறீர்கள்’ என்றுதான் கேட்டிருந்தார். ‘இந்தப் பிரச்சினையைத் தேசிய அளவில் ஊதிப் பெரிதாக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே நாட்டில் போதுமான வகுப்புவாதப் பதற்றங்கள் உள்ளன’ என்றும் பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்குவதே பவன் கல்யாணின் அரசியல் என்பதை வெளிப்படுத்தியதால் அதற்குக் கடுமையாக அவர் எதிர்வினை ஆற்றினார். பவன் கல்யாண் கேட்கும் கேள்விகளில் எதுவும் புதிதல்ல. எல்லாம் பழகிப் போனவை. வெளிநாட்டில் இருந்த பிரகாஷ்ராஜ் திரும்புவதற்குள் பிரச்சினை காணாமல் போய்விட்டது. எப்படியிருந்தாலும் அவருக்கு முதலீடு, தொழில் பயம் இல்லை.
தொடர்ந்து இப்படிப் பல சர்ச்சைகள் கிளப்பப்பட்டுக் கொண்டேயிருப்பதால் பொதுச்சமூகம் ‘எல்லாம் இயல்பு’ என்று கருதும் மனநிலைக்கும் வந்துவிட்டது. இதைக் கருத்துரிமைப் பிரச்சினையாகக் காணவும் சலிப்பு ஏற்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. நமக்கேன் வம்பு, நிலையை அனுசரித்து நடந்துகொள்ளலாம் என்றே எல்லோர் எண்ணமும் மாறிவிட்டது. இந்த மனநிலை சர்ச்சையைக் கிளப்புவோருக்கு வசதியாக இருக்கிறது. தொடர்ந்து ஏதாவது ஒன்றைக் கிளப்பிப் பாதுகாப்பின்மைப் பதற்றத்திலேயே சமூகத்தை வைத்திருக்க முடியும் என்று நினைக்கின்றனர்.
பொதுவாகத் திரைப்படத் துறை, சமூக ஊடகத் துறை சார்ந்தோர் இத்தகைய பிரச்சினைகளில் பின்வாங்கும் போது அறிவுலகம் அவர்கள் மீது குற்றம் சொல்வதில்லை. ஒரு திரைப்படம் ஓடவில்லை என்றால் ‘பாவம். முதலீடு செய்தவர்களுக்கு நஷ்டம் ஏற்படுமே’ என்று கவலைப்படும் சமூகம் இது. ஆகவே வருத்தமும் மன்னிப்பும் தெரிவிப்போர் நிலையை அறிவுலகம் புரிந்துகொள்கிறது. அவர்களுக்காகக் கவலைப்படவும் செய்கிறது. ‘ஏன் வருத்தம் தெரிவித்தாய்’ என்று ஆக்ரோசம் காட்டுவதில்லை.
ஆனால் எழுத்தாளர் நிலை அப்படியல்ல. அரசியல், பொருளாதாரப் பின்னணி ஏதுமற்ற எழுத்தாளர்களை அறிவுலகம் கடுமையாகக் குறிவைக்கிறது. ‘என்ன வந்தாலும் தம் கருத்தில் உறுதியாக இருக்க வேண்டும்’ என்று அறிவுறுத்துகிறது. ‘பின்வாங்கல் கோழைத்தனம்’ என்று விமர்சிக்கிறது. மாதொருபாகன் பிரச்சினையின் போது இவற்றையும் நான் எதிர்கொள்ள நேர்ந்தது. குடும்பத்தோடு நாமக்கல்லில் வசிக்கிறேன். கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் நீடித்த பிரச்சினையின் கனல் தாங்க இயலாமல் நிர்ப்பந்தத்தின் பேரில் ‘மன்னிப்புக் கடிதம்’ எழுதிக் கொடுக்க நேர்ந்தது. அப்போது எழுத்தாளர்கள், முற்போக்காளர்கள் எனப் பலரிடமிருந்து ‘கோழைத்தனம்’ என்னும் விமர்சனத்தை எதிர்கொண்டேன். எழுத்தாளர் வறுமையில் செத்தாலும் இலக்கியத் தொண்டு செய்வதிலிருந்து பின்வாங்கக் கூடாது. எல்லா வகை விழுமியங்களையும் எழுத்தாளர் தலைமீது ஏற்றி வைத்திருக்கிறோமே.
‘கோழைத்தனமாகப் பின்வாங்கக் கூடாது. உயிர் இருக்கும் வரை போராட வேண்டும் தோழர்’ என்று சொன்னவரிடம் என் மனைவி இப்படிக் கேட்டார்.
‘ஏன் தோழர்? இரங்கல் கூட்டம் நடத்துவதற்குத் திட்டமிட்டிருக்கிறீர்களா?’
—– 01-11-24
விடுப்பு கடிதம் கூட ஏதாவது விடுபட்டு போச்சா என்கிற கர்ம சிரத்தையில்தான் ஒப்பிவிக்க வேண்டியுள்ளது. இப்படியிருக்க கருத்துக்கேது சுதந்திரம்.. கருத்துகள் மனச்சிறையில்
ஆயுள் கைதியாகயாகத்தான் வாசம் புரிய வேண்டியுள்ளது.