அமெரிக்கப் பதிப்பாக வெளியாகியுள்ள ‘One Part Woman’ நாவலுக்கு எழுதிய முன்னுரை.

You are currently viewing அமெரிக்கப் பதிப்பாக வெளியாகியுள்ள ‘One Part Woman’ நாவலுக்கு எழுதிய முன்னுரை.

அமெரிக்கப் பதிப்பாக வெளியாகியுள்ள ‘One Part Woman’ நாவலுக்கு எழுதிய முன்னுரை.

முன்னுரை

ஒற்றைச் சொல்

ஒற்றைச்சொல். அது போகிறபோக்கில் என் காதில் தானாக வந்து விழுந்த ஒற்றைச் சொல். பேருலகத்தை அடை காத்து வைத்திருந்த ஒற்றைச் சொல். அந்த ஒற்றைச் சொல்லைப் பற்றிக்கொண்டு மேலேறிச் சென்றது மனம். இதுவரைக்கும் புலனாகாத காட்சிகள், விரிவானம், கற்பனை ஊற்று, பரிசீலனை, சொற்பெருக்கு முதலியவை என் அனுபவ வெளிக்குள் பிரவாக வெள்ளம் போல வந்து சேர்ந்துகொண்டே இருந்தன. ஒற்றைச் சொல்லின் மகத்துவம் சொல்லித் தீராதது. மொழிதான் மனித வரலாற்றுப் பக்கங்களையும் சிடுக்குகளையும் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது. அது ஏதேனும் அசந்தர்ப்பம் ஒன்றில் அவிழ்ந்து தன்னை வெளிக்காட்டிக் கொள்கிறது. அப்படி வெளிக்காட்டிய ஒற்றைச் சொல்தான் இந்த நாவல் உருவாகக் காரணம்.

ஒற்றைச் சொல் என்னவெல்லாம் செய்யும்? அது உருட்டித் திரட்டி அடைத்து வைத்துள்ள விழுமியம் பெருவெடிப்புக் கொண்டால் எல்லாவற்றையும் தலைகீழாக்கிவிடும் என்பதை இந்நாவல் மூலமாக உணர்ந்தேன். ஆம். என் வாழ்வை மட்டுமல்ல, ஒட்டுமொத்தச் சமூகத்தின் சிந்தனைப் போக்கைத் திசை திருப்பிவிடும் ஆற்றலைப் பெற்ற நாவலாக இது உருமாறியது. மிகக் குறைந்த வாசகப் பரப்பைக் கொண்ட தமிழ் இலக்கிய உலகிலேயே வெளியான சில மாதங்களிலேயே பெரும் கவனம் பெற்றது. பின்னர் இதன் வாசகப் பரப்பு விரிந்து லட்சக் கணக்கான வாசகர்களைப் பெற்றது.

என்னுடைய பிற நாவல்களை விடவும் இந்நாவலுக்கு வந்த வாசக எதிர்வினைகளும் அதிகம். இந்த நாவலின் கதைத்தலைவனாகிய காளியின் நிலை என்னவாயிற்று என்பதுதான் வாசகர்களின் முக்கியமான கேள்வியாக இருந்தது. சிலருக்கு அவன் செத்துவிடுவது உசிதம் என்று தோன்றியது. சிலருக்கு அவன் உயிர் வாழ வேண்டும் என்று விருப்பம். சிலருக்கு அவன் மனைவியாகிய பொன்னாதான் சாக வேண்டும் என எண்ணம். இப்படி வாசகர்கள் இந்த நாவலின் முடிவிலிருந்து என்னை மேலும் இழுத்துச் சென்றார்கள். ஆகவே வாசகர்களால் உத்வேகம் கொண்டு இந்நாவலின் தொடர்ச்சியாக இன்னும் இரண்டு நாவல்களை எழுதினேன்.

இவ்விதம் ஒற்றைச் சொல்லுக்குள் இருந்து கிளைத்து விரிந்த இந்நாவல் இன்று உலக அளவுக்கான வாசகப் பரப்பை நோக்கிச் செல்வது பேரானந்தம் தருகிறது. உலகத்தின் வெவ்வேறு பகுதி இலக்கிய வாசகர்களுக்கும் இந்நாவல் எத்தகைய அனுபவத்தை வழங்கும் என்பதை அறியும் எதிர்பார்ப்பு என்னும் மிகுந்திருக்கிறது.

உலகச் செம்மொழிகளுள் ஒன்றாகிய தமிழ் மொழியில் உருவான நவீன இலக்கியம் ஒன்றை மொழிபெயர்ப்பு வழியாக வெளியுலகத்திற்கு எடுத்துச் செல்லும் பெரும்பணியை நிறைவேற்றியுள்ள என் தமிழ் நூல் பதிப்பாளரும் நண்பருமாகிய காலச்சுவடு கண்ணன் சுந்தரம், இந்நாவல் வந்தபோதே வாசித்துவிட்டு ‘மொழிபெயர்க்கும் வாய்ப்பு வந்தால் நானே செய்கிறேன்’ என்று சொல்லி விருப்பத்தோடும் ஈடுபாட்டோடும் மொழிபெயர்த்தவரும் என் மீது மிகுந்த அன்பு கொண்டவருமான நண்பர் அனிருத்தன் வாசுதேவன், இந்நாவல் என்னைக் கலக்கமுறச் செய்த காலத்தில் உடனிருந்து ஆறுதல் வழங்கியதோடு இந்நாவலின் சார்பில் பெரும் உரையாடலை முன்னெடுத்தவர் என் இனிய நண்பரும் தமிழ்நாட்டு வரலாற்றுக்குப் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளவருமாகிய பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி.

மேலும் இந்தியாவைக் கடந்த இந்த ஆங்கில மொழிப் பதிப்பைச் சாத்தியப்படுத்தியவர்கள் Priya Doraswamy, Lotus Lane Lit ஆகியோர். இப்பதிப்பில் பல்வேறு நிலைகளில் பங்களிப்பு செய்தவர்கள் Peter Blackstock, senior editor, Emily Burns, editorial assistant, and Morgan Entrekin publisher of Grove/Atlantic ஆகியோர்.

அனைவருக்கும் நான் வழங்க விரும்பும் ஒற்றைச் சொல் ‘நன்றி.’

Add your first comment to this post