ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களைப் பாதித்துள்ளது. விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பெரும்பாதிப்பு. மலைச்சரிவில் ஏழு பேர் இறப்பு. வானைக் குறை சொல்வதா அரசைக் குறை சொல்வதா என்று தெரியவில்லை. ஆனால் பெரும் ஆய்வு நடத்தித் தேவையான நடவடிக்கைகளை எதிர்காலத்திற்காக மேற்கொள்ள வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் பாதிப்புகளை எதிர்கொண்டு வாழ முடியாது.
இதுநாள் வரை இல்லாத அதிசயமாக அப்புயல் சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்கள் வழியாகக் கேரளா செல்கிறதாம். கடலோர மாவட்டங்களில் பெரும்புயல் அடிக்கும்போது நாமக்கல் மாவட்டத்தில் மேகமூட்டம் இருக்கும். நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் புயல் சேதம் விளைக்கையில் எங்களுக்குச் சிறிதளவு மழை பெய்யும். ஆனால் இந்த ஃபெஞ்சல் எங்கள் மாவட்டத்தையும் தொட்டுச் செல்கிறது.
கடந்த ஐந்தாறு நாட்களாகத் தொடர்மழை. கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களைப் புரட்டிவிட்டுச் சேலம், நாமக்கல்லைத் தொட்டுச் செல்வதால் இன்னும் இருநாட்களுக்கு மழை பெய்யும் என்கிறார்கள். பெய்துகொண்டுதான் இருக்கிறது. நாங்கள் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கிறோம். நீர்நிலைகள் நிறைகின்றன. தவளைகளின் இடைவிடாத கத்தலும் பூச்சிகளின் ரீங்கரிப்பும் எப்போதையும் விட மிகுதி. நானறிய நாமக்கல் வழியாகச் செல்லும் முதல் புயல் இதுதான். மழை குறைவாகப் பெய்யும் மாவட்டம் இது என்பதால் ஃபெஞ்சலை நாங்கள் வாழ்த்தி வரவேற்கிறோமா?
இல்லை. வழக்கத்தைவிட அதிக மழைதான். என்றாலும் மழைக்கு எதிராக மக்கள் முனகுகிறார்கள்; முணுமுணுக்கிறார்கள்; கொஞ்சம் சத்தமும் போடுகிறார்கள். ஓரிருநாள் தொடர்மழை பெய்தால் போதும். உடனே ‘அன்றாட வாழ்க்கை பாதிப்பு’ என்கிறார்கள். ‘மக்கள் அவதி’ என்கிறார்கள். மழையே பெய்யாவிட்டால் நல்லது என்று நினைப்பு. இன்னும் இரண்டு மாதம் போனதும் தண்ணீர்ப் பிரச்சினை வந்துவிடும். அப்போது மழையை நினைத்து ஏங்குவார்கள். இதுதான் இந்தக் காலத்தின் வாடிக்கையாக இருக்கிறது.
இன்றைய தலைமுறையினர்க்குப் பருவகாலம் பற்றிய அறிதலும் இல்லை; உணர்வும் இல்லை. முந்தைய தலைமுறையும் தம் இளமைக் காலத்தை மறந்துவிட்ட மாதிரி தெரிகிறது. தமிழ்நாட்டின் பருவகாலம் இரண்டிரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாறும். மொத்தம் ஆறு பருவங்கள். இளவேனில் (சித்திரை, வைகாசி), முதுவேனில் (ஆனி, ஆடி), கார் (ஆவணி, புரட்டாசி), குளிர் (ஐப்பசி, கார்த்திகை), முன்பனி (மார்கழி, தை), பின்பனி (மாசி, பங்குனி) என்பன அவை. ஒருபருவம் முடிந்து அடுத்த பருவம் தொடங்குவதை இயற்கையின் குறிப்பறிந்து உணர்ந்து அதற்கேற்பத் தம் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது, அதற்கேற்ற தயாரிப்புகளைச் செய்வது என்பவை நம் முன்னோர் வழக்கம்.
சங்க இலக்கியமாகிய பத்துப்பாட்டில் இடம்பெற்றுள்ள ஒருநூல் ‘நெடுநல்வாடை.’ வாடைக் காற்று வீசும் குளிர்காலப் பின்னணியைக் கொண்டு எழுதப்பட்ட சிறிய கதை கொண்ட நெடும்பாட்டு அது. அதன் தொடக்கமே குளிர்கால வருகையைப் பற்றிப் பேசுகிறது. கார்காலம் முடிந்து குளிர்காலம் தொடங்குகிறது. கார்காலத்தில் அளவான மழை பொழியும். அதனால் குளிர் மிகாது. அதைத் தொடரும் அடைமழைக் காலத்தில் விடாது மழை பொழிந்து கொண்டேயிருக்கும். ஆகவே குளிர் மிகும்.
எப்படிப்பட்ட குளிர்? விலங்குகள் இரை தேட மறந்தன. மரத்திலிருந்து பறவைகள் நடுங்கித் தரையில் விழுந்தன. பசுக்கள் தம் கன்றுகளுக்குப் பால் கொடுக்காமல் உதைத்து விரட்டின. இடையர்கள் பற்கள் பறை கொட்ட கைகளைக் கட்டிக்கொண்டனர். குன்றுகளே குளிர்ந்து நடுங்கின. நெற்கதிர்கள் தலை தாழ்ந்தன. இப்படிப்பட்ட குளிரை எதிர்கொள்ள மக்கள் என்னென்ன செய்தார்கள்?
ஆடுமாடு மேய்க்கும் இடையர்கள் தம் மந்தையைப் பாதுகாப்பான மேட்டுப்பகுதிக்கு ஓட்டிச் சென்றார்கள். தீ மூட்டி அதன் முன் கைகளை விரித்துக் காட்டிச் சூடேற்றிக் கன்னத்தில் ஒற்றிக் கொண்டார்கள். மது அருந்தி மக்கள் மகிழ்ந்தனர். செல்வச் செழிப்புள்ள வீடுகளில் குளிர்காலத்துக்கான நறுமணப் பொருள்களை அம்மியில் வேலையாட்கள் அரைத்தனர். சந்தனம் அரைத்துக் கொண்டிருந்த கல்லைக் கைவிட்டனர். பெண்கள் தம் கூந்தலில் சரமாகச் சூடாமல் பெயருக்காகச் சில மலர்களை வைத்துக் கொண்டனர். சந்தனம், அகில் முதலிய நறுமண விறகுகளில் தீ மூட்டினர். அழகிய விசிறிகளை எல்லாம் எடுத்துப் பரணில் போட்டனர். அவற்றில் சிலந்திகள் கூடு கட்டி வாழ்ந்தன. ஜன்னல்களையும் கதவுகளையும் அடைத்து வைத்தனர். பானை நீரை அருந்தாமல் வெதுவெதுப்பான நீரைக் குடித்தனர்.
நூலைப் பாடிய புலவர் நக்கீரர் தம் பாடுபொருளுக்கு ஏற்பச் சிலவற்றைத் தொகுத்துச் சொல்லியிருக்கிறார். அவர் விட்டவை பல இருக்கும். சொன்னவற்றில் இருந்து குளிர்காலத்திற்கு ஏற்ப மக்கள் தம்மை எப்படியெல்லாம் தயார் செய்து கொண்டனர் என்பதை ஓரளவு அறிய முடிகிறது. இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் மக்கள் இப்படித் தயாரானது போலத்தான் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னும் நாமும் தயாரானோம் என்பது என் நினைவில் இருக்கிறது.
அப்போதெல்லாம் அடுப்பெரிக்க விறகுதான். தென்னைமட்டை, பனைமட்டை, பன்னாடை, மரக்குச்சிகள், கட்டைகள் ஆகியவற்றை எல்லாம் சேகரித்துக் கொண்டு வந்து போர் போட்டு வைப்போம். ஆடுமாடுகளுக்குத் தீவனப்போர் வைப்பது போல விறகுப்போர் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும். சீமைக் கருவேல முள்ளை முழ நீளத்தில் சிறிதுசிறிதாக நறுக்கிக் கத்தை கட்டி வைப்போம். அது சட்டெனத் தீப்பற்றி எரியும் இயல்புடையது. பன்னாடைகளும் ஓலைகளும் குளிர் காய்வதற்கான விறகுகள். எந்நேரமும் அடுப்பில் கணப்பு இருக்கும். குளிர் தாங்க முடியாத போது ஓலைகளைக் கொளுத்தி வீட்டிலும் கட்டுத்தரைகளிலும் சூடேற்றுவார்கள். கொசுக்களை விரட்ட நாய்த்துளசிச் செடியைப் பறித்து வந்து வைத்துக் கொள்வார்கள். அடிக்கடி சாம்பிராணி புகைப்பார்கள். அடுக்கி வைத்திருக்கும் வறட்டிகளைத் தீயிட்டுப் புகை பரப்புவார்கள்.
ஆடுமாடுகளுக்குத் தீவனப்போர் எதற்கு? மழைக்காலத்திற்காகத்தான். தொடர்ந்து மழை பெய்தால் அவற்றை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்ல முடியாது. தீவனப் போரிலிருந்து உருவியெடுத்துப் போட்டு வயிற்றை நிறைக்கலாம். நிலக்கடலைப் பயிர் நம் நாட்டில் பிரபலமாகி இருநூற்றாண்டு காலம்தான் இருக்கும். அது எண்ணெய்க்குப் பயன்படுவதால் ‘பணப்பயிர்’ என்று சொல்வர். ஆனால் நிலக்கடலைக் கொடி ஆடுமாடுகளுக்கு நல்ல தீனியாகும். அதனால்தான் எங்கள் பகுதியில் இன்றைக்கும் அதிகமாகக் கடலை விதைக்கிறார்கள். சில ஆண்டுகள் விளைச்சல் இல்லை என்றாலும் ‘ஆடுமாட்டுக்குத் தீனி ஆகிவிட்டால் போதும்’ என்று சொல்வார்கள்.
வீட்டில் தானியங்களைப் பானைகளில் சேகரித்து வைக்கும் வழக்கும் குளிர்காலத்தைக் கடப்பதற்காகத்தான். பயிறு வகைகளில் செம்மண் கட்டிப் பூச்சி புழு அண்டாமல் பாதுகாப்பாக வைப்பார்கள். மழைக்காலம் தான் பூச்சி புழுக்கள் பெருகி வளரும் பருவம். கருப்பட்டி, அச்சுவெல்லம் ஆகியவற்றைப் பானையில் வைக்கோல் போட்டு அதற்குள் பொதிந்து உருகாமல் பாதுகாப்பார்கள். அறுவடை போன்ற உழவு வேலைகளைக் குளிர்காலத்தில் வைத்துக்கொள்ள மாட்டார்கள். ஆடியில் விதைத்து மார்கழியில் அறுவடை செய்வார்கள். விளைச்சல் வீடு வந்து சேர்ந்ததும் தை தொடக்கத்தில் பொங்கல் கொண்டாடுவார்கள்.
ஆண்டு முழுதும் கோவணம் கட்டித் திரிபவர்கள் குளிர்காலத்திற்கென ஆடைகளைக் கொண்டிருப்பார்கள். துப்பட்டிகள் என்னும் கடினப் போர்வைகள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும். அவற்றை இப்போதுதான் வெளியே எடுப்பார்கள். சாக்குப்பைகளைக் கட்டில் விரிப்பாகவும் காலுக்குச் சப்பாத்தாகவும் பயன்படுத்துவார்கள். கோழிக்கூண்டுகளையும் பட்டிக்குடிசைகளையும் வேனிற்காலத்திலேயே புதிய ஓலைகளைக் கொண்டு வேய்ந்து விடுவார்கள். பட்டிகளை வீட்டுக்கு அருகில் மேட்டுப்பகுதியில் இருப்பது போல மாற்றுவார்கள். கட்டுத்தறிகளுக்குச் சேறாகாத செம்மண் கொட்டி திட்டுப் போடுவார்கள்.
இவையெல்லாம் குளிர்காலத்தை எதிர்கொள்வதற்கான தயாரிப்புகள். எந்தப் பருவத்தையும் விடக் குளிர்ப்பருவம்தான் கொடுமையானது. இப்படியெல்லாம் தயாரானாலும் பருவ கால நோய்களில் இருந்து தப்பிப்பது கடினம். அப்போது வாழ்க்கை வசதிகளும் குறைவு; மருத்துவ வசதியும் குறைவு. என்றாலும் ஒரு பருவத்தை எதிர்கொள்ள மனிதர்கள் இப்படித் தயாரானார்கள் என்பதுதான் முக்கியம்.
இன்றைய காலம் வசதிகள் கூடியது. அதனால் குளிர்காலத்தை எதிர்கொள்ள எந்தத் தயாரிப்பையும் நாம் செய்வதில்லை. பருவ மாறுதல்களால் மழை பெய்வது கூடக்குறைய இருப்பினும் அடைமழை பெய்யும் குளிர்காலம் மாறவில்லை. அதற்கென நாம் சில தயாரிப்புகளைச் செய்து கொண்டால் என்ன? நீர்நிலைகளைத் தூர் வாருதல், அணைக்கட்டுகளைப் பலப்படுத்துதல், வடிகால்களைச் சரிசெய்தல் முதலிய முன் தயாரிப்புகளை அரசாங்கம் செய்ய வேண்டும். அதுபோலத் தனி மனிதர்களும் தமக்கெனச் சில தயாரிப்புகளைச் செய்து கொள்ள முடியாதா?
குளிர்காலத்தில் வீட்டுக்கான அடிப்படைத் தேவைகளைச் சேமித்து வைத்துக் கொள்ளலாம். உணவு, உடைகள் எல்லோரிடமும் இருக்கின்றன. மின்னேற்றம் செய்து கொள்ளும் விளக்குகளை வைத்துக்கொள்ளலாம். சிறுகுழந்தைகள் இல்லாத நிலையில் பாலைக்கூடத் தவிர்க்கலாம். காய்கறிகளைக் குறைத்துக்கொண்டு சமைக்கப் பலவகையான குழம்பு வகைகள் இருக்கின்றன. அவற்றைச் செய்யலாம். குளிர்காலத்திற்கு எனச் சமையல் முறையை மாற்றலாம்.
பணியிடங்களுக்குச் செல்லும் நிர்ப்பந்தம் தவிர பிற பயணங்களைத் தவிர்க்கலாம். இக்காலத்தில் வீட்டுச் சிறப்பு நிகழ்வுகளை நடத்தாமல் இருக்கலாம். இன்னும் யோசித்தால் குளிர்காலத்திற்கென நாம் தயாரிப்பு செய்துகொள்ளப் பல விஷயங்கள் இருக்கும். தாழ்வான பகுதிகளில் வீடு கட்டக் கூடாது, அடைமழைக்குத் தாங்காத பயிர்களை விதைக்கக் கூடாது, சாக்கடைகளில் குப்பைகளைக் கொட்டக் கூடாது இப்படி எத்தனையோ கூடாதுகள். கடும்பனிப் பெய்யும் நாடுகளில் சில மாதங்கள் வீடுகளுக்கு உள்ளேயே அடைந்து கிடக்கப் பழகியிருப்பது போல நாம் சிரமப்பட வேண்டியதில்லை. சில எளிய தயாரிப்புகளைச் செய்து கொள்ளலாமே.
குளிர்காலம் வரும் முன் நாம் வாழ்ந்த அன்றாட வாழ்க்கையை அப்படியே இப்போதும் வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. இந்தப் பருவத்தின் தனித்தன்மையை உணர்ந்து அதற்கேற்ப முன் தயாரிப்புகளைச் செய்துகொள்வது பற்றி நாம் தீவிரமாக யோசிக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வையும் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். தம் அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் செயலுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் கட்சிகளே நம்மை ஆளுகின்றன. அவற்றிடம் நம் அன்றாடத்தை ஒப்படைக்கக் கூடாது. நம் அன்றாடத்தை நாம் தீர்மானிக்க வேண்டும்.
பயன்பட்ட நூல்:
க.பலராமன் (உ.ஆ.), நெடுநல்வாடை, 2022, தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை.
—– 03-12-24
குளிர்கால முன்தயாரிப்புகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது மிகவும் சிறப்பு ஐயா. அடைமழைக்குத் தாங்காத பயிர்கள் விதைக்கக் கூடாது என்று சொல்லியுள்ளீர்கள் ஐயா. ஆனால் இந்த எதிர்பாராத மழையால் நெல், பருத்தி பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளார்கள்.