சனாதனப் பேச்சு

You are currently viewing சனாதனப் பேச்சு
சனாதனப் பேச்சுபேருந்து, ரயில் பயணங்களில் மிகுந்த தொந்தரவாக இருப்பது செல்பேசிச் சத்தம். பொதுவெளி அனைவருக்கும் உரியது. அதில் பிறருக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்னும் உணர்வு நம்மிடம் இல்லை. அழைப்பொலியைச் சத்தமாக வைத்துக் கொள்வார்கள். ‘மாமோய்… எங்கிருக்கறீங்க? ‘ என்னும் கூவல் இப்போது இல்லை. பாடல் வைத்திருந்தாலும் பிறர் காதை ஏன் துளைக்க வேண்டும்?
பேசுவதும் அப்படித்தான். குடும்ப ரகசியங்கள் வெளிப்படுவதைப் பற்றிய கவலை இல்லாமல் பிரச்சினைகளைக் கத்திப் பேசுவார்கள். ஒருவர் தன் மனைவியைக் ‘கழுதை கழுதை’ என்று பேசினார். அது அவர் கொஞ்சலாகவும் இருக்கலாம். எல்லோருக்கும் கேட்கும்படியா கொஞ்ச வேண்டும்?
2010ஆம் ஆண்டு தென்கொரியாவில் இருந்தபோது மூன்று மணி நேரம் பேருந்துப் பயணம் செய்தேன். முன்பதிவு செய்த பயணம். நல்ல வசதிகள் கொண்ட பேருந்து. உள்ளே சின்னச் சத்தம்கூட இல்லை.  சிலர் தூங்கினர். இருக்கைக்கு முன்னிருந்த மடிமேசையில் கணினியை வைத்துச் சிலர் வேலை செய்தனர். அப்போது நம்மிடம் செல்பேசிப் புழக்கம் மிகக் குறைவு. கொரியர்களிடம் கணிசமாக இருந்தது. என்னிடம் இல்லை. கண்ணாடி வழியாகக் கொரியாவின் இயற்கை அழகை கண்டு வந்தேன்.
ஒருவருக்குச் செல்பேசி அழைப்பு வந்தது. முதலில் மென்மையாகத்தான் பேசத் தொடங்கினார். போகப்போகப் சத்தம் கூடிக் கோபத்தில் கத்திப் பேசினார். அவருக்கு என்ன பிரச்சினையோ தெரியவில்லை. தொழில், அலுவல், குடும்பம் என ஏதோ ஒன்று. சூழலை மறந்து விட்டார். எனக்கு மொழி புரியவில்லை. அனைவரின் கவனமும் அவர் மீது பதிந்தது. சத்தத்தை அவர் குறைக்கவில்லை. ஒரு பெண்மணி எழுந்து அவரைப் பார்த்துக் கண்டிப்புடன் ஏதோ சொன்னார். உடனே அங்கங்கே இருந்து பத்துப் பேர் எழுந்து நின்று சத்தம் போட்டனர். அழைப்பைத் துண்டித்து விட்டுப் பேருந்து நடுவில் வந்து நின்று தலையையும் உடலையும் தாழ்த்தி மன்னிப்புக் கேட்டார்.
நம் சூழலோடு இதைப் பொருத்தாமல் இருக்க முடியவில்லை. ஒருமுறை விடிகாலை ஐந்து மணிக்குச் சேலத்தில் பேருந்து ஏறினேன். எல்லோரும் தூங்குகிறார்கள். என்னருகில் இருந்தவர் ஒரு பாடாவதிப் படத்தைச் சத்தமாக வைத்துப் பார்த்துக் கொண்டு வந்தார். நிறுத்தி விடுவார் என்று சில நிமிடம் பொறுத்திருந்தேன். நிறுத்தவில்லை. ‘சத்தமா இருக்குது. ஹெட்போன் வெச்சுப் பாருங்க’ என்று நிதானமாகச் சொன்னேன். ‘ஹெட்போன் இல்ல’ என்றார். ‘அப்படின்னா வீட்டுல போய்ப் பாருங்க’ என்றேன். அவருக்கு வந்ததே கோபம். ‘என் போன்ல நான் பாக்கறன். நீயும் வேண்ணாப் பாரு’ என்றார். ஒருமையில் பேச்சு ஆரம்பித்தால் நான் நிறுத்தி விடுவேன். மேற்கொண்டு எப்படி எப்படியோ போகும். நான் பேசாமல் இருந்தது அவருக்கு அவமானமாகி விட்டது. காரில் போக வேண்டியது தானே என்றெல்லாம் கத்தினார். பேருந்தில் இருந்த ஒருவர் கூடப் பேசவில்லை. நடத்துநர் வந்து விசாரித்தார்.
‘காலங்காத்தால ஏன் சார் பிரச்சின பண்றீங்க?’ என்று என்னைக் கடிந்து கொண்டார். வேறு இருக்கைக்கு மாறிக் கொள்ளச் சொன்னார். அந்த ஆள் படம் பார்ப்பதை நிறுத்தவில்லை.
பொதுவெளியே நமக்குக் கிடையாது. எல்லாம் சாதியவெளிதான். நவீன காலத்தில் பொதுவெளிகள் உருவாகும்போது அவற்றை எப்படிப் பயன்கொள்வது என்று தெரியவில்லை. பிறரைப் பற்றி எண்ணாத இயல்பு சாதி சார்ந்தது. அதுதான் இன்றைய பொது வெளிகளிலும் பிறரைப் பற்றிக் கருதாமல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்னும் மனோபாவத்தை உருவாக்கி இருக்கிறது. அவை பிறருக்கும் உரியவை, பிறருக்குத் தொந்தரவு தராத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்னும் உணர்வு ஏற்படவில்லை.
பயணத்தை உறங்கப் பயன்படுத்துவோர் இருப்பர். குழந்தைகள் உறங்கும். முதியோர் இருப்பர். அங்கே அழைப்பொலி வராமல் அமைதியில் போட வேண்டும். அவசியம் என்றால் தவிரப் பேசக் கூடாது. பேசினாலும் காதலர்களைப் போல அருகில் இருப்போருக்குக் கேட்காத அளவில் பேசலாம். குறுங்காணொலி, திரைப்படம் பார்ப்பது என்றால் செவிவாங்கியை மாட்டிக் கொள்ளலாம். தம் கஷ்டத்தைப் பிறர் சொன்னால் பொருட்படுத்திக் கேட்டு நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். தன்னகங்காரம் துருத்திக் கொண்டு வந்து பிறரோடு சண்டையிடக் கூடாது.
இவையெல்லாம் நம் சமூகத்தில் நடைமுறைக்கு வர நாளாகும். வர வேண்டும் என்று ஆசைப்படுவோம். அதற்கு என்ன தடை? சமீபத்தில் நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றோடு இதை முடிக்கலாம்.
சனாதனப் பேச்சு
இரண்டு மாதத்திற்கு முன் நடந்த சம்பவம். சென்னையில் இருந்து நாமக்கல்லுக்கு அன்றாடம் வருவது ஒரே ஒரு ரயில் தான். மூன்றாம் அல்லது இரண்டாம் வகுப்புக் குளிர்சாதனப் பெட்டியில் பயணம் செய்வது என் வழக்கம். அவற்றில் கிடைக்கவில்லை. முதல் வகுப்பு கிடைத்தது. அப்போது எனக்கு உடல்நிலை சரியில்லை. மழைக்காலம் வேறு. ஸ்வெட்டர், குல்லா, முகக் கவசம் எல்லாம் போட்டுக் கொண்டு ரயில் ஏறப் போனேன். எனக்கு ஒதுக்கியிருந்த அறை நான்கு பேருக்கானது. என்னை வழியனுப்ப வந்த நண்பரும் நானும் அறைக்குள் நுழைந்தோம்.
எனக்கு ஒதுக்கியிருந்த கீழ்ப் படுக்கையின் எதிர்ப் படுக்கையில் வேட்டி, பனியன், பொட்டு சகிதமாக உட்கார்ந்திருந்தவர் ஓர் அரசியல்வாதி. கேட்கச் சகிக்காத வகையில் பேசும் வலதுசாரி. ஆளும் தேசியக் கட்சியின் பொறுப்பில் இருப்பவர். மாதொருபாகன் பிரச்சினையின் போது ‘அவரை என்ன கொலையா செய்து விட்டோம்? ‘ என்று கேட்டவர்.  பெட்டிக்கு வெளியே அவரது பாதுகாவலர்கள் இருந்தனர். கைப்பெட்டியை வைத்து விட்டு நண்பரை வழியனுப்ப வெளியே வந்தேன்.
‘இந்த ஆளோட எப்படிப் போவீங்க? மாத்திக் குடுக்கச் சொல்லிக் கேட்கலாம்’ என்று பதற்றத்தோடு நண்பர் சொன்னார்.
‘அவருக்கு என்னை அடையாளம் தெரியாது. பார்த்துக் கொள்கிறேன்’ என்று ஆறுதல் சொல்லி அனுப்பினேன்.
கண்ணைத் தவிர முகமெல்லாம் மூடியிருந்த என்னை அவருக்குத் தெரியவில்லை. ஆனால் அவரை நான் கண்டு கொள்ளாமல் இருந்தால் தாங்கிக் கொள்ள முடியுமா? சனாதனம் பற்றி:அவர் பேசிய காணொலி ஒன்றைச் சத்தமாக ஒலிக்க விட்டார். தான் பேசியதைத் தானே கேட்க அப்போது என்ன அவசியம்? தலைவரைக் கண்டுகொள்ளாமல் ஒரு குடிமகன் இருப்பதா? அவர் முகம் எனக்குத் தெரியும்படி திருப்பிச் சேட்டைகள் செய்தார். என் படுக்கையைத் தயார் செய்தேன். சனாதனப் பேச்சு சிறிதும் கேட்காதவாறு செவிவாங்கியை மாட்டிக் கொண்டு படுத்தேன். அந்த ஆர்ப்பரிப்பில் இருந்து தப்பிக்க வேறென்ன வழி?
அரைமணி நேரம் சிறுதூக்கம் போட்டுவிட்டு விழிப்பு வந்த போது செவிவாங்கியை எடுத்துப் பார்த்தேன். எதிரிலிருந்து சனாதனப் பேச்சை விடக் கொடூரமான குறட்டைச் சத்தம். செவிவாங்கியை மீண்டும் மாட்டிக் கொண்டேன்.
—–  13-02-25

Latest comments (7)

சித்தார்த் பெத்தார்

“பிறரைப் பற்றி எண்ணாத இயல்பு சாதி சார்ந்தது.” சார் இப்படி ஒரு கோணத்தில் இதை யோசித்ததில்லை. வாழ்வுக்கான பாடம் இந்த வரி. வணங்குகிறேன்.

சித்தார்த் பெத்தார்

சார்.. அதே போல் திரையரங்குகளில் ஒரு நல்ல காட்சி வரும்போது அதை கெடுக்கும்விதமாக போனைத் தூக்கிக்கொண்டு படம் பிடிக்கிறார்கள். அவர்களும் அந்த காட்சியை ரசிக்காமல் நம்மையும் ரசிக்கவிடாமல் செல்போனை தூக்கிக்கொண்டு சில நேரங்களில் பிலாஷ் போட்டெல்லாம் எடுக்கிறார்கள். அது உடனே ஸ்டேட்டஸில் போட்டுவிடவேண்டும். என்ன வகை நோய் என்று தெரியவில்லை. திரை அனுபவத்தையே குலைக்கிறது.

Bharathi Kanagaraj

பொதுவெளிகளில் அண்மைக்காலங்களில் இந்த செல்போன்களில் படம், சீரியல்.பார்க்கும் ஆண்களைப் பார்த்தால் கோபம் கோபமாக வரும். பெண்கள் இப்படியான அசூயையை செய்வதில்லை ஐயா.

பலபேர் வேணும்னே பண்றான். எல்லாத்தையும் டிஸ்டர்ப் பண்ணுவம்னே பண்றான்…கொடுமை.

அந்த அரசியல்வாதி சம்பவம் படித்து சிரித்துக் கொள்கிறேன் ஐயா…

குணசேகரன் பெ

பொதுவெளி எல்லோருக்குமானது என்னும் உணர்வு அனைவருக்கும் வர வேண்டும் ஐயா.

keerthikavi706@gmail.com

மின்சார இரயில்களில் இன்னும் அதிகமாக செல்போன் தொந்தரவுகள் இருக்கிறது ஐயா.