ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் ஆனந்தவிகடன் இதழில் படித்ததில் பிடித்தது என்னும் தலைப்பில் ஒவ்வொரு வாரமும் சிலரிடம் அவர்களுக்குப் பிடித்த பத்து நூல்களைக் கேட்டுப் பட்டியலை வெளியிட்டார்கள். அதில் ஒருவாரம் நான் சொன்ன பத்து நூல்களின் பட்டியல் வெளிவந்தது. அதைப் படித்த நண்பர்கள் ‘நீங்கள் சொல்லியிருந்ததில் ஒன்பது நூல்கள் எங்களுக்குத் தெரிந்தவை. ஒரே ஒரு நூல் மட்டும் புதிதாக இருக்கிறதே’ என்று கேட்டார்கள். அவர்கள் கேட்ட அந்த நூலின் பெயர் ‘குமரியும் காசியும்.’ ஆசிரியர் மு. அருணாசலம்.
நூல் புதியதொன்றும் அல்ல. பழையதுதான். 1959ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது. தமிழ் நூலக வெளியீடு, திருச்சிற்றம்பலம். மு.அருணாசலத்தின் சொந்த வெளியீடுதான். இந்நூலைப் பலரும் கேள்விப்படாததில் வியப்பொன்றும் இல்லை. மிகச் சிறந்த பல நூல்கள் ஏதேதோ காரணங்களால் வெளியே பிரபலமாகத் தெரியாமல் முடங்கிப் போய்விடுகின்றன. காலவெள்ளத்தில் நல்ல நூல்கள் அடித்துச் செல்லவும்படுகின்றன. நம் மரபிலேயே அப்படி பல நூல்களைச் சுட்டமுடியும். முத்தொள்ளாயிரம் என்னும் நூல் இன்று கிடைக்கவில்லை. கிடைக்கும் சில பாடல்களை வியந்து போற்றுகின்றது தமிழ் இலக்கிய உலகம். செம்மொழிக்கெனப் பட்டியல் இடப்படும் நாற்பத்தொரு நூல்களில் இதுவும் ஒன்று. அப்பேர்ப்பட்ட நூல் ஏன் கிடைக்காமல் போயிற்று?
நவீன காலத்திலும் இந்தப் போக்கு தொடரத்தான் செய்கிறது. காலம் கடந்து நிற்பவை அனைத்தும் சிறந்தவையும் அல்ல. காலத்தைக் கடந்து வராதவை மோசமானவையும் அல்ல. ஒரு நூல் பொதுப்போக்கில் முன்னிற்பதற்குச் சாதி, சமயம், குடி, அரசியல் உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கின்றன. நூல்கள் மறக்கப்படுவதற்கும் இவையே காரணங்களாகும். சமகால அரசியல் தேவைகளினால் சில நூல்கள் முன்னிறுத்தப்பட்டுள்ளன. சில நூல்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கின்றன. சாதி சார்ந்தவர்களின் நூல்கள் உயர்த்திப் பிடிக்கப்பட்டிருக்கின்றன. சமயம் சார்ந்து நூல்கள் வெளியிடும் போக்கு உருவானதையும் அதற்கெனத் தனிப் பதிப்பகங்கள் இன்றுவரை செயல்பட்டு வருவதையும் காணலாம்.
மு.அருணாசலம் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகச் சிறந்த அறிஞர்களுள் ஒருவர். எனினும் அவர் தமிழுக்குப் புறம்பான செயல்களோடு ஒத்துப் போகாத காரணத்தால் அவரை அங்கீகரித்தவர்கள் மிகவும் குறைவு. தன்போக்கில் இயங்கிப் பல்லாயிரம் பக்கங்கள் எழுதி வைத்துவிட்டுச் சென்றிருப்பவர். அவர் எழுதிய ’தமிழ் இலக்கிய வரலாறு’ வரிசை நூல்கள் நூற்றாண்டு வாரியாகப் பல்வேறு தகவல்களையும் ஆய்வுப்பூர்வமான செய்திகளையும் உள்ளடக்கியவை. அந்நூலில் இலக்கியத் திருட்டு, பதிப்பு மோசடிகள் எனப் பலவற்றையும் வெளிப்படையாகச் சுட்டி எழுதியிருப்பதால் அவரைக் கல்விப் புலமும் வெளியீட்டு நிறுவனங்களும் புறக்கணித்தே வந்துள்ளன. மோசடிகளுக்கு மலர்ப்பாதை அமைத்தும் நற்காரியங்களுக்குப் புறக்கணிப்பைக் கொடுத்தும் எதிர்கொள்ளும் சமூகம் நம்முடையது.
தமக்குச் சரியெனப்பட்டதைத் தயங்காமல் எழுதிய மு.அருணாசலம் நூல் வெளியிடவும் தம் வாழ்க்கை வசதிக்கும் யாரையும் அண்டியிருக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. பூர்வீகமாக அவருக்கு இருந்த சொத்துக்களின் பலம் அவரைத் தைரியமாக இயங்கச் செய்தது எனலாம். இலக்கிய வரலாறு தவிர அவர் எழுதிய முக்கியமான நூல்கள் பல. திருவாசகம் ஆராய்ச்சிக் குறிப்புகள், தாலாட்டு இலக்கியம், இன்றைய தமிழ் வசன நடை, கருநாடக சங்கீதம் தமிழிசை, காற்றிலே மிதந்த கவிதை, சொற்சுவை, பாடசாலை நோய்கள் உள்ளிட்ட பல நூல்கள் அத்தகையவை. அவற்றில் ஒன்றுதான் ‘குமரியும் காசியும்’ என்பதாகும். இந்நூல்களுள் பெரும்பான்மையானவற்றை அவரே சொந்தமாக வெளியிட்டுள்ளார். பதிப்பகம் ஒன்றின் மூலமாக நூல்களை வெளியிட்டால் ஆசிரியருக்குப் பிறகும் அடுத்தடுத்த பதிப்புகள் வெளிவர வாய்ப்புகள் இருக்கும். சொந்தமாக வெளியிடும் ஒருவரின் மறைவுக்குப் பிறகு அவற்றை மறுபதிப்பாகக் கொண்டுவர அவரின் வாரிசுகள் முயல்வார்களா என்பது ஐயம்தான். மு.அருணாசலத்திற்கு நேர்ந்ததும் இத்தகைய ஒரு சிக்கலே.
தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள், புரவலர்கள், அரசர்கள், தலைவர்கள் முதலிய பலரைப் பற்றியும் நமக்கு நம்பகமான தகவலகளோ வரலாற்றுக் குறிப்புகளோ கிடைப்பது மிகவும் அரிது. பழைய காலம் என்றில்லை. நவீன காலத்திலும்கூட இதுதான் நிலை. இதைத் தெளிவாகவும் அனுபவப் பூர்வமாகவும் உணர்ந்திருந்த காரணத்தால் உ.வே.சாமிநாதையர் இத்துறையில் முன்கை எடுத்துப் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் முன்பகுதியிலும் வாழ்ந்த பலரைப் பற்றிய பதிவுகளை வழங்கும் வகையில் நூல்களையும் கட்டுரைகளையும் எழுதினார். அவரின் தொடர்ச்சியாக வேறுசில முக்கியமான பதிவுகளும் நிகழ்ந்திருக்கின்றன. வையாபுரிப் பிள்ளையின் தமிழ்ச் சுடர் மணிகள், பி.ஸ்ரீ. எழுதிய நான் அறிந்த தமிழ் மணிகள், கு. அழகிரிசாமியின் நான் கண்ட எழுத்தாளர்கள் எனச் சில நூல்களை இவ்வகையில் சுட்டலாம். இன்று சுந்தர ராமசாமி நினைவோடை என எழுதியுள்ள வரிசை நூலகள் இத்துறையில் குறிப்பிடத்தக்கவை. இவ்வரிசையில் இடம்பெறும் நூல்தான் குமரியும் காசியும்.
தாம் சந்தித்த தமிழறிஞர்கள், புலவர்கள், தலைவர்கள் எனப் பத்துப்பேரைப் பற்றிய அரிய சித்திரத்தை வழங்கும் கட்டுரைகளைக் கொண்ட நூல் இது. உள்ளடக்கத்தை அறிந்துகொள்ளத் தடையாகத் தலைப்பு அமைந்துவிட்டதும் இந்நூலின் சிறப்பு வெளித்தெரியாமல் போனதற்கான காரணம். குமரியும் காசியும் என்றவுடன் இது ஏதோ ஒருவகைப் பயண நூல் என்னும் எண்ணம் உருவாகிவிட்டது. நூல் வாசகரைச் சென்றடையத் தலைப்பும் மிக முக்கியமானது. மு.அருணாசலத்தின் நூல்கள் அனைத்தும் வெளிப்படையான, நேரான தலைப்புகளைக் கொண்டிருக்கின்றன. இந்நூல் மட்டும் பூடகத்தையும் பிறிதுமொழிதலையும் கொண்ட தலைப்பைப் பெற்றுள்ளது. இந்நூலுக்குத் தலைப்பு வைக்க மு. அருணாசலம் மிகவும் சிரமப்பட்டுள்ளார் என்பதும் தெரிகிறது.
அவர் எழுதிய நூல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருள் சார்ந்தவை. பல இதழ்களில் எழுதிய கட்டுரைகள் எனினும் பொருள் சார்ந்து தொகுத்து வெளியிட்டுள்ளார். மிக எளிதாக உள்ளடக்கத்தை அறியும் வகையில் தலைப்புத் தந்துள்ளார். ஆனால் இந்நூலுக்கு அவ்வகையில் எளிதாகத் தலைப்பு வைக்க இயலவில்லை. அறிஞர்களோடான அனுபவங்கள் என்று நூற்பொருளை வரையறைப்படுத்த முடிந்தாலும் வெளிப்படையான தலைப்பு ஒன்றுக்குள் கொண்டுவர அவர் மிகவும் யோசித்துள்ளார். தன் நூல் எதிலும் நூல் தலைப்பை விளக்கும் குறிப்பு ஒன்றையும் அவர் தரவில்லை. ஆனால் இந்நூலுக்கு அப்படிப்பட்ட குறிப்பு ஒன்றைத் தர நேர்ந்துள்ளது. அது வருமாறு:
“இதனுள், குமரிமுதல் காசி வரை நான் கண்டு பழகிய பெரியாரைப் பற்றி எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பெற்றுள்ளன. தென்குமரி யருகே தேரூரில் வாழ்ந்த தேசிக விநாயகம் பிள்ளைவர்களையும் தென்காசி யருகே வெள்ளகாலில் வாழ்ந்த வெ.ப.சுப்பிரமணிய முதலியாரவர்களையும் நான் யாத்திரை செய்து தரிசித்தேன். காசியில் மாளவியாவையும், மகரிஷி அனந்தகிருஷ்ண சாஸ்திரிகளையும் காண்கிற பேறும் நான் பெற்றிருந்தேன். இவர்களையும் பிற பெரியார்களையும் பற்றி நான் எழுதிய குறிப்புக்கள் இங்குத் தொகுக்கப் பெற்றமையால் இத்தொகுப்புக்குக் குமரியும் காசியும் என்றே பெயர் சூட்டலானேன்” (ப.5)
குமரி முதல் காசிவரை கண்டு பழகிய பத்துப்பேரைப் பற்றிய அனுபவக் கட்டுரைகளான இவை வாசிக்கச் சுவை உடையனவாக அமைந்துள்ளன. அதற்குக் காரணம் புனைவு எழுத்தைப் போன்ற சம்பவ விவரிப்பும் உரையாடல்களும் ஆகும். ஒருவரைப் பற்றி எழுதும்போது அவருடைய முக்கியத்துவத்தை உணர்த்தும் பின்னணித் தகவல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் கொடுக்காமல் இடையிடையே வழங்குகிறார். சந்தித்த அனுபவத்தை நகைச்சுவை உணர்வோடு கலந்துரையாடல் தன்மையில் எழுதிச் செல்கிறார். இந்த எழுதுமுறை நூலிற்கான வாசிப்புச் சுவையை மிகுவிக்கிறது.
ஒவ்வொருவரைப் பற்றிய குணச் சித்திரங்களை அவர் கண்டடையும் விதமும் அதை நகைச்சுவை மிளிரச் சொல்லிச் செல்லும் பாங்கும் வாசிப்பவரை உள்ளிழுக்கும் தன்மை கொண்டவை. வெள்ளகால் முதலியார், செல்லய்யா, ஐயரவர்கள், திரு.வி.கலியாணசுந்தர முதலியார், தேசிக விநாயகம் பிள்ளை, அகராதி அளித்த அறிஞர், ஞானியார் சுவாமிகள் ஆகிய தமிழக அறிஞர்கள் எழுவரைப் பற்றிய கட்டுரைகளும் வினோபா பாவே, பண்டித மாளவியா, மகரிஷி அனந்தகிருஷ்ண சாஸ்திரிகள் ஆகிய வட நாட்டைச் சேர்ந்த மூவரைப் பற்றிய கட்டுரைகளும் இந்நூலில் உள்ளன.
வெள்ளகால் ப. சுப்பிரமணிய முதலியார், உ.வே.சாமிநாதையர், திரு.வி.கலியாண சுந்தர முதலியார், தேசிக விநாகம் பிள்ளை, ஞானியார் சுவாமிகள் ஆகியோரை அவர்களது முதுமை பருவத்தில் மு. அருணாசலம் சந்தித்துள்ளார். சாதனை புரிந்தவர்களின் அறிவையும் ஆர்வத்தையும் பண்பையும் ஒருசேரக் காணும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. அவர்களது வாழ்க்கை பற்றிய பல சம்பவங்கள் அறிய கிடைக்கின்றன. அக்காலத்தில் டி.கே.சி. பற்றிப் பலருக்கும் இருந்த ஈடுபாடு நூல் முழுதும் விரவியுள்ளது. உ.வே.சாமிநாதையர் எண்பது வயதைத் தாண்டியும் வாழக் காரணம் ‘தமிழ் என்ற ஒரே மருந்துதான்’ என்று கூறும் சம்பவம் இதில் பதிவாகியுள்ளது. உ.வே.சா. பற்றி வையாபுரிப் பிள்ளை எழுதியுள்ள கட்டுரை அறிவுத்தளம் சார்ந்த்து. மு.அருணாசலத்தின் கட்டுரை உணர்வு சார்ந்தது. இவ்விரு கட்டுரைகளையுமே காலச்சுவடு வெளியிட்ட ‘உ.வே.சா. பன்முக ஆளுமையின் பேருருவம்’ என்னும் நூலில் சேர்த்திருக்கிறேன்.
தேசிக விநாயகம் பிள்ளைக்குப் பாட்டு எழுதுவதைவிடக் கல்வெட்டு ஆராய்ச்சியிலேயே மிகுந்த ஈடுபாடு என்பதும் கவிமணி என்னும் பட்டத்தை அவர் விரும்பவில்லை என்பதும் இந்நூல் மூலமாக நமக்குக் கிடைக்கும் செய்திகள். தேசிகவிநாயகம் பிள்ளையை அவரது இறுதிக் காலத்தில் சந்தித்த அனுபவத்தைச் சுந்தர ராமசாமியும் எழுதியுள்ளார். இவ்விரு கட்டுரைகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பது சுவாரஸ்யமான அனுபவமாக அமையும்.
வையாபுரிப்பிள்ளையின் ஆழ்ந்த புலமைத் திறனையும் பிறரை மதிக்கும் உயர் பணபையும் இந்நூல் சம்பவ ஆதாரங்களுடன் காட்டுகிறது. மிகப்பெரும் எதிர்ப்பைச் சம்பாதித்திருந்த அறிஞர் கடைபிடித்த பொறுமை, நிதானம் ஆகியவற்றை மு.அருணாசலம் வழியாக அறிகிறோம். உ.வே.சாமிநாதையர் மீது வையாபுரிப்பிள்ளைக்கு இருந்த பெரும் மதிப்பு இந்நூல் கட்டுரை மூலமாகவும் வெளிப்படுகின்றது. சமயப் பிரச்சாரகராகவும் சிறந்த சொற்பொழிவாளராகவும் திகழ்ந்த ஞானியார் அடிகள் என்னும் ஞானியார் சுவாமிகள் பற்றிய விரிவான சித்திரம் இந்நூல் ஒன்றில்தான் கிடைக்கிறது. டி.கே.சியின் மகன் செல்லய்யா என்று அழைக்கப்பட்ட தீர்த்தாரப்பன் பற்றிய கட்டுரையும் மிகவும் முக்கியமானது. இளம் வயதில் மறைந்துவிட்ட அவரைப் பற்றி உணர்ச்சிகரமான கட்டுரை இது என்று சொல்லலாம்.
திரு.வி.கலியாணசுந்தர முதலியாரைப் பற்றி இரண்டு தலைப்புக்களில் விரிவாக எழுதப்பட்டுள்ள கட்டுரை அவரைப் பற்றி மட்டுமல்லாமல் அவரது சில கவிதைகளையும் நயம்பட விளக்குகின்றது. வினோபா பாவேவைப் பற்றிய கட்டுரை மிக விரிவான பதிவாகும். அவரது பாதிப்பு மு.அருணாசலத்திற்கு மிகுதியாக இருந்தது என்பதை ஆதாரக் கல்வி பற்றி மு. அருணாசலம் எழுதியுள்ள நூல்கள் காட்டுகின்றன. அவரைச் சந்தித்த அனுபவங்களை மட்டுமல்லாமல் அவரது செயல்களைப் பற்றிய விரிந்த பதிவையும் மு.அருணாசலம் வழங்குகின்றார். தமிழ் மீது வினோபாவுக்கு இருந்த ஈடுபாட்டையும் இக்கட்டுரை காட்டுகிறது. இந்திய மொழிகளிலேயே வினோபாவைப் பற்றி இப்படி ஒரு பதிவு இருக்குமா என்பது சந்தேகம்தான்.
இந்நூலில் சுவையான பல சம்பவங்கள் உள்ளன. வினோபாவை டி.கே.சி. சந்தித்தபோது ‘திருக்குறளை மூல பாஷையில் நான் படித்துப் பூர்ணமாய்ச் சுவைப்பதற்கு வழி என்ன?’ என்று அவர் கேட்கிறார். ‘அடுத்த பிறப்பில் தமிழனாய்ப் பிறப்பது ஒன்றுதான்’ என்று டி.கே.சி. பதில் சொல்கிறார். உ.வே.சாமிநாதையர் திருவிளையாடல் புராணத்தை முதலில் படிக்கச் சொல்லி அறிவுறுத்திய சம்பவம், வினோபா பாரதியார் கவிதையைப் பாடியது, ஞானியார் சுவாமிகளின் சொற்பொழிவின்போது சிறு குழந்தை வந்து அருகில் அமர்ந்து கொண்டது எனப் பல நிகழ்வுகளை விதந்து சொல்ல முடியும். யாரையும் குறைத்துச் சொல்லக்கூடாது என்னும் கட்டுப்பாடு கொண்டு இக்கட்டுரைகளை எழுதியிருப்பது ஒன்றை மட்டும் குறையாகச் சொல்லலாம். ஆனால் பலர் உயிருடன் இருந்தபோதே எழுதிய கட்டுரைகள் இவை என்பதையும் கவனத்தில் கொண்டு பார்க்க வேண்டும்.
ஒவ்வொரு கட்டுரையையும் புனைவொன்றைப் படிக்கும் மனநிலையோடு அணுக முடிகிறது. ஒவ்வொரு ஆளுமை பற்றிய சித்திரமும் மனதில் பல்வேறு அலைகளை எழுப்புகின்றன. அவர்கள் வாழ்ந்த காலம் , அக்காலத்திய ஊர்களின் அமைப்பு, தமிழ் மீதான ஈடுபாடு, சாவகாசமாக உரையாடக் கிடைத்த வாழ்க்கைச் சூழல், அறிவுப் பரிமாறல்கள் என ஏராளமான கோணங்கள் இந்நூலில் பதிவாகியுள்ளன. அவ்வப்போது எடுத்து வாசிக்கத்தக்க தன்மையைக் கொண்டுள்ள இந்நூல் வெளிவந்து ஐம்பது ஆண்டுகளாகியும் மறுபதிப்பு வரவில்லை.