நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரச்சினையிலும் யூமாவின் பணி பறிக்கப்பட்டதற்கு நேரடிக் காரணம் நானல்ல. எனினும் ஏற்கனவே ‘குதிரை வீரன் பயணம்’ நின்று போனது, ‘தினமணி’யிலிருந்து வெளியேறியது ஆகியவற்றில் ஏதோ ஒருவகையில் எனக்குத் தொடர்பிருந்ததால் இதையும் அப்படியே கருத வேண்டியானது. அப்பிரச்சினையைக் குறிப்பிட்டுக் கட்டுரை எழுதாமல் இருந்திருந்தால் யூமாவுக்குப் பாதிப்பு வந்திருக்காது அல்லவா? தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு மாத ஊதியம் கிடைக்கும்படியான பணி மிகவும் முக்கியமானது. அதுவும் யூமாவுக்கு அது அவசியம். அவர் விஷயத்தில் என் குற்றவுணர்வு பெருக இப்படி மூன்று தொடர் நிகழ்வுகள் காரணமாயின.
அவர் அலட்டிக் கொள்ளவில்லை. ‘விடுங்க முருகன். இதில்லாட்டி இன்னொரு வேல. பாத்துக்கலாம்’ என்றுதான் சொன்னார். பிறகு மொழிபெயர்ப்புப் பணிகளே அவரது ஊதியத்திற்கு உதவின. மிகத் தாமதமாக ஐம்பது வயதுக்குப் பிறகு 2019ஆம் ஆண்டு அவருக்கு அரசுப் பள்ளியில் ஓவிய ஆசிரியர் பணி கிடைத்த போது அவரை விடவும் நானே பெருமகிழ்ச்சி கொண்டேன். அவர் வாழ்வைப் பற்றி அறிந்தவன் என்பதால் நிரந்தரப் பணியும் மாத ஊதியமும் அவருக்கு எவ்வளவு அவசியம் என்பதை அத்தனை உணர்ந்திருந்தேன்.
எழுத்து சார்ந்து ஒரு அறச்சீற்றம் அவரிடம் தொடர்ந்து வருகிறது. அது கொஞ்சம் கூட குறையவில்லை. நான் பார்த்த காலத்தில் இருந்து இன்றைக்கு வரைக்கும் அப்படித்தான் இருக்கிறார். அந்த அறச்சீற்றம் தான் அவருடைய படைப்புக்களின் அடிநாதம் கூட. அவரைப் பொருத்தவரைக்கும் ஒரு பொறுப்பை எடுத்துக்கொள்ளத் தயங்குவார். பொறுப்பை எடுத்துக் கொண்டால் அதற்கு முழு விசுவாசத்தோடு நடக்க வேண்டும் என்று நினைப்பார். அதிலிருந்து விலகக் கூடியவர்கள், பொறுப்பு எடுத்துக்கொண்டு ஏமாற்றுபவர்கள், பொய்ப் பேசுபவர்கள் ஆகியோரை அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. அந்த அறச்சீற்றம் அவருடைய எழுத்துக்களையும் தொடர்ந்து செலுத்தி வருகிறது.
‘ரத்த உறவு’ நாவலில் வெளிப்படுவது கூட அந்த அறச்சீற்றம் தான். அவருடைய கதைகளிலும் கவிதைகளிலும் அதுதான் அடியோட்டமாக இருப்பதாகப் பார்க்கிறேன். அதை ஒழுக்கப் பார்வை என்று சொல்ல முடியாது. அவருடைய பார்வை ஒருவகை அறம் சார்ந்தது. குடும்பம் என்று எடுத்துக்கொண்டால் கூட நீங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வதை ஆதரிப்பார். ஆனால் திருமணம் செய்து கொண்டு குடும்பம் என்றாகிவிட்டால் அதன் விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பார். அவரவருக்கு என்று சுய ஒழுங்கும் ஏற்றுக் கொண்ட பொறுப்புக்கு உண்மையாக இருத்தலும் தேவை என்பது அவர் பார்வை. அவற்றிற்கு உண்மையாக இல்லை என்றால் யூமா தம் அறச்சீற்றத்தை வெளிப்படுத்துவார்.
அவர் படைப்புகளிலும் இத்தகைய அறச்சீற்றம் வெளிப்படுவதைப் பார்க்கலாம். பசியைப் பற்றி நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அவற்றில் ‘சுய உருவப்படம்’ என்றொரு கவிதை இருக்கிறது. ஓவியர்கள் அப்படி வரைவதுண்டு. ஓவியருமான யூமா தம்மையே எழுத்தில் தீட்டிக் கொண்ட ஓவியம் அக்கவிதை. அவரைப் பற்றிய முழுமையான சித்திரத்தை அவரே கொடுத்த ஒரு கவிதை அது. மிகவும் பிரமாதமான கவிதை.
சுய உருவப்படம்
சூறை! சூறைதான் அது
சுற்றி வருகிறது சூறை
உங்கள் முகவரிக்கு வரும் கடிதங்களை
தபால்காரரிடமிருந்து
பிடுங்கிக் கிழித்தெறியாது
சாந்தமானது நாகரிகமானது
ஆனாலும் அது சூறை – சுற்றி வருகிறது
உங்கள் கவிதை புத்தகங்களை
அள்ளித் தெருவில் எறியாது
சூறை வன்மமறியாதது
உங்கள் பூஜையறை விக்ரகங்கள்
பின்னப் படாதிருப்பதற்கு உத்தரவாதம்
உங்கள் புணர்ச்சியில் லயங்கூடி வரும்போது
நடுவில் தடுப்புண்டாக்காது
நேயம் மிகக்கொண்ட சூறை
உங்கள் உறவுகளின் கண்ணிகளை
கடித்துத் துண்டாக்காது
நல்லதனம் நிரம்பியது
உங்கள் பயிர் நிலத்திற்குத் தீயூட்டாது
சங்கீதத்தின் மீது பரிவுள்ளது
ஜன்னலுக்கு வெளிப்புறத்தில்
நின்று கேட்குமேயல்லாது
உடைத்துப் போடாது உங்கள் இசைக் கருவிகளை
ஆனாலும் அது சூறை – சுற்றி வருகிறது
வியாபார ஸ்தலங்களின் நித்ய அலுவல்களை
மதிக்கும் குணமுடையது கொள்ளையிடாது
உங்கள் உடையலங்காரங்களையெல்லாம்
அதுவும் மகிழ்வுடனே அழகு பார்க்கும்
நிர்வாணமாக்கிக் கிழித்து சேற்றில் புரட்டாது
அது கொஞ்சம் ரசனை உடையது
உங்கள் ஓவியங்களின் மீது
ஆங்காரமாய் காறி உமிழாது
சமூக நலனில் தன் பங்கையும் உணரும் சூறை
கல்வித் தலங்களை தரைமட்டமாக்காது
சூறை சுற்றி வருகிறது
அச்சமற்றிருங்கள் இயல்பாயிருங்கள்
அது உங்களை ஒன்றும் செய்யாது
தாடியுடைய சூறையொன்று
வாகனங்களுக்கிடை புகுந்து
முழு வயிறும் பற்றி பசி எறிய
எங்கோ போகிறது வேகவேகமாய்.
0
இந்தக் கவிதையை வாசிக்கும் போதே இதற்குள் இருக்கும் கொந்தளிப்பு மனநிலையை உணர முடியும். அவருடைய மொழி கொந்தளிப்பிலிருந்து உருவாகிறது. அதனாலேயே அவர் பயன்படுத்தும் உவமைகளும் சரி, படிமங்களும் சரி கொந்தளிப்புத் தன்மை கொண்டவையாக அமைகின்றன. அதற்கு நிறைய கவிதைகளைச் சான்றாகக் காட்ட முடியும். அவர் எழுதியுள்ள கதைகளும் அப்படியான இயல்புடையவையே.
—– 21-02-25
அச்சமற்றிருங்கள் இயல்பாயிருங்கள்
அது உங்களை ஒன்றும் செய்யாது