1980களில் இருந்து தொழில் நகரமாக நாமக்கல் மாறியது. கோழிப்பண்ணைகள் வந்தன. லாரித் தொழிலும் வளர்ந்தது. 1990களுக்குப் பிறகு பள்ளி, கல்லூரி எனக் கல்வித் தொழிலும் உருவாயிற்று. எனினும் இவையெல்லாம் கிராமம் சார்ந்த தொழில்கள்தான். கோழிப்பண்ணை அமைக்கப் பெரிய நிலப்பரப்பு தேவை. உழவு நிலங்கள் வைத்திருந்தோர் அதில் பண்ணைகள் அமைத்தனர். உழவுக்கென இருந்த கிணறுகள் பண்ணைகளுக்கு நீராதாரம் ஆகின. வேலை செய்வோர் வந்து செல்பவர்களாக இருந்தனர். அங்கே தங்க வேண்டியிருப்பவர்களுக்கு ஒற்றையறை கொண்ட வரிசை வீடுகள் கட்டிக் கொடுத்தனர். எல்லாவற்றுக்கும் கிராமமே வசதியாக இருந்தது.
லாரி உரிமையாளர்களுக்கும் கிராமமே வசதி. சரக்கு லாரிகள்; டேங்கர் லாரிகள். ஒருலாரியாக இருந்தாலும் ஒன்றுக்கு மேற்பட்டவையாக இருந்தாலும் வெளியூர்களுக்குப் போய்விட்டு இங்கே வந்து சிலநாள் தங்கல் போடும்போது நிறுத்தி வைக்க இடம் வேண்டும். அதற்குக் கிராமமும் நிலங்களுமே தேவை. உழவு நிலத்தில் பெரிய வீடு கட்டிக்கொண்டு வசித்த நிலவுடைமைச் சாதியினரே லாரி உரிமையாளர்கள். அவர்களுக்கு நிலம் என்பது வருமானம் தருவதல்ல. மதிப்புத் தரும் அசையாச் சொத்து. லாரிதான் தொழில். நூற்றுக்கணக்கான லாரிகள் வைத்திருக்கும் பெருமுதலாளிகள் நாமக்கல்லில் உண்டு. இங்கே செல்வாக்குடையது லாரி உரிமையாளர்கள் சங்கம்.
பள்ளி, கல்லூரிகளும் கிராமப் பகுதிகளிலேயே உருவாயின. அங்கே தேவையான அளவு நிலம் வாங்க முடிந்தது. பெருங்கட்டிடங்களைக் கட்ட முடிந்தது. மருத்துவப் படிப்புக்கு அனுப்ப முயலும் பெற்றோர் தம் பிள்ளைகளை விட்டுச் செல்ல பரந்த விடுதிகளுக்கும் இடம் இருந்தது. நாமக்கல் தொழில்கள் எல்லாம் இப்படிக் கிராமப்புறம் சார்ந்தவையாக இருந்ததால் நகர விரிவாக்கம் மெதுவாகவே நடந்தது.
இப்போது ‘மாநகராட்சி’ என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் மாநகராட்சிக்கான வளர்ச்சி இல்லை. அது வரிகள், நில மதிப்பு, பதிவுச் செலவு ஆகியவற்றை உயர்த்துவதற்கு ஒருவகையில் அரசு கையாளும் தந்திரம். சொத்துவரி உயர்வு பற்றி எதிர்க்கட்சியான அதிமுக திரும்பத் திரும்பப் பேசுகிறது. அனேகமாக வரும் தேர்தலில் இதை முக்கியப் பிரச்சினையாகவும் அது எழுப்பக் கூடும். பல ஆண்டுகளாக வரியை உயர்த்தவில்லை என்பதால் இப்போது பல மடங்கு உயர்த்தியது நியாயமில்லை. ஆண்டுதோறும் ஆறு விழுக்காடு உயரும் எனச் சட்டமும் போட்டிருக்கிறார்கள். அது அதிகம் என்பதில் ஐயமில்லை.
மாநகராட்சி அளவுக்கு இல்லை எனினும் நகரம் வளர்ந்திருக்கிறது. அடுக்குமாடிக் குடியிருப்புகள் வந்திருக்கின்றன. புறநகர்கள் பல அமைந்திருக்கின்றன. அதற்கு முக்கியமான காரணம் என்று நான் கருதுவது கிராமப்புறத்தில் இருந்து அடுத்த தலைமுறையினர் நகர வாழ்வை விரும்பிக் குடியேறுவதுதான். தொழில்கள் கிராமத்தில் இருந்தாலும் நகரத்தில் வாழவே விரும்புகின்றனர். நுகர்வுக் கலாச்சாரம் ஈர்க்கிறது. பாதுகாப்பையும் யோசிக்கின்றனர். குழந்தைகளின் கல்விக்கும் நகர வசிப்பு அவசியம் என்று நினைக்கின்றனர். கடினமாக உழைத்தாலும் பொருள் சேர்ப்பதைத் தவிர வேறொன்றையும் நுகர விரும்பாத தலைமுறையின் காலம் முடிந்துவிட்டது. இப்போதைய தலைமுறையினர் நுகர்வால் ஈர்க்கப்படுகின்றனர். அதற்கு நகரமே களம்.
வெளியூர்களில் இருந்து வந்து குடியேறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. அரசுப் பணிகளுக்கு இங்கே வருவோரில் பெரும்பாலோர் இங்கேயே தங்கி விடுகின்றனர். சாதிக்கலவரம் போன்ற பதற்றங்கள் இங்கு இல்லை. சுற்றுச்சூழல் பாதிப்பு கிடையாது. ஒப்பீட்டளவில் தூய்மையான நகரம் இது. இருபது கிலோ மீட்டர் தொலைவில் காவிரி ஓடுவதால் தண்ணீர்ப் பிரச்சினை இல்லை. பிறர் விஷயங்களில் அவ்வளவாகத் தலையிடாமல் தம் வேலையைப் பார்த்துக் கொண்டு செல்லும் மனோபாவம் கொண்ட மக்கள். ஏதாவது ஒருவேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்னும் நம்பிக்கை. பலபேர் இங்கேயே வீடு கட்டி நிரந்தரவாசிகள் ஆகிவிட்டனர்.
பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்போர் தனிவீடு எடுத்துத் தங்கும் வழக்கம் அதிகரித்திருக்கிறது. நீட் தேர்வுப் பயிற்சிக்கு இடம் வழங்கும் பள்ளிகளில் போதுமான விடுதி வசதி இல்லை. ஆகவே வீட்டில் இருக்கும் பெரியோர் உடன் வந்து பிள்ளைகளுடன் தங்குகின்றனர். இப்போது வட இந்தியத் தொழிலாளர்கள் எண்ணிக்கையும் கூடிவிட்டது. கோழிப்பண்ணைகளிலும் கட்டிடத் தொழில்களிலும் அவர்கள் இருக்கின்றனர். உழவு வேலைகளிலும் அவர்கள் குழுக்குழுவாக ஈடுபடுகின்றனர்.
இருபத்தைந்து ஆண்டுகள் இங்கே இருந்து இதன் மாற்றங்களைக் கவனித்தே வந்திருக்கிறேன். நாமக்கல் நகரமாக வளர்வதை ஆரோக்கியமாகவே பார்க்கிறேன். வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் இன்னும் சிலவற்றில் நிர்வாகம் கவனம் செலுத்தினால் நல்லது. முக்கியமாகக் குப்பைகள் உள்ளிட்ட கழிவுகள்; சாக்கடை வசதி; நீர்நிலைப் பராமரிப்பு. இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘தூய்மை நகரம்’ என்று சான்றிதழ் பெற்றது. இப்போது அதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கழிவுகளில் கவனம் செலுத்தினால்தான் அகவளர்ச்சி சாத்தியப்படும். கழிவுநீர் அருகில் உள்ள கிராமத்தில் ஏரிகளில் சென்று வெள்ளம் போலப் பாய்வது எதிர்காலத்திற்கு நல்லதில்லை.
நகராட்சி பெறும் வரியை ஊழல் இல்லாமல் முறையாகப் பயன்படுத்தினால் மக்களுக்கு நல்ல வசதி ஏற்படுத்திக் கொடுக்க முடியும். ஊழல் மிகப் பெரிய பிரச்சினை. அரசியல்வாதிகளுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் இருக்கும் இணக்கம் நாம் அறிந்ததே. சாலைகளும் கட்டிடங்களும் தரமற்றவை. அரசு கல்லூரியில் பணியாற்றிய போது நேரடியாகக் கண்டிருக்கிறேன். ஒதுக்கீட்டுத் தொகையில் பாதியளவு பணம்கூடக் கட்டிடத்திற்குச் செலவழிப்பதில்லை. இத்தனை இத்தனை விழுக்காடு என்று பிரித்தெடுத்துக் கொள்வது எழுதப்படாத விதி. ஒப்பந்ததாரர் யாராவது சாதாரண வீடுகளில் வசிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? அரசியல்வாதிகளின் வீடுகள் மாளிகைகள் அல்லவா? விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் தோழர் மணிமாறன் மட்டுமே நானறியச் சாதாரண வீட்டில் வசிக்கும் ஒரே அரசியல்வாதி.
புதிய பேருந்து நிலையத் தரைத்தளம் இப்போதைய சிறுமழையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அங்கங்கே உடைத்து நீர் போக வழி செய்திருக்கிறார்கள். அப்படியானால் இதிலும் ஊழலுக்குப் பஞ்சமிருக்காது. எங்கே சென்றாலும் கழிப்பறையைப் பயன்படுத்திப் பார்ப்பது என் வழக்கம். புதிய பேருந்து நிலையக் கழிப்பறைக்கும் சென்றேன். ஒருபுறம் மட்டும் பார்த்தேன். ஆயிரக்கணக்கான பேர் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் ஒரே சமயத்தில் பத்துப் பேர் மட்டும் பயன்படுத்தும் வகையில் அக்கழிப்பறை இருந்தது.
ஆண்கள் கழிப்பறை படுமோசம். வெளியில் இருப்போருக்குத் தெரியும் வகையில் திறந்த கதவுக்கு நேராகச் சிறுநீர் கழிக்கும் வாங்கிகள் வைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் தேங்கி நிற்கும் வகையில் தரைத்தளம். நெரிசலோ நெரிசல். கழிப்போர் அந்தரங்கம் பற்றிச் சிறுஅக்கறையும் அற்ற வடிவமைப்பு. இதை வடிவமைத்தவர்கள் நன்கு கற்ற பொறியாளர்களாகத்தானே இருப்பார்கள்?
—– 25-11-24
உண்மைதான் ஐயா
மிகவும் சிறப்பு.. நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை .