27-09-2025 சனி அன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலில் வந்து பேசிய ஊர் நாமக்கல். கரூர் துயரச் சம்பவம் காரணமாக நாமக்கல் கூட்டச் செய்திகள் பெரிதாக வரவில்லை; வந்தவையும் கவனம் பெறவில்லை. நாமக்கல்லில் வசிப்பவன் என்னும் அடிப்படையில் நான் கண்டவற்றையும் விசாரித்து அறிந்தவற்றையும் பதிவு செய்ய விரும்புகிறேன். இதைச் செய்தியறிக்கையாகக் கருதலாம்.
வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாட்களும் சேலம் சாலைக்குச் சில வேலைகளுக்காகப் போய் வந்தேன். கடைவீதியில் இருந்து திருச்செங்கோடு, சேலம் சாலைகள் பிரிகின்றன. அப்பிரிவுக்கு ஐம்பதடி முன்னால் நரசிம்மர், ஆஞ்சநேயர் கோயில்களுக்குச் செல்லும் குறுகிய சாலையும் பிரிகிறது. சேலம் சாலை தொடங்கியதும் நூற்றைம்பது அடி தூரத்தில் கே.எஸ். திரையரங்கம் உள்ளது. அதனருகில்தான் விஜய் பேச இருந்தார். சாலையின் இருபுறமும் பெரும்பெரும் கடைகள். சாலையில் வண்டியை நிறுத்தித்தான் பேச வேண்டியிருக்கும்.
வழி நெடுகச் சாலையுலா (Road show) வந்து ஓரிடத்தில் நின்று இருபதிலிருந்து முப்பது நிமிடம் விஜய் பேசுவார்; சாலையின் இருபுறமும் கூட்டம் நிற்கும்; வழிநெடுக அவரைப் பார்ப்போர் திருப்தியடைந்து திரும்பிச் சென்றுவிடுவர் என்பதால் பேசும் இடத்தை இப்படித் தேர்வு செய்துள்ளனர் போலும் என்று நினைத்தேன். சேலம் சாலை நெடுகிலும் பெரும்பதாகைகள் கிட்டத்தட்டக் கால்பகுதி சாலையை அடைத்து நின்றன. நாமக்கல் மாவட்டத்தைக் கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரித்து இரண்டு மாவட்டச் செயலர்கள் உள்ளனர். எல்லாக் கட்சிகளுக்கும் அப்படித்தான். மாவட்டச் செயலர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் வைத்திருந்த பதாகைகள் அவை. அவற்றில் பெரும்பாலானவற்றிற்கு அனுமதி கிடையாது. அனுமதி இல்லாமல் வைக்கக் கூடாது என்று காவல்துறை எச்சரித்த போதும் பொறுப்பாளர்கள் கேட்கவில்லை. தண்டத்தொகை குறைவு என்பதால் கட்டிவிடலாம் என்னும் தைரியம். அனுமதி இல்லாத பதாகைகளை எல்லாம் காவல்துறையினர் படம் எடுத்துக் கொண்டனர்.
காவல்துறையில் மாவட்டத் துணைக் கண்காணிப்பாளர் பதவிநிலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் அதிகாரி ஒருவரைத் தவெக தலைமையகம் நாமக்கல்லுக்கு அனுப்பியிருந்தது. இருநாட்களுக்கு முன்பே அவர் வந்துவிட்டார். மாவட்டக் கட்சிப் பொறுப்பாளர்களுக்கு அவர் பல ஆலோசனைகள் வழங்கியுள்ளார். சாலையில் இருந்த டிரான்ஸ்பார்மர்கள் சிலவற்றைச் சுற்றித் தகரம் அடித்துப் பாதுகாப்பு செய்தல், பெரும்பதாகைகளை அகற்றுதல், மருத்துவ முகாம் அமைத்தல், ஐந்தாறு இடங்களில் தண்ணீர் வழங்குதல் முதலியவற்றை அவர் கூறியுள்ளார். முப்பதடி உயரத்தில் வரிசையாகக் கட்டி வைத்திருந்த கொடிக் கம்பங்கள் சிலவற்றையும் அகற்றச் சொன்னார். பிரச்சார வாகனம் வந்து நின்று விஜய் பேசும்போது நெரிசலில் வாகனத்தின் மீதே கம்பங்கள் சாய்ந்துவிடலாம் என்பதால் அந்த யோசனை.
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தும் இருநாட்கள் முன்பே நாமக்கல் வந்துவிட்டார். நாமக்கல்லுக்கும் கரூருக்கும் மாறி மாறிச் சென்றார். கட்சி அமைப்புகள் தொடர்பாகப் பொறுப்பாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்; வழிகாட்டியிருக்கிறார். விஜய் பேசவிருந்த இடத்தை அவரும் வந்து பார்த்திருக்கிறார். கொடிக்கம்பங்களை அசைத்தும் ஆட்டியும் பார்த்துச் சரியான ஆழத்தில் நட்டிருக்கிறதா என்று சோதித்தாராம். அவர்தான் கட்சி நிர்வாகப் பொறுப்புகளைத் தீர்மானிப்பவர் என்பதால் அவரைச் சுற்றிப் பொறுப்பாளர்கள் சூழ்ந்து நின்றுள்ளனர். அவரிடம் பேசவும் முயன்றுள்ளனர். அதனால் பெயரளவுக்குப் பார்வையிட்டுவிட்டு அவ்விடத்திலிருந்து விரைவில் கிளம்பிவிட்டாராம்.
நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலராக இருப்பவர் சதீஷ்குமார். அவர் புஸ்ஸி ஆனந்தின் சாதிக்காரராம். அச்சாதி நாமக்கல்லில் சிறுபான்மை என்பதால் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கிடைக்காது. இப்பகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் அதே வேளையில் பொருளாதாரப் பலமும் கொண்ட கவுண்டர் சாதியைச் சேர்ந்த ஒருவருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்பைப் பெற்றுவிட வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் கவுண்டர் சாதியைச் சேர்ந்த ஒருவர் செலவழிக்கிறார். தேர்தல் வாய்ப்பு கிடைத்துவிடும் என்னும் நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. கொஞ்சம் நம்பிக்கையின்மையும் இருக்கும் அல்லவா? அதனால் அளந்துதான் செலவழிக்கிறாராம். துணைக்கண்காணிப்பாளர் நிலையில் இருந்த ஒருவர் வந்து ஆலோசனைகள் சொல்லிய போதும் மாவட்டக் கட்சி நிர்வாகம் அவற்றை எல்லாம் அப்படியே பின்பற்றவில்லை. சிலவற்றைப் பின்பற்றியது; சிலவற்றைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது.
கே.எஸ்.திரையரங்க வாயிலில் தடுப்புப் போட்டு மூன்று படுக்கை கொண்ட மருத்துவ முகாம் அமைத்திருந்தனர். மூன்று மருத்துவர்கள், உதவியாளர்கள். பாதிக்கப்பட்டோரை அழைத்து வரக் கட்சியிலிருந்து இளைஞர் குழு ஒன்று. அதனருகில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தண்ணீர் வழங்க ஏற்பாடு. பெரும்பதாகைகள் எதையும் நீக்கவில்லை. யாருடையதை நீக்குவது என்பதில் பிரச்சினை. சனி காலை 8.45 மணிக்கு அவ்விடத்தில் விஜய் பேச அனுமதி பெற்றிருந்தனர். சென்னையில் விஜய் விமானம் ஏறியதே 8.50க்குத்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். திருச்சி விமான நிலையத்தில் இருந்து காரில் வந்தவர் நேராக நாமக்கல் நகருக்குள் நுழைந்திருக்கலாம். இரண்டு மூன்று கிலோ மீட்டர் தொலைவில் பிரச்சார வாகனத்தை நிறுத்தி வைக்கச் சொல்லியிருக்கலாம். ஆனால் மேய்க்கல் நாயக்கன்பட்டி என்னும் ஊரில் இருக்கும் கேம்ப்ரிட்ஜ் பள்ளி வளாகத்தில் பேருந்தை நிறுத்தியிருந்தனர். பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களும் மாணவர்களும் அருகில் விஜயைக் கண்டு குதூகலித்தனர். நாமக்கல்லுக்கும் மேய்க்கல் நாயக்கன்பட்டிக்கும் இடையே கிட்டத்தட்ட இருபத்தைந்து கிலோ மீட்டர் தொலைவு. இருபத்தைந்து கிலோ மீட்டர் தொலைவுக்கும் சாலையுலா நடத்துவது திட்டம்.
ஒரே ஒரு பேருந்து மட்டும் செல்லும் அளவில் ஊராட்சிச் சாலை கொண்ட தனியார்ப் பள்ளி வளாகத்தில் வாகனம் ஏறி முதன்மைச் சாலைக்கு வருவதற்கே வெகுநேரம் ஆகிவிட்டது. அங்கிருந்துதான் கிளம்புகிறார் என்னும் செய்தியறிந்து மக்கள் திரள் வழியெங்கும் கூடிவிட்டது. இருபத்தைந்து கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து வர மூன்று மணி நேரத்திற்கும் மேலாயிற்று. அது வரும்வழி; மக்கள் திரண்டிருப்பதால் மெதுவாகத்தான் வர முடியும். அதைச் ‘சாலையுலா’ என்று காட்டவில்லை. ஆகவே அனுமதியும் பெறவில்லை. பேருந்துக்குள் இருந்து அவ்வப்போது கையாட்டும் விஜயைக் கண்ணாடி வழியாகத் தரிசித்த கூட்டம் பெரிது.
மக்கள் கடலை நீந்திப் பிற்பகல் 2.30 மணிக்குத்தான் நாமக்கல் நகரை வந்தடைந்தார். சேலம் சாலையில் அவர் பேசத் தொடங்கிய நேரம் 2.45 மணி. ஒலிவாங்கி சரியாக வேலை செய்யாமல் இடைஞ்சல் ஏற்பட்டது. சரியான பிறகும் ஆர்ப்பரித்த கூட்டத்தினிடையே அவர் பேசியது ஐம்பது மீட்டர் தொலைவுக்குக்கூடக் கேட்கவில்லை. விடிகாலை ஐந்து மணியிலிருந்து வந்து கூடத் தொடங்கிய கூட்டம். சாலையில் கடைகள் எல்லாம் மூடியிருந்தன. ஏதாவது வாங்க வேண்டுமானால் வேறு பகுதிக்குச் செல்ல வேண்டும். காத்திருந்த மக்களுக்கு அதில் விருப்பமில்லை. இடம் போய்விடும் என்னும் பயம். எந்த நேரத்திலும் விஜய் வந்துவிடலாம் என்னும் எதிர்பார்ப்பு.
பெரும்பான்மையோர் கிராமப்புறங்களில் இருந்து வந்தவர்கள். ஓரிடத்திற்குச் செல்லும்போது தண்ணீர், நொறுக்குகள் எடுத்துச் செல்லும் நடுத்தர வர்க்கத் தயாரிப்புப் பழக்கம் அற்றவர்கள். குழந்தை உடனிருந்தாலும் எதையும் எடுத்து வர மாட்டார்கள். போகுமிடத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்னும் மனோபாவம். உணவு இல்லை என்றாலும் தண்ணீர் வேண்டும் அல்லவா? ஒரே ஒரு இடத்தில் மட்டும் தண்ணீர் கிடைத்ததால் அதை வாங்கக் கூட்டம் அடித்துப் பிடித்தபடி ஒருவர் மேல் ஒருவர் ஏறிச் சென்றது. காலையுணவு உண்ணாமல் வந்தவர்கள் பலர். அதனால் பத்து மணியிலிருந்தே மயக்கம் போடும் பிரச்சினை தொடங்கிவிட்டது. ஒன்று இரண்டு என வந்து கொண்டிருந்த எண்ணிக்கை விஜய் வருவதற்குச் சற்று முன் தொடங்கி அவர் சென்ற பின் ஒருமணி நேரம் வரைக்கும் அதாவது பிற்பகல் இரண்டு மணி முதல் நான்கு மணி வரைக்கும் பல மடங்கு கூடிவிட்டது. அந்த இரண்டு மணி நேரத்திற்குள் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்துள்ளனர். கூட்ட நெரிசலில் விழுந்து மிதிபட்டோரும் பலர். நெஞ்சில் மிதி வாங்கி மயக்கம் அடைந்தோர், எலும்பு முறிவுக்கு ஆளானோர் எனப் பலவகை.
மருத்துவ முகாம் வேகமாகச் செயல்பட்டிருக்கிறது. மூன்று மருத்துவர்களில் ஒருவர் அக்குபங்சர், ஹோமியோபதி மருத்துவம் அறிந்தவர். மயங்கியோரைத் தெளிவிக்க அம்மருத்துவ முறைகள் உடனடிப் பயன் கொடுத்திருக்கின்றன. சிகிச்சை முடிந்தோர் திரையரங்க வளாகத்தினுள் தங்கி ஓய்வெடுக்க அந்நிர்வாகம் அனுமதித்திருக்கிறது. சிகிச்சை கொடுத்தும் மயக்கம் தெளியாதவர்கள், மிதிபட்டுக் கால்கை உடைந்தோர் எனக் கிட்டத்தட்ட ஐம்பது பேரை அரசு மருத்துவமனைக்கும் அட்சயா, மாருதி ஆகிய தனியார் மருத்துவமனைகளுக்கும் ஆம்புலன்ஸ் வழியாக அனுப்பி வைத்துள்ளனர். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலர் நிலை கவலைக்கிடமாக இருந்துள்ளது. அரசு மருத்துவமனை நிர்வாகம் அச்செய்தியை அரசுக்குத் தெரிவித்திருக்கிறது. கவலைக்கிடமான சிலரை அரசின் அனுமதியோடு கோயம்புத்தூருக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். கோயம்புத்தூருக்குக் கொண்டு சென்ற ஒருவர் இரண்டு நாளுக்குப் பிறகே அபாய கட்டத்தைக் கடந்துள்ளார். நற்பேறாக இறப்பு எதுவும் இல்லை.
டிரான்ஸ்பார்மரைச் சுற்றிப் போட்டிருந்த தகரத் தடுப்புக்களை உடைத்து அதன் மேலேறியும் பதாகைகளைக் கிழித்து அவற்றின் மரக் கட்டைகளின் மீதேறியும் இளைஞர் கூட்டம் நின்றிருக்கிறது. நாமக்கல்லில் இருநூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் புறத்தே நின்று அடிதடி, கலவரம் ஏதும் நிகழாமல் கண்காணித்துள்ளனர். கூட்டத்தை ஒழுங்குபடுத்தவோ நெரிசலைக் கட்டுப்படுத்தவோ அவர்கள் முயலவில்லை. தொண்டர்கள் மீது தாக்குதல், காவல்துறை அராஜகம் என்று விமர்சனம் வரும் என்பதால் புறத்தில் நிற்க மட்டுமே அவர்களுக்குக் கட்டளையாம். பொதுவாக அரசியல் கட்சிக் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் வேலையைக் கட்சிக்காரர்களே செய்வதுதான் வழக்கம் என்றும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படாமல் கவனிப்பதே தம் வேலை என்றும் காவல்துறையினர் சொல்கின்றனர்.
விஜயைக் காண வந்த கூட்டம் தானாகச் சேர்ந்தது. எந்தப் பகுதியில் இருந்தும் பணம் கொடுத்தோ வண்டி வைத்தோ யாரும் அழைத்து வரவில்லை. அப்படி அழைத்து வரும்பட்சத்தில் அவர்களின் தேவைகளை அந்தந்தப் பகுதிக் கட்சிப் பொறுப்பாளர்கள் கவனித்துக் கொள்வர். தவெகவுக்குக் கிராமப்புற அளவில் கட்சிக் கட்டமைப்பு இன்னும் வலுவாகவில்லை என்பதாலும் இது விருப்பத்தின் பேரில் தானாக வந்த கூட்டம் என்பதாலும் யாரும் பொறுப்பெடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் தேவையைக் கவனிக்க ஆள் இல்லை. பணம் இருந்தாலும் பொருள் வாங்கக் கடைகள் ஏதுமில்லை. தள்ளுவண்டிக் கடைகள் கூடக் கூட்டல் நெரிசல் கண்டு அஞ்சி விலகிச் சென்றுவிட்டனர். பாலைவனத்தில் சிக்கிக் கொண்டது போலத் தாகத்தில் பலரும் அல்லாடினர். கழிப்பறைப் பிரச்சினை பற்றிக் கேட்டபோது ‘தண்ணீர் குடித்தால்தானே அந்தப் பிரச்சினை?’ என்றார் ஒருவர்.
பொதுவாக அரசியல் கட்சித் தலைவர்கள் ஓர் ஊருக்கு வந்தால் அரசு பயணியர் விடுதியிலோ தனியார் விடுதியிலோ சில மணி நேரம் தங்கி மாவட்டப் பொறுப்பாளர்களைச் சந்தித்துப் பேசுவர். கட்சி விஷயங்களையும் மாவட்டப் பிரச்சினைகளையும் விவாதிப்பர். பொறுப்பாளர்களுக்கு வழிகாட்டுதல் கொடுப்பர். கூட்ட ஏற்பாடு பற்றிக் கேட்டறிவர். தவெகவில் அப்படியில்லை. மாவட்டச் செயலாளர் உட்படப் பொறுப்பாளர்கள் எவரும் விஜயைச் சந்திக்க வாய்ப்பே இல்லை. புஸ்ஸி ஆனந்த் தான் பொறுப்பாளர்களைச் சந்தித்துப் பேசுகிறார். ஆனால் பொறுப்பாளர்கள் விஜயைச் சந்திக்க விரும்புகின்றனர். விஜயோ விமான நிலையத்தில் இறங்கி நேராகப் பேசும் இடத்திற்கு வந்துவிடுகிறார். பேசி முடித்ததும் உடனே கிளம்பிச் செல்கிறார்.
கட்சிப் பொறுப்பாளர்கள் எப்படியாவது தம் முகத்தை விஜய் மனதில் பதிய வைத்துவிட முயல்கிறார்கள். கட்சிப் பதவி, உள்ளாட்சித் தேர்தல் வாய்ப்பு உள்ளிட்டவை அப்போதுதான் கிடைக்கும் என்று கருதுகின்றனர். எப்படியும் எல்லாவற்றையும் இறுதியில் விஜய்தான் தீர்மானிப்பார் என்பது அவர்கள் எண்ணம். ஆகவே அவரிடம் அறிமுகமாகிக் கொள்ள முண்டியடிக்கிறார்கள். விமான நிலையத்தில் இருந்தே அவரைப் பின் தொடர்கிறார்கள். பிரச்சார வாகனம் நிறுத்தியிருக்கும் இடத்தில் ஒருநொடி தரிசனம் கிடைக்காதா என்று பார்க்கிறார்கள். பிரச்சார வாகனத்தைச் சூழ்ந்து வருகிறார்கள். அவருக்கு ஏதேனும் அன்பளிப்பு வழங்க முடியுமா என்று திட்டம் போடுகிறார்கள். பொறுப்பாளர்களின் எண்ணம் எல்லாம் விஜயிடம் முகம் பதிப்பதிலேயே இருக்கிறது. ஆகவே விஜய் பேசுமிடத்தில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தப் பொறுப்பாளர்கள் எவரும் வருவதேயில்லை.
ஒரே ஒரு இடத்தில் மட்டுமே தண்ணீர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பெருங்குறை. மருத்துவ முகாமைப் பொறுப்பேற்றிருந்தோர் மோகனூர் ஒன்றியத்தைச் சேர்ந்த தவெகவினர். அவர்கள் விரைவாகவும் சிறப்பாகவும் செயல்பட்டனர். ஆனால் முகாமில் பணியாற்றிய மருத்துவர் உட்பட யாருக்கும் தேநீரோ மதிய உணவோ கிடைக்கவில்லை. தண்ணீரைக் குடித்துக்கொண்டு காலையில் பத்து மணி தொடங்கி மாலை ஆறு மணி வரைக்கும் பசியோடுதான் அவர்கள் பணியாற்றியுள்ளனர். சிகிச்சைக்குப் பின் மயக்கம் தெளிந்த சிலர் ‘விஜய் போய்ட்டாரா?’ என்று பதற்றத்துடன் கேட்டுள்ளனர். அவர் வந்துவிட்டார் என்றதும் ஏறிக் கொண்டிருந்த குளுக்கோஸ் இணைப்பைப் பிய்த்தெறிந்துவிட்டுக் கூட்டத்திற்குள் ஓட முனைந்தோரை மருத்துவர்கள் திட்டி அமைதிப்படுத்திப் படுக்க வைத்துள்ளனர்.
யார் கட்டுப்பாட்டுக்குள்ளும் இல்லாத கூட்டம், கட்டுப்படுத்த யாரும் இல்லாத கூட்டம். துணைக்கண்காணிப்பாளர் பணிநிலையில் இருந்த ஒருவர் வந்து சொல்லிய ஆலோசனைகளை மாவட்டக் கட்சி நிர்வாகம் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. மாவட்டச் செயலர் சதீஷ்குமார் மீது பல பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. முன்ஜாமீன் கேட்டு உயர்நீதி மன்றத்தில் அவர் அளித்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.
—– 03-10-25
மேய்க்கல்நாயக்கன்பட்டியில் இருந்து நான்கு வழிச் சாலையில் இரண்டு பக்கங்களையும் கபளீகரம் செய்து கொண்டு வந்த படைகளைக் கண்டு அதிர்ச்சியாகவும் வியப்பாகவும் இருந்தது.
நாமக்கல்லில் பேசும் போதே அவர் பேச்சு தெளிவில்லாமல் இருந்தது. சென்னை மாகாணத்தில் என்பதை “சென்னை மகாநாத்தில்” என்றார். தெளிவற்ற பேச்சு. இதுவரை நடந்த மாநாடுகளிலும் மயக்கம், உயிரிழப்புகள் ஏற்பட்டன. எண்ணிக்கை குறைவாக இருந்ததால் யாரும் கண்டுகொள்ளவில்லை. கரூரில் உயிரிழப்பு நாற்பதைக் கடந்ததால் தான் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. உரிய கட்டுப்பாடுகளைப் பின்பற்றாத சூழல் உயிரைப் பறித்துள்ளது.