ஆசிரியர்களைப் பற்றிக் குறை கூறியே எழுதுகிறேன் என்று பலர் கூறுகின்றனர். பெரும்பான்மையோர் மோசமாக இருப்பதால் அப்படி எழுத நேர்கிறது. நல்லாசிரியர்கள் பலரை அறிவேன். அரசு தரும் நல்லாசிரியர் விருது பெற்றவர்களைச் சொல்லவில்லை. பெறாமலும் இருக்கும் நல்லாசிரியர்கள். நல்லாசிரியர் எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றி என் மனதில் இருக்கும் எண்ணங்களைக் கருத்துக்களாக அல்லாமல், அனுபவம் சார்ந்து அவ்வப்போது எழுத எண்ணம்.
திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் உள்ள இராஜாகவுண்டம்பாளையம் நகராட்சித் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றேன். ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு ஆசிரியர். நான்காம் வகுப்பு வரை பெண் ஆசிரியர்கள்; அதாவது நம் வழக்குப்படி டீச்சர்கள். ஐந்தாம் வகுப்புக்கு மட்டும் தலைமையாசிரியர்; ஆண். ஒன்று, இரண்டாம் வகுப்புகளுக்கு நாள் முழுதும் ஒரே ஆசிரியர் தான். அவரே பார்த்துக்கொள்வார்; பாடம் நடத்துவார். மூன்றாம் வகுப்பில் இருந்து வகுப்பாசிரியர் இரண்டு பாடம் நடத்துவார். பிற பாடங்களுக்கு வேறு ஆசிரியர்கள் வருவார்கள். ஐந்து பேரையும் நான் மறக்கவில்லை. ஆனால் மூன்றாம் வகுப்பு டீச்சரை மட்டும் அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.
மூன்றாம் வகுப்பில் ஆங்கிலமும் கணக்கும் அவர் நடத்தினார். நான்கு, ஐந்தாம் வகுப்புகளில் கணக்கு மட்டும் நடத்தினார். மூன்று ஆண்டுகள் அவரிடம் பயின்றிருக்கிறேன். கணக்கு எனக்கு நன்றாக வரும். பன்னிரண்டாம் வகுப்பு வரை கணக்கு பிரச்சினையாகவே இல்லை. எப்போதும் எண்பது விழுக்காட்டுக்கும் மேல் மதிப்பெண் எடுத்து விடுவேன். கிராமத்து மாணவர்கள் எல்லாருக்கும் போலவே ஆங்கிலம் எனக்கும் பிரச்சினை தான். எனினும் அதை எளிதாகக் கடந்து வந்திருக்கிறேன். அந்த ஆசிரியர் போட்ட அடித்தளத்தின் பலத்தில் நின்றதே காரணம்.
மிகவும் எளிமையான கற்பித்தல் அவருடையது. எப்படிக் கற்பித்தார் என்பதை அறிய நினைவின் இழைகளைப் பிரித்துப் பிரித்துப் பார்த்திருக்கிறேன். சிறுவிஷயத்தையும் எடுத்து விளக்குவார். வகுப்பில் பலதர மாணவர்கள் இருப்பதைக் கருதி அவர் விளக்கம் அமையும். நன்றாகப் படிக்கும் மாணவர் வரிசையில் முதல் நான்கைந்து இடங்களில் இருப்பேன். ஒரு பாடம் நடத்திய பிறகு என்னைக் கேள்வி கேட்பார், பதில் சொல்லலாம் என்று ஆவலோடு எதிர்பார்த்திருப்பேன். ஆனால் கேட்க மாட்டார். எனக்குக் கோபம் வரும். சொல்லத் தயாராக இருக்கும் என்னைக் கேட்டால் என்ன? வேறு யாரையாவது தான் கேட்பார். அம்மாணவர் சரியான பதில் சொல்லவில்லை என்றால் நடத்தியதை மீண்டும் ஒருமுறை நடத்துவார். மிக அரிதாகவே என்னைக் கேள்வி கேட்பார். பதில் சொன்னால் ‘very good’ என்பார். அந்தப் பாராட்டைப் பெறப் பல பேர் காத்திருப்போம். வகுப்பில் இருக்கும் எல்லா மாணவர் மீதும் அவர் கவனம் இருந்திருக்கிறது என்பதைப் பிறகு புரிந்து கொண்டேன்.
சரியாகப் பதில் சொல்லாத மாணவரையோ குறும்பு செய்பவரையோ திட்ட மாட்டார். அவர் வாயிலிருந்து கடுஞ்சொல் வந்ததாக என் நினைவில் இல்லை. எதுவென்றாலும் மென்புன்னகைதான். அருகில் அழைத்துச் சில சொற்கள் சொல்வார். ‘இப்பிடிப் பண்ணலாமா?’ என்பது அவர் அடிக்கடி கேட்கும் கேள்வி. அதுவே போதுமானதாக இருக்கும். இனிமேல் இப்படிப் பண்ணக் கூடாது என்று தோன்றிவிடும்.
அப்போதெல்லாம் ஆசிரியர் அடிக்கக் கூடாது என்னும் விதியில்லை. சில வகுப்புகளில் நிரந்தரமாக மூங்கில் பிரம்பு இருக்கும். இல்லை என்றால் காலையில் பள்ளிக்கு வந்ததும் வாதநாராயண மரம் அல்லது வேம்பிலிருந்து குச்சி ஒடித்து வந்து வைப்பது தான் வகுப்புத் தலைவனின் முதல் வேலை. சில ஆசிரியர்கள் புளிய மிலாறு ஒடித்து வரச் சொல்வர். அதில் கணுக்கள் நிறைந்திருக்கும். அடித்து இழுக்கும்போது கணுக்கள் பட்டு ரத்தம் வரும். பிள்ளைகளை அடிப்பதைப் பெற்றோர்களும் ஆதரித்தனர்.
இப்போதும் அடியை ஆதரிக்கும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் உள்ளனர். ஏதாவது மாணவர் பிரச்சினை என்றால் ‘ஆசிரியரிடம் இருந்து பிரம்பைப் பிடுங்கியதே காரணம்’ என்று பொங்குகிறார்கள். பிரம்புக்குத் தடையில்லாத காலத்திலேயே என் டீச்சர் அதைத் தொட்டதில்லை. மேசை மேல் பிரம்பு இருக்கும். அதை அவர் கையில் எடுத்து நான் பார்த்ததில்லை. வகுப்புக்கு வரும் பிறர்தான் பயன்படுத்துவர். கோபம் வந்துவிட்டால் கண்மண் தெரியாமல் அடித்து விளாசுவர். இரண்டாம் வகுப்பு டீச்சர் ஒருமுறை என் இரண்டு கால்களிலும் முட்டிக்குக் கீழ் வீசிய வீச்சு இன்னும் நினைவிருக்கிறது. சிராய்ப்பும் தடிப்பும் கண்டு காய்ச்சல் வர என் அம்மா வந்து டீச்சரிடம் சண்டை போடும் அளவுக்கு அது போனது. இந்த டீச்சரிடம் நான் மட்டுமல்ல, ஒருவரும் அடி வாங்கியதே இல்லை.
மாதம் ஒருமுறையாவது டீச்சர் பிஸ்கட் வாங்கி வருவார். இப்போது தேநீர்க் கடைகளில் இனிப்பு, உப்பு என விற்கிறார்களே அந்த வகை பிஸ்கட். மழைக் காகிதம் என்று சொல்லும் பிளாஸ்டிக் பையில் கட்டி எடுத்து வருவார். சிறுநீர் இடைவேளை நேரத்தில் வரிசையில் நிற்கச் சொல்லி ஆளுக்கொன்று கொடுப்பார். அன்றைக்குப் பிஸ்கட் எங்களுக்கு அதிசயப் பொருள். கடலையோ கிழங்கோ எடுத்து வந்து மதிய உணவு இடைவேளையின் போது யாராவது ஒருவர் கையில் கொடுத்துப் பகிர்ந்து சாப்பிடச் சொல்வார். ஆசிரியர்கள் அனைவரும் மதியம் ஒன்றாக உட்கார்ந்து உண்பார்கள். மீதமிருக்கும் சோற்றை பிள்ளைகள் யாரையாவது அழைத்துக் கொடுப்பார். கொடுக்கவே ஒரு கை சோறு அதிகம் கொண்டு வந்திருப்பார் என்றே எண்ணுகிறேன். மதிய உணவுத் திட்டத்தில் பெரும்பாலும் கோதுமைச் சோறு போடுவார்கள். எல்லோர் வீடுகளிலும் களி அல்லது கம்மஞ்சோறுதான். நெல்லஞ்சோறு எப்போதோ கிடைக்கும் அதிசய உணவு. அதையெல்லாம் உணர்ந்து தன்னாலான உபகாரம் செய்திருக்கிறார்.
நிலவுடைமை கொண்ட சிறுவிவசாயி வீட்டுப் பிள்ளைகள் ஆசிரியர்களுக்கு கடலைக்காய், நுங்கு, பனங்கிழங்கு, சுண்ணாம்புத் தெளுவு முதலியவற்றைக் கொண்டு போய்த் தருவோம். சில டீச்சர்கள் ஆசைப்பட்டும் உரிமையோடும் கேட்பார்கள். நாங்களும் டீச்சர் கேட்கிறார் என்று மகிழ்ச்சியாகக் கொண்டு போவோம். எல்லா டீச்சர்களும் பகிர்ந்து கொள்வார்கள். எங்கள் டீச்சருக்கும் பங்கு வரும். பேருக்குக் கொஞ்சம் எடுத்துக் கொண்டு பிள்ளைகளுக்குக் கொடுத்து விடுவார். ‘உங்களுக்கு டீச்சர்? ‘ என்றால் ‘எங்க ஊருல இதெல்லாம் கெடைக்கும்’ என்பார்.
டீச்சர் விடுமுறை எடுப்பதாக இருந்தால் முன்கூட்டியே எங்களிடம் சொல்லி விடுவார். ஏதாவது எழுத்து வேலையும் கொடுத்துச் செல்வார். எத்தனையோ வீட்டுப் பாடங்களைச் செய்ய மறந்து விடும் நாங்கள் விடுப்பில் செல்லும் அவர் தருபவற்றை மறக்காமல் செய்வோம். அடுத்த நாள் காட்டுவோம். எல்லோருக்கும் ‘good’ போடுவார். ஒருமுறை அரைநாள் விடுப்பு எடுத்திருந்தார். டீச்சர்கள் வெளியூரில் இருந்து வருவதால் பெரும்பாலும் அரைநாள் விடுப்பு எடுக்க மாட்டார்கள். ஏதோ காரணமாக எங்கள் டீச்சர் அப்படி எடுத்தார்.
அப்போது காலை ஒன்பது மணிக்குப் பள்ளி தொடங்கும். பன்னிரண்டு மணி முதல் இரண்டு மணி வரை மதிய உணவு நேரம் இருக்கும். நகரப் பேருந்துகள் மிகவும் குறைவு. திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு செல்லும் நகரப் பேருந்து ஒன்றே கால் மணிக்கு வரும். அதில் தான் டீச்சர் வந்தாக வேண்டும். பேருந்தில் இருந்து டீச்சர் இறங்கி ஐந்நூறு மீட்டர் தூரம் நடந்து பள்ளிக்கு வர வேண்டும். அவர் இறங்கியதும் பையை வாங்கிக் கொண்டு வர நான்கைந்து பேர் சேர்ந்து திட்டம் போட்டோம். அவசர அவசரமாக உண்டு முடித்துப் பேருந்து நிறுத்தத்திற்குப் போய் நின்று கொண்டோம். நாங்கள் போவதைப் பார்த்து இன்னும் சிலர் பின்னால் வந்தனர். அவர்களைப் பார்த்து மேலும் சிலர். இப்படிக் கிட்டத்தட்ட வகுப்பே கூடி விட்டது. ஒரே கலாமுலாச் சத்தம். பேருந்து நிறுத்தத்தை ஒட்டியிருந்த அரசமரத்தடிச் சாவடியில் ஊர்க்காரர்கள் உட்கார்ந்திருப்பர்; படுத்திருப்பர்.
படுத்திருந்த கிழவர் ஒருவர் சத்தம் பொறுக்க முடியாமல் எழுந்து கேட்டார்.
‘பசங்களா, பள்ளிக்கொடத்துக்கு ஆபிசரு வர்றாரா? அமைச்சர் வர்றாரா? ‘
‘எங்க டீச்சர் வர்றாங்க’ என்றோம் ஒரே குரலில்.
பேருந்தில் இருந்து டீச்சர் இறங்கியதும் பையை ஒருவன் பிடுங்கிக் கொண்டான். பை கிடைக்காதவர்களுக்கு ஏமாற்றம்தான். அதை மடை மாற்ற டீச்சருக்கு முன்னால் கத்திக் கொண்டு கொஞ்சம் பேர் ஓடினார்கள். பவ்வியம் காட்டி உடன் நடந்தோர் சிலர். அதில் நானும் இருந்தேன். பின்னால் அணிவகுப்பாகச் சிலர். டீச்சர் முகத்தில் மகிழ்ச்சியும் வெட்கமும் பூத்திருந்தன. ஒரு மகாராணியைப் போல டீச்சரை அழைத்துச் சென்றோம்.
குள்ளமான உருவம். ஒல்லி. சுருட்டை முடி. மாறுகண். அவர்தான் எங்கள் காளியம்மாள் டீச்சர்.
—– 28-01-25
ஆசிரியர் மாணவர் அணுகுமுறையில் நானும் உங்கள் பக்கத்தான் ஐயா. ஆசிரியர்கள் மாணவர்களை அடித்தே திருத்த முடியும் என்று இப்போதும் கூறுகின்றனர். உங்கள் காளியம்மாள் போற்றுதலுக்குரியவர். எனக்குப் பத்தாம் வகுப்பில் ஜெகதீசன் என்ற ஒரு கொடூரமான ஆசிரியர் வந்தார். அவரின் அடியிலிருந்து தப்பிக்க முடியாமல் நான் பட்ட பாடுகளைச் சொல்லி மாளாது. அவர் இறந்து விட வேண்டும் என்று அப்போதெல்லாம் தினமும் வேண்டிக் கொள்வேன்.
மிகவும் மகிழ்ச்சியான பருவம் குழந்தைப்பருவம். எமது மூன்றாம வகுப்பு ஆசிரியர் மரியாதைக்குரிய சீனிவாசன் என்பவர் மோகனுரைச் சேர்ந்தவர். தங்களின் மூன்றாம் வகுப்பு டீச்சரின் குணாதியசத்தை ஒத்தவர். அவர்கள் மீது மிகுந்த மரியாதை எப்பொழுதும் எமக்கு உண்டு. அவர்களின் நன்னடத்தை எங்களை என்றென்றும் வழி நடத்திக் கொண்டிருக்கிறது. மூன்றாம வகுப்பு என்பது மொழிப்பாடத்துக்கும், கணக்குப்பாடத்துக்கும் அடித்தளமாக அமைந்துள்ளது. சிறந்த ஆசிரியர்கள் நல் மாணாக்கர்கள் என்னும் விதைகளை விதைத்து விடுகிறார்கள்.
உங்களுடைய கல்வித்துறை அனுபவங்கள் சார்ந்த புத்தகங்கள், உங்கள் மாணவர்களின் ‘எங்கள் ஐயா’, உள்ளிட்டவையெல்லாம் ஆசிரியர்களுக்கான வழிகாட்டிகள். நீங்கள் உங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களையெல்லாம் தொடர்ந்து எழுத்துவதாகச் சொல்லி இருக்கிறீர்கள், மிகவும் மகிழ்ச்சி.
தற்போது நீங்கள் இந்த வலைத்தளத்தில் தொடர்ந்து எழுதுவது இரட்டிப்பு மகிழ்ச்சி. நன்றி ஐயா.
அற்புதம் ஐயா. தங்களின் பள்ளி அனுபவத்தை பகிர்ந்து கொண்டது என் பள்ளி அனுபவம் நினைவிற்கு வருகிறது. சிறு வயது புகைப்படம் இரண்டாம் வகுப்பு புகைப்படமா ! தம்பி பரிதி புகைப்படமா ! என்ற சந்தேகம். அவ்வளவு பொருத்தமாக உள்ளது. நான்காம் வகுப்பில் கணக்கு ஆசிரியர் கரும்பலகையில் என் தலையை பிடித்து முட்டியது, நெற்றியின் மீது வீங்கியது, அப்பா ஆசிரியரை கேட்டது நினைவிற்கு வருகிறது ஐயா.
கண்ணில் நீர் முட்டியது ஐயா.
என் ஆசிரியர் ஒருவரின் நினைவு வந்து சென்றது.
தொடக்கப் பள்ளி மாணவர்களின் ஏன், அனைத்து மாணவர்களின் அன்பு எப்போதும் திக்குமுக்காடச் செய்யும். நான் தொடக்கப் பள்ளி ஆசிரியராக இருந்தபோது அனுபவித்திருக்கிறேன். பார்த்துமிருக்கிறேன். இப்போதும் மாணவர்களின் அன்பை அனுபவிக்கிறேன்.
‘பெரியவர்கள் தவறு செய்பவர்களைத் தண்டிக்கிறார்கள். குழந்தைகள் தவறு செய்பவர்களை மன்னிக்கிறார்கள்’ என்ற வரி அவ்வப்போது என் நினைவில் வந்து செல்லும். இப்போதும்.
‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்’ இவ்வடி நினைவில் இருந்தால் பிரம்பு எதற்கு? ஒரு சொல் போதும். அதுவும் இன்சொல்லாக இருந்தால் அதுவே வெல்லும்.
அருமை