முத்தொள்ளாயிரம்: கரையுறிஞ்சி மீன்பிறழும்

You are currently viewing முத்தொள்ளாயிரம்: கரையுறிஞ்சி மீன்பிறழும்

எழுதிய கவிஞர் பெயர் தெரியாத பழந்தமிழ் இலக்கிய நூல்கள் பலவுண்டு. கவித்துவத்தின் சிகரம் என்று சொல்லக்கூடிய நூலுக்குக்கூட எழுதியவர் பெயர் தெரியாத அவலம் அனேகமாகத் தமிழில்தான் நடக்கும். அப்படி ஒரு நூல் முத்தொள்ளாயிரம். தொள்ளாயிரம் பாடல்கள் என்றும் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் என்றும் அந்நூலில் இடம்பெற்ற பாடல் எண்ணிக்கை பற்றி இருவிதமான கருத்துகள் நிலவுகின்றன. எனினும் இப்போது கிடைப்பவை நூற்றியெட்டுப் பாடல்கள் மட்டுமே.

கிடைக்கும் பாடல்கள் அனைத்தும் கவிதைகள். இலக்கியச் சுவை உணராத மூளைக்குக்கூட இப்பாடல்கள் வெறும் பொருளாக நின்றுவிடாதவை. பாடலைப் படித்தவுடன் அது சொல்லும் சாரமான பொருளைத் தாண்டி ‘அடடா எப்படிச் சொல்லியிருக்கிறான் பார்’ என்னும் வியப்பு தோன்றும்.  இந்நூலில் இருந்து ஒரு பாடல்:

செங்கால் மடநாராய் தென்னுறந்தை சேறியேல்

நின்கால்மேல் வைப்பனென் கையிரண்டும் – நன்பால்

கரையுறிஞ்சி மீன்பிறழும் காவிரிநீர் நாடற்(கு)

உரையாயோ யானுற்ற நோய்.

தமிழ் இலக்கியப் பரப்பில் நெடுகக் காணக் கிடைக்கும் தலைவி தூது விடும் பொருளைக் கொண்ட பாடல்தான். அதுவும் நாரையைத் தூது விடுவதற்குக் குறிப்பிடத்தக்க பாடல்கள் உண்டு. ‘சிறுவெள்ளாங்குருகே சிறுவெள்ளாங்குருகே’ என்னும் வெள்ளிவீதியார் பாடலும் ‘நாராய் நாராய் செங்கால் நாராய்’ என்னும் சத்திமுற்றப் புலவரின் பாடலும் சான்றுகள். அவற்றின் வரிசையில் நாரையைத் தூதுவிடும் பாடல் இது எனினும் சொல்முறையில் பெரும் சாத்தியத்தைச் சாதித்து நிற்கும் பாடல்.

‘செங்கால் மடநாராய்’ என்று அழைக்கிறாள் தலைவி. ஒருவரைக் கொண்டு தம் காரியத்தை நிறைவேற்ற வேண்டும். அவர்மேல் அதிகாரம் செலுத்தினால் செயல் சித்தியாகுமா? அதிகாரம் செல்லுபடியாகும் இடத்தில்  இருந்தால்கூட  அன்பாகத்தான் பேசியாக வேண்டும். செயல் அப்படிப்பட்டது. செய்பவரின் சொல்திறனைப் பொறுத்தே அது அமையும்.  ஆகவே செயலுக்காகச் செல்பவரை அதற்குத் தயார்ப்படுத்த வேண்டும். அவர் மகிழ்வுடனும் திருப்தியுடனும் சென்று காரியத்தைச் சாதிக்க வேண்டும். ஆகவே அன்பான அழைப்பு. அன்பு மட்டுமா அதில் இருக்கிறது?  செயலுக்குத் தூண்டும் மெல்லிய புகழ்ச்சியும் கொண்ட அழைப்பு அது.

நாரைக்கு அதன் சிவந்த கால்கள் அழகு. ஆகவே செங்கால் நாராய். அது மட்டுமல்ல, மடநாராய்.  மடம் என்னும் சொல்லுக்கு மென்மை, அழகு எனப் பல பொருள்கள் உண்டு. உலகை அறிந்துகொள்ளும் ஆர்வமும் துடிப்பும் கொண்ட இளமை என்றும் பொருள் உண்டு.  ‘சிவந்த  கால்களையும் இளமையையும் உடைய நாரையே’ என்று அன்பும் புகழ்ச்சியுமாக ஒருவகைத் தந்திரத்தோடு அழைப்பைத் தொடங்குகிறாள். அவ்வழைப்பில் மகிழ்ந்த நாரையிடம்  செய்ய வேண்டிய செயலை உடனே தெரிவித்துவிடுகிறாள்.  ‘நீ தென்னுறந்தை நகருக்குச் செல்ல வேண்டும்’ என்னும் வேண்டுகோள்தான் அது.

போ என்று கட்டளையிடவில்லை.  ‘நீ போவாயானால்’, அதாவது உன் வேலையாக நீ அங்கு போவாயானால் என்று பொருள்.  அங்கே போனால் எனக்கு ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்பது மறைந்து நிற்கிறது. அது என்ன என்பதைச் சொல்லும் முன் சட்டென்று நாரையின் கால்களில் விழுந்துவிடுகிறாள்.  அதை ‘நின்கால்மேல் வைப்பனென் கையிரண்டும்’ என்கிறாள். ‘உன் கால்ல விழறன், இதக் கொஞ்சம் செஞ்சு கொடேன்’ என்னும் இறைஞ்சல்.  ‘உன் காலத் தொட்டுக் கும்பிடறன், இதச் செஞ்சு குடுத்திரேன்’ என்றும் சொல்லலாம்.

கடவுளின் காலில் விழுந்து கும்பிடும் முறையை மனதிற்குள் கொண்டு வரலாம். நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கைகளை நீட்டி உள்ளங்கை இரண்டையும் விரித்துக் கடவுளின் காலைக் கற்பனையில் தொட்டுக் கும்பிடுகிறோமே அந்தப் பாவனை.  இந்தக் கும்பிடு மூலமாக நீ தென்னுறந்தைக்குக் கட்டாயம் போக வேண்டும் என்பதை உணர்த்தி எனக்கான காரியத்தைச் செய்து தர வேண்டும் என்னும் வேண்டுகோளையும் வலியுறுத்திவிடுகிறாள்.

என்னதான் காலைப் பிடித்துக் கேட்டாலும் நாரைக்கு அந்த ஊருக்குச் செல்லும் ஆசை வர வேண்டும் அல்லவா? அது சுதந்திரமாகத் திரிந்து உணவு தேடி வாழும் நீர்ப்பறவை. போகும் வழியில் எங்கேனும் நீர்நிலையைக் கண்டால் நின்றுவிடலாம். தென்னுறந்தையையே மறந்துவிடக் கூடும். ஆகவே அவ்வூரை வருணிக்கும் விதமாக அங்கே செல்லும் ஆசையைத் தூண்டும் நோக்குடன் நாரைக்குத் தகவல் சொல்கிறாள். வயல்களைக் கொண்டது அவ்வூர். அங்கு ஓடும் ஆறு காவிரி. ஆற்றில் மீன்கள் இருப்பது இயல்பு.

காவிரியில் இருக்கும் மீன்கள் எப்படிப்பட்டவை? கரையோரத்திற்கு வந்து வாயைத் திறந்து காற்றை உறிஞ்சுபவை. நல்ல உணவுண்டு தினவெடுத்தவை. அப்படியே துள்ளிக் கரையில் வந்து விழும் காட்சியைக் காணலாம். அப்பேர்ப்பட்ட ஊர். அதாவது நாரையே நீ அங்கு போனால் உன்னுடைய உணவுக்காக எந்தச் சிரமமும் படத் தேவையில்லை. மீன் வரும் வரும் என்று காத்திருக்க வேண்டாம். அவை துள்ளி உன் காலடியில் வந்து விழும். சிறு முயற்சியும் செய்யாமலே உனக்குரிய உணவு உன் காலடிக்கு வந்து சேரும். அப்பேர்ப்பட்ட ஊர் அது.

இப்படி நாரையின் ஆசையைத் தூண்டுகிறாள். கடைசியாகத் தன் காரியத்தைச் சொல்கிறாள். ‘உரையாயோ யானுற்ற நோய்.’ நீ அவ்வூருக்குச் சென்று உனக்கு வேண்டுமளவு மீன்களைத் தின்றுவிட்டு என் காரியத்தையும் கொஞ்சம் செய்துகொடு என்கிறாள். அங்கே இருக்கும் என் தலைவனுக்கு நான் படும் துன்பத்தைக் கொஞ்சம் சொல்ல முடியுமா என்று நைச்சியமான வார்த்தையில் கேட்கிறாள்.

முத்தொள்ளாயிரம்: கரையுறிஞ்சி மீன்பிறழும்

முன்னிலையை நோக்கிப் பேசும் உரையாடல் வடிவப் பாடல் இது. இந்த உரையாடலில் எத்தனை நுட்பங்கள் இருக்கின்றன என்னும் வியப்பு தோன்றுகிறது.  ‘சிவந்த கால்களையும் இளமையையும் கொண்ட நாரையே, நீ தென்னுறந்தைக்குச் செல்வாயானால் என் கைகள் இரண்டையும் உன் கால்மேல் வைத்துக் கும்பிடுவேன். வயல்கள் சூழ்ந்ததும் மீன்கள் கரைக்கு வந்து காற்றை உறிஞ்சித் துள்ளி விழும் காவிரி ஓடுவதுமான  அவ்வூரில் இருக்கும்  என் தலைவனுக்கு நான் படும் துன்பத்தைச் சொல்வாயா?’ என்று சுருக்கமாகப் பொருள் எழுதிவிடலாம். ஆனால் அதைத் தாண்டிய நுட்பங்களைக் கண்டால் இக்கவிதை பேரனுபவமாக மாறிவிடும்.

இக்கவிதையில் வெற்றுச்சொல் ஏதுமில்லை. செய்யுள் வடிவத்தில் இலக்கணம் சிதையாமல் இருப்பதற்காகச் சொற்களை இட்டு நிரப்புவதும் அசைச் சொற்களைக் கையாள்வதும் வழக்கம். அதுவும் இப்பாடல் நேரிசை வெண்பாவில் அமைந்தது. ஆனால் வெற்றுச் சொற்களே இல்லாமல் செறிவாக அமைந்திருக்கிறது. கவிதையின் கூறுகளில் ஒன்று சொற்செறிவு. செறிவாகச் சொற்களை அமைத்திருக்கும் பல கவிதைகள் புரிதல் சிக்கலைக் கொண்டிருக்கின்றன. உள் நுழையும் வாசகரைத் தடுத்து விரட்டும் வகையிலான சொற்செறிவால் எந்தப் பயனுமில்லை. சொற்செறிவைப் பெற்ற கவிதை அச்செறிவு பொருளோடு பொருத்தமுற இயைந்து விட்டால் பெரும் அனுபவத்தைக் கொடுக்கும் அற்புதமாக மாறிவிடும் என்பதற்கு இப்பாடலே சான்று.

——   03-02-25

Latest comments (2)