வெல்கம் டு மில்லெனியம்

You are currently viewing வெல்கம் டு மில்லெனியம்

 

அரவிந்தன் இந்தியா டுடே, காலச்சுவடு, இந்து தமிழ் திசை ஆகிய இதழ்களில் பணியாற்றியவர். சிறுகதைகளும் நாவல்களும் எழுதியுள்ளார். கிரிக்கெட் பற்றியும் பிற துறைகள் பற்றியும் கட்டுரைகள் எழுதி வருகிறார். ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, இமையம், ஜே.பி.சாணக்யா முதலியோர் படைப்புகள் குறித்து அவர் எழுதியுள்ள விமர்சனக் கட்டுரைகள் மிகவும் முக்கியமானவை. டி.எம்.கிருஷ்ணாவின் ‘செபாஸ்டியன் குடும்பக் கலை’ உள்ளிட்ட நூல்களை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்திருக்கிறார். இன்றைய உரைநடை மொழி பற்றிப் பெரிதும் கவனம் செலுத்திச் செம்மையாக்கத்திலும் ஈடுபடுகிறார். இப்படிப் பல தளங்களில் செயல்பட்டு வரும் அவரது சமீபத்திய சிறுகதைத் தொகுப்பு ‘வெல்கம் டு மில்லெனியம்.’ இதில் பத்துச் சிறுகதைகள் உள்ளன.

இருபத்தொன்றாம் நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உலகம் முழுதும் மனித சமூக வாழ்வில் மாபெரும் மாற்றங்களை உருவாக்கியுள்ளன. புற அளவிலான மாற்றங்கள் போலத் தோன்றினாலும்  தனிமனித அகம் பாதிப்படைந்துள்ள விதத்தை நவீன இலக்கியம் ஆழ்ந்து நோக்கத் தொடங்கியிருக்கிறது. விழுமியங்கள் எல்லாம் தகர்ந்து போகின்றன. பாவனைகளைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத தடுமாற்றங்கள் நேர்கின்றன. எல்லாவற்றின் மேலும் வெளிச்சம் விழுகிறது. எந்தப் பொந்துக்குள் ஓடி ஒளிய முயன்றாலும் மனதின் நிர்வாணத்தை மறைக்க முடியவில்லை. இலக்கியத்தின் கவனம் இவற்றின் மேல் விழுந்திருக்கிறது. அரவிந்தன் சிறுகதைகளும் இந்த வகைப்பட்டன.

இருபத்தொன்றாம் நூற்றாண்டு இளைஞர்கள் இன்றைய வாழ்வைக் காண்பதற்கும் அதற்கு முந்தைய தலைமுறையினர் இதைக் காண்பதற்கும் பெரும்வேறுபாடு உண்டு. எவற்றையெல்லாம் உயர்ந்த விழுமியம் என்று முந்தைய தலைமுறை கருதியதோ அவையெல்லாம் மிகச் சாதாரணமாகிவிட்டன. அல்லது மாறியும் மாறிக்கொண்டும் இருக்கின்றன. அவ்விழுமியங்களை வற்புறுத்துவோர் பூமர்கள் ஆகிவிட்டனர். எழுத்தாளர்களிலும் இந்தத் தலைமுறை வேறுபாடு இருக்கிறது. அதை முற்றிலுமாகக் கடக்க முடியாது என்றாலும் தம் பார்வையை நவீனப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை எழுத்தாளர்களுக்கு இலக்கியம் வழங்குகிறது. அவ்வாய்ப்பை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் அரவிந்தன்.

இத்தொகுப்புக் கதைகள் எந்தத் தலைமுறையையும் புனிதப்படுத்தவில்லை. யார் மீதும் குற்றம் சுமத்தவில்லை. இந்த விழுமியம் உயர்ந்தது, இது தாழ்ந்தது என்றெல்லாம் எதையும் மதிப்பிடவில்லை. எந்தப் பக்கமும் சார்ந்து நிற்கவில்லை. நியாயப்படுத்தும் தொனியும் இல்லை. முடிந்தவரைக்கும் விலகி நின்று இன்றைய வாழ்வைக் காண்பவை இவை. முதல் கதையான ‘திரைகள்’ மிகவும் சுவாரசியமானது. ஒழுக்கத் திரையைப் போட்டுக்கொண்டு தம் சுயமுகத்தை இதுகாலம் வரைக்கும் மறைத்துக் குடும்பம், உறவினர்கள் என அனைவரிடத்தும் பெருமதிப்பைத் தக்க  வைத்திருந்த ஒருவர் மனவிகாரம் பொதுவெளியில் அம்பலப்படும் கணம்தான் கதை. இனி அவர் என்ன செய்வார்? குடும்பத்தாரை எப்படி எதிர்கொள்வார்? பொதுவெளியில் அவர் நடமாட்டம் எவ்வாறு அமையும் எனப் பல கேள்விகளை வாசிப்போரிடம் விட்டுவிட்டுக் கதை முடிந்துவிடுகிறது. ‘அவர் கதை முடிந்துவிட்டது’ என்றுதான் சொல்ல வேண்டும்.

தினத்தந்தி மொழியில் ‘கள்ளக்காதல்’ என்றும்  ‘முறையற்ற பாலுறவு’ என்று இலக்கிய வழக்கிலும் சொல்லப்படும் பாலியல் பிரச்சினைகளைப் பற்றி இன்றைய தலைமுறையின் நோக்கை ஊடுருவும் சில கதைகள் உள்ளன. ‘வெல்கம் டு மில்லெனியம்’ என்னும் நூலின் தலைப்புக் கதை மிக முக்கியமானது. திருமணத்திற்குப் பிறகு நேரும் உறவுகள் பற்றிய பல கோணங்கள் பதிவாகியிருக்கின்றன. இதுபோன்ற பிரச்சினைகள் முந்தைய காலத்தில் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டன என்பதையும் கதையின் முடிவில் வரும் ஒருசம்பவம் ஒப்பிட்டுக் காணச் செய்கிறது.

இந்தத் தலைமுறையின் தடுமாற்றங்கள் பற்றியும் சில கதைகள் உள்ளன. ‘அனுபவம்’ கதை அவற்றில் ஒன்று. பெண்களை அணுகும் முறையில் தடுமாறும் இளைஞனின் மனவோட்டம். எல்லாப் பெண்களையும் ஒரே வகையில் காணுதல், எல்லாச் சூழல்களையும் ஒரே மாதிரி நினைத்தல் என அவன் சிந்தனையின் ஒற்றைத்தன்மை கதையில் கேள்விக்குள்ளாகிறது.  கிரிக்கெட்டைக் களமாகக் கொண்ட ‘வின் பண்ணனும் சார்…’ கதை இன்னொரு வகையான இளைஞனைப் பற்றியது.

இருதலைமுறைகளும் சமரசம் ஆகிக்கொள்ளும் கதைகள் சிலவும் தொகுப்பில் உள்ளன.  ‘பாகப்பிரிவினை’ அப்படியான கதை. குடும்பச் சொத்துக்களைப் பங்கிடுவது தொடர்பான பாகப்பிரிவினைதான் வழக்கில் உள்ளது. ‘பாகப்பிரிவினை’ என்னும் திரைப்படம் 1960களில் வெளியாகிப் பெருவெற்றி பெற்றது. அத்தகைய பிரிவினையைப் பற்றி இந்தக் கதை பேசவில்லை. இது மடிக்கணினியில் தந்தைக்கும் மகளுக்கும் நேரும் பாகப்பிரிவினை. நீலப் படங்கள் பார்த்தல் ஒருகாலத்தில் குற்றச்செயல். இன்று அது இயல்பு. இதே பிரச்சினையை ‘யாவர்க்குமாம்’ என்னும் கதை இன்னொரு தளத்தில் வைத்துப் பேசுகிறது.

இப்படி இத்தொகுப்புக் கதைகளை வைத்து நிறையப் பேச முடியும். அரவிந்தனின் எழுதுமுறையில் மாற்றங்கள் நேர்ந்திருக்கின்றன. தேர்வு செய்யும் சம்பவங்களில் சுவாரசியம் கூடியிருக்கிறது. அரவிந்தன் எழுத்து எந்த வகைப் பட்டதாக இருந்தாலும் கரைக்குள் அடங்கி ஓடும் நீர் போன்றது. தப்பித் தவறியும் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்பிவிடாது. கடிவாளம் போட்ட குதிரை போல இலக்கை நோக்கியே செல்லும். மொழித்தெளிவும் அப்படித்தான். எளிமையானதாகத் தோன்றும். சொற்களையும் தொடர்களையும் அடுக்கியுள்ள வரிசை நோக்கத்தைச் சரியாகச் சுமந்து செல்பவையாக இருக்கும். இத்தொகுப்புக் கதைகள் அவரது முந்தைய கதைகளை விடவும் இந்த ஒழுங்கைப் பெரிதும் பேணியுள்ளன.

மொழி பற்றி மிகுகவனம் கொண்டவர் அரவிந்தன். இத்தொகுப்புக் கதைகளில் ‘கெட்ட வார்த்தைகள்’ தாராளமாகப் புழங்குகின்றன.  ‘விருது’ கதையில் பட்டியல் தயாரிக்கும் அளவு கெட்ட வார்த்தைகள். கூமுட்ட, மடக்கூ, மயிரு, பாடு, ங்கோத்தா, நாறப்பய, குண்டி, வெண்ண ஆகியவை சட்டெனக் கண்களில் பட்டன. ஒரு பாத்திரத்தின் இயல்புக்கு ‘மயிரு’ என்னும் சொல்லைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தும் மொழி உதவுகிறது.

வெல்கம் டு மில்லெனியம்

சிறுகதைக்குள் அரவிந்தனின் மறுவரவு என்று இத்தொகுப்பைக் குறிப்பிடலாம். அரவிந்தனுக்கு இப்போது வயது அறுபது. அனுபவங்கள் கூடி அனைத்தையும் பரிசீலனைக்கு உட்படுத்தும் இவ்வயதில் இந்நூற்றாண்டு வாழ்வைக் கூர்நோக்கோடு காண்கிறார். ‘நூறாண்டு இரும்’ என்று மனதார வாழ்த்துகிறேன்.

நூல் விவரம் : அரவிந்தன், வெல்கம் டு மில்லெனியம், 2023, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில். விலை: ரூ.180/-

—–   27-11-24.

Latest comments (1)